கட்டுரைகள்

வறட்சி தாக்குதலில் துடிக்கும் டெல்டா மண்டலம்

அ.பாஸ்கர்

காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலவும் கடுமையான வறட்சி, போதிய நீர்வரத்து இல்லாமை மற்றும் விவசாயிகளின் வாழ்வாதார நெருக்கடி நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், கடலூர் உள்ளிட்ட டெல்டா மண்டலம் முழுவதும் குறுவை சாகுபடி பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. சம்பா சாகுபடியும் உறுதியில்லை.

நிலத்தடி நீர்மட்டம் ‘கடுமையாகச் சரிந்துள்ளதால், கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் போதுமான நீரை வழங்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

தமிழகத்தின் மொத்த நெல் உற்பத்தியில் 60 முதல் 65 சதவீதம் வரை காவிரி டெல்டா மாவட்டங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்றன.

காவிரி டெல்டா பகுதியில் வழக்கமாக சுமார் 14 முதல் 16 லட்சம் ஏக்கர் வரை நெல் சாகுபடி நடைபெறும். இதில் குறுவை சுமார் 4.5 லட்சம் ஏக்கரும், சம்பா சாகுபடி 11 முதல் 12 லட்சம் ஏக்கர் வரை சாகுபடி என்ற அளவில் நடைபெறும்.

காவிரி டெல்டா வேளாண் மண்டலம் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்கள், சிறு, குறு, நடுத்தர விவசாயிகளின் நேரடியாகவும் வேலை வாய்ப்பு வழங்கி வருகிறது. இவர்கள் பரிதவிப்பு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

காவிரி நீர் பகிர்வு தொடர்பாக சென்னை மாகாண அரசுக்கும், மைசூர் அரசுக்கும் இடையில் ஏற்பட்ட 1892 மற்றும் 1924 ஒப்பந்தங்கள் 1974 ஆம் ஆண்டு புதுப்பித்து, புதிய ஒப்பந்தம் போடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கர்நாடகத்தின் பிடிவாதத்தாலும், ஒன்றிய அரசின் பாராமுகத்தாலும், அரசியல் காரணங்களாலும் அது நடைபெறவில்லை.

காவிரியின் கடைமடைப் பாசனப் பகுதியான தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல், அடிமடைப் பாசனப் பகுதியான கர்நாடக மாநிலத்தில் சில அணைகளை கட்டி, பாசனப் பரப்பளவை விரிவுபடுத்தியது. இதன் காரணமாக தமிழ்நாடு தண்ணீர் உரிமைக்கான போராட்டத்திற்கு தள்ளப்பட்டது.

1974 ஆம் ஆண்டில் பல ஆண்டுகளாக நடைபெற்ற மக்கள் இயக்கம் மற்றும் சட்டப் போராட்டங்களின் விளைவாக 1990 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட காவிரி நீர் நடுவர் மன்றம் 2007 பிப்ரவரி மாதம் இறுதித் தீர்ப்பை வழங்கியது.

நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு தமிழ்நாட்டிற்கு ஆண்டுதோறும் 192 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என நீர் பகிர்வின் அளவு நிர்ணயித்தது. இது, காவிரி நடுவர் மன்றம் முதலில் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பில் நிர்ணயிக்கப்பட்ட 205 டிஎம்சியைவிடக் குறைவாகும்.

ஆண்டு தோறும் வழங்க வேண்டிய 192 டிஎம்சி தண்ணீரை ஒவ்வொரு தண்ணீர் ஆண்டிலும் (ஜூன் முதல் தேதி தொடங்கி மே 31 வரை மாதந்தோறும் கர்நாடக அரசு எவ்வளவு தண்ணீர் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் என்ற அளவும் மாத வாரியாக நிர்ணயித்து வழிகாட்டியுள்ளது. இந்த இறுதித் தீர்ப்பு மீது உச்ச நீதிமன்றத்திற்கு மேல் முறையீடுகள் சென்றன.

உச்சநீதிமன்றம் 2018 ஆம் ஆண்டில் வழங்கிய இறுதித் தீர்ப்பில் தமிழகத்துக்கான தண்ணீர் அளவு 177.25 டிஎம்சி என நிர்ணயிக்கப்பட்டது. நீர்ப்பங்கீடு மேலும் குறைந்து போனது.

அதையும் கர்நாடக அரசு மறுத்து வருகிறது. இந்த நிலையில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் புதிய அணை கட்டும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது.

பெரு மழை பெய்து, கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி வழிந்து, வெளியேறும் தண்ணீரை மட்டுமே நம்பி நிற்கும் அவல நிலைக்கு தமிழ்நாடு தள்ளப்பட்டு வருகிறது. 177.25 டி.எம்.சி தண்ணீரை மாத வாரியாக வழங்கப்படுவதை உறுதிப்படுத்த, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இவை எதுவும் டெல்டா பகுதி பாசனத்தை பாதுகாப்பதை இதுவரை உறுதி செய்யவில்லை.

காவிரி டெல்டா மாவட்டங்களின் மையப் பகுதியான திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, நாகை மாவட்டத்தில் சில பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் சரிந்து போனதால் குடி நீர் பஞ்சம் தோன்றியுள்ளது. ஆண்களும், பெண்களுமாக ஆயிரக்கணக்கில் அணி திரண்டு போராடி வருகின்றனர். திருத்துறைப்பூண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க மாரிமுத்து, சட்டப் பேரவையில் குடிதண்ணீர் தேவைக்கு உதவுங்கள் என முதலமைச்சரிடம் கைகூப்பி வணங்கி முறையிட்டார். ஆயினும் தீர்வுக்கான கதவுகள் இன்னும் திறக்கப்படவில்லை.

தமிழ்நாடு அரசு குறுவை சாகுபடிக்கான சிறப்புத் தொகுப்பு திட்டத்தை அறிவித்தது. எனினும், காவிரி பாசனப் பகுதியில் கடந்த ஆண்டு 6 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்திருந்த நிலையில் நடப்பாண்டில் 1.5 லட்சம் ஏக்கரில் மட்டுமே குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மழையை எதிர்பார்த்தும், மேட்டூர் நீரை நம்பியும் ஏக்கருக்கு ரூ 1500 க்கும் குறையாமல் செலவு செய்து, உழவு செய்து வைத்த விவசாயிகள் இழப்புக்கு ஆளாகியுள்ளனர். சம்பா சாகுபடியும் நடைபெறுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

நிலவும் உண்மை நிலையை நேரில் ஆய்வு செய்து, டெல்டா பாசன மண்டலத்தை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து விவசாயிகளின் பயிர் இழப்புக்கு உரிய நிவாரணம் வழங்குதல், விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாடு முழுவதும் கோபக் குரலாக ஒலித்து வருகின்றது.

பயிர் காப்பீட்டு முறைகளை மேலும் எளிமைப் படுத்தி, ஒவ்வொரு விவசாயியும் பயன் அடையும் வகையில் திருத்தி அமைக்க வேண்டும். பயிர் காப்பீட்டு துறையில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது. அரசின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் தேசிய வங்கிகள் மட்டுமே பயிர் காப்பீடு செய்ய வேண்டும்

பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் வெப்பநிலை மாற்றத்தின் (எல்நினோ) தாக்கம் கடுமையாக இருக்கும் என ஆய்வறிக்கைகள் தெரிவித்து வருகின்றன. பல மாவட்டங்களில் வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருகிறது.

கடந்த 20 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை நீக்கிவிட்டு, புதிதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ள விபி-ஜிராம்ஜி – திட்டத்தின் மூலம் வேலை அட்டை பெற்றுள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். இந்தத் திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களின் வருகைப் பதிவு முறையில் உயர் தொழில்நுட்ப பதிவு முறைகள் கைவிடப்பட்டு, பணித்தளப் பொறுப்பாளர் வருகை பதிவேடு பராமரிக்கும் வகையில் திருத்தியமைக்க வேண்டும். விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் நல வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

சட்டமன்றத்தையும், நாடாளுமன்றத்தையும் வாக்களித்து தேர்வு செய்வதுடன், நமது கடமை முடிந்து போவதில்லை; நாம் அமைத்த அந்த மாண்புமிகு அவைகள் நமது வாழ்க்கை பிரச்சினைகள் மீது கவனம் செலுத்தி வருகிறதா என்று கண்காணித்து, அதன் கவனத்தை ஈர்க்க வேண்டியது தவிர்க்க முடியாத அரசியல் கடமையாகும்.

நீட் தேர்வில் வினாத்தாள் கசிவும், முறைகேடுகளும் நடந்ததை எதிர்த்து இளைய தலைமுறையினர் நடத்திய போராட்டம் அண்மைக் கால உதாரணமாகும்.

வாழ்வாதாரம் பாதுகாக்க வறட்சி நிலையை எதிர்த்து மட்டும் அல்ல; தண்ணீர் உரிமைக்கும் போராடுவோம். உரிமைக்கான போராட்டங்கள் தோற்றுப் போனதாக வரலாறு இல்லை என்பதறிவோம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button