கட்டுரைகள்

போராட்டங்கள் தூண்டி விடப்படுகிறதா?

இளசை கணேசன்

எந்த ஒரு போராட்டமும் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி வெற்றி பெற்றுவிட்டால்… ஆட்சியாளர்களால் பொறுத்துக் கொள்ளவே முடியாது!

போராட்டத்தை தூண்டி விடுகிறார்கள் என்று வாய் கூசாமல் நாக்குத் தடித்து உண்மைக்குப் புறம்பாக பச்சையாக பொய் சொல்லுகிறார்கள்.

பொதுவாக போராட்டங்கள் தன் இயல்பாகவே, நடக்கிறது. எதிர் எதிர் சக்தி களின் இடைவிடாத மோதல் என்பதுதான் பொருள்களின் இயக்கம்.

இதுதான் போராட்ட அடிப்படை.

இது இயல்பானது, தன்னிச்சையானது..

எதிர் எதிர் சக்திகள் மோதுவதால் சமுதாயம் இயங்குகிறது. சமுதாய இயக்கத்தில் பிரச்சனைகள் உருவாவது தவிர்க்க முடியாது.

பிரச்சனைகளின் தன்மை அதனால் ஏற்படும் பாதிப்பு, அதற்குரிய எதிர்ப்புகளை உருவாக்குகிறது. ஒவ்வொரு வினையும் அதற்கு சமமான எதிர் வினையை உருவாக்கும்.

இந்த எதிர்ப்புகள் போராட்ட வடிவம் எடுக்கிறது. போராட்டத்தின் வீச்சு அதற்கான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. போராட்டத் தாக்கம் வெற்றியை எட்டுகிறது.

இது கடந்த விவசாயிகள் போராட்டம், தற்போதைய மாணவர்கள் போராட்டம் போன்றவற்றுக்கும் பொருந்தும்.

மனிதர்கள் போராடுவதற்கு யாரும் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. பிறக்கும்போதே போராட்டத்தோடுதான் பிறக்கிறார்கள்.

பிறக்கும் குழந்தைகள் அனைத்துமே அழுது கொண்டு தான் பிறக்கின்றன. குழந்தை அழுது கொண்டு பிறந்தால் சுற்றி இருப்பவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
பிறந்த குழந்தை அழவில்லை என்றால் சுற்றி இருப்பவர்கள் அழுகின்றனர்.

  • இது ஏன் நடக்கிறது?
  • பிறந்த குழந்தை ஏன் அழ வேண்டும்?

பிறந்த குழந்தை அழவில்லை என்றால் அது இறந்து விட்டது என்பதாகும்.

இங்கே குழந்தையின் அழுகுரல் என்பது அதனுடைய போராட்டத்தைக் குறிக்கும்.

பத்து மாத காலம் தாயின் கருவறையில் பத்திரமாக, பாதுகாப்பாக வளர்ந்த குழந்தை தாயின் கருவறையை விட்டு வெளியே வரும்போது வெளி உலகத்திற்கு ஏற்ப தன்னை தயார்படுத்திக் கொள்வதற்காக குழந்தை போராடுகிறது. அதன் வெளிப்பாடுதான் குழந்தையின் அழுகுரல் சத்தம்.

அழுகின்ற குழந்தை தனது கால்களையும் , கைகளையும் ஆட்டி ஆட்டி உதைக்கிறது. கைகளை முஷ்டியை மடக்கி சண்டை போடுவது போன்று வைத்துக் கொள்கிறது.

அவ்வாறு முஷ்டியை மடக்கி இருப்பது குழந்தையின் போராட்ட சக்தியின் வெளிப்பாடு.

சிறிது நேரம் கழித்து குழந்தையின் அழுகை நின்று விடும். காரணம் போராட்டத்தின் மூலம் குழந்தை வெற்றி பெற்று விட்டது. இயற்கையோடு போராடி வாழும் ஆற்றல் பெற்று விட்டது.

இந்த குழந்தை பிறப்புப் போராட்டம் யாரும் சொல்லிக்கொடுத்து வருவதில்லை. யாரும் தூண்டிவிட்டதும் அல்ல.

இது இயல்பான தன்னெழுச்சியாக நடைபெறும் போராட்டம் ஆகும்.

சமுதாயத்தில் நடக்கும் போராட்டங்களும் இப்படித்தான். போராட்டக் குரல் எழுப்பும்போது கையின் முஷ்டியை மடக்கி உயர்த்துவது ஏன் என்று புரிகிறதா?

  • போராட்டம் இல்லாமல் இயக்கம் இல்லை.
  • போராட்டம் இல்லாமல் உயிர் என்பது இல்லை.
  • போராட்டம் இல்லாமல் வாழ்க்கை இல்லை.
  • போராட்டம் இல்லாமல் வரலாறு இல்லை.
  • போராட்டம் இல்லாமல் எதுவுமே இல்லை.

இதெல்லாம் ஆளும் மரமண்டைகளுக்கு உரைக்காது!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button