தமிழகம்

பள்ளி மாணவன் அகிலன் தற்கொலை: வகுப்பறையா? சாதிவெறி கொலைக்கூடமா?

மௌ.குணசேகர்

கோவை மாவட்டம் பீளமேடு பகுதியில் உள்ள கே.கே.நாயுடு அரசு உதவி பெறும் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வந்த தலித் மாணவன் அகிலன், தனக்கு நிகழ்ந்த தொடர் சாதி ரீதியான துன்புறுத்தலால் கடந்த 21.10.2026 அன்று காலை தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டான். இது தமிழ்நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

வகுப்பறையா? சாதி வெறி கொலைக்கூடமா?

“நான் ஒரு இஸ்லாமியன் என்பதாலேயே எந்த தவறும் செய்யாத என்னை மூன்று மணி நேரம் முட்டி போட வைத்தார், ஆசிரியர் அருண்குமார்; அதனாலேயே நான் பள்ளிப் படிப்பையே நிறுத்திவிட்டேன்” என்கிறார் கே.கே.நாயுடு பள்ளி முன்னாள் மாணவர் முகமது ஜாசின். இப்படிப்பட்ட ஆசிரியருக்கு பள்ளி நிர்வாகம் கொடுத்த தண்டனை என்ன தெரியுமா? தலைமை ஆசிரியர் பதவி.

மாணவர்கள் மத்தியில் நஞ்சை விதைத்தச் சாதிவெறி

தலைமை ஆசிரியரின் வழித்தோன்றலான ஆசிரியர் விஜயகுமார் என்பவர் கடந்த 2 மாதங்களுக்கு முன், வகுப்பறையில் யாரொல்லாம் SC Scholarship வாங்குகிறீர்கள்? எழுந்து நில்லுங்கள்? என கேட்டிருக்கிறார். அகிலன் உள்ளிட்ட 4 தலித் மாணவர்கள் எழுந்து நின்றிருக்கின்றனர். இத்துடன், நீங்களெல்லாம் மாட்டுக்கறி சாப்பிடுபவர்களா? என்று கேட்டிருக்கிறார். இந்த கேள்வி மாணவர்கள் மனதில் நஞ்சை விதைத்து விட்டது.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, சக மாணவர்கள் அகிலனையும், மற்ற தலித் மாணவர்களையும் சாதி ரீதியாக கேலி செய்து வந்தனர். விளையாட்டிலும் புறக்கணிக்கப்பட்டதால் தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளான அகிலன் அடிக்கடி பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்தான். ஆசிரியர் விஜயகுமார், அருண்குமார் ஆகியோரிடம் முறையிட்டபோது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டினர். இச்சம்பவங்களை கேள்விப்பட்ட பெற்றோர் பள்ளிக்கு வந்து முறையிடுவதாக கூறியிருந்தனர். அதற்குள் அகிலன் தற்கொலை செய்துகொண்டான்.

5 தனிப்படைகளை அமைத்தது ஆதாரங்களை அழிக்கவா?

மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய இயக்கங்களின் தலையீட்டால் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பீளமேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், இச்சட்டத்தின் கீழ் சாதிய அவமதிப்பு, சமூக புறக்கணிப்பு பிரிவுகளிலும், கேலிவதை தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளிலும் காவல்துறை வழக்கு பதிவு செய்யவில்லை.

காவல்துறை 5 தனிப்படைகளை அமைத்தது பள்ளி நிர்வாகத்துடன் சேர்ந்து ஆதாரங்களை அழிக்கத்தான் என்பது தெரியவந்தது. அச்சுறுத்தலுக்கு உள்ளான மாணவர்கள் சாட்சி சொல்லவில்லை. அகிலனுடன் சேர்ந்து உண்மையும் புதைக்கப்பட்டது. ஆனாலும், 2 ஆசிரியர்களைக் கைது செய்வதற்கான போதுமான ஆதாரங்கள் இருந்தும் அதைச் செயாமல், 2 மாணவர்களை மட்டும் காவல்துறை கைது செய்தது.

உடலை வாங்காமல் 6 நாட்கள் தொடர் போராட்டம்

அக். 22 அன்று பீளமேடு காவல் நிலையத்திலும், அக். 23 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் மாணவன் உறவினர்களும், முற்போக்கு இயக்கத்தினரும் முறையிட்டனர். அதற்குப் பின், அக். 24 முதல் 26 வரை கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. பலகட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. காவல்துறை அதிகாரிகள், ஆட்சியர் என அனைவரும் 6 நாட்களாக “ஆதாரங்கள் இல்லை, கைது செய்ய முடியாது” என்ற ஒற்றைப் பதிலையே வேறுவேறு வார்த்தைகளில் தெரிவித்தனர்.

பெற்றோரின் உறுதியும், தொடர் போராட்டமும்

“பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களிடம் சாதி ரீதியாகப் பேசவில்லை; இது மாணவர்களுக்கு இடையில் நடந்த பிரச்சினை” என்று காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும், பள்ளி நிர்வாகமும் பொய் பிரச்சாரத்தைக் கட்டமைத்தனர்.

இதற்கு எதிராக, பெரும் துயரத்திற்கு மத்தியிலும், அகிலன் உடலை வாங்க மறுத்து பெற்றோரும், உறவினர்களும் கடும் வெயிலிலும், கொட்டும் மழையிலும் நீதி கேட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு பக்கபலமாக, சி.பி.ஐ., சி.பி.ஐ.(எம்), AISF, AIYF, TOPM உள்ளிட்ட 30 மேற்பட்ட மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய இயக்கங்கள் ஒன்றுபட்டு களமிறங்கி ஒருமித்த குரலாக அகிலனுக்கு நீதி கேட்டுப் போராடினர். அக். 26 அன்று நடைபெற்ற போராட்டத்தில் சி.பி.ஐ.(எம்) மாநில செயலாளர் பெ.சண்முகம், சி.பி.ஐ. மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் கே.மாரிமுத்து எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்துகொண்டு நீதி கேட்டு குரல் எழுப்பினர்.

இறுதி ஊர்வலம்

ஆசிரியர்கள் கைது என்ற கோரிக்கையைத் தவிர, சி.பி.சி.ஐ.டி. விசாரணை, அரசு வேலை, கூடுதல் இழப்பீடு என அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றுகொண்டது. 6 நாட்கள் கடந்ததால், போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு, அகிலன் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அக். 27 அன்று காலை 10.30 மணியளவில் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையிலிருந்து பீளமேடு ஏ.டி.காலனி மயானம் வரை அகிலனின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது.

தனியார்மயமும், மனுஸ்மிருதியும் செய்த நிறுவனப் படுகொலை

“அகிலன் தனக்கு நிகழ்ந்த சாதிய துன்புறுத்தல்கள் குறித்து நூலக ஆசிரியரிடம் முறையிட்டிருக்கிறார்; இதை அவர் தலைமை ஆசிரியரிடம் தெரிவித்திருக்கிறார்” என்ற ஆதாரத்தை போராட்டக்குழுவிடம் சொன்ன காவல்துறையே ஆதாரமில்லை என்கிறது. அகிலன் மரணம் என்பது தனியார் பள்ளி முதலாளிகளும், மனுஸ்மிருதியும் கூட்டாகச் செய்த நிறுவனப் படுகொலை என்பதில் சந்தேகமில்லை. வழக்கறிஞர் கனவோடு கல்வி பயிலச் சென்ற அகிலன் பிணமாக வந்ததைப் பார்த்து கதறிக் கதறி அழுத பெற்றோருக்கு தமிழ்நாடு அரசு பதில் சொல்ல வேண்டும். குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

செய்ய வேண்டியது என்ன?

கல்வி வளாகங்களில் சாதிய பாகுபாட்டை தடுத்திட நீதியரசர் சந்துருவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். மாணவர்கள் தங்களது பிரச்சினைகளை துணிச்சலுடன் தெரிவிக்கவும், தீர்வு காணவும், கல்வி வளாகங்களை ஜனநாயகப்படுத்தவும் மாணவர் பேரவைத் தேர்தல்களை கல்வி நிறுவனங்களில் நடத்த வேண்டும்.

கல்வி நிறுவனங்களில் சாதி பாகுபாடுகளுக்கு எதிராக போராடும் மாணவர் அமைப்புகளை தனியார்மய, தாராளமய, உலகமயத்திற்கு எதிராகவும், சனாதனத்திற்கு எதிராகவும் போராட முன்வரவேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button