ShortNoticeஅறிக்கைகள்

யூரியாவை கடத்தும் சட்டவிரோத தொழிற்சாலைகள்

நடவடிக்கை எடுக்க விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

விவசாயிகளுக்கான மானிய விலை யூரியாவை கடத்தி, ட்ரூபாண்ட் பசையாக மாற்றும் தொழிற்சாலை உரிமையாளர்கள் மீதும், இவர்களுக்குத் துணைபோன வேளாண் அதிகாரிகள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கோவை மாவட்டம் மதுக்கரை அருகே திருமலையாம்பாளையம் தமனாம்பாறை கிராமத்தில் தென்னந்தோப்புகள் இடையே, சட்டவிரோத திரவ யூரியா தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கு விவசாயிகளுக்காக மானிய விலையில் அரசு விற்பனை செய்துவரும் யூரியா உர மூட்டைகளை வாங்கி, யூரியாவை திரவ வடிவில் உருக்கி, ட்ரூபாண்ட் பசையாக மாற்றுகின்றனர். மரப்பலகைகளை (பிளைவுட்) ஓட்டுவதற்குப் பயன்படும் இந்த தொழிற்சாலையில் ட்ரூபாண்ட் பசையை சட்ட விரோதமாகத் தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளனர்.

இங்கு தினமும் 40 டன் சுமை ஏற்றும் பெரிய டேங்கர் லாரிகள் இந்த தொழிற்சாலைக்கு சென்று வந்துள்ளன. இதில் அந்தப் பகுதி சாலைகள் குண்டும் குழியுமாக மாறின. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகளும் பொதுமக்களும் சாலை பாதுகாப்புக்காகப் போராடினர். டேங்கர் லாரிகளை மடக்கிப் பிடித்து பார்த்தபோது உண்மை தெரியவந்தது. உடனே அந்தத் தொழிற்சாலைக்குள் சென்று பார்த்த போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட யூரியா மூட்டைகள், அடுப்பெரிக்கும் விறகுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. யூரியா மூட்டைகளைப் பிரித்து கொட்டும் பாய்லர்களும் கன்வேயர் பெல்ட் அமைப்பும் இருந்தது கண்டு அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். வடமாநில தொழிலாளர்களை மட்டுமே வைத்து இந்த பணிகள் நடந்து வந்ததால்,, வெளியில் தெரிய வாய்ப்பில்லாமல் இருந்திருக்கிறது.

யூரியா மூட்டைகளை பிரித்து கன்வேயர் பெல்ட்கள் மூலம் பாய்லரில் கொட்டிய பின், விறகுகளை எரிப்பதால் உருவாகும் கடும் வெப்பத்தில் பாய்லரில் உள்ள யூரியா உருகி திரவ நிலைக்கு மாறியவுடன், டேங்கர்களில் ஏற்றி கேரளாவுக்கு அனுப்பி வந்துள்ளனர்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அங்கு சென்ற காவல்துறை, வருவாய்துறை மற்றும் வேளாண் துறை அதிகாரிகள், பதுக்கி வைக்கப்பட்டிருந்த யூரியா உர மூட்டைகளைப் பறிமுதல் செய்தனர். மேலும் அவை அனைத்தும் விவசாயிகளுக்கான மானிய விலை யூரியா தான் என்பதையும் உறுதிப்படுத்தினர்.

இதனையடுத்து, மதுக்கரை அருகே பிச்சனூரிலும் ஒரு தொழிற்சாலை செயல்பட்டு வருவதை விவசாயிகள் கண்டறிந்தனர். அங்கு திரவ யூரியாவை ஏற்றத் தயாராக இருந்த டேங்கர் லாரியையும், பதுக்கி வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான யூரியா மூட்டைகளையும் கண்டுபிடித்தனர்.

வேளாண் பயிர்களின் வளர்ச்சிக்கு அடிப்படையானதும் பெரும்பாலான விவசாயிகள் அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்துவதும் யூரியாவே. இதனால்தான் யூரியா விலையை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டாலும், கூடுதல் தொகையை ஈடுசெய்திட ஒன்றிய அரசு மானியம் வழங்கி, விலை உயராமல் விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது.

இதற்கு முன்பே யூரியாவை வேறு கனரகத் தொழில்களும் பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. இதனால்தான் ஒன்றிய அரசு உரங்களுக்கான மானியத்தை நேரடியாக உர ஆலைகளுக்கு கொடுத்து வருகிறது. மானிய விலை உரங்களை விவசாயிகளுக்கு மட்டுமே விற்பனை செய்திட வேண்டும் என அரசு அறிவித்ததுடன், தொடர்ந்து கண்காணித்தும் வருகிறது. வேளாண் துறையில் இதற்கென தனி அலுவலர்கள் பணியாற்றுகின்றனர்.

இத்தகைய கண்காணிப்புகளையும் மீறி ஆயிரக்கணக்கான மானிய உர மூட்டைகள் இந்த தொழிற்சாலை முதலாளிகளுக்கு எப்படிக் கிடைத்தது? சட்டப்படி அனுமதிகூட பெறாமல் அல்லது போலி அனுமதி பெற்று தொழிற்சாலைகள் செயல்படுவது எப்படி? இத்தனை துறை அதிகாரிகள் இருந்தும் மானிய உர மூட்டைகள் கிடைத்தது எப்படி?

எனவே, விவசாயிகளுக்காக மானிய விலையில் வழங்கப்படும் உரங்களை, கள்ளத்தனமாகப் பெற்ற மோசடிக் கும்பலை, கண்காணிக்கத் தவறிய வேளாண் துறை அலுவலர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

இந்த சட்டவிரோத தொழிற்சாலைகளை நடத்தியவர்கள் மீதும், யூரியாவை சப்ளை செய்தவர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களை உடனடியாக கைது செய்திட வேண்டும். இதுபோன்ற சட்டவிரோத தொழிற்சாலைகள் தமிழ்நாட்டில் எங்கேனும் உள்ளதா என்பதை தொடர்ந்து கண்காணித்து ஆய்வு செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி வலியுறுத்தியுள்ளார்.

(இந்த அறிக்கையின் தொடர்ச்சியாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி இத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது)

https://www.facebook.com/share/v/1BfJPWPMiE/

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button