‘கரப்பான் பூச்சி’, ‘ஒட்டுண்ணி’ என்று இந்திய இளைஞர்களைக் கூறுவதா?
நீதிபதிகளின் கருத்துக்கு ஏஐடியூசி தேசியப் பொதுக்குழு கண்டனம்

அகில இந்திய தொழிற்சங்கப் பேராயத்தின் (ஏஐடியூசி) தேசிய பொதுக்குழுக் கூட்டம், கேரள மாநிலம், திரிச்சூரில் 2026, ஜூன் 1,2,3, தேதிகளில் நடைபெற்றது.

பொது நிகழ்ச்சியாக நடந்த துவக்க விழாவுக்கு தேசியத் துணைத் தலைவர் கே.சுப்பராயன் எம்.பி. தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் அமர்ஜித் கவுர் துவக்கவுரையாற்றினார்.
கேரள மாநில பொதுச்செயலாளர் கே.பி. ராஜேந்திரன், கே. ராஜன் எம்.எல்.ஏ., டி.ஜே. ஆஞ்சலோஸ், ஆர். பிரசாத் ஆகியோர் பேசினர்.
திரிச்சூர் சிபிஐ மாவட்டச் செயலாளர் கே.ஜி. சிவானந்தன் வரவேற்புரைக்க, ஏஐடியூசி மாவட்டச் செயலாளர் டி.கே. சுதீஷ் நன்றியுரையும் வழங்கினர்.
தொடர்ந்து, தேசியப் பொதுக்குழுக்கூட்டம், தலைவர் ரமேந்திர குமார், முன்னாள் எம்.பி. தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் அமர்ஜித் கவுர் அரசியல், செயல்பாட்டு அறிக்கைகளை முன்வைத்துப் பேசினார். ஏஐடியுசி மாநிலக் குழுக்கள் சார்பிலும், அகில இந்திய தொழிற்சங்க சம்மேளனங்கள் சார்பிலும் 52 தோழர்கள் விவாதத்தில் பங்கேற்றனர்.
தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில் ஆ.பாஸ்கர், பீடித்தொழிலாளர் சம்மேளனம் சார்பில் எஸ். காசிவிஸ்வநாதன், அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனப் பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாசலம், அகில இந்திய பாதுகாப்பு ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சி. குமார் உள்ளிட்டோர் ஆகியோர் பேசினர்.
தேசியப் பொதுக்குழு 28 தீர்மானங்களை ஒருமனதாக நிறைவேற்றியது.



