ShortNoticeஅறிக்கைகள்

மதிமுக அலுவலக முற்றுகை போராட்டத்துக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

மதிமுக அலுவலகம் முற்றுகையிடும் போராட்டத்துக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில், இந்து மதத்தின் பெயரால், சில மத வெறியர்களும், அவர்களது அமைப்புகளும் திருவள்ளுவர் சிலைக்கு காவி சாயம் பூசி, காவி உடை அணிவித்து இழிவு படுத்தி வரும் செயல்களை கண்டித்தும், அரசியலமைப்பு அதிகாரம் கொண்ட பொறுப்பில் உள்ள ஆளுநர் திரு. ஆர். வி.அர்லேகர் “உலகப் பொதுமறை” தந்த திருவள்ளுவரை “சனாதனி”யாக சித்தரித்து சிறுமைப்படுத்திய செயலுக்கு வருத்தம் தெரிவிக்க வலியுறுத்தியும் கடந்த 07.06.2026 ஆம் தேதி அன்று மதிமுக திரு.வைகோ தலைமையில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டது.

மதிமுக தொண்டர்கள் அணிதிரண்ட இடத்துலேயே காவல்துறையினர் கைது செய்து, போராட்டத்தை தடுத்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழக இந்து பரிவார் என்ற அமைப்பு 13.06.2026 அன்று மாலை 3 மணிக்கு வைகோவைக் கண்டித்து, எழும்பூரில் உள்ள மதிமுக அலுவலகத்தை முற்றுகையிடுவதாக அறிவித்திருப்பது அப்பட்டமான சட்ட மீறலாகும்.

சட்டத்தை மதவெறியர்கள் கையில் எடுத்துக் கொண்டு நேரடி மோதலை உருவாக்கும் கடுமையான குற்றச் செயலாகும்.

அரசியலமைப்பு சட்டம் எந்தவொரு அமைப்பும், தனி மனிதர்களும் போராடுவதை அடிப்படை உரிமைகளாக அங்கீகரித்துள்ளது. ஆனால், அது அரசு சார்ந்த கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் மீதான விமர்சனங்கள் அடிப்படையில் இருக்க வேண்டும்.

சமூகத்தில் மண்டிக் கிடக்கும் மூட நம்பிக்கைகளையும், அறிவியலுக்கு புறம்பான கற்பிதக் கருத்துக்களையும் அகற்றி, சமூகம் விழிப்புணர்வு பெறும் பரப்புரை செய்து, கிளர்ச்சி நடத்துவதும் புரிந்து கொள்ள முடிகிறது.

போராடும் உரிமை மறுத்து, நேரடி மோதலில் ஈடுபடுவதாக மிரட்டுவது கடுமையான எதிர் விளைவுகளை ஏற்படுத்தும். சமூக விரோத சக்திகளும், சட்டவிரோத அமைப்புகளும் சட்டத்தை கையில் எடுத்துக் கொள்வதை தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது.

கட்சி அலுவலகம், கட்சித் தலைவர்களின் இருப்பிடங்கள் போன்றவைகளை போராட்ட மையங்களாக அறிவிக்கப்படுவதை ஆரம்ப நிலையிலேயே தடுத்திட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்வதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button