கட்டுரைகள்

உழைக்கும் மக்களின் வழிகாட்டும் – ஒளி நட்சத்திரம் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை

எம்.ரவி

கார்ல் மார்க்ஸ், பிரெடெரிக் ஏங்கெல்ஸ் இருவரும் ஏற்கனவே தங்களது சிந்தனை மற்றும் எழுத்துக்கள் மூலம் நெருங்கி வந்து 1844 ஆம் ஆண்டு தங்களது 23, 25 வயதில் நேரில் சந்தித்து இணை பிரியா நண்பர்கள் ஆகினர்.

மார்க்ஸூம், ஏங்கெல்சும் மனிதகுல அடிப்படைச் சிக்கலுக்கான காரணத்தையும், அதற்குத் தீர்வு காண்பதற்கான மார்க்கத்தையும் சிந்தித்து, விவாதித்து வெளியிட்டு வந்தனர். அவர்களின் அறிவுக் கூர்மையைக் கண்டு முதலாளி வர்க்கம் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தது.

மார்க்சும், ஏங்கெல்சும் பல கருத்தரங்கங்களில், கூட்டங்களில் உரைநிகழ்த்த அழைக்கப்பட்டார்கள். அவர்களது உரையின் கருத்துக்கள் வீரியமிக்கதாகவும், தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் இருந்தன.

இலண்டனை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வந்த “லீக் ஆப் ஜஸ்ட்டீஸ்” (நேர்மையாளர்களின் சங்கம்) என்ற அமைப்பைச் சார்ந்தவர்கள். உங்களின் கருத்துக்கள் எங்களை ஈர்த்தன. நீங்கள் எங்கள் அமைப்பில் இணைந்து செயல்பட வேண்டும் என்று அழைத்தனர். அவர்களது அழைப்பினை ஏற்று மார்க்சும், ஏங்கெல்சும் அதில் பங்கேற்பதென முடிவு செய்தனர்.

போக்குவரத்து செலவுக்கு பணம் இல்லாததால் பெல்ஜியத்திலிருந்து மார்க்ஸ் இலண்டன் செல்ல இயலவில்லை. அதே நேரத்தில் அந்தக் கூட்டம் எப்படி நடைபெற வேண்டும் என்ற விவரங்களை அங்கிருந்து இலண்டனுக்குச் சென்ற வில்ஹெல்ம் வோல்பிடன் அவர்களிடம் கூறியனுப்பினார். அவரும் பாரிஸிலிருந்த ஏங்கெல்ஸ் அவர்களும் சேர்ந்து வந்து அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு வழிநடத்தினர்.

1847 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 2 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை நடைபெற்ற அந்த மாநாட்டில் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகியோரின் ஆலோசனையின்படி “லீக் ஆப் ஜஸ்டீஸ்” என்ற பெயர் நீக்கப்பட்டு “கம்யூனிஸ்ட் லீக்” என்று பெயர் சூட்டப்பட்டது. மேலும், “எல்லா மனிதர்களும் சகோதரர்களே” என்ற முழக்கத்திற்குப் பதிலாக “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்” என்ற முழக்கமும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அடுத்து, 1847 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் தேதி முதல் டிசம்பர் 8 ஆம் தேதி வரை நடைபெற்ற கம்யூனிஸ்ட் லீக் கின் இரண்டாவது மாநாட்டில் இந்த லீக் கின் வேலைத் திட்டத்தை மார்க்சும், ஏங்கெல்சும் தயாரித்து வெளியிடுவது என முடிவு செய்யப்பட்டது.

இந்த வேலைத் திட்டம்தான் உலகின் முதன் முதலில் வெளியிடப்பட்ட “கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை” ஆகும். இந்த அறிக்கை, உலகில் கம்யூனிச சமுதாயத்தைப் படைப்பதற்கான கொள்கை, நோக்கங்கள், வழிமுறைகள், எவ்வாறு செயல்படுத்துவது? என்பதற்கான அடிப்படைகள் ஆகும்.

உலக கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை வெளியிடப்பட்டு தற்போது 178 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால், இன்றைக்கும் உலக அளவிலும், இந்திய அளவிலும், நமது தமிழ்நாட்டிலும் ஏற்பட்டுள்ள அரசியல், சமூக, பொருளாதார வளர்ச்சிப் போக்குகளைப் பகுப்பாய்வு செய்வதற்கு கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை மிக முக்கியத்துவம் வாய்ந்த வழிகாட்டியாக உள்ளது.

எனவே, கம்யூனிஸ்ட் கட்சிகளின் உறுப்பினர்களும், அனுதாபிகளும், ஆதரவாளர்களும் மற்றும் முற்போக்கு எண்ணம் கொண்டவர்களும் இதனை மீண்டும் மீண்டும் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

ஆகவே, நமது நியூசெஞ்சுரி புத்தக நிறுவனம் தனது பவள விழா ஆண்டை முன்னிட்டு “கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை” புத்தகத்தை புத்தம் புதிய பதிப்பாக மிக மிக குறைந்த விலையான 30 ரூபாய்க்கு வழங்க முன்வந்துள்ளது. வருகிற 21.11.2026 ஆம் தேதி சென்னை, அம்பத்தூரில் உள்ள ஹெச்.பி.எம். பாரடைஸ் அரங்கில் இந்தப் புத்தகம் வெளியிடப்படவுள்ளது.

இந்த வரலாற்றுப் புகழ்மிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை புத்தகத்தை நமது கட்சி அணிகளும், ஜனசக்தி வாசகர்களும் வாங்கிப் படித்தறியவும், மக்கள் மத்தியில் கொண்டு செல்லவும் வேண்டும்.

கார்ல் மார்க்சும், பிரெடரிக் ஏங்கெல்சும் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை, போதி மரத்தடியில் அமர்ந்து திடீரென்று ஞானம் பெற்று போதித்த தத்துவமல்ல. 1837 ஆம் ஆண்டு முதல் 1847 ம் ஆண்டு வரை சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக உலகத் தத்துவங்கள், அறிவியல் ஆராய்ச்சிகள், அரசியல், சமூக, பொருளாதார துறைகள் ஆகியவை பற்றிய பல்வேறு நூல்களை இடைவிடாது தொடர்ந்து படித்து, அறிந்து, ஆய்ந்ததன் விளைவாகவும், அன்றைய காலகட்டத்தில் நடைபெற்ற அரசியல், சமூக, பொருளாதார வளர்ச்சிப் போக்குகளைக் கூர்மையாகப் பகுப்பாய்வு செய்ததன் விளைவாகவும் உருவானது. மனிதகுலச் சிக்கல்களை தீர்ப்பதற்காகப் படைக்கப்பட்ட அறிவாயுதம்தான் இந்தக் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை.

மாமேதை லெனின் அறிக்கையைப் பற்றி, “மார்க்சும், ஏங்கெல்சும் படைத்த இந்த கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை, மேதமை கொண்ட தெளிவுடனும், ஒளிவீச்சுடனும் ஒரு புதிய உலகக் கண்ணோட்டத்தை விவரிக்கிறது. எவ்வாறு என்றால், சமூக வாழ்க்கை முறைகளைப் பற்றியும், அத்துடன் இணைந்துள்ள முரணற்ற பொருள் முதல்வாதம் பற்றியும், வளர்ச்சி குறித்து மிகவும் முழுமையானதும், வழிகாட்டுதலுமான இயக்கவியல் பற்றியும், வர்க்கப் போராட்டத்தைப் பற்றியும், புதிய கம்யூனிச சமுதாயத்தை உருவாக்குகிற பாட்டாளி வர்க்கம் பற்றியும், அதன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புரட்சிகரமான பங்களிப்பைப் பற்றியும் பல்வேறு விவரங்கள் இந்த உலகக் கண்ணோட்டத்தில் பொதிந்திருக்கிறது. இச்சிறு அறிக்கையானது மிகப்பெரிய புத்தகங்களின் தொகுப்புகளுக்குச் சமமானதாகும். இதில் உள்ள உயிரோட்டமுள்ள கருத்துக்கள் நாகரிக உலகில் ஒழுங்கமைக்கப்பட்டு அணிதிரண்டு போராடி வரும் உழைக்கும் மக்கள் அனைவரையும் இன்றைக்கும்கூட ஊக்குவித்து இயங்கச் செய்கிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நமது நியூசெஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தப் புத்தம் புதிய பதிப்பில் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் ஆகியோரின் முகவுரைகளுடன் மொத்தம் 96 பக்கங்களைக் கொண்ட புத்தகமாக வெளிவருகிறது.

நான்கு அத்தியாயங்களைக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையின் முன்னுரையில், “கம்யூனிசம் என்னும் பூதம் ஐரோப்பாவைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. அந்தப் பூதத்தை விரட்டுவதற்காக அனைத்து பிற்போக்கு மற்றும் ஆதிக்க சக்திகள் ஒன்றோடு ஒன்று ஒரு புனிதமான ஒப்பந்தத்தை செய்து கொண்டுள்ளன” என்ற பீடிகையோடு,

“கம்யூனிஸ்டுகள் தங்களது கருத்துக்களையும், கொள்கைகளையும், தங்களது நடவடிக்கைகளையும் பகிரங்கமாக உலகம் அறிந்து கொள்ளும் வகையில் பிரகடனம் செய்ய வேண்டிய காலம் கனிந்து விட்டது. எனவே, கம்யூனிஸ்ட் கட்சிக்குரிய வேலைத்திட்ட அறிக்கையை வெளியிட்டு இந்த கம்யூனிச பூதம் என்ற குழந்தைக் கதையை (கட்டுக்கதையை) அவதூறானது, பொய்யானது என்பதை அம்பலப்படுத்துகிறோம் என குறிப்பிட்டு இந்த அறிக்கை தொடர்கிறது.

அறிக்கையின் முதல் அத்தியாயத்தில் “முதலாளிகளும், பாட்டாளிகளும்” என்ற தலைப்பில் உலகில் இதுவரை நடைபெற்ற சமுதாயங்களின் வரலாறுகள் அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே ஆகும் என்பதை சுருக்கமாக அதேவேளையில் தெளிவாக விளக்குகிறது.

இந்தியாவைக் கண்டுபிடிக்க வந்த கொலம்பஸ் திசைமாறி அமெரிக்காவைக் கண்டுபிடித்ததன் விளைவாக உலகில் ஏற்பட்ட மாற்றங்கள், தொழில் புரட்சியால் ஏற்பட்ட முதலாளித்துவம், அந்த முதலாளித்துவ வளர்ச்சியால் பொருள் உற்பத்தியில், பரிவர்த்தனையில் ஏற்பட்ட மாற்றங்கள். ஆட்சி அதிகாரங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் ஆகியவற்றை விளக்குகிறது.

“முதலாளித்துவத்தின் கேடு கெட்ட குணாம்சங்கள்” முதலாளித்துவம் என்பது மனித மாண்புகளை அழித்துவிட்டு, “அப்பட்டமான சுயநலத்தைத் தவிர உணர்ச்சியற்ற பணப்பட்டுவாடாவைத் தவிர மனிதர்களிடையே வேறு எந்த ஒட்டும், உறவும் இல்லாமல்” செய்துவிட்டதை அம்பலப்படுத்துகிறது.

மூலதனம் என்பது என்ன? அது எவ்வாறு உருவாகிறது, பெருகுகிறது, என்ன செய்கிறது, இதில் உழைப்பின் சாராம்சம் எத்தகையது என்பவைகளை எடுத்துக் கூறுகிறது. முதலாளித்துவம் பொருட்களை மட்டும் உற்பத்தி செய்யவில்லை. அது தன்னைப் புதைக்கும் சவக்குழி தோண்டுபவர்களையும் சேர்த்தே உற்பத்தி செய்கிறது என்பதையும் விளக்கிக் கூறுகிறது.

கம்யூனிச சமுதாயம் எப்படியிருக்கும்? முதலாளித்துவ சமூகத்தில் யார் உழைக்கிறார்களோ அவர்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை – அற்பக் கூலியைத் தவிர. ஆனால் உழைக்காமல் சுரண்டுபவனுக்கு எல்லாமும் கிடைக்கிறது.

கம்யூனிச சமூகத்தில், எல்லோரும் உழைப்பார்கள். அந்த உழைப்பு, உழைப்பவர்களின் வாழ்க்கை வளத்திற்கு அடிப்படையாகி எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கும் என்பதை விளக்குகிறது.

“பாட்டாளிகளும் கம்யூனிஸ்டுகளும்” என்ற இரண்டாவது அத்தியாயத்தில், கம்யூனிஸ்டுகள் என்பவர்கள் யார்? எப்படிப்பட்டவர்கள் அவர்களுக்கும் உழைக்கும் மக்களுக்கும் இடையே உள்ள உறவு எப்படிப்பட்டது. கம்யூனிஸ்ட்களின் எதிரிகள், விரோதிகள் யார்? கம்யூனிஸ்டுகள் மீது அவர்கள் கூறும் பொய்யான குற்றச்சாட்டுகளும், அவதூறுகளும், அதற்கான மறுப்பும், பதில்களும் தெளிவாக முன்வைக்கப்பட்டுள்ளன.

“சோசலிச இலக்கியமும் – கம்யூனிச இலக்கியமும்” என்ற மூன்றாவது அத்தியாயத்தில், அன்றைய சமூகத்தில் நிலவிய பலவகையான சோசலிசக் கருத்துக்கள் குறித்தும் அதன் நோக்கங்கள் குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.

பிற்போக்கான சோசலிசம் – முதலாளித்துவத்தை எதிர்த்த “நிலப்பிரபுத்துவ சோசலிசம்”, “புரோகித சோசலிசம்”, “கிறிஸ்துவ சோசலிசம்” ஆகியவை குறித்தும் பெரும் முதலாளிகளால் பாதிக்கப்பட்ட சிறுமுதலாளிகளின் “குட்டி பூர்ஷ்வா சோசலிசம்” குறித்தும், உணர்ச்சிகளை தூண்டி விடும், அலங்கார சொற்களை வீசி, ஏமாற்றும் “நிஜ சோசலிசம்” குறித்தும், பாட்டாளிகளின் நலனுக்காகத் தான் முதலாளிகள் செயல்படுகின்றனர் என்று பாசாங்கு செய்யும், பிற்போக்கு தர்மகர்த்தா முறையிலான “பூர்ஷ்வா சோசலிசம்”, புரட்சிகரமான நடவடிக்கைகளை, புறந்தள்ளி ஆகாய கோட்டைகளை கட்டும் “கற்பனா சோசலிசம்” ஆகிய ஒவ்வொன்றைப் பற்றியும், அலசி ஆராய்ந்து அவற்றை எச்சரிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டியதைப் பற்றியும் விளக்கிக் கூறப்பட்டுள்ளது.

நான்காவது அத்தியாயத்தில், தற்காலத் தொழிலாளி வர்க்க, விவசாய வர்க்க, மற்றும் ஜனநாயக கட்சிகளோடு கம்யூனிஸ்டுகள் எவ்வாறு உறவாடுவது, ஒவ்வொரு நாட்டிலும் நிலவுகிற சமூக, அரசியல் நிலைமைகளின் அடிப்படையில், அங்குள்ள புரட்சிகரமான இயக்கங்களை கம்யூனிஸ்டுகள் ஆதரிக்கின்றனர்.

அனைத்து நாடுகளிலும் உள்ள ஜனநாயகக் கட்சிகளின் ஒற்றுமைக்காகவும், உடன்பாட்டுக்காகவும் கம்யூனிஸ்ட்டுகள் பாடுபடுகின்றனர் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

நிறைவாக, கம்யூனிஸ்டுகள் தங்களது கருத்துக்களையும், கொள்கைகளையும் மறைத்து வைப்பதை இழிவாகக் கருதுகிறார்கள். இன்றைய கேடுகெட்ட முதலாளித்துவ சமுதாய நிலைமைகள் அனைத்தையும் பலவந்தமாக வீழ்த்தினால் தான் தனது இலட்சியங்களை அடைய முடியும் என்று பகிரங்கமாகப் பிரகடனம் செய்கிறார்கள். அதற்கான புரட்சியை நடத்துகிறார்கள்.

கம்யூனிஸ்ட் புரட்சியை நினைத்து ஆளும் அதிகார வர்க்கங்கள் நடுங்கட்டும். உலகத் தொழிலாளர்களே, உங்கள் உழைப்பு என்னும் பெரும் மூலதனத்தைக் கொடுத்து விட்டு உங்களுடைய உரிமைகளையெல்லாம் இழந்து நிற்கிறீர்கள். எனவே, நீங்கள் இழப்பதற்கு கைவிலங்கைத் தவிர வேறொன்றும் இல்லை. உலகத் தொழிலாளர்களே, நீங்கள் அனைவரும் ஒன்று சேருங்கள்! அடைவதற்கு ஓர் பொன்னுலகம் உண்டு! என்ற அறைகூவலுடன் இந்த அறிக்கை நிறைவுபெறுகிறது.

வாங்கிப் படியுங்கள்! மற்றவர்களையும் படிக்க வையுங்கள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button