கட்டுரைகள்

ஆண்களை விடப் பெண்களுக்கு 23% குறைவான ஊதியம்: தொடரும் பாலின சமத்துவமின்மை

வ.மணிமாறன்

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு, ஆண்கள் வாங்கும் ஊதியத்தைவிட 23 விழுக்காடு குறைவாகக் கொடுக்கப்படுவதை தேசிய புள்ளியியல் நிறுவன ஆய்வு முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.

தேசிய புள்ளியியல் நிறுவனம், தொழிலாளர் பட்டாளம் (Labour Force), பெண் தொழிலாளர்கள், அவர்களின் ஊதியம் குறித்த ஆய்வுகளின் முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட 46 முக்கிய நகரங்களில், குழந்தைப் பராமரிப்பு மற்றும் வீட்டு வேலைகள் காரணமாக சுமார் 69% பெண்கள், தொழிலாளர் தொகுப்பில் (Labour Force) இணையாமல் உள்ளனர். நாட்டின் வளர்ந்த, வசதியான நகரங்களில்கூட குழந்தைப் பராமரிப்பு மற்றும் வீட்டு வேலைகளில் பாலினப் பாகுபாடு நிலவுவதை வெளிப்படுத்துகிறது.

தொழிலாளர் தொகுப்பில் இல்லாத பெண்களில் வெறும் 1% பேர் மட்டுமே “சமூகக் காரணங்களை” இதற்குக் காரணமாகத் தெரிவித்தனர். இதற்கு நேர்மாறாக, தொழிலாளர் தொகுப்பில் இடம்பெறாத ஆண்களில் 1% பேர் மட்டுமே குழந்தைப் பராமரிப்பு மற்றும் வீட்டு வேலைகள் காரணமாக பணிக்குச் செல்லவில்லை என்று கூறினர்.

உலகின் முன்னணிப் பொருளாதார நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது, இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களின் விகிதம் மிகக் குறைவாகவே உள்ளது; 2025-ல் 30.7% பெண்கள்தான் பணிக்குச் செல்கின்றனர். இது வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெண்கள் வேலைக்குச் செல்வதில் இந்திய நகரங்களுக்கு இடையே பெரும் வேறுபாடுகள் உள்ளன. ஹவுரா நகரில் 83% பெண்கள் வேலைக்குச் செல்லாததற்கு குழந்தைப் பராமரிப்பு மற்றும் வீட்டு வேலைகளே காரணம் என்று கூறியுள்ளனர். அடுத்தடுத்து சூரத் (81%), போபால் (78%), தன்பாத் (77%) ஆகிய நகரங்கள் உள்ளன. கோயம்புத்தூரில்தான் மிகக்குறைவான (38%) பெண்கள் வேலைக்குச் செல்லாமல் இருக்கின்றனர். இதற்கு அடுத்து, ஆக்ரா (41%), ஹைதராபாத் (58%) விசாகப்பட்டினம், ஸ்ரீநகர் (60%) ஆகிய நகரங்கள் உள்ளன.

பெண்கள் வேலைக்குச் செல்லாமல் இருப்பதற்கு வேறு சில காரணங்களையும் கூறுகின்றனர். உயர்கல்வியைத் தொடர விரும்பியதால் 16% பேர் பணிக்குச் செல்லவில்லை; உடல்நலம், வயது தொடர்பான காரணங்களால் 10% பெண்கள் பணிக்குச் செல்லவில்லை என்று தெரிவித்தனர்.

நகர்ப்புறங்களை விட மாநகரங்களில் பெண்களின் வேலைத் தரம் மேம்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் 51% பேர் ஊதியம் பெறும் பணியில் இருக்கின்றனர். ஆனால் மாநகரங்களில் 65% பேர் அத்தகைய பணியில் உள்ளனர். அதேநேரத்தில் நகர்ப்புறங்களில் 9% பேர் தற்காலிகப் பணிகளில் (casual work) உள்ளனர். அதுவே மாநகரங்களில் 3% பேர் மட்டுமே தற்காலிகப் பணிகளில் இருந்தனர்.

இருப்பினும், இந்த நகரங்களிலும், ஊதியத்தில் பாலின சமத்துவமின்மை நிலவுவதை இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட நகரங்களில், மாத ஊதியமாக ஆண்கள் ரூ. 30,700 பெற்றால், பெண்கள் ரூ. 23,700 மட்டுமே ஈட்டினர்; இது ஆண்களின் வருமானத்தை விட 23% குறைவாகும்.

இந்த வருமான இடைவெளி கல்யாண்-டோம்பிவ்லி, நவி மும்பை, நாக்பூர் போன்ற நகரங்களில் இன்னும் அதிகமாக இருக்கிறது. இங்கு ஆண்களின் வருமானத்தில் ஏறக்குறைய பாதியளவே பெண்கள் ஈட்டுகின்றனர். ஆனால் பிரயாக்ராஜ் நகரம் இந்தப்போக்கிற்கு மாறாக அமைந்திருந்தது;

சுயதொழில் செய்பவர்களைப் பொறுத்தவரை, ஆண்களின் மாத வருமானம் (ரூ.33,880) பெண்களின் வருமானத்தை (ரூ. 16,160) விட இருமடங்கிற்கும் அதிகமாக உள்ளது.

நகரங்களில் உள்ள தொழிலாளர்கள் வாரத்திற்கு சராசரியாக 49.5 மணிநேரம் பணியாற்றினர்; இது இந்தியாவின் ஒட்டுமொத்த நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள சராசரி பணி நேரமான 47.1 மணி நேரத்தைவிட அதிகமாகும். இங்கு ஆண், பெண் தொழிலாளர்கள் இருவருமே அதிகமான பணி நேரம் வேலை செய்கின்றனர்.

பணிக்குச் செல்ல முடிவெடுப்பது, பணிக்குச் செல்வது, ஊதியம், பணி நேரம் அனைத்திலும் பாலின சமத்துவமின்மை தொடர்ந்து கொண்டிருப்பதும் சமத்துவ நிலையை எட்ட பெண்கள் நீண்டதூரம் பயணிக்க வேண்டியுள்ளது என்பதையுமே தேசிய புள்ளியியல் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வு உறுதி செய்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button