
தமிழ்நாட்டில் உள்ள 113 முகாம்களில் கிட்டத்தட்ட 80,000 தமிழ் அகதிகள் உள்ளனர். இலங்கைப் போர் காரணமாக இந்தியாவில் தஞ்சமடைந்த ஈழத்தமிழர்கள் நாற்பது ஆண்டுகளாக தமிழ்நாட்டு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இன்று வரை குற்றவாளிகளைப் போலவே நடத்தப்படுகிறார்கள். மனித மாண்பு கோரும் இவர்களது வாழ்க்கைப் போராட்டம் இன்று வரை கேட்பாரற்றுக் கிடக்கிறது.
தமிழ்நாட்டில் முதன்முறையாக, நாற்பது ஆண்டு கால அகதி வரலாற்றில், அ.சி. விஜிதரன் என்பவர் முதல்முறையாக முனைவர் பட்டம் பெற்றுள்ளார். பல்லாவரம் சிந்தனையாளர் பேரவை, அ.சி.விஜிதரனை சிறப்பிக்கும் வகையில் ஒரு பாராட்டுக் கூட்டம் நடத்தி, விருது வழங்கியது. அதில் அவர், வழங்கிய ஏற்புரை மூலம் அகதிகளின் பாடுகளை தெரிந்து கொள்ள முடிந்தது.
இலங்கையில் பேரினவாதப் போர் தமிழ் மக்களை அகதிகளாக மாற்றியது. வசதி படைத்தோர் ஐரோப்பிய நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து போகும் போது, பொருளாதாரத்திலும், சமூகத்திலும் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் இந்தியாவில், தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு புலம்பெயந்த தமிழ் மக்கள் முன்கூறியது போல் நாற்பது ஆண்டுகளாக அகதிகள் முகாம் என்ற தடுப்பு முகாம்களில் எந்தவித அடிப்படை உரிமையும் அற்று குற்றவாளிகளைப் போல அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.
அகதிகள் என்ற சொல்லால் இவர்கள் அழைக்கப்பட்டாலும், ஐ.நா அகதிகளுக்கான சாசனம் கூறும் அடிப்படை மனித உரிமை, கல்வி, வேலைவாய்ப்பு கூட கிடைப்பதில்லை. சட்டவிரோத குடியேறிகள் போன்று நடத்தப்படுகிறார்கள்.
தமிழ் அகதிகளில் பெரும்பாலும் இலங்கை அகதிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். உண்மையில் அவர்களில் 50% மேல் இந்திய வம்சாவழியினராவர். இந்தியாவில் இருந்து பிரிட்டிஷ் காலத்தில் தமிழ்நாட்டிலிருந்து, இலங்கை தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்ய அழைத்துச் செல்லப்பட்டவர்கள்; கால ஓட்டத்தில், வடக்கு, கிழக்கு இலங்கைக்கு குடி பெயர்ந்தவர்கள்; பிறகு போர் காரணமாக இந்தியாவிற்கு வந்த இந்திய வம்சாவளி தமிழர்கள். அவர்களுடைய உறவினர்கள் பலர் இன்னமும் தமிழ்நாட்டில் பல இடங்களில் வாழ்கின்றனர். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் தமிழ்நாட்டுத் தமிழர்கள் தமிழ்நாட்டில் அகதியாக இருக்கிறார்கள் எனலாம். இது எத்தகைய அநீதி!
அகதிகள், அகதி முகாம்கள் என்ற சொற்கள் இயல்பானவையாகத் தெரியலாம். அதன் உள்ளார்ந்த கொடூரத்துக்கு அந்த மக்களின் பாடுகளே சாட்சி. முகாம்வாசிகளுக்கு குடிமை உரிமைகள் இல்லை. தங்கள் பிரச்சினைகளை அரசிடம் முறையிட முடியாது. வழக்குப் போட முடியாது. தொலைக்காட்சி, செய்தித்தாள் என ஊடகங்களில் எழுத முடியாது. அந்த முகாம்களுக்குள் எந்தவிதமான ஊடகவியலாளரும் போக முடியாது. இவர்கள் க்யூ பிரிவு காவல்துறையினர் கண்காணிப்பில் இருப்பார்கள். 2009ல் இறுதி யுத்தம் முடிந்த 17 ஆண்டுகள் கடந்த பின்னரும் இவர்களை உளவுத்துறை கண்காணிப்பில் வைத்துள்ளனர்.
1983 முதல் உள்ள முகாம் வாழ்க்கையில் இதுவரை ஒருவர்தான் முனைவர் பட்டம் பெற்றுள்ளார் என்பதே கல்விரீதியில் இவர்கள் எப்படி பின்தங்கியுள்ளனர் என்பதை நமக்கு தெளிவாகச் சொல்லும். பத்துக்கு பத்து அறையில், பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த இவர்களுக்கு எந்தவித இடஒதுக்கீடும் இல்லை. வழக்கறிஞர் படித்த ஒருவர் பெயிண்டிங் வேலைக்கு போகிறார். ஏனெனில் பார் கவுன்சிலில் பதிவு செய்ய முடியாது. மருத்துவம் படிக்க முடியாது. எந்தவிதமான போட்டித் தேர்வுகளிலும் (NEET, CUET,TET, JRF, UPSC, TNPSC) இந்தியக் குடிமகனாக இல்லாததால் பங்கு பெற முடியாது. அதாவது வேலைவாய்ப்பிற்கு உத்தரவாதம் இல்லை. எனவே பள்ளி, கல்லூரிகளில் இருந்து விலகும் மாணவர்களின் இடைநிற்றல் அதிகமாக உள்ளது. மன அழுத்தம் காரணமாக அதிக தற்கொலைகள் நடைபெறுகின்றன. இதுகுறித்து எந்தவித ஆய்வும் நடைபெறவில்லை.
தமிழ்நாட்டில் ஈழம் பற்றி எத்தனையோ போராட்டங்களும், விவாதங்களும், அரசியல் முன்னெடுப்புகளும் நடந்து கொண்டிருக்கும் போது, ஈழப் போராட்டத்தினால் அகதியான இந்த மக்கள்பற்றி நிலவும் பெரும் மெளனம் இந்த மக்களை வஞ்சிக்கின்றது.
8 கோடி தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டில் வெறும் 80,000 பேருக்கு வாழ உரிமை இல்லை என்பது எத்தனை கொடூரமானது.
இன்று முகாம்களில் இருக்கும் மூன்றாம் தலைமுறைக் குழந்தைகள், இந்தியாவில் பிறந்த பெற்றோருக்கு இந்தியாவில் பிறந்த குழந்தைகள். இலங்கையை ஒருமுறை கூட பார்க்காதவர்கள். 98 சத பேர் மீது எந்தவித வழக்குகளும் இல்லை. 1987 ஆண்டுக்கு முன்பு இந்தியாவில் பிறந்த குழந்தைகளுக்கு குடியுரிமை உண்டு. 1987 க்கு பிறகு இந்தியர் ஒருவரை திருமணம் செய்தாலும் அவர்களுடைய குழந்தைகளுக்கு குடியுரிமை இல்லை. அதாவது இந்தியா – இலங்கை என இரண்டு நாடுகளிலும் அவர்களுக்கு குடியுரிமை இல்லை. 2019 குடியுரிமை சட்டத்திலும் இலங்கையில் இருந்து வந்தவர்களுக்கு, எந்த நிவாரணமும் இல்லை. இந்தியாவிற்கு வந்து பல்லாண்டுகள் ஆனாலும் சட்டப்படி அவர்கள் நிலை சட்டவிரோதக் குடியேறிகள்தான். இந்தியராக, தமிழராக தங்களை நினைக்கும் அவர்களுக்கு குடியுரிமை இல்லை.
ஐரோப்பிய நாடுகள் அகதிகளை நன்றாக நடத்துகின்றன. இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளின் தேர்தல்களில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களாகி உள்ளனர்.
இந்தியாவிலேயே கூட, திபேத்திய அகதிகளுக்கு இந்திய அரசு கல்வி உதவித்தொகை அளிக்கிறது. வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் உள்ளது. திபெத்திய அகதிகளை மைசூரில் உள்ள ஓரிடத்தில் நல்லவிதமான குடியிருப்புகளில் வைத்துள்ளது. கிழக்கு வங்காளத்தில் இருந்து வந்தவர்களுக்கு மேற்கு வங்காளத்தில் முகாம் என்று ஒன்று இல்லை. ஆனால் தமிழ்நாட்டில்தான் இந்திய வம்சாவளியினருக்கு சிறப்பு முகாம்கள் என அமைக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுகின்றனர்.
இனம், மொழி, மதம், பண்பாட்டு உரிமை போன்ற காரணங்களினால் அடைக்கலம் தேடி வருபவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, வீட்டுவசதி போன்றவைகளை வழங்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் சாசனம் கூறுகிறது. மறுவாழ்வு முகாம்களில் இருப்பவர்கள் சட்டவிரோதக் குடியேறி என்றுதான் இந்திய அரசு பார்க்கிறது.
இன்றைய நிலையில் தமிழ் அகதிகளை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பும் வேலைகளும் இரகசியமாக நடைபெற்று வருகின்றன. தமிழ் அகதிகள் இந்தியாவில், தமிழ்நாட்டில் இருக்கவே விரும்புகிறார்கள். அவர்களை வேறு பல அரசியல் காரணங்களுக்காக இலங்கைக்கு அழைத்துச் செல்லும் வேலைகள் நடைபெறுகிறது.
இலங்கையில் 200, 120, 70 ஆண்டு என தண்டனை பெற்று சிறைகளில் தமிழர்கள் உள்ளனர். முன்னாள் போராளிகளுக்கு மறுவாழ்வு இல்லை. காணாமல் போனவர்களைப் பற்றி யாரும் பேசுவதில்லை. இறந்து போனவர்களின் மனைவிகள், குடும்பத்தாருக்கு எந்த நிவாரணமும் இல்லை. அரசியல் கைதிகள் விடுதலை பற்றி யாரும் பேசுவதில்லை. இந்த நிலையில், இலங்கையையே அறியாத, இலங்கை செல்ல விரும்பாத மக்களை இலங்கைக்கு அனுப்புதல் என்ற உரையாடல், இந்திய குடியுரிமை கோரிக்கையை நீர்க்கச் செய்யும் செயலே.
தமிழ் அகதிகள் பற்றி பொது சமூகத்தின் முறையீடு இல்லாத நிலையில் முகாம்வாசிகள் படும் இன்னல்கள் வெளியில் தெரிவதில்லை. முகாம்வாசிகளுக்கு வாக்குரிமை இல்லாத நிலையில் எந்த அரசியல் கட்சிகளும் இவர்களை கண்டுகொளவதில்லை. முகாம் தடைசெய்யப்பட்ட இடம் என்பதால் எந்தவித ஆய்வோ, கணக்கீடுகளோ எந்தவித நிறுவனங்களும் நடத்துவதில்லை. எனவே தமிழ் அகதிகளின் உரிமைக்கு தமிழ்நாடும், தமிழர்களும் குரல் கொடுக்க வேண்டும். தமிழ் நிலத்தில் அகதிகள் இல்லை என்ற நிலைக்கு அரசியல் செயல்பாடுகள் வேண்டும்.
தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும். இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு சிரிமா பண்டாரநாயகா – சாஸ்திரி இவர்களுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி இன்னமும் ஒன்றரை இலட்சம் பேருக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டும். அதன் அடிப்படையில் குடியுரிமை வழங்க வேண்டும்.
க்யூ பிரிவு அதிகாரிகள் கண்காணிப்பு இல்லாமல், சட்டம் ஒழுங்கு காவல்துறையின் பாதுகாப்பில் அகதி முகாம்கள் கொண்டு வரப்பட வேண்டும். வங்கி மூலம் உதவித்தொகை வழங்க வேண்டும்.
கலைஞர் ஆட்சிக் காலத்தில் இருந்தது போல, முகாமில் உள்ள மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
நுழைவுத் தேர்வு, போட்டித் தேர்வுகளில் பங்குபெற அனுமதிக்க வேண்டும். கல்வி உதவித் தொகை வழங்கப்பட வேண்டும்.
தனியார் நிறுவனங்களில் தமிழ் அகதிகள் பணியாற்றத் தனி அரசாணை வேண்டும்.
அகதிகளின் சமூக, பொருளாதார வாழ்நிலை குறித்து கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு குழு அமைக்க வேண்டும்.
சமூக இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் பல்லாண்டுகளாக இன்னல்படும் தமிழ் அகதிகளுக்காக குரல் கொடுக்க வேண்டும்.