
தமிழ்நாடு ஏஐடியுசி 21 வது மாநாட்டு நிறைவில், பிரம்மாண்டமான பேரணி நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் ஏஐடியுசி பொதுச்செயலாளர் அமர்ஜித் கவுர் உரையாற்றினார். அவரது உரையை டி.எம்.மூர்த்தி மொழி பெயர்த்தார்.
அந்த உரையின் சுருக்கம் வருமாறு:
நாம் ஏந்தி நிற்கும் செங்கொடி, சிகாகோவில் தொழிலாளர் போராட்டத்தில், துப்பாக்கிச் சூட்டுக்கும், தடியடிக்கும் ஆளாகி தொழிலாளர்கள் சிந்திய ரத்தத்தால் சிவப்பாக்கப்பட்ட கொடி.
விஞ்ஞானத்தையும், போராட்டத்தையும், அர்ப்பணிப்பையும், உறுதியையும் இந்தக் கொடி நமக்கு எடுத்துச் சொல்கிறது.
இந்தியாவை வெள்ளையர்கள் ஆண்டு கொண்டிருந்த போது, ஏஐடியுசி செங்கொடியின்கீழ் தொழிலாளர்கள் ஒன்று திரண்டனர். அவர்கள் தமது விடுதலையை மட்டும் கோரவில்லை; நாட்டின் விடுதலைக்காகவும் சேர்த்தே போராடினர்.
1920ல் ஏஐடியுசி அமைக்கப்பட்ட போது, ஆர்.எஸ்.எஸ். பிறக்கவே இல்லை. நாம் தெருக்களிலும், ஆலைகளிலும், கிராமங்களிலும், பணியிடங்களிலும், பள்ளிக்கூடங்களிலும் போராடிக் கொண்டிருந்தோம். எல்லாம் மனிதர்களுக்கும் சிவப்பு ரத்தம்தான் ஓடுகிறது. பச்சை, நீலம், காவி, மஞ்சள் என்று வேறு எந்த வண்ணத்திலும் ரத்தம் இல்லை.
மனிதர்களிடையே கல்வி, வேலை, மருத்துவம், உணவு, இருப்பிடம், மகிழ்ச்சியான குடும்ப வாழ்வு எல்லாமும் சமமாக கிடைக்க வேண்டும் என்று சிவப்பு விரும்புகிறது, அதற்காகப் போராடுகிறது.
நமக்கு ஐந்து ஆண்டுகள் கழித்து பிறந்தது ஆர்.எஸ்.எஸ். பிரித்தாளும் சூழ்ச்சியை அது பிரிட்டிஷ்காரர்களிடமிருந்து கற்றது. ஹிட்லர், முசோலினியிடமிருந்து வெறுப்பரசியலையும், சர்வாதிகாரத்தையும் கற்றது.
விடுதலை அடைந்த இந்தியாவில் அது மதவெறிக் கலவரங்களை விதைத்தது. முதலாளித்துவத்தை நக்கிப் பிழைத்தது. சர்வதேச நிதி மூலதனத்திற்கு அடிபணிந்தது.
2018 பாஜக தொண்டர்கள் கூட்டத்தில் மோடியும், அமித்ஷாவும் பேசினார்கள், இன்னும் 50 ஆண்டுகளுக்கு ஆட்சி அதிகாரத்தை யாரிடமும் கொடுக்க மாட்டோம் என்று! அதனைத்தான் இப்போது செயல்படுத்துகிறார்கள்.
ஜனநாயகம் நிலைத்தால், தாம் அகற்றப்படுவோம் என்று ஆர்.எஸ்.எஸ்-சுக்குத் தெரியும். தான் விரோதியாய் நினைப்பவர்களைக் கொன்று குவித்தது மட்டுமல்ல, அவர்களது வாக்களிக்கும் உரிமையைப் பறித்து நடைப்பிணம் ஆக்கி, தனக்கு வாக்களிக்க கூடியவர்களுக்கு மட்டுமே வாக்களிக்கும் உரிமையைத் தர அது ஒரு சதி செய்தது.
அதற்குத் துணையாக ஞானேஷ்குமாரை தேர்தல் தலைமைத் ஆணையராகத் தேர்வு செய்தது. ஆர்.எஸ்.எஸ்-சின் கைப்பொம்மைதான் இந்த ஞானேஷ்குமார்.
அவர் முறைகேடாக நடத்திய வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம், 13கோடி இந்தியர்களின் வாக்குரிமையைப் பறித்து விட்டது. நீங்கள் தீர்மானித்து வாக்களிக்க முடியாது. அவர்களுக்கு வாக்களிப்பவர்கள் மட்டுமே வாக்காளர்களாக இனி இருப்பார்கள்.
இந்திய ஒன்றியத்தின் அரசமைப்புச் சட்டத்தையே அவர்கள் தலைகீழாகக் கவிழ்க்கிறார்கள். வாக்களிக்கும் உரிமையை பறிக்கிறார்கள்.
மக்களுக்கு உரிமை போய்விட்டால், உங்களிடம் வாக்காளர் அட்டை இல்லாவிட்டால், உங்களுக்கு ரேஷன் பொருள் கிடையாது; அரசாங்கத்தின் எந்த நலத்திட்டத்திற்கும் நீங்கள் உரியவராக மாட்டீர்கள். சொந்த நாட்டிலேயே அன்னியர்களாய். அகதிகளாய் வாழ வேண்டும்.
அனைத்து பாதகங்களையும், கவலையின்றி ஞானேஷ்குமார் செய்து கொண்டிருக்கிறார்.
எதிர்த்துப் போராடும் நம் இளைஞர்களைக் குரூரமாகத் தாக்குகிறார்கள். அவர்களது குரல் வெளியே கேட்கக் கூடாது என்பதற்காக டில்லியையே இழுத்து மூடுகிறார்கள்.
இணையதளத்தை முடக்குகிறார்கள். தான் நடத்தும் மனிதத்தன்மையற்ற கொடூரத் தாக்குதல் எங்கும் பதிவாகி விடக்கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கிறார்கள்.
மோடியின் திருக்கால்களில் சரணடைந்து விட்ட மைய ஊடகங்கள் அவரது புகழைப் பாடுகின்றன. எதிர்ப்புகளை இருட்டடிப்பு செய்கின்றன.
மோடியின் பாதகக் கொள்கைகளை எதிர்த்து 2015 முதல் 2026 வரை அகில இந்திய வேலை நிறுத்தங்கள் 11ஐ நடத்தி இருக்கிறோம்.
மக்களின் உரிமைகளை பறிக்க வேண்டும் என்றால் தொழிற்சங்க உரிமையை பறிக்க வேண்டும் என்று அவர்கள் 44 சட்டங்களின் சாற்றைப் பிழிந்து விட்டு சக்கையாக நான்கு சட்டத் தொகுப்புகளை தந்திருக்கிறார்கள்.
விவசாயிகளை ஓராண்டு காலம் டெல்லியின் எல்லையில் வைத்து அடித்துத் துவைத்தார்கள்.
மூன்று தலைமுறைகள் செலுத்திய வரியினால் உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
மனிதனுக்கு தேவையான எல்லாவற்றையும் சந்தை பார்த்துக் கொள்ளும் என்று மக்களைக் காப்பாற்றுவதற்கான அரசாங்கத்தின் பங்களிப்பைக் கை கழுவுகிறார்கள்.
அமெரிக்காவுடனான வணிக ஒப்பந்தம், நமது உற்பத்தி துறையை விவசாயத்தை சீர்குலைக்க போகிறது. அமெரிக்கப் பொருட்கள் வரியே இல்லாமல் இந்தியாவில் வந்து இறங்கும். ஆனால் இந்திய பொருட்கள் அமெரிக்காவுக்கு சென்றால் 18 சதத்திலிருந்து 100% வரை வரி கட்ட வேண்டும். நமது அன்னிய செலாவணி ஆபத்துக்குள்ளாகிறது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு விழுந்து கொண்டே இருக்கிறது.
83 ஆயிரம் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பாலஸ்தீனர்களை கொன்று குவித்த இஸ்ரேலுக்குப் போய், அது இந்தியர்களின் ‘தந்தையர் நாடு’ என்று வெட்கமின்றி பேசுகிறார் மோடி. மனிதர்களை ஈவிறக்கம் இன்றி வேட்டையாடி இன ஒழிப்பை நடத்துபவனா நமக்குத் தந்தை?
இந்தியா நமது தாய் நாடு மட்டுமல்ல, தந்தையர் நாடும் இதுதான்.
இந்தியாவை 200 ஆண்டுகளுக்கு பின்னால் இழுப்பதற்கு முயற்சிக்கிறார்கள்.
2019லேயே இந்த அரசு தோற்றுப் போய் இருக்க வேண்டும். புல்வாமா தாக்குதலைத் தோற்றுவித்து வெற்றி பெற்றார்கள்.
2024ல் தோற்றே போனார்கள். ஆந்திராவின் சந்திரபாபு நாயுடு பீகாரின் நிதிஷ்குமார் இருவரையும் இழுத்து ஒட்டுப்போட்டு இன்று அரசாட்சி நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.
இந்திய அரசியல் சாசனத்தின் படி நாம் அனைவரும் சமம். எவனும் உயர்ந்தவன் இல்லை; யாரும் தாழ்ந்தவரும் இல்லை. நமது செங்கொடியும் அதைத்தான் சொல்கிறது.
ராணுவமும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களும் சேர்ந்து நடத்தும் அனைத்து தாக்குதல்களையும் தாங்கிக் கொண்டு, அச்சமற்று நமது இளைய தலைமுறை போராடிக் கொண்டிருக்கிறது.
200 ரயில்கள் டெல்லிக்கு போகாமல் ரத்து செய்தார்கள். 57 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டன. இணையதளம் முடக்கப்பட்டது. ஆனால் ஆயிரம் ஆயிரமாய், லட்சக்கணக்கில் இளைஞர்கள் டெல்லியில் கூடுவதை அவர்களால் தடுக்க முடியவில்லை.
அமைதியாக போராடுவதை அரசியல் சாசனம் அனுமதிக்கிறது. ஆனால், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், மாணவர் பெருமன்றம், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி உள்ளிட்ட அமைப்புகளின் பதாகைகளைத் தாங்கிக் கொண்டு – இளைஞர்கள் அனைத்து தாக்குதல்களையும் தாக்குப் பிடித்து நிற்கிறார்கள்.
யுத்தம் துவங்கிவிட்டது.
எந்த ராணுவமும், காவல்துறையும், குண்டர்களும் அடக்கி ஒடுக்கி விட முடியாது.
எந்த அச்சுறுத்தலும் மிரட்டலும் இனி போராடும் மக்களை தடுக்க முடியாது.
நமது உரிமைகளை, இந்தியத் திருநாட்டை, அதன் மக்களை, அரசமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றுவதற்கான போராட்டத்தில் எல்லோரும் இணைய வேண்டிய காலம் வந்துவிட்டது.
ஏஐடியுசி-யின் துடிப்பு மிக்க பிரிவான தமிழ்நாடு மாநிலக் குழுவுக்கு வாழ்த்துக்கள்.
இந்தப் பேரணியில் பிரம்மாண்டமாக அணிவகுத்து வந்த உங்கள் அனைவருக்கும் செவ்வணக்கம்.