கட்டுரைகள்

சென்னை பல்கலைக்கழகத்தில் பற்றி எரியும் சாதி தீ

– வழக்கறிஞர் கீ.சு.குமார்

சென்னை பல்கலைக்கழகம் 174 கல்லூரிகளின் தாய். 87 துறைகளையும், 230 வகை பட்டப் படிப்புகளையும் வழங்கும் இந்தியாவின் மிக மூத்த பல்கலைக்கழகம். 175 ஆண்டு பாரம்பரியத்துடன் சென்னையின் வரலாற்று அடையாளமாகத் திகழ்கிறது.
நான் சென்னை பல்கலைக்கழகத்தின் மாணவன் என்று சொல்லும் ஒவ்வொரு மாணவனின் உணர்விலும் பெருமையும், உயர்வும் மேலிடுகிறது.

தேசிய தர நிர்ணய கவுன்சிலால் ஐந்து நட்சத்திர தரம் இப்பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

ஏ.பி.ஜெ.அப்துல் கலாம், ஆர்.வெங்கட்ராமன் உள்ளிட்ட ஐந்து ஜனாதிபதிகளை நாட்டிற்கு இப்பல்கலைக்கழகம் ஈன்றிருக்கிறது. சி.வி.ராமன், சந்திரசேகர் ஆகிய நோபல் பரிசு பெற்றவர்களையும், ராமானுஜம், எஸ்.ஆர்.சீனிவாச வரதன் உள்ளிட்ட கணித மேதைகளையும் நாட்டிற்கு வழங்கிய போற்றுதலுக்குரிய நிறுவனம் சென்னை பல்கலைக்கழகம்.

இத்தகைய போற்றுதலுக்கும்  பெருமிதத்திற்கும் உரிய இந்நிறுவனம் இன்று சாதிய பாகுபாடு எனும் சகதியில் சிக்கித் தவிக்கிறது. தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாநில தாழ்த்தப்பட்டோர் விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு, மனித உரிமை ஆணையம், உயர்நீதிமன்றம், இவை அனைத்திலும் பல்கலைக்கழகத்தில் நிலவும் சாதிய பாகுபாடு குறித்து புகார் அளிக்கப்பட்டு பல்கலைக்கழகத்தின் சாதிய போக்கும், தலித் விரோதப் போக்கும் சந்தி சிரிக்கிறது.

தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தைத் தொடர்பு கொண்ட 17 தலித் உதவி பதிவாளர்களின் அழைப்பை ஏற்று பல்கலைக்கழகத்திற்கு நேரில் சென்று ஆணங்களையும், கள நிலவரங்களையும் ஆய்வு செய்தோம். ஆய்வின் இறுதியில் பல்கலைகழகத்தில் நிலவி வரும் சாதிய பாகுபாடும், தலித் விரோதப் போக்கும் நம்மை அதிர்ச்சி அடைய வைக்கிறது.

இங்கு பாதிக்கப்பட்டோர் கடைநிலை ஊழியரோ, இடைநிலை ஊழியரோ அல்ல. பல்கலைக்கழகத்தின் உயர் பொறுப்பில் இருக்கும் 17 உதவி பதிவாளர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகத்தின் மொத்த உதவி பதிவாளர்களின் எண்ணிக்கை  31. பணி மூப்பு மற்றும் தகுதி அடிப்படையில் பதவி உயர்வு பெற்று பணி அமர்த்த படவேண்டியவர்களில் 17 பேர் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சார்ந்தவர்கள். இப்பதவிக்குரிய முழு தகுதியான 10+2+3+2 என்ற முறையில் படித்து பட்டம் பெற்றவர்கள். மற்ற 14 பேரும் தலித் அல்லாத இதர சமூகத்தைச் சார்ந்தவர்கள். இவர்களில் பலர் திறந்தவெளி கல்வித் திட்டத்தில் நேரடியாக எம்.ஏ. படித்து உதவி பதிவாளர் பதவிகளை சர்ச்சைகளுக்கு மத்தியில் கைப்பற்றியவர்கள். இவர்களின் பதவி குறித்தும், தகுதி குறித்தும் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்தப் பின்னணியில் பல்கலைக்கழகத்தின் இதர பணியார்கள் இந்த 17 உதவிப் பதிவாளர்களுக்கு கீழ் பணியாற்ற வேண்டிய நிலை வந்து விடுகிறது. பணி செய்வது பல்கலைக்கழகமாக இருந்தாலும் உணர்வில் ஊறி இருப்பது சாதி எனும் பாதாள சாக்கடை தானே!

இதர சாதிப் பணியாளர்கள் பலரும் இந்த தலித் பணியாளர்களுக்கு கீழ் பணியாற்ற விரும்பாமல், இவர்களின் பதவி உயர்வை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து பணி உயர்வை தடுக்க தீட்டப்பட்ட சதிகள்  இரண்டாண்டு சட்டப் போராட்டத்திற்குப் பின்னர் முறியடிக்கப்பட்டது. இதன் பின்னர், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பல்கலைக்கழகம் இவர்களுக்கு உதவிப் பதிவாளர் பணி வழங்கியது. உரிய அறைகளுக்கு பொறுப்பேற்க  சென்ற இவர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது.

இவர்களின் அறை வாயில்களுக்கு மேலாக பெயர் பலகை பொருத்தப்பட்டிருக்க வேண்டும். அதில் பதிவாளரின் பெயர், பொறுப்பு, துறை போன்றவை எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அந்தப் பெயர் பலகை இரவோடு இரவாக அகற்றப்பட்டு வெற்றிடமாக உள்ளது. அறையில் பணி செய்பவர்கள் யார்? என்ன பொறுப்பு? என்ற துறை? என்ற அடையாளம் மறுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவால் கிடைப்பெற்ற பணி உயர்வின் போது வழங்கப்பட்ட அடையாள அட்டைகள் வலுக்கட்டாயமாக நிர்வாகத்தால் பறிக்கப்பட்டுள்ளது.

சம்பளம் வாங்கும்போது இவர்களுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. சம்பள ரசீது மீது பெயரும், பதவியும் சரியாக அச்சிடப்பட்டிருந்தாலும் வழங்கப்பட்ட சம்பளத் தொகை பழைய பொறுப்புக்கான எஸ்.ஓ. எனப்படும் செக்சன் அலுவலரின் சம்பளமாகவே நீடிக்கிறது. இதற்கு பல்கலைக்கழகத்தில் தரப்பில் சொல்லப்படும் சொத்தைக் காரணம் நம்மை மூக்கால் சிரிக்கத் தோன்றுகிறது. இவர்களின் பணி உயர்வு ஆணை மேல் முறையீட்டில் உள்ளதாம்.

பணி உயர்வு வழங்கி பணிகளை செய்யத் துவங்கிய பின்னர்,

அடையாள அட்டையைப் பறிக்கலாமா?
சம்பளத்தைக் குறைக்கலாமா?
பெயர் பலகையை அகற்றலாமா?

தாழ்த்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிரான இத்தகைய வன்செயல்கள் எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதியத்தக்க கொடுங்குற்றமாகும். இத்தகைய குற்றம் செய்யும் ஆணவம் பல்கலைக்கழகத்தில் ஊழியர்களுக்கு, நிர்வாகத்திற்கு எங்கிருந்து வருகிறது? யார் பின்னணி? என பல கேள்விகள் நமக்கு எழுகின்றன.

பல்கலைக்கழகத்தின் பல்வேறு நிலைகளில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும்   உயர் அதிகாரிகளான இவர்களின் மேஜைக்கு வந்து வருகைப் பதிவேட்டில் கையப்பம் இடுவது நூற்றாண்டு வழக்கம். ஆனால், தலித் அதிகாரிகளின் முன்னால் கையப்பமிட இவர்களின் சாதி வெறி தடுக்கிறது.  பிற சாதி பணியாளர்கள் வருகைப் பதிவேட்டை வெளியே கொண்டுபோய் எல்லோரும் கையெழுத்துப் பெற்று கடைநிலை ஊழியர் மூலமாக பதிவாளர் மேஜைக்கு வருகிறது. தலித் என்ற ஒற்றைக் காரணத்தால் இத்தகைய வன்செயல்கள் இவர்கள் மேல் பல ஆண்டுகளாக தொடர்ந்து திணிக்கப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்னால் இதே சென்னை பல்கலைக்கழகத்தில் சாதியப் பாகுபாட்டுடன் அனில் என்கிற தலித்  மாணவன் பேராசிரியரை எதிர் கேள்வி கேட்ட காரணத்தால், அக மதிப்பெண்கள் மறுக்கப்பட்டு, தேர்வெழுத அனுமதி மறுக்கப்பட்டு, பல்வேறு சாதிய வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இடதுசாரி அமைப்புகளால் போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிலை மாணவர்களிடமும், பல்கலை ஊழியர்களிடமும் மட்டும் அல்ல. பேராசிரியர்கள் மத்தியிலும் சாதியப் போக்கும், தலித் விரோதப் போக்கும் தலைவிரித்து ஆடும் செய்தி நமக்கு வந்த வண்ணம் உள்ளது.

பேராசிரியர் மற்றும் இதர பணியாளர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டுமுறை முறையாக பின்பற்றப்படுவதில்லை. சுமார் 60 சதவீதத்திற்கும் மேலான பேராசிரியர் மற்றும் பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. காலியாக உள்ள பணியிடங்கள் பற்றிய தகவல் செனட் குழுவில் முன்வைக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பணியாளர்களுக்கான இடங்களுக்கு தகுதியானவர்கள் கிடைக்கவில்லை என்ற காரணம் கூறி நிரப்பப்படுவதில்லை. இதர பிற்படுத்தப்பட்டோர் பணியிடங்களில் பதவி உயர்வும், பணியிடங்களை நிரப்புவதில் பல்கலைக்கழகம் காட்டும் அக்கறை எஸ்.சி/எஸ்.டி. பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் விவகாரத்தில் அக்கறை இல்லை என்பதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

தாழ்த்தப்பட்ட பேராசிரியர்களின் பதவி உயர்வு மூன்றாண்டுகளில் வழங்கப்பட வேண்டும் என்று விதிகள் சொன்னாலும் 5 ஆண்டு முதல் 10 ஆண்டு வரை இவர்களின் பதவி உயர்வு பல்கலைக்கழகத்தால் இழுத்து அடிக்கப்படுகிறது.

சாதிய பாகுபாடுகளைக் கையாள்வதற்காக பல்கலைக்கழகத்தால் அமைக்கப்பட்டுள்ள தீர்வு குழு மீது யாருக்கும் நம்பிக்கை இல்லை. இக்குழுவுக்கு உரிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்படவில்லை.

நீதிமன்றம், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் என எங்கெங்கு போராடியும் இங்கு பற்றி எரியும் சாதி தீ அணைந்த பாடில்லை!

திராவிட மாடல் ஆட்சி, சமூக நீதி ஆட்சி என சொல்லப்படும் தமிழக அரசு, போற்றுதலுக்குரிய வரலாற்று சிறப்புகளைக் கொண்ட சென்னை பல்கலைக்கழகம் இத்தகைய சாதிய வன்கொடுமை புகார்களுக்கு ஆளாவதை இனியும் அனுமதிக்க கூடாது.

சென்னை பல்கலைக்கழகம் இதற்கு விரைவில் ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். இல்லையேல், இடதுசாரிகள் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு முற்றுப்புள்ளி வைக்க நேரிடும்!

தொடர்புக்கு: 99520 23935

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button