அறிக்கைகள்இந்தியா

சுதந்திர தின வாழ்த்துக்கள்

-இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயற்குழு

77-வது சுதந்திர தின வாழ்த்துகள் தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு…

பிரிட்டிஷ் ஏகாதிபத்திய காலனி ஆதிக்கத்தில் இருந்த நாட்டின் விடுதலைப் போராட்டம் வெற்றி பெற்று 76 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. சுமார் 200 ஆண்டுகள் நீடித்த விடுதலைப் போராட்டத்தில், எண்ணிக்கையில் அடங்காத குடிமக்களும் போராடியுள்ளனர். சாதி, மதம் உள்ளிட்ட அனைத்து வேறுபாடுகளையும் தாண்டி,  அன்னை நாட்டின் அடிமை நிலை நீங்க, ஒன்றுபட்டு நடந்த  போராட்டம்  வெற்றி கண்டது.

ஆங்கிலேய அரசு நாட்டு மக்களை மத அடையாளத்தில் பிளவுபடுத்தி, ஆட்சியை பாதுகாத்து கொள்ள முயன்றது. மகாத்மா காந்தியும், தேசிய விடுதலை இயக்கமும் மதச்சார்பின்மை கொள்கையை முன்னெடுத்து மகத்தான வெற்றி பெற்றது. 

இதனைத் தொடர்ந்து  நாடாளுமன்ற ஜனநாயக முறையில் மக்களாட்சி உறுதி செய்யப்பட்டது. அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கி, மாநிலங்கள் இணைந்த இந்திய ஒன்றியம் கட்டமைக்கப்பட்டது.  சுயசார்பு பொருளாதாரம் உருவாக பொதுத்துறைகள் உருவாக்கப்பட்டு, நாட்டின் இறையாண்மை நிலைநிறுத்தப்பட்டது.

1990 ஆம் ஆண்டுகளில் அறிமுகப் படுத்தப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கையும், உலகமயப் பொருளாதாரத்தை ஏற்று, செய்யப்பட்ட கட்டமைப்பு சீர்திருத்தங்களும் அரசின் சலுகை சார் மூலதனமாக வளர்ந்தது. இதன் மூலம் பன்னாட்டு குழும  நிறுவனங்கள் மற்றும், நிதி மூலதன சக்திகளும் அரசதிகாரத்தில் அழுத்தம் செலுத்தி வருகின்றன. 

இவர்களது ஆதரவில்  இந்துத்துவா அரசியல் கருத்தியல் கொண்ட பெரும்பான்மை மதவாத சக்திகள் அதிகாரத்தை கைப்பற்றி பத்தாண்டுகளாக ஆட்சியில் தொடர்கின்றன. இந்தச் சூழலில், 77வது சுதந்திர தினத்தில்  நாட்டை  பேராபத்து சூழ்ந்து நிற்கிறது.

நாட்டின் ஒற்றுமைக்கு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கிய சிறப்பு தகுதி நீக்கப்பட்டதால், பிளவுபடுத்தப்பட்ட மாநிலமாக,  நான்காண்டுகளாக ஜனநாயகம் மறுக்கப்பட்ட நிலையில் துடிதுடித்து வருகிறது..

அதானி – அம்பானி உள்ளிட்ட  உயர்தட்டு ஒரு சதவீத மில்லியனர்களிடம் நாட்டின் மொத்த செல்வத்தில் 40 சதவீதம் குவிந்து விட்டது. மறுபுறத்தில் வேலையின்மை, வருமான இழப்பு, தொழில் நெருக்கடி, விலைவாசி உயர்வு என கடுமையான சூழலுக்குள் பெரும்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். தொழிலாளர்களின் சட்ட உரிமைகள் பறிக்கப்பட்டும், விவசாயிகள் நலன்கள் புறக்கணிக்கப்பட்டும் வருகின்றன.

இந்துத்துவா மதவெறி சக்திகள் கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையில், மணிப்பூர், அரியாணா, உத்தரப்பிரதேசம் உட்பட நாடு முழுவதும் வெறுப்பு அரசியலை விதைத்து, சிறுபான்மை மக்களின் நலனை பலியிடும் வன்மத்தில்  மதவெறியை ஒருங்கிணைத்து தேர்தல் ஆதாயம் தேடும் மலிவான அரசியல் நிராகரிக்கப்பட வேண்டும்.

ஆளுநர் மாளிகைகளும், ஆளுநர்களும் ஜனநாயக ஆட்சி முறைக்கு எதிராக கலகங்களை ஏற்படுத்தும் சதி ஆலோசனை மையங்களாகவும், முகவர்களாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.  

பள்ளி மாணவர்களிடம் சாதிய உணர்வும், வெறியும் வெளிப்பட்டு வருவது சமூக நீதி கொள்கைக்கு சவாலாக எழுகிறது

இந்தச் சூழலில் நாட்டின் 77-வது சுதந்திர நாளில் இந்துத்துவா மதவாத சக்திகளை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றி, நாட்டையும், மக்களையும் பாதுகாப்போம் என உறுதியேற்று, நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button