தொகுதி மறுவரையறை சட்ட முன்வரைவு: பொறுப்பற்றவர்களின் பொறுப்பற்ற முன்மொழிவு
நாடாளுமன்றத்தில் கே.சுப்பராயன் எம்.பி. கண்டனம்

நாடாளுமன்றத்தில் தொகுதி வரையறை மசோதா 16.4.2026 அன்று தாக்கல் செய்யப்பட்டது. அறிமுக நிலையிலேயே இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கே.சுப்பராயன் எம்.பி. பேசியது வருமாறு:
“தொகுதி மறுவரையறை மசோதாவை அவசர கதியில் ஏதோ ஓர் அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்வதற்காக ஆட்சியாளர்கள் முன்மொழிந்திருக்கின்றனர். இந்த மசோதா முன்மொழியப்பட்டதில் மகளிர் அதிக நன்மை பெறவேண்டும், அவர்களின் பிரதிநிதித்துவம் அதிகமாக வேண்டும் என்ற நோக்கத்தைவிட, தனிப்பட்ட அரசியல் ஆதாய நோக்கம்தான் மேலோங்கி இருக்கிறது என்பதை நான் உறுதிபட நம்புகிறேன்.
அதேபோல், தொகுதி மறுவரையறையைப் (Delimitation) பொறுத்தவரையிலும், இதற்கும் அதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது? ஏன் இதை முன்னரே நிறைவேற்றி இருக்கக் கூடாது? எதிர்க்கட்சித் தரப்பிலிருந்து அப்பொழுதுகூட இன்று முதல் கொண்டு வரலாம் என்று சொன்ன பொழுது, ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை? அதை 2029ஆம் ஆண்டுக்குத் தள்ளிப்போட்டு, அதற்குப் பின்னர் அது அமலாகும் என்ற நிலையை எடுத்தவர்கள், திடீரென்று இப்படியொரு நிலையை எடுக்க வேண்டிய அரசியல் முக்கியத்துவம் என்ன? அதுபற்றி எந்த விளக்கமும் இல்லை.
அதேபோல், தொகுதி மறுசீரமைப்பு என்பது இந்த ஆட்சியாளர்களால் இப்பொழுது செய்யப்படுகிற மிகப்பெரிய தவறு. ஒன்றிய அரசின் கொள்கையை நிறைவேற்றிய தென்மாநிலங்கள், குறிப்பாக தமிழ்நாடு மிகச்சிறப்பாக நிறைவேற்றியதால், மக்கள் தொகை குறைந்திருக்கிறது. அரசின் திட்டத்தை நிறைவேற்றியதற்கு தற்போது தொகுதி மறுசீரமைப்பு மூலம் தண்டனை கொடுக்கிறார்கள்.
வட மாநிலங்களில் தொகுதி எண்ணிக்கை மிக அதிகமாகக் கூடுகிறது. ஆனால், தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் எண்ணிக்கை மிக அதிகமாக குறைகிறது.
இது ஆத்திரமூட்டுகிற வேலை மட்டுமல்ல, தேசிய விடுதலை இயக்கம்தான் ஒன்றுபட்ட இந்தியாவை கட்டியது. ஆட்சியாளர்கள் கட்டவில்லை. தேசிய விடுதலை இயக்கம் மகத்தான இந்தியாவை நிலைநிறுத்தியபோது, வெள்ளையர்களுக்கு ஆதரவாக இருந்த மனோபாவம் கொண்டவர்களின் பிரதிநிதிகள்தான் இன்றைக்கு ஆட்சியாளர்களாக இருக்கின்றனர்.
எனவே, அவர்களுக்கு தேசிய விடுதலை இயக்க வரலாறு தெரியாது. அதில் அவர்களுக்கு எந்த பங்களிப்பும் இல்லை. எனவே, நான் இங்கே குறிப்பிட விரும்புவது, தென்இந்தியாவுக்கு துரோகம் செய்யப்படுகிறது.
இது ஒரு வகையில், இந்த மசோதா, ஒன்றுபட்ட இந்தியாவைத் தகர்க்க வீசப்பட்ட வெடிகுண்டு. அதனால்தான் நாங்கள் இதை எதிர்க்கிறோம். எங்களின் தென் மாநிலங்கள் முழுவதும் பாதிக்கப்படுகின்றன.
பாதிப்புக்கு காரணமாக இருந்ததற்கு இந்த மசோதா என்ன நிவர்த்தி தருகிறது? என்ன தீர்வு தருகிறது? இந்த மசோதாவில் எந்தத் தீர்வும் இல்லை. பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டின் முதலமைச்சர் அறிவித்திருக்கிறார், தமிழ்நாடு முழுவதும கருப்புக் கொடிகள் பறக்கின்றன. கருப்புச்சட்டை போட்டுத்தான் தெருவிலே வலம் வருகிறார்கள். அரசின் திட்டங்களை நிறைவேற்றிய தமிழ்நாட்டைத் தண்டிக்கிற இந்த ஆட்சியாளர்களை வரலாறு கட்டாயம் தண்டித்தே தீரும்.
அதற்கான முன் அடையாளங்கள் இன்றைக்குத் தென்படுகின்றன. எனவே, இந்த மசோதாவை நிறுத்திவைத்து, எதிர்க்கட்சிகளுடன் கலந்துபேசி ஒத்த கருத்து இணக்கத்துக்கு வரவேண்டும்.
ஆனால், இந்த ஆட்சியாளர்கள் ஜனநாயகப் பண்பற்றவர்கள்.
இந்தியாவின் துரதிருஷ்டம் – பொறுப்புள்ள இடத்திற்கு பொறுப்பற்றவர்கள் வந்துவிட்டனர்.
பொறுப்பற்றவர்களால்தான் பொறுப்பற்ற முன்மொழிவுகள் முன்மொழியப்படுகின்றன.
இவ்வளவு அவசரகதியில், ஏன் நிறைவேற்றுகிறீர்கள்? எதிர்க்கட்சிகளுடன் கலந்துபேசி ஏன் தீர்மானிக்கக் கூடாது? இவற்றை எவ்வாறு அமலாக்கலாம் என்பது பற்றி சிந்திக்க வேண்டாமா? இவற்றை அமலாக்குவது பற்றி எதிர்க்கட்சிகளோடு கலந்துபேசி ஒத்த கருத்திணக்கத்தோடுதான் செய்ய வேண்டும்.
மகளிர் இடஒதுக்கீடு, அன்றைக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதியாக இருந்த கீதா முகர்ஜி அவர்களால் மிகப்பெரிய முனைப்பு காட்டி, அனைவரையும் இணைத்து உருவாக்கப்பட்ட ஒன்றுதான் இந்த மகளிர் இடஒதுக்கீடு திட்டம்.
இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு அனைவரையும் ஒன்றுபடுத்துங்கள். அனைத்துத் தரப்பினரோடும் பேச்சுவார்த்தை நடத்துங்கள்.
எதிர்க்கட்சிகளை பழிதீர்க்கிற மனோபாவத்திலிருந்து ஆட்சியாளர்கள் தங்களைத் திருத்திக்கொள்ள வேண்டும். அதேபோல், ஜனநாயகப் பண்பு இருக்க வேண்டும்.
ஜனநாயகத்தையே ஏற்பதில்லை, கோல்வால்கர் கற்றுக்கொடுத்ததை கற்றுக்கொண்டு வந்தவர்கள்; கோல்வால்கர் சொன்னபடி, ஜனநாயக அரசியலமைப்பைப் பயன்படுத்தி, அதிகாரத்துக்கு வந்து ஜனநாயக அரசியலமைப்பை தகர்க்கிறார்கள்.
தகர்க்கிற முறைதான் இந்த மசோதா முன்மொழியப்பட்டதிலும் வெளிப்பட்டுள்ளது.
எனவே, ஜனநாயக ரீதியிலான முறையில் அணுகி, எதிர்க்கட்சிகளின் ஒத்த இணக்கத்தோடுதான் மசோதாக்களை நிறைவேற்ற வேண்டும் என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
-இவ்வாறு கே.சுப்பராயன் எம்.பி., பேசினார்.