அறிக்கைகள்

சட்டம் – ஒழுங்கு குறித்து வெறும் விளக்கங்கள் அளிக்காமல், மக்கள் பாதுகாப்பை உறுதி செய்திடுக!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் 06.09.2026 அன்று வெளியிட்ட அறிக்கை வருமாறு:

சென்னை அடையாறு வண்ணாந்துறையில் ஒருவர் ஓட ஓட விரட்டப்பட்டு கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார். இது மனதை பதை பதைக்கச் செய்கிறது. மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஆயுதங்களுடன் கும்பல்கள் சுதந்திரமாகச் செயல்படுவது காவல்துறையின் மீதான நம்பிக்கையை சீர்குலைக்கிறது. தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு நிலை மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

காவல் துறை, குற்றம் நடந்த பின்னர் கைது செய்வது போன்ற நடவடிக்கைகளை எடுப்பது மட்டும் போதாது. குற்றங்கள் நடைபெறுவதற்கு முன்பே அவற்கை தடுக்கும் வகையில் செயல்பட வேண்டும்.

தமிழக அரசு சட்டம் – ஒழுங்கு பிரச்சினை குறித்து வெறும் விளக்கங்களை மட்டுமே அளித்து வருவதை விட்டுவிட்டு, மக்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும். குற்றச் செயல்கள் அதிகரிப்பதற்கான அடிப்படைக் காரணங்களை கண்டறிந்து போக்க வேண்டும். போதை மற்றும் மதுக் கலாச்சாரத்திற்கு தீர்வு காணவேண்டும்.

போதை மற்றும் மதுக் கலாச்சாரத்திற்கு எதிராக விழிப்புணர்வு பரப்புரை இயக்கத்தை மாநிலம் தழுவிய முறையில் தமிழ்நாடு அரசே நடத்திட வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது என்று கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button