
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நகராட்சி நிருவாகம், செய்தித்துறை, தமிழ் வளர்ச்சி, பள்ளிக் கல்வி, உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் 24.8.2026 அன்று நடைபெற்றது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப் பேரவைக் குழுத் தலைவர் டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. உரையாற்றினார். அவை வருமாறு:
“பள்ளிக்கல்விக்கு 44ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்விக்கு ஒதுக்கும் நிதியை செலவினமாகக் கருதாமல், எதிர்கால மனிதவள ஆற்றலுக்கான மூலதனமாகக் கருதி இன்னும் கூடுதலாக பள்ளிக்கல்வித் துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இன்று உலகமே உள்ளங்கையில் இருக்கிறது. ஆகவே, ஏஐ பயிற்சி வகுப்புகள் அரசுப்பள்ளிகளில் நடத்தப்படும் என அமைச்சர் அறிவித்திருப்பதை வரவேற்கின்ற அதேவேளையில், நம்முடைய அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஒழுகாத கட்டடம், பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிவறை, சுற்றுச்சுவர், இரவுக்காவலர், தூய்மைப் பணியாளர், சிசிடிவி கேமராக்கள், விளையாட்டு மைதானங்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திவிட்டு, இந்த ஏஐ பயிற்சி வகுப்புகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
மாணவர் மற்றும் ஆசிரியர் எண்ணிக்கை 20:1 என்கிற அடிப்படையில் 20 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
மாணவர் இடைநிற்றல் உள்ள மலைக் கிராமங்களில் உண்டு உறைவிடப் பள்ளிகளை இந்த அரசு ஏற்படுத்த வேண்டும். மலைக் கிராமப் பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் சரியாகச் செல்வதில்லை. மலைக் கிராமங்களில் ஆசிரியர்கள் தங்குவதற்கான குடியிருப்புகளை அரசு ஏற்படுத்த வேண்டும் என்பதை பள்ளிக்கல்வித்துறை அமைச்சகத்தின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை 10.5 சதவீத இடஒதுக்கீடாக அதிகரிக்க வேண்டும்.
மும்மொழிக் கல்விக் கொள்கை, தேசியக் கல்விக்கொள்கையை ஏற்க மாட்டோம் என்ற இந்த அரசினுடைய கொள்கை முடிவை வரவேற்கிறேன், பாராட்டுகிறேன். ஏனென்றால், தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில் ஒன்றிய அரசு குறிப்பாக மும்மொழிக்கொள்கை என்ற பெயரால் இந்தி மொழியைத் திணிக்கும் முயற்சியை மேற்கொள்கிறது.
ஒன்றிய பாஜக அரசு இரட்டை வேடம்
சர்வசிக்ஷா அபியான் திட்டத்தில் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காமல், மாநில அரசுகளை ஒன்றிய அரசு நிர்பந்திக்கிறது. கடந்த 2025ஆம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய அந்த நிதியைக் கேட்ட நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்களை அன்றைய ஒன்றிய கல்வி அமைச்சர் நாகரிகமற்றவர்கள் என்று பேசினார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழைப் படித்தால் பிச்சை எடுக்கக்கூட உதவாது என்று பேசுகிறார். அவர்கள்தான் காசி தமிழ் மாநாட்டை நடத்துகிறார்கள். உலகத்திலேயே மூத்த மொழி தமிழ் என்று தமிழ் மொழியைப் பாராட்டிப் பேசுகிறார்கள். நாடாளுமன்றத்திலே ஒரு நிலைப்பாடு, காசி தமிழ் மாநாட்டிலே ஒரு நிலைப்பாடு – இத்தகைய இரட்டை நிலைப்பாடுடையவர்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் நிச்சயமாக ஒரு போதும் எந்தவிதமான அங்கீகாரமும் வழங்க மாட்டார்கள்.
பிரதமர் வெளிநாடுகளுக்கு செல்லும்போதெல்லாம் திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசுகிறார். தமிழ்நாட்டுக்கு வந்தால் நம்முடைய பாரம்பர்ய உடையான சட்டையும், வேட்டியும் அணிந்து வருகிறார். தமிழிலே வணக்கம் சொல்கிறார். தமிழ்க் கலாச்சாரத்தைப் பற்றிப் பேசுகிறார். நம்முடைய உணவான இட்லி, வடை, சாம்பார், சட்னி ருசியாக இருக்கிறது என்று பேசுகிறார்.
ஆனால், கடந்த 12 ஆண்டுக் காலத்தில் செம்மொழியான தமிழ்மொழி உள்ளிட்ட ஐந்து (தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா) மொழிகளுக்கும் சேர்த்து ஒதுக்கப்பட்ட நிதி 147.56 கோடி ரூபாய்தான். சமஸ்கிருதம் எந்த மாநிலத்திலும் அலுவல் மொழியோ, ஆட்சி மொழியோ இல்லை. செத்துப்போன அந்த சமஸ்கிருத மொழிக்கு 2,532.59 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறார்கள்.
உலக அளவில் மொழி அழிவில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. ஏனென்றால், ஒன்றிய அரசு தொடர்ந்து இந்தியைத் திணித்து, பல்வேறு மாநிலங்களில் மக்கள் பேசும் மொழிகளை அழித்துக்கொண்டு வருகிறது.
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதைப் போல ஒரே கல்விக்கொள்கை, ஒரே மொழி என்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தத்தை ஒன்றிய அரசு கல்வியில் புகுத்தி வருகிறது.
காவி மயமாக்கப்படும் கல்வித்திட்டம்
மூதறிஞர் ராஜாஜி முதலமைச்சராக இருந்த காலத்தில் குலக்கல்வியைக் கொண்டு வந்தார். அதேமாதிரிதான் இன்றைக்கு தேசியக் கல்விக்கொள்கை என்ற பெயரால் மீண்டும் பாஜக அரசு குலக்கல்வியைப் புகுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 3, 5, 8ஆம் வகுப்புகளில் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு என்பது மாணவருடைய மனநிலையை பாதிக்கச் செய்கிறது.
பாஜக ஆட்சி செய்கின்ற உத்தரப்பிரதேசம், அரியானா போன்ற மாநிலங்களில் மாணவர்களுடைய வருகை குறைந்திருக்கிறது. இடைநிற்றல் அதிகரித்திருக்கிறது. தேர்ச்சி விகிதம் குறைந்திருக்கிறது. கல்வித் திட்டங்களை காவி மயமாக்கிக்கொண்டிருக்கிறார்கள். பள்ளிகளுக்கு காவி வண்ணம் பூசிக்கொண்டிருக்கிறார்கள். கல்வியில், ஒன்றிய அரசின் தேசிய ஆராய்ச்சி மற்றும் கல்வி மய்யம் (என்சிஇஆர்டி) பாடத்திட்டத்தில் வரலாறைத் திரித்து பாடப்புத்தகங்களை அச்சடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
கணக்குப் பாடத்தை கணிதப் பிரகாஷ் என்றும், பிற்போக்கானவற்றைப் பாடத்திட்டங்களில் கொண்டு வருவதற்கான முயற்சியை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத், “இந்திய நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தது, அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு ராமன் கோயில் திறக்கப்பட்ட நாள்தான் இந்தியாவினுடைய சுதந்திர நாள்” என்று பேசுகிறார்.
இந்த மாநிலத்தின் ஆளுநராக இருந்த, இந்திய அரசமைப்புச் சட்டத்தை உறுதிமொழியாக ஏற்றுக்கொண்ட ஆர்.என்.ரவி பேசுகிறார், “இந்தியாவில் அரசமைப்புச்சட்டம் உருவாவதற்கு முன்பே அன்று முதல் இன்று வரை மனு சாஸ்திரத்தைத்தான் கடைபிடித்து வருகிறோம்” என்று அவர் பேசுகிறார்.
இவ்வாறு தொடர்ந்து பேசி வருகிறார்கள். புகழ்பெற்ற சென்னை ஐஐடியின் இயக்குநர் காமகோடி பேசுகிறார், “மாட்டு மூத்திரத்தில் மருத்துவக் குணம் இருக்கிறது. நான் தினமும் குடிக்கிறேன். நீங்களும் மாட்டு மூத்திரத்தைக் குடியுங்கள்” என்று சொல்லி பிற்போக்கான கருத்துகளை பாடத்திட்டத்தில் கொண்டுவர ஒன்றிய ஆட்சியாளர்கள் தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையையும் ஏற்றுக் கொள்ளவில்லை, தேசியக் கல்விக் கொள்கையையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்காக புறவாசல்வழியாக தனியார் பள்ளிகள்- சிபிஎஸ்இ பள்ளிகள்வழியாக இந்தி மொழியைத் திணிக்கும் முயற்சியை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாட்டில் சிபிஎஸ்இ பள்ளிகளைத் தொடங்க வேண்டுமானால், மாநில அரசினுடைய அனுமதி தேவை இல்லை என்று மாநில சுயாட்சியில் நேரடியாக ஒன்றிய அரசு தலையிடுகிறது. மாநில சுயாட்சி பாதுகாக்கப்பட வேண்டும் என்றால், குறிப்பாக பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரவேண்டும். தனியார் பள்ளிகளுக்கு கடிவாளம் போட வேண்டும். மாநில அரசின் அனுமதி இல்லாமல் ஒன்றிய அரசு மட்டும் அனுமதி கொடுத்தால், மாநிலத்தின் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் போய்விடும். சிபிஎஸ்இ பள்ளிகளை தமிழ்நாட்டில் தொடங்கும்போது, மாநில அரசிடமிருந்து அனுமதியைப் பெற்றுதான் தொடங்க வேண்டும் என்பதில் அரசு உறுதியோடு இருக்க வேண்டும்.
காலைச் சிற்றுண்டித் திட்டத்தை 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை நீட்டித்து இருப்பது வரவேற்கக்கூடியது. அதேவேளையில், 10 ஆம் வகுப்புவரை அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மாணவர்களும், பெற்றோர்களும் கோரிக்கையாக வைத்திருக்கிறார்கள். அதையும் இந்த அரசு பரிசீலிக்க வேண்டும். சத்துணவு அமைப்பாளர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தரவேண்டும்.
பள்ளிகளில் கட்டணக் கொள்ளை
தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுத்து அதை ஒழுங்குபடுத்த அன்றைக்கு ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவால் பள்ளிகளின் கட்டமைப்பைப் பொறுத்து கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டன. ஆனால், எந்த தனியார் பள்ளியும் குழு அறிவுறுத்திய கட்டணங்களை வசூலிப்பதில்லை. அதற்கு மாறாக அனைத்து தனியார் பள்ளிகளிலும் கட்டணக் கொள்ளை நடந்துகொண்டிருக்கிறது. தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையை இந்த அரசு தடுத்து நிறுத்த வேண்டும். அந்த பள்ளிகள்மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாணவர்களிடையே சாதி வன்மம், தீண்டாமை, சாதி ரீதியான மோதல்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆட்சிக்காலத்தில் ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் பரிந்துரைகளை ஏற்று, பள்ளி, கல்லூரிகளில் சாதி வன்மங்களை ஒழிப்பதற்காகவும், மாணவர்களிடையே நல்லொழுக்கத்தை, நன்னடத்தை விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு முன்வரவேண்டும்.
பகுதி நேர ஆசிரியர்கள் 17 ஆண்டுகளாக பணிநிரந்தரம் கோரி தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய கோரிக்கையை அரசு நிறைவேற்றித் தர வேண்டும்.
குடிநீர் வழங்குவது தனியாரிடமா?
சேலம் மாநகராட்சியில் குடிநீர் வழங்குவதை சூயஸ் என்ற பன்னாட்டு நிறுவனத்திடம் இந்த அரசு ஒப்படைத்திருக்கிறது. அந்த நிறுவனம் உலக நாடுகளில் பொலிவியா போன்ற நாடுகளில் விரட்டியடிக்கப்பட்ட நிறுவனம். ஆகவே, தனியாரிடம் கொடுத்த குடிநீர் வழங்கும் திட்டத்தை அரசு திரும்பப் பெற வேண்டும். மாநகராட்சியே குடிநீர் வழங்குவதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
புழல் ஏரியில் கலக்கும் கழிவுகள்
சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகத் திகழ்கின்ற செம்பரம்பாக்கம் ஏரியில் தொடர்ந்து கழிவுகள் கலப்பதாலும், மனித எச்சங்கள் கலப்பதாலும், மருத்துவமனைகளிலிருந்து கழிவுகள் கலப்பதாலும் குடிப்பதற்கு தகுதியான தண்ணீராக இல்லை. ஆகவே, மாசு கலப்பதைத் தடுக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்ட மக்களுடைய ஜீவாதாரமாக இருக்கின்ற ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்த் திட்டம் ஃபேஸ்-3 அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருக்கின்றன. அந்தப் பணிகளை விரைந்து முடித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
– இவ்வாறு டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. பேசினார்.