கட்டுரைகள்

கல்பாக்கம் சாதனை: இந்திய விஞ்ஞானிகளுக்கு பாராட்டு!

டி.எம்.மூர்த்தி

கல்பாக்கத்தில் முற்றிலும் இந்தியத் தொழில் நுட்பத்தில் அணு ஆற்றல் அதிவேக ஈனுலை (Fast Breeder) உற்பத்தியை 1983ல் துவக்கியபோது மகிழ்ச்சி பொங்க, ஜே,ஜே, கல்பாக்கம் என்று தலைப்புச் செய்தி வெளியிட்டு ஜனசக்தி கொண்டாடியது.

உலகில் முதல் முறை

தற்போது கல்பாக்கத்தில் உள்ள இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம், அணு உலையின் வெப்பத்தைப் பயன்படுத்தி ஹைட்ரஜன் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை உலகிலேயே முதன்முறையாகக் கண்டறிந்து உற்பத்தியைத் துவக்கியுள்ளது.

இது இந்திய அறிவியல் வரலாற்றில் ஒரு புதிய மைல்கல். அணுசக்தியையும் தூய்மையான எரிசக்தி தொழில்நுட்பத்தையும் இணைத்து உலகுக்கு புதிய வழியைக் காட்டியுள்ள இந்தச் சாதனை, இந்திய விஞ்ஞான சமூகத்தின் பெருமைக்குரிய வெற்றியாகும். இந்தச் சாதனைக்காக கல்பாக்கத்தில் உள்ள அணுசக்தித் துறை (DAE), பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC), இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் (IGCAR) ஆகியவற்றின் விஞ்ஞானிகள், பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழிலாளர்கள் அனைவரையும் ஜனசக்தி போற்றிப், பாராட்டுகிறது.

40 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்ற ஆராய்ச்சி, பொதுத்துறையின் நீண்டகால முதலீடு, தலைமுறை தலைமுறையாக இந்திய விஞ்ஞானிகள் ஆற்றிய கூட்டு உழைப்பு ஆகியவற்றின் விளைவாக இந்த வெற்றி உருவாகியுள்ளது.

ஹைட்ரஜன்- மாசில்லாத் தயாரிப்பு

இன்று உலகம் முழுவதும் ஹைட்ரஜன் எதிர்கால எரிபொருளாகக் கருதப்படுகிறது. உலகில் ஹைட்ரஜனை நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயுவிலிருந்து தயாரிக்கிறார்கள். அவை எரியும்போது கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகின்றன. இந்த முறையில் அதிக அளவில் கார்பன் டை ஆக்சைடு வெளியேறி, புவி வெப்பமயமாதலையும் பருவநிலை மாற்றத்தையும் தீவிரப்படுத்துகிறது.

இதற்கு மாற்றாக, கல்பாக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் முற்றிலும் புதிய பாதையைத் திறந்துள்ளது. மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் உருவாக்கிய செம்பு–குளோரின் (Copper–Chlorine அல்லது Cu-Cl) வெப்ப-வேதியியல் முறையைப் பயன்படுத்தி, வேகப் பெருக்கு சோதனை அணு உலையில் (FBTR) உருவாகும் வெப்பத்தின் உதவியால் தண்ணீரை ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனாகப் பிரிக்கிறது.

இந்த முறையின் மிகப்பெரிய சிறப்பு என்னவெனில், வழக்கமான ‘பசுமை ஹைட்ரஜன்’ உற்பத்தியில் தேவைப்படுவது போல மிகப் பெரிய அளவில் மின்சாரத்தைச் செலவிட வேண்டியதில்லை. அணு உலையில் ஏற்கனவே உருவாகும் உயர் வெப்பம் பயன்படுத்தப்படுவதால் மின்சார நுகர்வு கணிசமாகக் குறைகிறது. மேலும் பகலா, இரவா, மழையா, வெயிலா என்ற வானிலை மாற்றங்களால் பாதிக்கப்படாமல், ஆண்டின் அனைத்து நாட்களிலும் தொடர்ந்து ஹைட்ரஜன் உற்பத்தி செய்ய முடியும். இதனால் குறைந்த செலவில், அதிக செயல்திறனுடன், நிலையான முறையில் தூய்மையான ஹைட்ரஜனை உற்பத்தி செய்யும் வாய்ப்பு உருவாகிறது.

இதனால் என்ன பயன்?

உலகில் பல நாடுகள் இதே ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுவந்தாலும், அணு உலையின் வெப்பம், வேகப் பெருக்கு அணு உலை தொழில்நுட்பம் மற்றும் செம்பு–குளோரின் வெப்ப-வேதியியல் முறையை ஒருங்கிணைத்து செயல்படும் உலகின் முதல் செயல்முறை நிலையத்தை உருவாக்கிய பெருமை இந்தியாவுக்கே கிடைத்துள்ளது.

இது ஆய்வக வெற்றி மட்டுமல்ல; எதிர்காலத்தில் தொழில்துறை அளவில் தூய்மையான ஹைட்ரஜன் உற்பத்திக்கான முன்னோடி மாதிரியாகவும் விளங்கும்.

இந்தத் தொழில்நுட்பம் வெற்றிகரமாக விரிவுபடுத்தப்பட்டால், எஃகு உற்பத்தி, உரத் தொழில், பெட்ரோலிய சுத்திகரிப்பு, கனரக வாகனப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து, நீண்டகால மின்சக்தி சேமிப்பு உள்ளிட்ட பல துறைகளில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும்.

நிலத்தடியில் புதைந்துள்ள கச்சா எண்ணெய், எரிவாயு ஆகியவற்றின் பயன்பாடு குறையும். கார்பன் வெளியீடு குறையும். எரிசக்தித் தற்சார்பு வலுப்பெறும். நமது அந்நியச்செலாவணி மிச்சப்படும்.

இந்திய விஞ்ஞானிகளின் உழைப்பு

இந்தியாவின் அணுசக்தித் திட்டம் ஒரே நாளில் உருவானதல்ல. ஹோமி ஜெ. பாபா போன்ற தொலைநோக்குப் பார்வையுடைய விஞ்ஞானிகள் விதைத்த அடித்தளத்தின் மீது, பல தலைமுறைகளாக ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் உழைத்துள்ளனர். பல்வேறு அரசுகள் தொடர்ச்சியாக வழங்கிய ஆதரவும், பொதுத்துறையின் நீண்டகால முதலீடும் இந்தப் பயணத்தை சாத்தியமாக்கின.

இந்த மகத்தான அறிவியல் சாதனையை முழுமையாக நரேந்திர மோடியின் வெற்றியாகச் சித்தரிப்பது வரலாற்றுக்கும் அறிவியலுக்கும் செய்யப்படும் அநீதியாகும்.

கல்பாக்கம் நமக்குக் கற்பிக்கும் மிகப் பெரிய பாடம் வேறு ஒன்று. உலகத் தரத்திலான அறிவியல் சாதனைகள், உடனடி லாபத்தை நோக்கும் தனியார் முதலீட்டால் உருவாகவில்லை. நீண்டகால நோக்குடன் செயல்படும் பொதுத்துறை ஆராய்ச்சி நிறுவனங்கள், பொது நிதி, அறிவியல் சுதந்திரம், தலைமுறை தலைமுறையாக உருவாக்கப்படும் அறிவியல் திறன் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த விளைவாகவே அவை உருவாகின்றன.

நடிப்புச் சுதேசிகள்:

இன்று பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படுகின்றன. “இஸ்ரோ” விஞ்ஞானிகள் அரும்பாடுபட்டு உருவாக்கிய விண்வெளித் தொழில்நுட்பம், ‘“ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்” என்ற தனியார் நிறுவனத்துக்குத் தரப்பட்டு, அது 2026 ஜூலை 18ல் ஒரு ராக்கெட்டை ஏவி, அது புவிச் சுற்றுப்பாதையை அடைந்துள்ளது. அந்த முதலாவது தனியார் விக்ரம்-1 ராக்கெட்டுக்கு “ஆகமன் மிஷன்” திட்டம் என்று பெயர் வைத்து, அதில் “வந்தேமாதரம்” பாடலை வைத்து அனுப்பி “தேசபக்தி” கொண்டாடுகிறார்கள்.

நமது பெரம்பூர் ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட அதிவேக ‘டிரெயின் – 18’ஐ உருவாக்கியது. ரயிலையே தயாரித்த ஐசிஎஃப், உந்துவிசை , கட்டுப்பாட்டு அமைப்பு, மின்சார உபகரணங்கள் போன்ற மற்ற வடிவமைப்புகளையும் செய்ய முடியும்.

ஆனால் அதற்கு, ‘மேதா சர்வோ டிரைவ்ஸ்’ என்ற தனியார் நிறுவனத்துக்கு கான்ட்ராக்ட் தந்து ‘வந்தே பாரத்’ என்று பெயர் வைத்து, மூவண்ணக்கொடியை இஞ்சினில் பெரிதாக வரைந்துள்ளனர்.

நிறைவாக…

இந்தியாவின் எதிர்காலம் அறிவியல் மனப்பான்மையிலும், பொதுத்துறை ஆராய்ச்சி நிறுவனங்களின் வலிமையிலும், விஞ்ஞானிகளின் படைப்பாற்றலிலும் இருக்கிறது. அவற்றை பலவீனப்படுத்தும் தனியார்மயக் கொள்கைகள் அல்ல, பொதுமுதலீடும் அறிவியல் சுதந்திரமும்தான் நாட்டை முன்னேற்றும். கல்பாக்கத்தின் இந்த வரலாற்றுச் சாதனை, அந்த உண்மையை மீண்டும் ஒருமுறை உலகுக்கு உணர்த்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button