
கடந்த ஏப்ரல் 23 தேதியில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்பு தமிழ்நாட்டு நிலைமையை புதிய சூழல் என்பதை விட புதிய அரசியல் சூழல் என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும்.
இந்த புதிய அரசியல் சூழலை மிகச் சரியாக புரிந்து கொள்வதன் மூலமே மக்களுக்கு சரியாக விளக்க முடியும்.
இடதுசாரிகள் தவிர யாரும் இந்த புதிய சூழலை சரியாக புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை என்பதை நடைமுறை காட்டுகிறது.
திமுக பக்கம் நின்று நிலைய எடுத்து விமர்சிக்கிறார்கள். அல்லது தவெக பக்கம் நின்று நிலைய எடுத்து விமர்சிக்கிறார்கள்.
இடதுசாரிகளும் இப்படித்தான் ஏதாவது ஒரு நிலையை எடுக்க வேண்டும் என்று பிற கட்சிகள் மற்றும் ஊடகங்கள் உள்ளிட்ட அரசியல் ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றர்.
முதலில் தேர்தல் முடிவுகள் காட்டுவது என்ன என்று பார்ப்போம்.
- கூட்டணிக்கு முயற்சி செய்து எந்த கட்சியும் வராத நிலையில் தனித்துப் போட்டியிட்ட தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்தது.
- மாற்றத்தை விரும்பிய வாக்காளர்கள் தவெக மீது எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் வைத்திருந்தனர். இருப்பினும் தவெக வுக்கு ஆட்சி அமைக்கக்கூடிய பெரும்பான்மையை வழங்கவில்லை.
- எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு தனிப்பெரும்பான்மையோ அல்லது கூட்டணிப் பெரும்பான்மையா பெறவில்லை.
- திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, அதிமுக, பாஜக அங்கம் பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி ஆகிய இரண்டும் தோல்வி அடைந்துள்ளன,
- திமுக தனது தேர்தல் கூட்டணியை விரிவு படுத்தியும் தனது ஐந்தாண்டு கால ஆட்சியில் விரிவுபடுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை தேர்தல் பிரச்சாரமாக செயல்படுத்தியும் திமுகவுக்கு வெற்றி கிடைக்கவில்லை.
- தமிழ்நாட்டில் மதவெறி பாஜகவை காலூன்ற இடமளிக்கக்கூடாது என்பதே மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பிரதான தேர்தல் முழக்கமாக இருந்தது. இதை தமிழக வாக்காளர்கள் நிறைவேற்றி இருக்கிறார்கள். அதே நேரத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வெற்றியைத் தரவில்லை.
- அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. தற்போது அதிமுக நெருக்கடியில் உள்ளது.
- தமிழ் தேசியம் பேசிய சீமானின் நாம் தமிழர் கட்சி கடந்த தேர்தலில் பெற்ற 8.2 சதம் வாக்குகள் தற்போது பாதியாக குறைந்துள்ளது.
- மதவாத சாதிவாக இனவாத கட்சிகள் முற்றிலும் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளன. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் 4 இடங்களை பெற்றிருந்த பாஜக தற்போது குறைந்த வாக்கு வித்தியாசத்தில் ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.
- தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளாக நீடித்து வந்த திமுக – அதிமுக என்ற இரு துருவ அதிகார அரசியல் பின்னடைவை சந்தித்துள்ளது.
- தமிழக ஆளுநர் அர் லேக்கர் தனது பதவியை தவறாக பயன்படுத்தி தவெக வை ஆட்சி அமைக்க அழைக்க மறுத்தார்.
- ஆளுநரை இத்தகைய அடாவடி மாநிலத்தில் கடுமையான அரசியல் மற்றும் அரசியலமைப்புச் சட்ட நெருக்கடியை உருவாக்கியது. அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு முரணாக ஜனாதிபதி ஆட்சியை திணிக்கும் முயற்சி நடைபெற்றது.
- தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைப்பதற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அதிமுக உள்ளிட்ட எந்தக் கட்சிகளிடமும் ஆதரவு கேட்கவில்லை.
- திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக மற்றும் தேமுதிக தவிர்த்து மற்ற கூட்டணிக் கட்சிகளிடம் தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கேட்டு கடிதம் கொடுத்தது.
மதச்சார்பற்ற கொள்கையை பின்பற்றுவோம். முந்தைய தமிழக அரசின் திட்டங்களை தொடர்வோம். என்று வாக்குறுதி தரப்பட்டது.
இது போன்ற புதிய நிலைமைகள் தமிழக அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டில் எத்தகைய மாற்றங்கள் கொண்டு வந்துள்ளன ?
அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டில் மூன்று முக்கிய அம்சங்கள் உண்டு
1. அடையும் லட்சியம்.
2. எதிர்க்க வேண்டிய பிரதான எதிரி.
3. அணி சேர்க்கை.
லட்சியத்தை அடையும் அரசியல் போர்க்களத்தில் பிரதான எதிரி யார்? என்பதை அடையாளம் காட்டி நேருக்கு நேர் எதிர்த்துப் போராட வேண்டியது அரசியல் நிலைப்பாட்டில் மிக முக்கிய அம்சம்.
லட்சியமும், பிரதான எதிரியும், அணிச் சேர்க்கையும் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை அல்ல. மாறாக ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவை.
- கொள்கை எதிரி பாஜக.
- அரசியல் எதிரி திமுக
என்று கூறுவது கூமுட்டைத் தனம். இது குழப்புவது, ஏமாற்றுவது என்பதாகும்.
தவெக தலைவர் விஜய் அவர்களிடம் அனைவரும் கேட்க வேண்டிய கேள்விகள்…
- அரசியல் என்றால் என்ன?
- கொள்கை என்றால் என்ன?
- அரசியலுக்கும் கொள்கைக்கும் என்ன வித்தியாசம்?
இந்த மூன்று கேள்விகளுக்கும் விஜய் பதில் சொல்வாரா?
விஜய் கற்றுக்கொள்ளட்டும் அதை வாக்களித்த வாக்காளர்களுக்கு கற்றுக் கொடுக்கட்டும்.
ஜான் ஆரோக்கியசாமி அல்லது ஆதவர் அர்ஜுனா ஆகியோரிடம் கேட்டாவது பதில் கூறட்டும்.
கொள்கை எதிரி என்று கூறிவிட்டு பாசிச மதவெறி சக்தியை மயில் இறகால் வருடிக் கொண்டு இருக்கலாமா?
மதச்சார்பற்ற கொள்கையை கடைப்பிடிப்பதன் லட்சணம் இதுதானா?
அடுத்து திமுக, அதிமுக கட்சிகளிடம் பிரதான அரசியல் எதிரி என்பதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பது மிகவும் முக்கியம்.
நடந்து முடிந்த தேர்தலில் திமுகவின் பிரதான எதிரி பாசிச, மதவெறி பாஜக என்று இருந்தது.
இன்றைய புதிய அரசியல் சூழலில் திமுகவின் பிரதான எதிரி பாஜகவா?
அல்லது தவெக வா? இதை தெளிவு படுத்த வேண்டிய நிலையில் திமுக இருக்கிறது.
இதேபோன்று கடந்த தேர்தலில் அதிமுகவின் பிரதான எதிரி திமுகவாக இருந்தது. தற்போதைய சூழலின் அதிமுகவின் பிரதான எதிரி திமுகவா? அல்லது தவெக வா? இதை அதிமுக தெளிவு படுத்த வேண்டும்.
கூட்டணியாகவோ தனியாகவோ ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லாத நிலையில்108 இடங்கள் வெற்றி பெற்ற தவெக வை ஆட்சி அமைக்க விடக்கூடாது என்று நிலை எடுக்க திமுகவும், அதிமுகவும் முன் வந்தால் அவர்களின் பிரதான எதிரி யார்?
பாசிச மதவெறி பாஜக பிரதான எதிரி என்றால் அதனோடு கூட்டணி சேர்ந்த கட்சிகளும் எதிரியாகத்தானே பாவிக்க முடியும்?
இந்த நிலைப்பாட்டுக்கு திமுக ஏன் வரவில்லை?
இடதுசாரிகளை பொறுத்தவரையில்
♦ சோசலிச லட்சியம்.
♦ கார்ப்பரேட் பின்னணியில் இயங்கும் பாசிச மதவெறி பாஜக பிரதான எதிரி.
♦ சாதி, மதம் சார்பற்ற இடதுசாரி, முற்போக்கு ஜனநாயக அணி.
என்பதில் தெளிவாக இருக்கிறோம் . இதில் குழப்பத்திற்கு இடமே இல்லை.
எதிரியை எதிர்த்து வீழ்த்துவதற்கான அணிச் சேர்க்கையே இடதுசாரிகளின் அணிச் சேர்க்கை.
தேர்தலுக்கு தேர்தல் இடதுசாரிகள் பிரதான எதிரியை மாற்றிக் கொள்வதில்லை.
இடது சாரிகள் பங்கேற்கும் அணிச்சேர்க்கையில் பங்கேற்கும் கட்சிகள் மாறுவதுண்டு. ஆனால் இடதுசாரிகள் எப்போதும் பிரதான எதிரியை மாற்றிக் கொண்டதில்லை.
பிரதான எதிரியோடு கூட்டணி சேர்ந்திருக்கும் கட்சிகளையும் இடதுசாரிகள் எதிரிகளாகத்தான் நடத்துவார்கள்.
தற்போதைய புதிய சூழலிலும் இத்தகைய அடிப்படையை தான் இடதுசாரிகள் கடைப்பிடிக்கின்றனர்.
மே 7, 8 சென்னையில் நடைபெற்ற மாநில செயற்குழு மற்றும் நிர்வாக குழு கூட்டத்தில்..
♦ நாடாளுமன்ற ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும்.
♦ மக்கள் அளித்த தீர்ப்புக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும்.
♦ மீண்டும் ஒரு உடனடித் தேர்தல் வரக்கூடாது.
♦ தேவை இன்றி ஜனாதிபதி ஆட்சி என்ற பெயரில் பாஜகவின் மறைமுக அதிகாரம் நுழைய விடக்கூடாது.
இந்த அடிப்படையில் “தவெக ஆட்சி அமைக்க வெளியில் இருந்து ஆதரவு கொடுப்பது” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்தது.
மே 14, 15, 16 தேதிகளில் திருவாரூரில் நடைபெற்ற மாநில நிர்வாக குழு மற்றும் மாநில குழு கூட்டத்தில்…
“தவெக அரசின் நடைமுறை செயல்பாட்டு அடிப்படையில் நிலை எடுப்பது”
ஜூன் 10, 11 தேதிகளில் கோவையில் நடைபெற்ற நிர்வாக குழு கூட்டத்தில்…
“இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எந்த கூட்டணியிலும் இல்லை.”
என்று முடிவெடுத்தது. இத்தோடு நிற்கவில்லை. இடதுசாரி தலைமையிலான புதிய அணி அவசியம் என்பது உணரப்பட்டதால் ஜூன் 17ஆம் தேதி சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைப்பு குழு தொடங்கப்பட்டது.
ஜூலை 1ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் அவர்களை இடதுசாரி கட்சித் தலைவர்கள் சந்தித்தனர்.
“தவெக உருவாக்கும் புதிய கூட்டணியில் இடதுசாரிகள் இடம் பெறுவதற்கு வாய்ப்பு இல்லை” என்பதை நேரடியாக எடுத்துச் சொல்லப்பட்டது.
இது அரசியல் நாகரீகம்! அல்லவா!
ஜூலை 10 ஆம் தேதி சென்னை ஏ ஐ டி யு சி அலுவலகத்தில் நடைபெற்ற இடதுசாரி கட்சிகளின வர்க்க வெகுஜன அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இந்தக் குழுவுக்கு ‘இடது மக்கள் இயக்கம்‘ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மேலும் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய இயக்கங்கள் குறித்தும் பட்டியலிடப்பட்டுள்ளது.
இடது பாதையில் இடதுசாரி கட்சிகள் பயணிக்க தொடங்கிவிட்டன. இதுவும் இன்றைய அரசியல் சூழலுக்கு தேவையான பொருத்தமான ஒன்றுதான்.
ஒன்று திமுகவோடு அணிசேர வேண்டும். அல்லது தவெகவோடு அணி சேர வேண்டும்
என்று யாரும் கட்டாயப்படுத்த முடியாது. இப்படி ஒரு கட்டாயத் தேவை இடதுசாரிகளுக்கு எழவில்லை.
தமிழ்நாட்டின் உரிமைகள் தமிழக மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளில் திமுக, அதிமுக, தவெக போன்ற கட்சிகளுடன் இணைந்து செயல்பட இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு எந்த தடையும் இல்லை.
திமுக, தவெக கட்சிகள் நடைமுறையில் எத்தகைய நிலை எடுக்கின்றன என்பதைப் பொறுத்து தான் இடதுசாரிகளின் நிலைப்பாடும் அணுகுமுறையும் அமையும்.
எந்த அரசாக இருந்தாலும் மக்கள் விரோத செயல்பாடுகள் எந்த ரூபத்தில் வந்தாலும் இடதுசாரிகள் அதை எதிர்த்து குரல் கொடுப்பார்கள் போராடுவார்கள்.