இந்தியா

ஒன்றிய பாஜக ஆட்சியை அகற்றுவோம்! தேசத்தைப் பாதுகாப்போம்! ஆகஸ்ட் 6 – 15 நாடு முழுவதும் பரப்புரை, நடைபயணம்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா அறைகூவல்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, தேசத்தைப் பாதுகாப்போம், பாஜக ஆட்சியை அகற்றுவோம் என்ற முழக்கத்தில் நாட்டு மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளை முன்வைத்து நாடு முழுவதும் ஆகஸ்ட் 6 –முதல் 15 வரை பரப்புரைகள், நடைபயணங்களை மேற்கொள்ள இருப்பதாக அகில இந்திய பொதுச்செயலாளர் டி.ராஜா அறிவித்துள்ளார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் டி.ராஜா, கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகமான சென்னை பாலன் இல்லத்தில் 16.06.2026 அன்று செய்தியாளர்களிடம் பேசினார். அவை வருமாறு:

பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரிப்பு

பாஜக நாட்டை மத ரீதியாகப் பிளவுபடுத்துகிறது. பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது, இந்தியா விரைவில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்றெல்லாம் கூறி வருகிறது. ஆனால் நாட்டில் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருகிறது. ஏழை மக்கள் மிகப் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. குறைந்த ஊதியத்திலான, தற்காலிக வேலை வாய்ப்பு பெரும் பிரச்சினையாக மாறி இருக்கிறது. அரைகுறை வேலைவாய்ப்பும் இளைஞர்களை பாதித்து வருகிறது. இதனால் இளைஞர்கள் கடும் கோபத்திலும், விரக்தியிலும் உள்ளனர்.

பிரதமர் மோடி வாய்திறப்பதில்லை

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது கூட்டாக தாக்குதல் நடத்தின. இதனால் உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ளது.

இந்தியா போன்ற நாடுகளில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட எரிபொருள் தட்டுப்பாடும் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. அவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. விலைவாசியும் அதிகரித்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்தை மிகவும் பாதிக்கிறது. ஆனால் பிரதமர் மோடி இது குறித்து எல்லாம் வாய்திறப்பதில்லை.

மோடி ஆட்சியில் ஊழல் அதிகரித்துள்ளது. ராமர் கோவில் கட்டுவதற்கான நிதியில் கூட மிகப் பெரிய முறைகேடுகளும் ஊழல்களும் நடந்துள்ளன. இது குறித்து விசாரிக்க உத்தரப்பிரதேச பாஜக அரசு முடிவு செய்துள்ளது. ஜெய்  ராம் என முழங்கும் பாஜக, ராமர் கோயில் கட்டுவதிலேயே ஊழல் செய்திருப்பது வெட்கக்கேடானது.

ஆகஸ்ட் 6 – 15 நாடு தழுவிய பரப்புரை

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டு ஒரு நூற்றாண்டு முடிந்து விட்டது. உழைக்கும் மக்களுக்காக ஓயாது உழைக்கும் கட்சி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி. எனவே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நாட்டு மக்களின் அடிப்படையான பிரச்சனைகளை முன்வைத்து நாடு முழுவதும் ஆகஸ்ட் மாதம் 6 முதல் 15 ஆம் தேதி வரை நடைபயணங்கள், பரப்புரைகளை மேற்கொள்ள இருக்கிறது. பொதுக்கூட்டம், பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட உள்ளன. இதில் இந்தியா முழுவதும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் முழு மனதோடு பங்கேற்பார்கள்.

செப்டம்பர் 1ஆம் தேதி டெல்லியில் லட்சக்கணக்கான உழைக்கும் மக்கள் பங்கேற்கும் செங்கொடிப் பேரணி நடைபெற உள்ளது.

தேசத்தை பாதுகாப்போம், பாஜக ஆட்சியை அகற்றுவோம் என்ற முழக்கத்தோடு இந்த பரப்புரை இயக்கம் மற்றும் பேரணி நடைபெற உள்ளது.

காங்கிரஸ் பொறுப்போடு செயல்படவில்லை

இந்தியா கூட்டணி முதன்முதலாக பீகாரில் தொடங்கப்பட்டது. தொடக்கம் முதலே இந்தியா கூட்டணியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அங்கம் வகித்து, செயல்பட்டு வருகிறது. பீகார் கூட்டத்திற்குப் பிறகு பெங்களூரு, மும்பை என தொடர்ந்து இந்தியா கூட்டணியின் கூட்டங்கள் நடைபெற்றன. காங்கிரஸ் கட்சி நாடு முழுக்க செயல்படும் ஒரு கட்சியாகும் .அது பொறுப்போடு செயல்படவில்லை.

கேரளாவில் இடதுசாரிகள் பாஜகவுடன் உறவு வைத்துள்ளதாக பகிரங்கமாக குற்றம்சாட்டியது. ராகுல் காந்தி “நான் இந்தியா கூட்டணியை வலுப்படுத்த விரும்புகிறேன். அதற்காக பினராயி விஜயனை கட்டித் தழுவ முடியாது” என்று கூறுகிறார். ஆனால் அதே ராகுல் காந்தி மக்களவையில் பிரதமர் மோடியை கட்டித் தழுவினார். இது என்ன நிலைபாடு? காங்கிரஸ் கட்சி தன்னை சுய பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்.

மாநிலக் கட்சிகளை மோடி அரசாங்கம் பிளவுபடுத்துகிறது. பலவீனப்படுத்துகிறது. பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பதவியைத் துறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்பொழுது அவர் ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு பாஜக தான் காரணம். இப்பொழுது மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பிளவு பட்டிருக்கிறது. இதற்கும் பாஜகவே காரணம்.

தமிழ்நாட்டில் அதிமுகவை பிளவுபடுத்தக்கூடிய முயற்சியையும் பாஜக செய்தது. இதேபோன்று நாடு முழுவதும் மாநிலக் கட்சிகளை பலவீனப்படுத்தக்கூடிய பிளவுபடுத்தக் கூடிய முயற்சிகளை பாஜக செய்து வருகிறது.

நாடு முழுவதும் இடதுசாரி கட்சிகளின் கூட்டணியை வலுப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. இதற்காக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு பத்திரிகையாளர் சந்திப்பில் பொதுச்செயலாளர் டி.ராஜா கூறினார்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், மாநில துணைச் செயலாளர்கள் நா.பெரியசாமி, எம்.ரவி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.பத்மாவதி, டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் க.பாரதி ,மாநிலக் குழு உறுப்பினர்கள் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி, எஸ்.கே.சிவா ஆகியோரும் உடனிருந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button