
தமிழ்நாடு சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அனைத்துக் கட்சி உறுப்பினர்களுக்கும் விவாதத்தில் பங்கேற்க வாய்ப்பளிப்பதும், சட்டப்பேரவை நடவடிக்கைகள் முழுமையாக நேரலையில் ஒளிபரப்பப்படுவதும் வரவேற்கத்தக்க அம்சங்கள்.
சென்ற ஆட்சிக்காலத்தில் முதன்முறையாக கேள்வி–பதில் நேரம் மட்டும் ஒளிபரப்பப்பட்டது. இப்போது முழு நடவடிக்கைகளும் மக்களின் பார்வைக்கு வருவது ஜனநாயக வெளிப்படைத்தன்மையில் ஒரு முன்னேற்றம்தான்.
ஆனால், அவையில் நடைபெறும் விவாதங்களின் தரம் இந்த முன்னேற்றத்திற்கு இணையாக இருக்கிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அவைத்தலைவர் அடிக்கடி தலையிட்டு, அமைச்சர்களின் பேச்சையே அவைக்குறிப்பிலிருந்து நீக்குகிறார். பெருமளவுக்குப் பொறுப்பாகச் செயல்படுகிறார். அதேநேரத்தில், அவரது வழிகாட்டலையும் அடிக்கடி மீறி, நான்கைந்து அமைச்சர்கள் மட்டுமே விவாதங்களில் மீண்டும் மீண்டும் பேசுகின்றனர். ஆளும் கட்சியும், முதன்மை எதிர்க்கட்சியும் தங்களைப் புகழ்ந்து கொள்வதற்கும், எதிர்த்தரப்பை ஆத்திரமூட்டிக் கிண்டல் செய்வதற்கும் அவையின் பெரும்பகுதி நேரத்தை எடுத்துக்கொள்வதைப் பார்த்து மக்கள் சலிப்படைகின்றனர்.
குத்துச்சண்டையிலா வெற்றிபெற்றார்கள்?
“நாங்கள் வெற்றி பெற்றோம்; நீங்கள் தோற்றுவிட்டீர்கள்” என்று ஏதோ குத்துச்சண்டையில் வெற்றி பெற்றவர்களைப் போல சில அமைச்சர்கள் குதூகலிக்கிறார்கள். அதோடு நிற்காமல், “இனி நீங்கள் ஒருபோதும் வெற்றி பெற முடியாது” என்றும் கூறுகிறார்கள். இன்னும் ஒருபடி மேலே சென்று, “நாங்கள் 108 பேரும் எழுந்து நின்றால் என்னவாகும்?” என்று ஓர் அமைச்சர் சவால் விடுகிறார்.
அமைச்சர்களுக்கு ஒன்றை நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. 108 பேரையும் வெற்றி பெறச் செய்தது மக்கள்.

அந்த வெற்றி அவர்களுடைய நிரந்தரச் சொத்தும் அல்ல. சென்ற ஆட்சி பல திட்டங்களை நிறைவேற்றியிருந்தபோதிலும், மக்களிடம் ஏற்பட்டிருந்த அதிருப்திகளும், அதிமுக பலவீனமடைந்ததால் மாறிய வாக்குகளும் அவர்களை அதிகாரத்திற்கு அழைத்து வந்திருக்கலாம். அதிலும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு அளிக்காவிட்டால், கைக்கு எட்டியது வாய்க்கு வந்திருக்காது தமிழ்நாட்டில் சில “ நிரந்தர முதல்வர்கள்“ தற்காலிகமாகப் பணியாற்றிப் போயிருக்கும் வரலாற்றை ஆளும்கட்சி விரைவில் உணர்ந்து கொள்வது அவர்களுக்கும், தமிழ்நாட்டுக்கும் நல்லது.
மக்களால் உயர்த்தப்பட்டவர்கள், மக்களையே அச்சுறுத்தும் மொழியில் பேசத் தொடங்கினால், அது அவர்களுடைய அதிகாரத்தின் பலத்தைக் காட்டாது; அவர்களுடைய அரசியல் பாதுகாப்பின்மையைத்தான் வெளிப்படுத்தும்.
தீட்டிய மரத்திலேயே கூர்பார்க்கும் அரசு!
மேலும் அரசு நிர்வாகத்தின் அணுகுமுறை குறித்து தீவிரமான கேள்விகள் எழுகின்றன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் ஆதரவால் தான் இந்த அரசே அமைந்தது. அமைச்சர் பொறுப்பு தருவதற்கு த.வெ.க. முன்வந்தும் அதை ஏற்க மறுத்த கட்சிகள் அவை. ஆனால் ஆட்சிக்கு வந்த பின்பு அதே கட்சிகளின் உறுப்பினர் பட்டியலை முகவரியுடன் திரட்டுமாறு உத்தரவிடப்பட்டதாகவும், தமிழ்நாட்டின் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் இடதுசாரிகளின் போராட்டங்களில் பங்கேற்காதவாறு தடுக்க வேண்டும் என்ற நோக்கில் அரசு அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளிவந்தன.
அரசு தலைமைச் செயலாளர் பங்கேற்ற கூட்டத்திலேயே இத்தகைய முடிவுகள் எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தபோது கட்சிகளின் பெயர்கள் தவறுதலாக இடம்பெற்றுவிட்டதாகக் கூறி அரசு பொறுப்பைத் தட்டிக்கழித்தது.
அந்தப் பிரச்சினையை சட்டப்பேரவையில் எழுப்புவதற்குக்கூட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் க.மாரிமுத்து, அவைத்தலைவரிடம் மீண்டும் மீண்டும் கோரிக்கை வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இவற்றையெல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஃபைலை எடுக்கவச்சிராதீங்க!
இதற்கெல்லாம் மேலாக, முதலமைச்சர் சட்டப்பேரவையில், “எதற்கெடுத்தாலும் ஆதாரம் கேட்கிறீர்கள்; என் மேஜையில் உள்ள மூன்று ஃபைல்களைத் திறக்க வைத்துவிடாதீர்கள்” என்று கூறியிருக்கிறார். இங்கேதான் ஜனநாயகத்தின் அடிப்படைக் கேள்வி எழுகிறது.
முதலமைச்சரிடம் உள்ள கோப்புகளில் முறைகேடு, ஊழல் அல்லது எதிர்க்கட்சியினர் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் இருந்தால், அவை உரிய சட்ட நடைமுறையின்படி வெளிக்கொண்டு வரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியவையாகும். அவை அரசின் ரகசியப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருக்கும் அரசியல் ஆயுதங்கள் அல்ல.
“என்னிடம் கோப்புகள் இருக்கின்றன” என்று சட்டப்பேரவையில் சுட்டிக்காட்டுவது, கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்குப் பதிலாக எதிர்க்கட்சியினரை வாயடைக்கும் உத்தியாகவேத் தோன்றுகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து, அந்தக் கோப்புகளைத் திறந்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டிருக்கிறார். அது சரியான கேள்விதான். உண்மையில், குற்றத்திற்கான ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமல்லவா? நடவடிக்கை எடுக்காமல் அந்தக் கோப்புகளை அரசியல் மிரட்டலுக்கான கருவியாகப் பயன்படுத்துவது போன்ற தோற்றத்தை உருவாக்குவது யாருக்கு நன்மை?
சட்டப்பேரவை என்பது மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளை விவாதிக் கும் களம். எனவே, ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் தரக்குறைவான, தேவையற்ற தனிப்பட்ட விமர்சனங்களைத் தவிர்த்து, அவையின் ஒவ்வொரு நிமிடத்தையும் மக்களுக்காகச் செலவிட வேண்டும். சமூக ஊடகங்களில் ரீல்ஸ் போடுவதற்கான வசனங்களைப் பேசுவதைவிட, விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, விவசாயிகள்–தொழிலாளர்களின் பிரச்சினைகள், கல்வி, வேலையின்மை, மருத்துவம், மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகளுக்கு அவையில் உரிய நேரமும் முக்கியத்துவமும் வழங்கப்பட வேண்டும்.
அதேபோல், ஊடகங்களும் யார், யாரை கிண்டல் செய்தார்கள், யார் யாரைத் ‘தாக்கிப் பேசினார்கள் என்ற அக்கப்போர்களை மட்டுமே முன்னிறுத்தாமல், அந்த விவாதங்களுக்குள் புதைந்து கிடக்கும் தமிழ்நாட்டு மக்களின் உண்மையான பிரச்சினைகளையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவர வேண்டும்.
சட்டப்பேரவையும் ஊடகங்களும் இணைந்து அரசியலைக் காட்சிப்படுத்தும் மேடையாக அல்ல, மக்களின் குரலைக் கேட்கச் செய்யும் களமாக மாற வேண்டும். சூடான விவாதங்கள் இருக்கலாம். அவை மக்களின் நலன் என்ற சுவையை இழந்துவிடக்கூடாது.