அறிக்கைகள்தமிழகம்

பாஜகவே ஆட்சியை விட்டு வெளியேறு !

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டத்தில் தீர்மானம்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழுக் கூட்டம் சேலத்தில் ஆகஸ்ட் 14 முதல் 17 வரை நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு…

பாஜகவே ஆட்சியை விட்டு வெளியேறு!
ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு, செப். 12, 13, 14 தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் தொடர் மறியல்
தீர்மானங்கள்

#விலைவாசி உயர்வுக்கு காரணமான,

# வேலையின்மையை அதிகரித்த,

# மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கிற,

# இந்தியைத் திணித்து தமிழைப் பழிக்கிற,

# சொந்த லாபங்களுக்காக நாட்டை நாசமாக்குகிற பாஜகவே ஆட்சியை விட்டு வெளியேறு !

ஒன்றிய அரசின் மக்கள் விரோத பொருளாதார கொள்கைகளால் விலைவாசி உச்சத்துக்கு சென்றுள்ளது.

அனைத்துப் பொருட்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கின்றன. அரிசி விலை 15 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்திருக்கிறது. சமையல் எண்ணெய்களின் விலை 3 மடங்கு வரை அதிகரித்து இருக்கிறது. 2014-ல் சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.410க்கு விற்றது. இப்போது ரூ.1240 என அநியாயமாக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு தரும் மானியம் நேரடியாக பயனாளர்களை சென்றடைய வேண்டும் என்பதால் வங்கி மூலம் பணம் அனுப்புகிறோம் என்று சொன்னது ஏமாற்று வேலை என்பது உறுதியாகி இருக்கிறது.

மோடி அரசு வந்த பின்பு பெட்ரோல் விலை 75% அதிகரித்தது. சர்வதேச சந்தையில் பெட்ரோலிய பொருட்களுடைய விலை குறைகிறது. ஆனால் இந்தியாவில் விலையைக் குறைக்காமல் ஒன்றிய அரசு உறையச் செய்திருக்கிறது. பெட்ரோலியப் பொருட்கள் மீது 260% வரி விதிக்கப்படுகிறது. உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு அதிகமான வரி இல்லை.

சென்ற நான்காண்டுகளில் சராசரியாக ஆண்டுக்கு ரூ.66 ஆயிரம் கோடி லாபம் பெற்ற எண்ணெய் நிறுவனங்கள், சென்ற ஆண்டில் மட்டும் ஒரு லட்சம் கோடி ரூபாய் லாபம் ஈட்டி உள்ளன. ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலுக்கும் பத்து ரூபாய் லாபம் என்று மதிப்பிடப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையேற்றம் அனைத்துப் பொருட்களின் விலை உயர்வுக்கும் காரணமாகிறது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையும், அதனைத் தொடர்ந்து விளைவுகளைப் பற்றி அக்கறையே இல்லாமல், பண வசூலை மட்டுமே குறியாகக் கொண்டு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியும், சிறு, குறு, நடுத்தரத் தொழில்களை சீரழித்து விட்டன. தொடர்ந்து வரி விகிதம் அதிகரிக்கப்படுவதோடு, வரி வரையறைக்குள் புதிய பொருட்களும் கொண்டு வரப்படுகின்றன. உணவு தானியங்கள், பால், தயிர் ஆகியவற்றின் மீது கூட ஜிஎஸ்டி வரி போடப்பட்டுள்ளது. பெரும்பாலான பொருள்களின் மீது 28 சதவீத ஜிஎஸ்டி எனும் அநியாய வரி விதிக்கப்படுகிறது.

ஒருபுறம் இவை அத்தியாவசிய பொருட்களின் விலையை அதிகரிக்கின்றன. மறுபுறத்தில் தமிழ்நாட்டின் ஜவுளி, பின்னலாடை, ஆயத்த ஆடை, பம்ப் செட், எஞ்சினியரிங் பொருட்கள் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்து வந்த நிறுவனங்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளன. இதனால் பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலை பறிபோய்விட்டது. அரசு, ரயில்வே, பொதுத்துறை நிறுவனங்களில் பல லட்சக்கணக்கான பணியிடங்கள் காலியாக இருந்தும் அவற்றை நிரப்ப அரசு மறுக்கிறது.

ஊதியத்துக்கும், வேலை வாய்ப்புக்கும், உத்தரவாதம் அளிக்கும் நிரந்தர தொழிலாளர் முறைமை, படிப்படியாக கைவிடப்படுகிறது.ராணுவ வீரர்களைக் கூட தற்காலிகமாக நியமிக்கும் அக்னிபாத் முறை செயல்படுத்தப்படுகிறது. சம்பளம் பணி நிரந்தரம் சமூக பாதுகாப்பு உள்ளிட்ட எதை பற்றியும் கோரிக்கை வைத்தால் வேலை பறிக்கப்பட்டு விடும் என்ற அச்சத்தில் அனைத்து துறை தொழிலாளர்களும் அற்றைக் கூலிகளாக மாற்றப்பட்டு இருக்கிறார்கள்.

ஒரு முனையில் வருவாய்க் குறைவும், மறுமுனையில் விலைவாசி ஏற்றமும் சாமானிய மக்கள் வாழ்க்கையை நடத்த முடியாத அவல நிலைக்கு தள்ளியுள்ளது.

பிரதான் மந்திரி கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கி வந்த அரிசியை ஒன்றிய அரசு 31.12.2022 இல் நிறுத்திவிட்டது. அதுபோலவே இந்திய உணவுக் கழகத் திலிருந்து மாநில அரசுகளின் மக்கள் நலத் திட்டங்களுக்காக கிலோ ரூ.38 எனும் விலையில் வழங்கப்பட்ட அரிசி முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த அரிசி தற்போது தனியாருக்கு ஏலம் மூலம் கொடுக்கப்படுகிறது. இதை மாநில அரசுகளுக்கு தரக்கூடாது என்ற நிபந்தனை வேறு. பொது விநியோகத் திட்டத்துக்காக 50,000 மெட்ரிக் டன் அரிசியை வெளிச்சந்தையில் வாங்கும் நிலைக்கு தமிழ்நாடு அரசு தள்ளப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு மோடி பிரதமர் பதவியேற்ற போது விலைவாசியை சரிபாதியாய்க் குறைப்பேன், ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்பேன் என்று வாக்குறுதி அளித்தார். ஆனால் நடந்துள்ளதோ அதற்கு நேர் மாறானதாகும்.

மாநில அரசுகளின் உரிமைகளை படிப்படியாக அரித்து அனைத்து அதிகாரங்களையும் மையத்தில் குவிக்கும் நடவடிக்கையில் ஒன்றிய அரசு ஈடுபடுகிறது. குறிப்பாக தமிழ்நாட்டின் மீது வன்மத்தோடு தாக்குதல் தொடுக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் தமிழ் மொழியை வளர்க்க வேண்டும் என்ற உந்துதலை, ‘ஆணவம்‘ என்று ஒன்றிய நிதியமைச்சர் நாடாளுமன்றத்திலேயே பேசியிருக்கிறார்.

பழைய சட்டங்களை மாற்றி, புதிய சட்டங்கள் கொண்டு வரும்போது அவை அனைத்துக்கும் இந்தியில் பெயர் வைக்கப்படுகிறது. இதற்கு முன் இருந்த சட்டங்களின் பெயர்கள் ஆங்கிலத்தில் இருந்தாலும், அந்தந்த மொழியில் பேசப்படும் போது மொழி மாற்றம் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டன. தற்போது எந்த மொழியில் சொன்னாலும் அது இந்தியிலேயே இருக்க வேண்டும் என்ற நிலை மேற்கொள்ளப்படுகிறது. 12 கோடி பேர் பேசும் தமிழ் மொழி மேம்பாட்டுக்கு,  ஒன்றிய அரசு ரூ.11.86 கோடியை ஒதுக்கும் ஒன்றிய அரசு, சில ஆயிரம் பேர் பேசும் சம்ஸ்கிருதத்திற்கு ரூ.198.83 கோடியை ஒதுக்கி பாரபட்சம் காட்டுகிறது. அனைத்து மாநிலங்களும் ஆட்சி மொழியாக இந்தியை ஏற்றே ஆக வேண்டும் என்று உள்துறை அமைச்சர் பேசியிருக்கிறார். தமிழைப் பழித்து இந்தியைத் திணிக்கும் ஒன்றிய அரசின் முயற்சி கண்டனத்திற்குரியதாகும்.

தனது தோல்விகளை மறைக்கவும் தேர்தல் ஆதாயத்தை முன்னிறுத்தி மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தும் படுபாதக வேலையை ஆர்எஸ்எஸ் – பாஜக தொடர்ந்து செய்கிறது. மணிப்பூர்  மதக் கலவரங்களால் பற்றி எரிகிறது. ஒன்றியத்திலும் மாநிலத்திலும் இரட்டை எஞ்சின் ஆட்சி செலுத்தும் பாஜக அரசு அதற்கு தூபமிட்டு வளர்க்கிறது.

கார்ப்பரேட்டுகளுக்கு நாட்டின் சொத்துக்கள் அனைத்தையும் விற்று, மக்கள் ஒற்றுமையை சீர்குலைத்து வருகிற பாஜகவை ஆட்சியை விட்டு வெளியேற்றுவதே இந்திய மக்களின் முதல் கடமையாகிறது.

விலைவாசி உயர்வுக்கு காரணமான, வேலையின்மையை அதிகரித்த, மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கிற, இந்தியைத் திணித்து தமிழைப் பழிக்கிற, சொந்த லாபங்களுக்காக நாட்டை நாசமாக்குகிற 

பாஜகவே ஆட்சியை விட்டு வெளியேறு! என முழங்கி, செப்டம்பர் 12, 13, 14 ஆகிய தேதிகளில், ஒன்றிய அரசு அலுவலகங்களின் முன்பு, தமிழ்நாடு முழுவதும் தொடர் மறியல் போராட்டத்தை நடத்துவதென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு முடிவு செய்கிறது.
2, காவிரி நீர் பகிர மறுக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம் உச்சநீதிமன்றத்தில் உடனே முறையிடுக!

உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின்படி, ஜூன் முதல் ஆகஸ்ட் 10 வரை கர்நாடகம் தமிழகத்திற்கு திறந்து விட வேண்டிய  38 டி.எம்.சி. நீர் நிலுவையில் உள்ளது.

அதை தமிழ்நாட்டுக்குத் திறந்துவிட வாய்ப்பில்லை என 11.8.2023 அன்று டெல்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கர்நாடக அரசு கூறியிருப்பது கண்டனத்துக்கு உரியதாகும். இது இந்திய அரசியல் சட்டநெறிமுறைகளை மீறுகிற செயலாகும்.

கர்நாடக அணைகளின் மொத்தக் கொள்ளளவில் சுமார் 80% தண்ணீர் இருப்பில் இருந்தும் திறந்துவிட மறுத்துள்ளது.  மேட்டூர் அணையின் நீர் இருப்பைகொண்டு சில நாட்களுக்குதான் தண்ணீர் திறக்கமுடியும். கர்நாடகத்தில் தென்மேற்கு பருவ மழை மூலம் ஆகஸ்ட் இறுதியில் பெருமளவு நீர் கிடைக்கும் என வானிலை ஆய்வு கூறுகிறது.

மேட்டூர் அணை நீரை எதிர்பார்த்து, காவிரிப் படுகையில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது தண்ணீரின்றி, அந்தப் பயிர்கள் காய்ந்து கருகுகின்றன. தண்ணீர் தேவைப்படும் நேரத்தில், தீர்ப்பின் அடிப்படையில் தண்ணீர் தர மறுப்பது நியாயமற்றதாகும்.

முதல் நாள் நடந்த கண்காணிப்பு குழு கூட்டத்தில்  25 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட ஒப்புதல் அளித்த கர்நாடக அரசின் நீர்வளத்துறை உயர் அலுவலர்கள்,  மறுநாள் நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் இதை ஒப்புக்கொள்ள மறுத்தனர். வேறுவழியின்றி தமிழ்நாடு அரசு அதிகாரிகள் வெளியேறி உள்ளனர். பின்னர் 15 நாட்களில் 8 டி.எம்.சி. மட்டும் தண்ணீர் திறக்கப்படும் என்று முதல் நாள் முடிவை மாற்றி ஆணைய கூட்டத்தில் கர்நாடக அலுவலர்கள் கூறியுள்ளனர். 38 டிஎம்சிக்கு பதிலாக 8 டிஎம்சி தருவது தமிழ்நாட்டின் விவசாயத்துக்கு உதவாது. தண்ணீர் தரப்பட்டது போன்ற பொய்த் தோற்றத்தை ஏற்படுத்தவே கர்நாடக அரசு முயல்கிறது.

கர்நாடக முதல்வரும் தமிழகத்திற்குத் தண்ணீர் தர வாய்ப்பில்லை என நேற்று உறுதியாகக் கூறியிருக்கிறார்.

பற்றாக்குறை நேரத்தில், மாநிலங்களுக்கு இடையே தண்ணீர் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்ற கோட்பாட்டையே மறுத்து, தண்ணீரை இதற்கு மேலும் தேக்கினால் ஆபத்து எனும் நிலையில் தமிழ்நாட்டை வடிகாலாக மட்டுமே கர்நாடக அரசு கருதுகிறது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசிடம் அறிவுறுத்த வேண்டிய ஒன்றிய அரசு, பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மோதிக் கொள்ளட்டும் என வேடிக்கை பார்ப்பது அதன் கடமையிலிருந்து தவறும் நெறியற்ற போக்காகும். இது இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரானதாகும்.

கர்நாடகம் தண்ணீர் கொடுக்கவில்லை எனில் குறுவை மட்டும் அல்ல, சம்பா, தாளடி சாகுபடிக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.

எனவே தமிழ்நாடு அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்து, உரிய அளவு தண்ணீரைப் பெறுவதற்கான அவசர நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என மாநில அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் வலியுறுத்துகிறது.

பயிர் அழிவால் பாதிக்கப்படும் குறுவை விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 35 ஆயிரம் ரூபாய் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழுக் கூட்டம் வலியுறுத்துகிறது.

விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பயிர்க் காப்பீட்டு திட்டத்தை மாநில அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது என்று மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button