
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையத்திற்கு, மாதவரம், அம்பத்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் பால்பண்ணைகள் உள்ளன.
அம்பத்தூர் பண்ணையில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஏராளமான தொழிலாளர்கள் “கேஷுவல் லேபர்” என்ற பெயரில் வைக்கப்பட்டுள்ளனர். 2 ஆண்டுகளில் 480 நாட்கள் பணிபுரிந்தால், தொழிலாளர்கள் நிரந்தரம் பெறும் தகுதியடைகிறார்கள் என்று தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தொழிலாளர்களுக்கு நிரந்தரத் தகுதி வழங்குதல்) சட்டம், 1981 கூறுகிறது.

இதன் பயனைத் தொழிலாளர்கள் பெறக்கூடாது என்பதற்காக ஓராண்டில் 120 நாட்கள் மட்டுமே அவர்களது பெயரில் நிர்வாகம் வேலை தரும். அதன்பிறகு அதே தொழிலாளிக்கு அவரது ஏதேனும் ஓர் உறவினர் பெயரில் வேலை தருவார்கள். ஆண்டு முடிந்தபின்பு தன் சொந்தப் பெயரில் மீண்டும் 120 நாள்வரை பணி தரப்படும்.
தமிழ்நாடு அரசின் சட்டத்தை, தமிழ்நாடு அரசு சார்ந்த ஒரு நிறுவனமே செயல்படுத்த மறுக்கிறது. இது ஒரு சட்டவிரோதச் செயல். ஓர் ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் இயங்கும் அந்த நிறுவனம், இந்தச் சட்டவிரோதச் செயலைப் பெருமிதமாகச் சொல்லிக்கொள்வது தான் விந்தை.
3,000 பேருக்குமேல் நிரந்தரப் பணியாளர்களைக் கொண்டு இயங்கிய இந்த நிறுவனம், அவர்கள் ஓய்வுபெற்ற பின்பு, அவர்கள் செய்த நிரந்தரப் பணிகள் அனைத்தையும் காண்ட்ராக்ட் தொழிலாளர்களைக் கொண்டு செயல்படுத்தி வருகிறது.
கேஷுவல் தொழிலாளர்களை விட கூடுதலான ஊதியத்தைக் காண்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கு, வழங்குவதன் மூலம், கேஷுவல் தொழிலாளர்களைப் படிப்படியாகக் காண்ட்ராக்ட்டில் தள்ளிவிட்டது. கேஷுவல் தொழிலாளர்களை நிரந்தரம் செய்யுமாறு பல்வேறு முறையீடுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அமைச்சருக்கு தொழிற்சங்கம் சமர்ப்பித்துள்ளது. நிரந்தரத் தொழிலாளர் எண்ணிக்கை வெகுவாகக் குறைக்கப்பட்ட பிறகு, மீதமிருந்த கேஷுவல் தொழிலாளர்களை காண்ட்ராக்ட்டுக்குப் போகுமாறு நிர்வாகம் மிரட்டியது.
எனவே, தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தொழிலாளர் நிரந்தரத் தகுதி வழங்குதல்) 1981 சட்டப்படி 14 தொழிலாளர்கள் வழக்குத் தொடர்ந்தனர். அவர்கள் எந்த இரண்டு வருடங்களிலும் 480 நாட்கள் பணிபுரியவில்லை என நிர்வாகத் தரப்பில் வாதாடினர். ஆனால், இந்தப் பணி முறிவு வேண்டுமென்றே செயற்கையாகச் செய்யப்பட்டது என்பதைக் கண்டறிந்து, அதற்குச் சான்றாக பல்வேறு நீதிமன்றங்களின் தீர்ப்பை எடுத்துரைத்துள்ளார்.
“எதிர்மனுதாரர் நிர்வாகம், தவறான விபரங்களையும் முன்னுக்குப் பின் முரணான விவரங்களையும் வழங்கி உள்ளது” என்றும் “நிர்வாகத்தின் நடவடிக்கை நம்பத் தகுந்ததாக இல்லை என்று கருதி எதிர் மனுதாரரின் விவரங்களை நிராகரிக்கலாம்” என்று கூறி அவர்கள் பணியில் சேர்க்கப்பட்ட தேதியிலிருந்து பணி நிரந்தரத் தகுதி வழங்குமாறு, 29.06.2026-ல் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
இதனையடுத்து, அந்தத் தீர்ப்பை இணைத்து தமக்கு பணி நிரந்தரம் வழங்குமாறு, ஆவின் நிர்வாக இயக்குநருக்கு அந்தத் தொழிலாளர்கள் மனுச் செய்தனர். ஆனால், அது தொடர்பான எந்த அசைவும் இல்லாததால், அந்தத் தொழிலாளர்களை உறுப்பினர்களாகக் கொண்ட தமிழ்நாடு பால்வள அனைத்து ஊழியர் சங்கம் (ஏஐடியூசி) நிர்வாக இயக்குநரை 7.7.2026-ல் நேரடியாகச் சந்தித்து முறையிட்டது. “கேஷுவல் தொழிலாளியை எல்லாம் நிரந்தரம் செய்ய முடியாது” என்று அவர் பதில் சொன்னதுதான் கொடுமையின் உச்சம். தான் ஓர் ஐஏஎஸ் அதிகாரி என்பதால், சட்டத்தையோ, அதன் கீழ் வழங்கப்பட்ட தீர்ப்பையோ மதிக்க வேண்டிய அவசியமில்லை என்று அவர் கருதுகிறார்.
இந்நிலையில் 7.9.2026-ம் தேதியன்று அந்த 14 தொழிலாளர்களுக்கும் எந்த எழுத்துமூலமான அறிவிப்பும் தராமல், வேலைக்கு வரக்கூடாது என்று நிர்வாகம் வாய்மொழியாகச் சொல்லி, வேலையைவிட்டே நிறுத்திவிட்டது.
இது தொடர்பாக சென்னை தொழிலாளர் துணை ஆணையரிடம் சங்கம் புகார் மனு தாக்கல் செய்தது.
ஆவின் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநர், இணை நிர்வாக இயக்குநர், பொதுமேலாளர், மனிதவளத்துறை எல்லாம் இருக்கின்றனர். இவர்கள்தான் தொழிலுறவு பிரச்சினைகளில் தொடர்புடையவர்கள்.
ஆனால், தொழிலாளர் துணை ஆணையரின் விசாரணைக்கு முடிவெடுக்கும் பொறுப்புள்ள அதிகாரி யாரையும் அனுப்பவில்லை. தொழிலுறவுடன் எந்தத் தொடர்பும் இல்லாத துணைப் பொது மேலாளர் (உற்பத்தி) (பொறுப்பு) என்பவர் எதிர்மனு எழுதுகிறார். பால் உற்பத்தி துணைப் பொறுப்பில் உள்ள அவருக்கு, இந்தப் புகார் தொடர்பான விஷயங்களைக் கையாள்வதற்கு எந்த அதிகாரமும் இல்லை. அந்த எதிர் மனுவை எடுத்துக்கொண்டு உதவியாளர் நிலையில் பணியாற்றுபவர் விசாரணைக்கு வருகிறார்.
அந்த எதிர்மனுவில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டிருப்பதால், தீர்ப்பு தம்மைக் கட்டுப்படுத்தாது என்றும், சங்கத்தின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
அந்தத் தீர்ப்புக்கு, அந்தச் சட்டப்படி மேல்முறையீடு எதுவும் இல்லை. சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு கட்டளை மனு (writ petition) தாக்கல் செய்திருக்கிறார்கள். ஆனால், அது எண் இடப்படவும் இல்லை. ஒரு வழக்காக விசாரணைக்கு எடுக்கப்படவுமில்லை, நிரந்தரப்படுத்தும் உத்தரவுக்கு தடையாணை எதுவும் வழங்கப்படவும் இல்லை.
நிரந்தரப்படுத்தும் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை எதுவும் விதிக்காத நிலையில், அந்த தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டதாகக் கருத வழி எதுவும் இல்லை. மேலும், நிர்வாக இயக்குனரின் 8.1.2020-ம் நாளிட்ட ஆணையின்படிதான், 7.9.2026-ம் தேதியன்று இந்தத் தொழிலாளர்களைப் பணியிலிருந்து நிறுத்தியதாகவும் பதிலுரையில் கூறப்பட்டுள்ளது. உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஆறு ஆண்டுகள் கழித்து செயல்படுத்துகிறார்களாம்!
நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற தீர்ப்பைப் பெற்றதற்காக பழிவாங்கும் நோக்கத்தோடு அவர்கள், எந்த அறிவிப்பும் இல்லாமல் திருட்டுத்தனமாக வேலைநீக்கம் செய்துள்ளார்கள் என்பதே உண்மை.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் அதிகமாகப் பணிபுரிந்து வரும் இந்தத் தொழிலாளர்களை, அவர்களை என்ன பெயரிட்டு நிர்வாகம் அழைத்தாலும் கூட, எவ்வித உத்தரவும் இல்லாமல் பணி நீக்கம் செய்ய சட்டப்படி நிர்வாகத்திற்கு அதிகாரம் எதுவும் இல்லை.
தொழிலாளர்கள் யாரையும் நிரந்தரப்படுத்தாமலும், அவர்கள் சட்டப்படி தாம் செய்யும் பணிக்குரிய ஊதியத்தையோ, இதர பலன்களையோ பெற விடாமலும் தடுப்பதையே தமது நிர்வாகத்திறன் என்று, லட்சக்கணக்கான ரூபாய்களை ஊதியமாகவும், இதர வகைகளிலும் பெறுகிற இந்த அதிகாரிகள் கருதுகிறார்கள்.
இதே சட்டத்தின்கீழ் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கேஷுவல் தொழிலாளர்கள் நிரந்தரத் தகுதியளிக்குமாறு தீர்ப்புப் பெற்றபோது, உயர்நீதிமன்றத்தில் கட்டளை மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதனை விசாரித்த நீதிபதி புகழேந்தி “இதே போன்ற மனுக்கள் தொடர்பாக, தகுதியுள்ள பணியாளர்களுக்கு நிரந்தரத் தகுதி வழங்கும் அதிகாரம் தொழிலாளர் ஆய்வாளருக்கு உண்டு என்பதை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் அங்கீகரித்துள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.
மின்வாரிய மனுவை ஏற்க மறுத்த உயர்நீதிமன்றம், உடனடியாக நிரந்தரம் செய்ய சென்ற மே மாதத்தில்தான் உத்தரவிட்டது.
நியாயமாக நிரந்தரம் பெறத் தகுதியிருந்து, அதைச் சட்டபூர்வமாகத் தீர்ப்பின் மூலம் நிரூபித்த தொழிலாளர்கள், எந்த நியாயமான காரணமும் இல்லாமல் நீதிமன்றப் படிகளில் ஏறி இறங்கவும், அதற்கான பெரும் செலவை மேற்கொள்ளவும், மன உளைச்சலுக்கு ஆளாகவும் நேரிட்டது.
அதேநேரத்தில், வாரியத்தைப் பொறுத்தவரை, நிரந்தரத்தை மறுத்த காலம் முழுமைக்கும் தொழிலாளர்களுக்கு முழுச் சம்பளத்தை வட்டியோடு கொடுக்க நேரிட்டது. வழக்குச் செலவும் வாரியத்தின் மீது நிதிச்சுமையாய் விழுந்தது. இரு தரப்புக்கும் பேரிழப்பு ஏற்படக் காரணமான, கட்டளை மனுவைத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட அதிகாரிக்கு எந்த இழப்பும் இல்லை.
இது ஏதோ ஒரே ஒரு தனிப்பட்ட வழக்கு அல்ல; இது போன்ற பல வழக்குகள் தொடரப்படுவதால், பெருமளவிலான பணமும், மதிப்புமிக்க நேரமும் வீணாகின்றன. மாநில அரசின் நிறுவனங்களே, அதே அரசு இயற்றிய சட்டத்திற்கு எதிராகச் செயல்படுகின்றன. அரசு இன்னும் எவ்வளவு காலம் மௌனப் பார்வையாளராக இருக்கப் போகிறது?
‘ஆவின்’ நிறுவனம், அந்த 14 ஊழியர்களை உடனடியாகப் பணியில் மீண்டும் சேர்த்துக் கொள்ள வேண்டும்; அவர்கள் மீண்டும் பணியில் சேரும் நாள் வரையிலான முழு ஊதியத்தையும் வழங்க வேண்டும். மேலும், ஜூன் 29, 2026 தேதியிட்ட உத்தரவைச் செயல்படுத்தி, அவர்களுக்கு நிரந்தர அந்தஸ்தையும் அதனுடன் தொடர்புடைய அனைத்துச் சலுகைகளையும் வழங்க வேண்டும்.
இல்லையெனில், தமிழ்நாடு அரசு இதில் தலையிட்டு, பொறுப்பான அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுத்து, தான் இயற்றிய சட்டத்தை அமல்படுத்த வேண்டும். இந்த ஊழியர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பது மட்டுமல்ல; சட்டத்தை மீறுபவர்கள் மீது அரசு சட்டத்தை நிலைநாட்டுமா?