
ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளையும் அதன் பேராபத்தையும் மக்களிடம் விரிவாக எடுத்துக் கூறியும், “ஆட்சியில் மாற்றம் கட்டாயமானது” என்ற அரசியல் முழக்கத்தை முன்வைத்தும் ஆகஸ்டு 6 முதல் 15 வரை நாடு முழுவதும் நடைபயண பரப்புரை இயக்கம் நடத்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு அறைகூவல் விடுத்துள்ளது.
இதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் நடைபயண பரப்புரை இயக்கங்களுக்கு மாநில நிர்வாகக் குழு திட்டமிட்டிருப்பதாக கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் 06.07.2026 அன்று திருச்சி மாநகர் – உறையூரில், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் மு.கண்ணகி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் டி.எம்.மூர்த்தி, துணைச் செயலாளர்கள் நா.பெரியசாமி, எம்.ரவி, திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன், தேசியக் குழு உறுப்பினர்கள் திருச்சி எம்.செல்வராஜ், டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் எஸ்.சிவா, புறநகர் மாவட்டச் செயலாளர் எஸ். ராஜ்குமார் உள்பட 60 பேர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தொழிலாளர்களின் வேலைப் பாதுகாப்பு, ஊதியப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்த தொழிலாளர்கள் நூறாண்டுகளாகப் போராடி உருவாக்கப்பட்ட 44 தொழிலாளர் நலச் சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு நீக்கிவிட்டு, தொழில் நடத்துவதை எளிமையாக்குதல் என்ற பெயரில் நான்கு சட்டத் தொகுப்புகளை செயல்படுத்தியுள்ளது. இந்தச் சட்டத் தொகுப்புகள், தொழிலாளர் உரிமைகளைப் பறித்து, முற்றிலும் முதலாளிகளுக்குச் சாதகமானதாக, கார்ப்பரேட்டுகளின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, நாட்டின் பெரும்பகுதி மக்களின் வாழ்வாதாரமாக அமைந்துள்ள விவசாய நிலங்களை பன்னாட்டு குழும நிறுவனங்களின் கைகளுக்கு மாற்றித்தரும் முயற்சியில், விவசாயிகள் விரோத மூன்று வேளாண் வணிக சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. மின்சார சட்டத்திருத்தம் அறிமுகம் செய்யப்பட்டது. விவசாயிகளை நிலத்தில் இருந்து வெளியேற்றும் விவசாயிகள் விரோத சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் ஒன்றுபட்டு நடத்திய, ஓராண்டுக்கும் மேலாக நீடித்த போராட்டத்தால், 740-க்கும் மேற்பட்ட விவசாயிகள் களப்பலியானார்கள். வரலாற்றுப் புகழ்பெற்ற இந்தப் போராட்டத்தால் விவசாயிகள் விரோத சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டன. விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய, சட்டபூர்வ நிர்வாக அமைப்பு உருவாக்கப்படும் என விவசாயிகளுக்கு ஒன்றிய பாஜக அரசு வாக்குறுதி அளித்தது. ஆனால் அதனை இதுவரை நிறைவேற்றவில்லை. ஆகையால் விவசாயிகள் வாழ்க்கை நிலை அவலம் தொடர்கிறது.
இடதுசாரி கட்சிகளின் தலையீடு நாடாளுமன்றத்தில் வலிமையாக இருந்த நேரத்தில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒன்றிய அரசு 2005 ஆம் ஆண்டில் நிறைவேற்றிய மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம், கடந்த 20 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்தது. இதன் மூலம் வேளாண் உற்பத்தி அதிகரிப்பு, நிலத்தடி நீர்மட்டம் மேம்பாடு, புலம்பெயர்ந்து உழைக்கும் மக்கள் வெளியேறும் துயரம் மற்றும் வறுமை நிலை தணிப்பு போன்ற நற்பயன்கள் கிடைத்துள்ளன. பல லட்சக்கணக்கான சமூகச் சொத்துக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தச் சட்டத்தின் மூலம் ஊரகப் பகுதிகளில் வாழ்ந்து வரும் உடல் உழைப்புத் தொழிலாளர் குடும்பங்கள் ஆண்டுக்கு 100 நாள் வேலை பெற சட்டப்பூர்வ உரிமை பெற்றிருந்தன. இந்தச் சட்டத்தை ஒன்றிய பாஜக அரசு கடந்த 2025 டிசம்பர் 16 ஆம் தேதி நீக்கிவிட்டது.
கிராமப்புற வேலை வாய்ப்புக்காக ஒன்றிய பாஜக அரசு அறிமுகம் செய்துள்ள வளர்ச்சி பாரதம் – கிராம வேலை உறுதியளிப்பு மற்றும் வாழ்வாதாரத் திட்டம் என்பது “தொழிலாளர்கள்” என்ற தகுதியினையும் நீக்கிவிட்டு, அரசையும், ஆளும் தரப்பையும் சார்ந்து வாழும் “பயனாளிகளாக” தாழ்த்தப்பட்டுள்ளனர். இதனால், ஊரகப்பகுதி உழைக்கும் மக்களின் சட்டப்பூர்வ உரிமை பறிக்கப்பட்டுள்ளது.
நாடு விடுதலை பெற்ற காலத்தில் பொதுமக்களின் வரிப் பணத்தில் இருந்தும், பல்வேறு சோசலிச நாடுகள் உதவியை பெற்றும் பல பொதுத்துறை நிறுவனங்கள் கட்டமைக்கப்பட்டன. இவற்றால் நாடு சுயசார்பு பொருளாதாரக் கட்டமைப்பை பெற்றுள்ளது. இதன் மீது ஒன்றிய பாஜக அரசு கடுமையான தாக்குதல் நடத்தி, பொதுத்துறை சொத்துக்களை பங்குகளாக்கி தனியார் மயமாக்கி வருகிறது. மேலும்,
1. கடந்த 12 ஆண்டுகளில் நாள்தோறும் உயர்ந்து வரும் விலைவாசி உயர்வை தடுத்து நிறுத்த வேண்டும்.
2. இளைய தலைமுறையினர் ஒவ்வொருவருக்கும் வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும்.
3. பொது விநியோக முறையினையும், பொது சுகாதாரத்தையும் பாதுகாத்து வலுப்படுத்த வேண்டும்.
4. சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
5. குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய சட்டபூர்வ அதிகாரம் கொண்ட அமைப்பு உருவாக்க வேண்டும்.
6. உழைக்கும் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.
7. ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். தேர்தலில் மீண்டும் வாக்கு சீட்டு முறையை அமலாக்க வேண்டும்.
8. பழங்குடியினர், பட்டியல் சாதியினர் பிரிவு மக்களுக்கு நீதி வழங்க வேண்டும். அவர்கள் மீதும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதும் நடத்தப்படும் தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
“மாற்றம் கட்டாயமானது” என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் மக்கள் விரோத கொள்கைகளைக் கடைப்பிடித்து வரும் ஒன்றிய பாஜக அரசின் அமெரிக்க ஏகாதிபத்திய ஆதரவு, பன்னாட்டு குழும நிறுவனங்கள் ஆதரவுக் கொள்கையின் பேராபத்தை மக்களிடம் விரிவாக எடுத்துக் கூறியும், “ஆட்சியில் மாற்றம் கட்டாயமானது” என்ற அரசியல் முழக்கத்தை முன்வைத்தும், ஆகஸ்டு 6 முதல் 15 வரை நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு, விழிப்புணர்வு பரப்புரை இயக்கத்தை நடத்துவது என கட்சியின் தேசியக் குழு அறைகூவல் விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் கட்சியின் மாவட்டக் குழுக்களும், இடைக்குழுக்களும் ஆகஸ்டு 6 முதல் 15 வரையிலான காலத்தில் பொதுமக்களை விரிவாக சந்திக்கும் வகையில் நடைபயண இயக்கங்களை திட்டமிட்டு நடத்த வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்டு 15 சுதந்திர தின விழா மாவட்டங்களில் பல்வேறு குழுக்களாக கட்சி உறுப்பினர்கள் பிரித்தமைக்கப்பட்டு, விரிவான நடைபயண இயக்கங்களை மேற்கொள்ள வேண்டும். நாடு விடுதலை பெற்ற வரலாற்றுப் புகழ் மிக்க 15.08.2026 அன்று மாவட்டத் தலைநகரில் அல்லது மாவட்டத்தின் மையப் பகுதியை தேர்வு செய்து அனைத்துக் குழுக்களும் ஓரிடத்தில் இணையும் வகையில் ஏற்பாடு செய்து, அந்த இடத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, பரப்புரை இயக்கத்தை நிறைவு செய்ய வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.