
முதலமைச்சர் பதவியேற்ற போது, “பத்தரை இலட்சம் கோடி ரூபாய் கடன் வைத்திருக்கிறார்கள், கஜானாவை வழித்து எடுத்துச் சென்று விட்டார்கள், இது குறித்து வெள்ளை அறிக்கை விரைவில் வெளியிடுவோம்” என்று சொன்னார்.
தமிழ்நாட்டு நிதி அமைச்சர் மரிய வில்சன், அறிக்கையை படித்த போது, அவருக்கு தமிழ் சரியாக படிக்க வராது என்பதுதான் பளிச்சென்று வெளிப்பட்டது.
தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி (ஜிஎஸ்டிபி) 35.29 லட்சம் கோடி. பொருளாதாரம் இரட்டை இலக்கத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது. வளர்ச்சி விகிதம் சென்ற ஆண்டில் 11.19% இந்த ஆண்டு 10.83% ஆகும். இந்தியாவில் வேறெந்த மாநிலமும் இந்த வளர்ச்சியை காணவில்லை.
கடன் 10 லட்சம் கோடி என்கிறார்கள். உற்பத்தியோடு ஒப்பிடும்போது சுமார் 29% ஆகும். இது கடன் வரம்புக்கு உட்பட்டதுதான் என்கிறார்கள்.
ஒன்றிய அரசு, மோடி ஆட்சிக்கு வரும்போது இருந்ததை விட நான்கு மடங்கு அதிகமாக கடன் வாங்கி ரூ. 218 லட்சம் கோடியாக உயர்த்தி உள்ளது. உற்பத்தியில் இணைத்து கணக்கிட்டால் அது 55.6% ஆகும்.
கடைசியில், முதலமைச்சர் என்ன காரணத்துக்காக வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று சொன்னாரோ, அது ஏதும் வெளிப்படவில்லை.
இந்த வெள்ளை அறிக்கை பிரச்சனையை விளக்குகிறது. ஆனால் கடனை எவ்வாறு குறைப்பது? வருவாயை எவ்வாறு அதிகரிப்பது? வரிகளை கூட்டி வருவாயை அதிகரிக்கப் போகிறார்களா? அரசு செலவின முன்னுரிமைகளை மாற்றி அமைக்கப் போகிறார்களா? ஒன்றிய அரசிடம் தேங்கியுள்ள தமிழ்நாட்டுக்கான நிதியைப் பெறுவதற்கு ஏதேனும் திட்டம் உண்டா? என்ற வழிவகை எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
கட்டாயச் செலவினம் – அதாவது அரசில் வேலை செய்பவர்களுக்கான ஊதியம், ஓய்வூதியம், கடன்களுக்கான வட்டி – அதிகமாக உள்ளது என்கிறார்கள்.
ஏற்கனவே திமுக அரசு, காலிப்பணியிடங்களில் நிரந்தரப் பணியாளர்களை நியமிக்கவில்லை. காண்ட்ராக்ட், அவுட்சோர்சிங் என்ற முறைகளில் அநியாயமாக மிகக் குறைந்த ஊதியத்துக்கு பணியாளர்களை அமர்த்தினார்கள். பல போராட்டங்கள் நடத்தியும் அசைந்து கொடுக்கவில்லை. வேறு அரசு அமைந்தால் தமது கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று கருதியே இன்றைய ஆளுங்கட்சிக்கு அவர்கள் வாக்களித்திருக்கிறார்கள்.
கட்டணம் இல்லாத மருத்துவ வசதியை அரசு மருத்துவமனைகள் வழங்குகின்றன. மருத்துவமனைகள் எவ்வளவோ விரிவாக்கப்பட்டும், தேவையை நிறைவேற்ற முடியாமல் பெரும் கூட்டம் அரசு மருத்துவமனைகளில் அல்லாடுகிறது. சாதாரண மக்களுக்கு அரசு மருத்துவமனை தவிர வேறு கதி இல்லை.
கட்டணமில்லாத கல்வியை அரசுப் பள்ளிகள், அரசுக் கல்லூரிகள் தருகின்றன. சாதாரண வீட்டு குழந்தைகள் படித்து முன்னேறுவதற்கு, இவை இன்றியமையாதவை.
மின்சார வாரியம், குடிநீர் வடிகால் வாரியம், போக்குவரத்துக் கழகங்கள், வீட்டு வசதி வாரியம் ஆகியவை அரசு சார்ந்து இருந்தாலும் தனி நிறுவனங்களாகும். இவற்றில் ஏற்பட்டுள்ள இழப்பையும் சேர்த்து கடன் தொகை 13.18 லட்சம் கோடி என்று வெள்ளை அறிக்கை சொல்கிறது.
மது விற்பனையை டாஸ்மாக்கில் இருந்து விடுவித்து, தனியாரிடம் கொடுக்கலாம் என்று ஏற்கனவே அமைச்சர் ஆதவ் அர்ஜுன் கூறியிருக்கிறார்.
வெள்ளையறிக்கையின் பின் உள்ள திட்டம் என்ன? போதிய நிதி இல்லாததால் எங்களது வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்று கைவிரிப்பதா? அல்லது அரசுப் பொறுப்பில் இயங்கும் மின்சாரம்,போக்குவரத்து, குடிநீர், கல்வி, மருத்துவம் ஆகியவற்றை தனியார் மயமாக்குவதா?
இவை தமிழ்நாட்டின் சமூக, பொருளாதாரக் கட்டமைப்பின் எதிர்காலம் குறித்த அத்தியாவசியமான கேள்விகள் ஆகும்.
இந்த வெள்ளை அறிக்கை கடந்த காலத்தை குற்றம் சாட்டுவதற்காக அல்ல, எதிர்காலத்திற்கான செயல்திட்டத்தை முன்வைப்பதற்காக வெளியிடப்பட்டதாக இருந்தால், மக்கள் அதனை வரவேற்பார்கள்.
ஆனால், கடன் சுமையை முன்னிறுத்தி நலத்திட்டங்களைக் குறைப்பது, அரசுப் பணியிடங்களை மேலும் சுருக்குவது, பொதுச் சேவைகளை தனியார்மயமாக்குவது போன்ற பாதையை நோக்கி அரசு நகர்ந்தால், அதன் விளைவுகளை முதலில் சுமக்க வேண்டியது சாதாரண மக்கள்தான்.
எனவே, வெள்ளை அறிக்கையின் உண்மையான அர்த்தம் அதில் கூறப்பட்டுள்ள கணக்குகளில் இல்லை; அந்தக் கணக்குகளை முன்வைத்து நாளை அரசு எடுக்கப் போகும் கொள்கை முடிவுகளில்தான் உள்ளது.
அதற்கான பதிலைத் தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.