கட்டுரைகள்

ஆபத்து! ஆபத்து!! பேராபத்து!!!

இரா.முத்தரசன்

ஆபத்து, ஆபத்து, பேராபத்து எனும் ஆந்தை அலறல் பல வாரங்களாக கூக்குரலாக எழுகின்றது. பிரதமர் மோடி, அவரது சகல கைங்கரியங்களுக்கும் துணை நிற்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷா, கூட்டாளிகள் மற்றும் அவர்களது சக பாடிகளின் அலறல், நாள்தோறும் ஒலிக்கிறது.

நாட்டிற்கு ஆபத்து, நாட்டின் சுதந்திரத்திற்கு ஆபத்து என நரிகளைப் போன்று ஊளையிடுகின்றார்கள். நாட்டின் மீதும் நாட்டின் சுதந்திரத்தின் மீதும் பற்று கொண்ட பற்றாளர்களைப் போன்று பொய் வேடமிட்டு அலறுகின்றார்கள்.

நாட்டின் விடுதலைப் போரில் வெள்ளையர்களுக்கு வெஞ்சாமரம் வீசி மன்னிப்புக் கோரும் கடிதத்தை ஆளுக்கு ஒன்றாக கையில் தயார் நிலையில் வைத்துக் கொண்டு, நாட்டின் விடுதலைப் போராட்ட வீரர்களை காட்டிக் கொடுத்திட்ட துரோகக் கும்பல் சிறிதும் வெட்கமின்றி சுதந்திரத்தைப் பற்றி வாய்கிழியப் பேசுகின்றது.

இந்திய நாட்டு மக்கள் விடுதலைப் போராட்ட காலங்களில் ஒன்றுபட்டுப் போராடி சிறை சென்று, சித்திரவதைகளுக்கு ஆளாகி, ரத்தம் சிந்தி, கொடிய அடக்குமுறைகள் அனைத்தையும் எதிர்கொண்டு, விலைமதிக்க முடியாத உயிர்களைத் தந்து, தியாகம் புரிந்த, தியாக உணர்வை மலிவாக தனதாக்க முயலும் தறுதலைக் கூட்டம்.

இந்தியா மீது சீனா படையெடுப்பு, பாகிஸ்தான் படையெடுப்பு, அந்நிய நாட்டு தீவிரவாதிகள் ஊடுருவல் என பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இந்தச் சம்பவங்களின் காலங்களில் ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, அடல் பிகாரி வாஜ்பாய் மற்றும் நரேந்திர மோடி ஆகியோர் நாட்டின் பிரதமராக இருந்துள்ளனர்.

நாட்டு மக்கள் யார் பிரதமர், பிரதமர் எந்த கட்சி என பஞ்சாங்கம் பார்த்ததில்லை. மாறாக, நாட்டுக்கு ஆபத்து என்று வந்தபோதெல்லாம், தங்களின் மதம், ஜாதி, அரசியல் என அனைத்தையும் துறந்து, தேசமே எனக்கு முக்கியம் என்று, ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் முன் வரிசையில் நின்று, அன்னியப் படைகளுக்கும், தீவிரவாத ஊடுருவல் நபர்களுக்கும் எதிராகப் போர்க்கோலம் பூண்டனர்.

ஒன்றுபட்டு குரல் எழுப்பியது மட்டுமல்ல, தானும், தனது குடும்பமும் வறுமையில் வாடிய போதும், போரைக் காரணம் காட்டி விலைகளை உயர்த்தி, வர்த்தக சூதாடிகள் கொள்ளையால் விலைகள் உயர்ந்து, தங்களின் குடும்பத் தேவைக்குரிய உணவுப் பொருள்களை தேவைக்கு ஏற்ப வாங்க முடியாமல் தவித்து தடுமாறிய போதும், ஒவ்வொரு இந்திய குடிமகனும் தேசப் பாதுகாப்பு நிதி வழங்கத் தவறியது இல்லை.

அனைத்து அரசியல் கட்சியினரும் ஒன்றிணைந்து, ஒவ்வொரு ஊரிலிருந்தும் உண்டியல் குலுக்கி நிதி சேர்த்து நிதி அனுப்பினர். மேல்நிலைப் பள்ளி – கல்லூரி மாணவர்கள் நிதி சேர்த்து அனுப்பி வைத்தனர்.

மக்களின் தேசபக்த உணர்வை தன் குறுகிய அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்திக் கொள்ள ஆர்.எஸ்.எஸ். கூட்டம் முயல்கின்றது. “ஆபத்து, ஆபத்து, நாட்டிற்கு ஆபத்து” என குரல் எழுப்பி வருகின்றனர்.

நடைபெற்று வரும் போராட்டங்கள் ஜனநாயகத்திற்கான போராட்டம்! மக்களின் உரிமைக்கான போராட்டம்!! இப்போராட்டங்களில் ஈடுபடுபவர்களைக் கொடிய அடக்குமுறைக் கொண்டு அடக்கி ஒடுக்குவது மட்டுமல்ல,

போராட்டத்தையே கொச்சைப்படுத்தும் நோக்கில் தரம் தாழ்ந்த விமர்சனங்களை முன்வைக்கின்றனர் – உயர்ந்த பொறுப்பில் உள்ளோர்!

தங்களை பரமயோக்கியனாக வெளிக்காட்டித் தங்களின் தவறுகள் அனைத்தையும் மூடி மறைக்கப் போராடுபவர்கள் மீது வீண்பழி சுமத்தி – சந்து, பொந்துகள் வழியே தப்பிக்க முயன்று வருகின்றது பாஜக கூட்டம்.

அமைதியான முறையில் நடைபெறும் போராட்டங்களைத் தடுக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது. ஆனால், நிலைமை என்னவென்று அனைவருக்கும் தெரியும் – இதுவரை ஜந்தர் மந்தர் போராட்டக் களமாக பயன்படுத்தப்பட்டு வந்தது.

தற்போது அவ்விடத்திற்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டு விட்டது. சீப்பை ஒளித்து விட்டால் கல்யாணம் நின்றுவிடும் என்று கேலியாக கூறுவதைத்தான் இன்று பாஜக செயல்படுத்தி வருகின்றது.

ஆட்சியாளர்களின் தவறுகளுக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றால், தவறை ஏற்றுக்கொண்டு தங்களை திருத்திக் கொள்வதற்கு மாறாக தவறை மறைக்கவும், தவறு செய்த நபர்களை காப்பாற்ற – தேச பக்தி குறித்து பேசுவது, நாட்டின் பொருளாதாரம் வளர்ந்து வருகின்றது – உலக நாடுகளுடன் போட்டி போடுகின்றது – இத்தகைய வளர்ச்சியைப் பிடிக்காதவர்கள் அரசுக்கு எதிராக போராடுகின்றார்கள் என்று வசைமாரி பொழிகின்றனர்.

நாட்டின் பொருளாதார ஏற்ற இறக்கத்திற்கும் தற்போது நடைபெற்று வரும் போராட்டத்திற்கும் ஏதாவது தொடர்பு உண்டா?

“மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டு விட்டது. அது தவறு. அத்தகைய தவறைச் செய்தவர் – காரணமானவர் ஞானேஷ்குமார். அவர் பதவி விலக வேண்டும்” என்பதே போராட்டம் ஆகும்.

இந்தப் போராட்டம் எந்த வகையில் பொருளாதார ஏற்றத்தாழ்வை தீர்மானிக்கின்றது? போராட்டம் கூடாது என்கிறார் மோடி. இந்தப் போராட்டம் ஜனநாயகத்திற்கான போராட்டம். இதைக் கூடாது என்கிறார். அவர் மிகக் கவனமாகப் பேசுகின்றார். எதிர்க்கட்சிகள் – மாணவர், இளைஞர்கள் அமைப்பு – அதிலும் குறிப்பாக இடதுசாரி மாணவர்கள், இளைஞர்கள் அமைப்புகள் போராடக்கூடாது என்கின்றார். ஆயுதங்கள் இன்றி ஜனநாயக முறையில் அமைதியான முறையில் நடைபெறும் போராட்டத்தை அவர் ஏற்கவில்லை. இத்தகைய போராட்டங்கள் நாட்டிற்கு எதிரானது, வளர்ச்சிக்கு எதிரானது ஜனநாயகத்திற்கு எதிரானது எனக் கருதுகின்றார். அதற்கேற்பப் பேசி வருகின்றார்.

அவர்கள் விரும்புவது எத்தகைய போராட்டம்? ரத யாத்திரை, பாபர் மசூதி உடைப்பு, கோத்ரா ரயில் எரிப்பும் – அதனைத் தொடர்ந்து நடைபெற்ற வன்முறை பேயாட்டம் போன்ற போராட்டங்களை நேசிக்கின்றனர் – விரும்புகின்றனர்.

நாட்டு மக்களை பிளவுபடுத்துவதாக பிரதமர் பிதற்றுகின்றார். மோடி ஆட்சியின் தவறுகளுக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தைப் பிளவுக்குரிய போராட்டம் என்கின்றார்.

  • எது பிளவு?
  • தனக்கு வாக்களிப்பவர், வாக்களிக்க மறுப்பவர் என வாக்காளர் பட்டியல் தயாரித்தது பிளவு இல்லையா?
  • தேசத் துரோகம் இல்லையா?
  • பச்சை அயோக்கியத்தனம் இல்லையா?
  • ஜனநாயகத்துக்கு புறம்பானது இல்லையா?

பெரும் தவறு புரிந்ததுடன் – தவறை மறைக்க எத்தனை புழுகு மூட்டைகளை அவிழ்த்து விடுவது? தொடர்ந்து பொய் உரைப்பதன் மூலமே தன்னையும், தனது ஆட்சியினையும் தக்கவைத்துக் கொள்ள படாத பாடுபடுகின்றார்.

புலிக்கு பயந்தவன் எல்லாம் தன்மீது படுத்துக்கொள்வீர் என்று கூறினானாம் ஒரு மாவீரன்.

அத்தகைய மாவீரன்தான் நரேந்திர மோடியார்.

சரியும் செல்வாக்கு, அதிகரித்து வரும் மக்களின் போராட்டங்கள்.

இவற்றை எதிர்கொள்ள இயலாத மோடி கம்பெனி

– ஆபத்து! நாட்டிற்கு ஆபத்து!! என்று கூச்சலிடுகின்றது.

எப்படியும் காப்பாற்றி விட வேண்டும் என்று துடியாய் துடிக்கின்றார் மோடி. ஞானேஷ்குமாரைக் காக்க ஆட்சியும், சட்டமும் தனது கையில் இருப்பதாக மோடி கருதலாம். ஆட்சி அதிகாரத்தைக் காட்டிலும் மக்களின் எழுச்சி மேலானது என்பதுதான் வரலாற்று உண்மை!

இத்தகைய உண்மை நமக்குத் தெரிந்தது மட்டுமல்ல – எல்லோருக்கும் தெரிந்த எளிய உண்மைதான். மோடிக்கும் நன்றாகவே தெரியும்.

தெரிந்து, தெளிந்த காரணத்தால்தான் தேசம் குறித்து பேசுகின்றனர். மக்களின் தேசபக்த உணர்வை தனதாக்கிக் கொள்ள தேசபக்த வேஷம் போடுகின்றார்.

தன் தேசபக்த வேடத்தின் மூலம் நிகழ்ந்திட்ட ஜனநாயகப் படுகொலைகளைச் சரிசெய்து விடலாம் என்று முனைகின்றார் மோடி!

பிரதமர் நரேந்திர மோடியே, மோடியின் கும்பலே – வழிகாட்டும் ஆர்.எஸ்.எஸ். கும்பலே – நாட்டிற்கு ஆபத்து இல்லை

மாறாக, நாட்டை ஆளும் உங்களால் நாட்டின் ஜனநாயகத்திற்கு ஆபத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இதனைத் தடுத்து நிறுத்திட, ஜனநாயகம் காத்திடுவதற்கான அமைதி வழி போராட்டம் தொடரும்!

மக்களின் ஒற்றுமையும், தன்னெழுச்சியான இயக்கமும் தொடரும்!!

தொடர்ந்து கொண்டே இருக்கும்.

ஜந்தர் மந்தரை மூடிவிட்டதால் போராட்டம் முடிந்து விடாது!

ராமன் இருக்கும் இடமெல்லாம் அயோத்தி என்று இதிகாசம் கூறுகின்றது-

போராடும் இடமெல்லாமே ஜந்தர் மந்தர்தான்.

ஜனநாயகத்திற்கான உரிமைக்கான போராட்டம் தொடரும், தொடர்ந்து கொண்டே இருக்கும்.

அடக்குமுறைகளும், அவதூறு பிரச்சாரங்களும் மக்களின் போராட்டக் களத்தின் முன்பு தறிகெட்டு ஓடும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button