
தமிழக வெற்றிக் கழகக் கூட்டணி அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் 06-08-2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
வேளாண் நிதிநிலை அறிக்கை, வேளாண் வரவு செலவுத் திட்டம், வேளாண் ‘பட்செட்’ என வெவ்வேறு பெயர்களில் இது அழைக்கப்படுகிறது. இருப்பினும், வேளாண் நிதிநிலை அறிக்கை என்று கூறத்தக்க எந்த உள்ளடக்கமும் அதில் இடம்பெறவில்லை.
தமிழ்நாடு அரசுக்கான பொது வருவாயிலிருந்து பெறப்பட்ட ரூ. 58,374 கோடியினை, வேளாண்மை, தோட்டக் கலை, சர்க்கரை, கால்நடைக் காப்பு, பால் வளம், மீன் வளம், மீனவர் நலம், ஊரக வளர்ச்சி, ஊராட்சி, உணவுப் பொருள் பக்குவப்படுத்தல் மற்றும் மதிப்பூட்டல், பட்டு வளர்ச்சி உள்ளிட்ட இருபது துறைகள் சார்ந்த பணிகள் மற்றும் திட்டங்களுக்கான ஒதுக்கீடுகள் குறித்த அறிவிப்புகளாகவே இது அமைந்துள்ளது. இதனை வேளாண் நிதி ஒதுக்கீட்டு அறிக்கை என்று கூறலாம்.
வரவு செலவு அறிக்கையாக அமையவில்லை
வரவு எங்கிருந்து வருகிறது? செலவினங்கள் எப்படிச் செய்யப்படுகின்றன? அவற்றில் ஊழியர் ஊதியம் மற்றும் மேலாண்மைச் செலவினங்கள் எவ்வளவு? பணியாளர் எண்ணிக்கை அல்லது புதிய பணியாளர் தேர்வு, நேரடி உதவிகள், பிற பொருள் வகை உதவிகள், அடையும் இலக்குக்கான தொகை எவ்வளவு? என்பன போன்ற வெளிப்படையான விவரங்கள் எதுவும் இந்த நிதிநிலை அறிக்கையில் உள்ளடங்கியிருக்கவில்லை.
இதனால், பலவகையான பணிகளுக்கும் திட்டங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிதியினை மட்டுமே அளவுகோலாகக் கொண்டு மதிப்பிட வேண்டியுள்ளது.
குறையைப் போக்க ஊக்கத்தொகை அறிவிப்பு
ஒரு டன் கரும்புக்கு ரூ. 4500, ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ. 3500 வழங்கப்படும் எனத் தேர்தல் வாக்குறுதியிருந்தாலும், அதுபற்றிய எத்தகைய குறிப்பும் வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம் பெறவில்லை. முழுமையான கடன் தள்ளுபடி உள்ளிட்ட பிற அறிவிப்புகளும் இல்லை. இதனால், வேளாண் மக்களிடையே பெருத்த எதிர்ப்புகள் எழுந்திருந்தன.
இதனை ஈடுகட்டச் சில நாள்கள் கழித்து, மாநில அரசின் ஊக்கத்தொகையினைக் கூட்டி, கரும்பு டன்னுக்கு ரூ. 4000 (ஒன்றிய அரசு 3290.50 + 709.50), மெல்லிய வகை நெல் குவிண்டாலுக்கு ரூ. 2750, பொது நெல்லுக்கு ரூ. 2600 எனக் கிடைக்குமாறு ஊக்கத்தொகையினை முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். இருந்தும், எதிர்பார்ப்பினை எட்டாத நிலையே நீடிக்கிறது.
மேட்டூர் அணையிலிருந்து வழக்கமான சூன் 12-இல் தண்ணீர் திறக்கப்படாவிட்டாலும், நிலத்தடி நீர் வாய்ப்புள்ளோர் 3.68 லட்சம் ஏக்கரில் குறுவை நடவு செய்துள்ளனர். கடந்த ஆண்டு 5.66 லட்சம் ஏக்கர் பயிர் செய்யப்பட்டிருந்தது. நிலத்தடி நீர் குறைந்து வருவதால், அடுத்துக் காவிரி நீர் கிடைக்காவிட்டால் பயிரினைக் காப்பது இயலாமல் போகும். இந்த நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள ரூ.134 கோடியே 83 லட்சம் தொகுப்புத்திட்டத்தின்கீழ் இதுவரை 8,26,000 ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்டுள்ளதாகக் கூறியிருப்பது புதிராக உள்ளது.
உணவுப் பெருக்கத்துக்குத் திட்டங்கள் இல்லை
உணவுக் காப்பை உறுதி செய்ய நிகழாண்டு 125 லட்சம் மெட்ரிக் டன் உணவுப் பொருள் உற்பத்தி இலக்காகக் குறிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கான முன்னெடுப்புகள் தெளிவுபடுத்தப்படவில்லை.
பயிர்க் காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ.648 கோடியே 55 லட்சம் முழுதும் அரசின் பங்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
கட்டணமில்லா மின் இணைப்பைத் தொடர்ந்து வழங்க தமிழ்நாடு மின் பகிர்வு நிறுவனத்துக்கு ரூ.7,432 கோடி வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், வேளாண் மின் இணைப்புக்காகக் காத்திருக்கும் லட்சக்கணக்கான வேளாண் மக்களுக்குப் புதிய இணைப்புத் தருகின்ற எந்தத் திட்டமும் முழுமையாக இடம் பெறவில்லை.
உரங்களின் பயன்பாட்டைக் குறைத்து, இயற்கை உயிர்ம வேளாண்மை முறைகளை ஊக்குவிக்க ‘மண்வளக் காப்பு இயக்கம்’ என்ற அளவில் ரூ.600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது நல்ல முயற்சிதான்.
ஆனால், உரங்களின் பயன்பாட்டைக் குறைப்பதும், இயற்கை உயிர்ம வேளாண்மை முறைகளைப் பின்பற்றுவதும் எளிதல்ல. இதற்குப் பெருமளவில் இயற்கை உரம் வேண்டியிருக்கும். உடனடிப் பயன்பாட்டுக்கு வேண்டிய அளவு இயற்கை உரம் இல்லாமல் இதனை நடைமுறைப்படுத்துவது உற்பத்திச் சிக்கலில் முடிந்துவிடும்.
ஒரு சிலர் சிறு அளவில் இயற்கை வேளாண்மை செய்யலாம். பரந்த நிலப்பரப்பில் இயற்கை வேளாண்மை செய்யும்போது ஏற்ற வகையில் தக்க உரங்கள் கிடைக்கவேண்டும்.
இயற்கை உரங்களை உற்பத்தி செய்யத் தக்க வகையில் ஆய்வுகளும் நுட்ப அறிவும் வளர்வதுடன், தொழிற்சாலைகளும் பெருக வேண்டும். ஒதுக்கப்பட்டுள்ள ரூ. 600 கோடி இங்கிருந்துதான் தொடங்க வேண்டும். இல்லாவிட்டால், முழுத் தொகையும் அலுவலர் ஊதியத்திலும், அலுவலகச் செயல்களிலும் கரைந்துவிடலாம்.
மேலும், உயிர்ம வேளாண் முறையில் விளையும் பொருள்கள் மிகு விலையில் விற்கப்படுகின்றன. உற்பத்திப் பெருக்கத்தில் மட்டுமே இதனைக் குறைக்க இயலும்.
உயர் உற்பத்திக்கு விருது
வேளாண் உற்பத்தியில் உயர்வு கண்டோருக்கு மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் விருது, வெற்றி விவசாயி விருது, நம்மாழ்வார் விருது ஆகியன வழங்குவது உணவு உற்பத்தி முயற்சிகளைப் போற்றுவதாகவும் ஊக்குவதாகவும் அமையும். வேளாண் உற்பத்தியில் உயர்வு கொண்டோர் இதுவரை கண்டுகொள்ளப்படாமலேயே இருந்து வருகின்றனர்.
சிறுபயிர், குறுபயிர் இயக்கம் உருவாக்கப்பட்டு இவற்றின் பயிரிடலை இரு பங்காக உயர்த்துவது, இல்லத்தரசி வீட்டுத் தோட்டத் திட்டம், கடலோர மாவட்டங்களில் உவர் நீருக்கு மேலே இருக்கும் நன்னீரைப் பயன்படுத்த நீலப் பசுமைத் தோட்டக்கலைப் பூங்கா, வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த ரூ.22.80 கோடியில் 57,000 மெட்ரிக் டன் கொண்ட கிடங்குகள் அமைத்தல், மண் வளத்தைக் காக்கவும், பயறு வகைகளின் பயிரிடலை 15.19 லட்சம் ஏக்கரிலிருந்து 24.70 லட்சம் ஏக்கராகவும், எண்ணெய் வித்துகளின் பயிர்ப் பரப்பை 9.26 லட்சம் ஏக்கரிலிருந்து 14.89 லட்சம் ஏக்கராகவும் உயர்த்தச் சிறப்புத் திட்டங்கள், சொட்டு நீர்த் திட்டம் போன்றன இடம்பெற்றுள்ளன. இவற்றில் பல வழக்கமாக இடம்பெறும் திட்டங்களேயாகும்.
தென்னை, பனை போன்றவற்றைக் காக்க எடுக்கப்படும் முயற்சிகள், பரப்புரை, அலுவலகச் செயல்பாடுகளில் செலவாகிவிடும் நிலையே காணப்படுகிறது. மாறாக, வேளாண் மக்களின் நீண்ட நாள் வேண்டுகோளாக இருக்கும் கள் விற்பனையினை அறிமுகப்படுத்தினால், எளிய மக்கள் குறைந்த விலையில் பயன்பெற வாய்ப்புக் கிடைக்கும். உடல் நலக் கேடும் குறையும் எனக் கூறப்படுகிறது. மேலும், மருத்துவ நலன்கள் நிறைந்த பனை வடிநீர் (பதநீர்) மக்களுக்குக் கிடைக்கும் நிலையையும் உருவாக்கலாம்.
தென்னை, பனை போன்றன நீண்ட பல ஆண்டுகளுக்குப் பின்னர் பயன் தருவன. அவற்றைப் பரப்புரை அல்லது உதவிகள் வழியாகப் பெருகச் செய்ய இயலாது. மாறாக, அவற்றிலிருந்து கிடைக்கும் பணப் பயனை உறுதிசெய்வதில்தான் முன்னேற்றம் காண இயலும்.
மாடு வளர்ப்புக்குப் பால் விலை உயர்வு
மாடு, ஆடு வளர்ப்பும் எளிதாக இருப்பதில்லை. அவற்றை வளர்ப்பதற்கான உழைப்பு, கால அளவு, முயற்சி ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது கிடைக்கும் பயன் மிகமிகக் குறைவு. உடல் உழைப்புப் பணிகளுக்குச் செல்லும் அகவை கடந்தோர் மட்டுமே மாடு, ஆடு வளர்ப்பில் ஈடுபட முடிகிறது. உரிய பயன் பெற இயலாததால். முயற்சிகளை இடையில் கைவிட்டுவிடுகின்றனர். அத்துடன், மேய்ச்சல் நிலங்கள் பெரிதும் குறைந்து வருகின்றன அல்லது மாடு, ஆடுகளை வளர்ப்போர் நிலமில்லாதோராக இருக்கின்றனர். குறிப்பாக, கூட்டுறவு அமைப்புகளில் வாங்குகின்ற பால் விலையினை உயர்த்தி ஊக்கம் தந்தால் மட்டுமே மாடு வளர்ப்பது தொடரும்.
நம்மாழ்வார் பெயரில் உயிர்ம வேளாண்மைப் பட்டயப் படிப்புக் கல்லூரிக்கு மாறாக, ரூ.5 கோடி மதிப்பீட்டில் உயிர்ம வேளாண்மைக்கான ஆய்வு நிறுவனம் அமைவதே உரிய பயன் தரும்.
அரசின் திட்டங்கள் பல பெரிதும் அலுவலர் மற்றும் அலுவலகச் செலவுகளிலேயே வீணாகிவிடுகின்றன. நிதி நிலை அறிக்கையிலும், செலவுகள் குறித்த விவரங்கள் தரப்படவில்லை. வேளாண் நிதிநிலை அறிக்கையில் குறிக்கப்பட்டுள்ள பல திட்டங்கள் அல்லது இலக்குகள், நோக்கங்களை அடையத் தக்கவாறான ஒதுக்கீடுகளை பெறவில்லை என்று தெரிகிறது
வேளாண் நலனும் உணவுக் காப்பும்
உழவர் நலன், வருமான உயர்வு, நீர் வளங்களைப் பெருக்குதல் மற்றும் காத்தல், விளைபொருள்களைக் காப்பாற்றுதல் மற்றும் மதிப்புக் கூட்டுதல், இயற்கை வேளாண்மை, வேளாண் வணிகம் ஆகியவற்றுக்கு இந்த நிதி நிலை அறிக்கையில் சிறப்பிடம் தரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
1. கடன் தள்ளுபடி போன்ற உடனடியான துயர் துடைப்பு
2. விளைபொருள்களுக்கு உரிய விலை தந்து வேளாண்மை தொடர வாய்ப்புகளை உறுதிப்படுத்துவது
3. வேளாண் உற்பத்தி பெருகவும், உணவுக் காப்பினை உறுதிசெய்யவும் கட்டமைப்புகளை உருவாக்கித் தருவது
4. வேளாண் உற்பத்திப் பொருள்களைப் பக்குவப்படுத்தவும், மதிப்புக்கூட்டவும் தொழிற்கூடங்களை உருவாக்குவது
5. இதன்வழி வேளாண் மக்களுக்கும், உடல் உழைப்புப் பணியாளர்களுக்கும் ஆண்டு முழுதும் வேலை வாய்ப்பினை உறுதி செய்வது
6. வேளாண் உற்பத்திச் செலவுக்கும், மக்களது வாங்கும் ஆற்றலுக்கும் உள்ள இடைவெளியினைத் தக்க ஒதுக்கீடுகளின்வழி இணைப்பது.
இவைதாம், இன்றைய அடிப்படை வேண்டல்களாகும். இவையே உணவுக் காப்பை உறுதிசெய்து வேளாண் உற்பத்தியையும் மேம்படுத்தும். இவற்றை நோக்கி அடியெடுத்து வைப்பதில் வேளாண் நிதிநிலை அறிக்கை ஏமாற்றத்தையே தந்திருக்கிறது.