விளையாட்டை விழுங்கும் மதவெறி அரசியல்! ஆசியக் கோப்பை வெற்றிக்குப் பின்னால் எழும் ஆபத்தான கேள்விகள்
வ.மணிமாறன்

ஓமன் அல் அம்ராத் மைதானத்தில், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான (U19) ஆசியக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி நவம்பர் 14 அன்று நடைபெற்றது.
இதில் முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 337 ரன்கள் குவித்தது. அடுத்து, 338 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, கடைசிப் பந்தில் பவுண்டரி அடித்து 1 விக்கெட் வித்தியாசத்தில் 339 ரன்கள் எடுத்து, வெற்றிக் கோப்பையை கைப்பற்றியது.
இந்த வெற்றியை இந்திய அணியின் இளம் வீரர்கள், துள்ளிக் குதித்து ஆவேசத்துடன் கொண்டாடினர். சில வீரர்கள் பாகிஸ்தான் அணியை நோக்கி சைகைகள் செய்தனர். சிலர் பாகிஸ்தான் வீரர்களுக்கு முன்னால் நின்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அமைதிப்படுத்தி மைதானத்திலிருந்து அழைத்துச் செல்ல இந்திய அணியின் உதவிப் பணியாளர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாயினர்.
இளம் வீரர்கள் வெற்றியில் துள்ளிக் குதிப்பது இயல்புதான் என்றாலும், தோற்ற பாகிஸ்தான் வீரர்களிடமும் அந்நாட்டுப் பார்வையாளர்களிடமும் நம் இளம் வீரர்கள் நடந்துகொண்ட விதம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இரு அணி வீரர்களுக்கும் இடையே நின்று அணி நிர்வாகிகளும் நடுவர்களும், படாதபாடு பட்டது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகின.
பின்னர் இளம்வீரர்கள் வரிசையாக அமரவைக்கப்பட்டு தியானம் செய்ய வைக்கப்பட்டனர். அந்தப் படங்களும் காட்சிகளும் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டன. “இந்து சமயத்தின் வெற்றி” என சங் பரிவாரம் அவற்றைப் பரப்பி புளகாங்கிதம் அடைந்து வருகிறது. இவை எல்லாம் இதற்கு முன் நடந்திராதவை.

1987ஆம் ஆண்டு, பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியின் அழைப்பை ஏற்று, பாகிஸ்தான் ஜனாதிபதி ஜியா உல் ஹக், இந்தியா–பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியைக் காண ஜெய்ப்பூர் வந்தார். 2005 ஆம் ஆண்டு, டெல்லி ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்த ஒருநாள் போட்டியை அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கும் பாகிஸ்தான் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப்பும் இணைந்து கண்டுகளித்தனர்.
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இவை எல்லாம் கனவாக மாறிவிட்டன. பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு வருவதும், இந்திய அணி பாகிஸ்தான் செல்வதும் நிறுத்தப்பட்டன. வேறு நாடுகளில் நடைபெறும் போட்டிகளிலும், பாகிஸ்தானிடம் தோற்றால் அது தேசத்துக்கே அவமானம் என்ற கருத்தியல் திணிக்கப்பட்டது. நாட்டின் எல்லைப் பிரச்சனை கிரிக்கெட் மைதானத்தின் பவுண்டரி வரை நீண்டது.
2025 செப்டம்பர் 14 ஆசியக் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியக் கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலியுடன் கைகுலுக்கவில்லை; இந்திய வீரர்கள் கைகுலுக்காமலேயே மைதானத்தை விட்டு வெளியேறினர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மொஹ்சின் நக்வியிடமிருந்து ஆசியக் கோப்பையைப் பெற இந்திய அணி மறுத்து விட்டது. இவற்றை தேசபக்தச் செயலாக சங் பரிவாரம் கொண்டாடித் தீர்த்தது.

மற்ற நாட்டு அணிகளை வெல்லும்போது வராத இந்த ஆவேசம், கொண்டாட்ட அத்துமீறல் பாகிஸ்தானை வெல்லும் போது மட்டும் வருவது ஏன்?
இளம் மனங்களில் இந்துத்துவ மதவெறி ஊட்டப்பட்டதன் விளைவு இது. சங் பரிவாரம் கட்டமைத்த “தேசபக்தி” பிம்பம் விளையாட்டையும் காவு கொண்டு விட்டது என்பதன் வெளிப்பாடு. இவைதான் ஓமன் அல் அம்ராத் மைதானத்தில் நிகழ்ந்தவை.
இது தனியொரு நிகழ்வு அல்ல – இந்திய ஆளும் வர்க்கம் திட்டமிட்டு மேற்கொண்டு வரும் வகுப்புவாத அரசியலின் நேரடி வெளிப்பாடு.
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு, பள்ளிப் பாடத்திட்டங்கள், ஊடகங்கள், திரைப்படங்கள், சமூக ஊடகங்கள் என அனைத்திலும் இந்துத்துவ மதவெறியையும் இந்து-முஸ்லிம் பிளவு “இயற்கையானது” என்றும், பாகிஸ்தான் “எதிரி” என்றும் கற்பித்து வருகிறது. இந்து மேலாதிக்க வாதிகளின் “ஜெய் சிறீ ராம்” முழக்கம், வகுப்புவாதப் பதற்றங்களைத் தூண்டுவதற்காகவே பயன்படுத்தும் ஆயுதம்.
விளையாட்டு வீரர்களை வரிசையாக அமரவைத்து “தியானம்” செய்வது போன்ற காட்சிகளைப் பரப்பி “இந்து சமயத்தின் வெற்றி” என்று கொண்டாடியது, இந்தியாவை “இந்து ராஷ்டிரமாக” மாற்றும் பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இன்றைக்குப் பெரும் கார்ப்பரேட் தொழிலாக கிரிக்கெட் மாறியுள்ளது. “தேசியவாதமும் இலாப வெறியும் கலந்த நச்சுக் கலவையாக” மாற்றப்பட்டுள்ளது. கோடிக்கணக்கில் பணம் புரளும் ஒளிபரப்பு உரிமங்கள், விளம்பரங்கள், ஸ்பான்சர்ஷிப்கள் — அனைத்தும் “தேசியப் பெருமை” என்ற போர்வைக்குள் மூடப்பட்டு, மக்களை பெருமிதம் கொள்ள வைக்கின்றன.
இவற்றை அம்பலப்படுத்தி, கட்டமைக்கப்படும் மக்களின் ஒற்றுமைதான், உண்மையான விளையாட்டு உணர்வை பெறச் செய்யும். ஒற்றுமை, அமைதி, நட்பு, உடல் வலிமை, மன உறுதி ஆகியவற்றை மக்களிடம் வளர்த்தெடுக்கும். இழந்த கண்ணியத்தை விளையாட்டு வீரர்களிடம் மீட்டெடுக்கும்.



