இந்தியா

புதிய சூழலில், தொழிலாளர் உரிமைப் போராட்டங்களுக்கு வெளிச்சம் தரும் ஏஐடியூசி 43வது மாநாடு

டி.எம்.மூர்த்தி

ஏஐடியூசி-யின் 43வது அகில இந்திய மாநாடு பெங்களூரு மாநகரில் நவம்பர் 22 முதல் 26 வரை நடைபெற்றது.

ஏஐடியுசி பிரதிநிதிகள் மாநாடு 22.11.2026 மாலை 4 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. பெங்களூர் சிட்டி யுனிவர்சிட்டி வளாகத்தில் உள்ள ஞானஜோதி அரங்கத்தில், தியாகிகளுக்கு பிரதிநிதிகள் செவ்வணக்கம் செலுத்தினர்.

1983ல் தோழர் இந்திரஜித் குப்தா பொதுச்செயலாளராக இருந்தபோது, 32வது மாநாடு பெங்களூரில் நடந்தது. “அமைப்பு சாராத தொழிலாளர்களை அமைப்பாக்குவோம்” என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க முழக்கத்தையும், செயல்திட்டத்தையும் இந்த மாநாடுதான் முன்வைத்தது. 43 ஆண்டுகளுக்குப் பிறகு, ஏஐடியூசி யின் 43வது மாநாடு பெங்களூருவில் நடைபெறுகிறது.

நிகழ்வுகள்

செயல்தலைவர் பினாய் விஸ்வம் மற்றும் துணைத் தலைவர்கள் தலைமைக் குழுவாகவும், விடைபெறும் நிர்வாகக்குழு வழிநடத்தும் குழுவாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

பினாய் விஸ்வம் தலைமை உரையாற்றி, மாநாட்டைத் துவக்கி வைத்தார். பொதுச்செயலாளர் அமர்ஜீத் கவுர் அறிக்கையை முன்வைத்து உரையாற்றினார்.

22ம்தேதி காலையில் பொதுமாநாடு துவங்கியது. பல்வேறு நாடுகளின் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 25 பிரதிநிதிகள் வந்திருந்தனர். இந்த அமர்வுக்கு ஏஐடியூசி துணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.சுப்பராயன் தலைமை தாங்கினார்.

கர்நாடக தொழிலாளர் அமைச்சர்

நான்காவது தொழிற்புரட்சி என்று அழைக்கப்படும், செயற்கை நுண்ணறிவு (AI) இன்று அனைத்துத் துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் குழலில், புதிய சூழலைப் புரிந்துகொள்வதற்காக ஏஐடியுசி வெளியீடாகக் கொண்டுவரப்பட்டுள்ள “அந்நியப்படுத்தப்பட்ட அறிவு: உழைப்பு, தொழில் நுட்பம் குறித்த கட்டுரைகள்” (Alienated intelligence:Essays on Labour and Technology) என்ற நூலை, கர்நாடக மாநில அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட் வெளியிட்டார்.

“எந்த ஒரு நாட்டின் செல்வத்தையும் தொழிலாளர்கள் தான் உருவாக்குகிறார்கள். வேலை நிரந்தரமானதாக இருக்கும்போது, தொழிலாளி ஏன் தற்காலிகமாக இருக்க வேண்டும்?” என்று அவர் வினவினார்.

கர்நாடக மாநில அரசு அன்ஸ்கில்டு தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை ரூ 24,000 என நிர்ணயித்துள்ளது. இந்தியாவிலேயே குறைந்தபட்ச ஊதியத்தில் இதுவே மிக அதிகமான தொகையாகும்.

இதற்கும் அதிகமான தொகையை வழங்குமாறு கர்நாடக மாநில அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு வலியுறுத்தியது என்றும், அதற்கான நியாயங்களை, தரவுகளைத் தந்திருப்பதாகவும் கூறிய அவர், இந்தத் தொகையை நிர்ணயிக்கக் கூடாது என தனக்கு பல்வேறு தரப்புகளிலிருந்து அழுத்தம் வந்ததையும் எடுத்துரைத்தார்.

மத்திய தொழிற்சங்கங்கள் வாழ்த்து

மாநாட்டை வாழ்த்த வந்திருந்த 10 மத்திய தொழிற்சங்கங்களைச் சார்ந்த தலைவர்கள், பலத்த கரவொலியுடன் மேடைக்கு அழைக்கப்பட்டனர். ஐஎன்டியூசி தொடங்கி பிஎம்எஸ் உள்ளிட்ட 10 மத்திய தொழிற்சங்கத் தலைவர்கள் மாநாட்டை வாழ்த்திப் பேசினர்.

எச். மகாதேவனுக்குப் பாராட்டு

தமிழ்நாட்டில் கல்லிடைக்குறிச்சியில் பிறந்து வளர்ந்து, பெங்களூரில் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டில் பணிபுரிந்து, பொதுத்துறை நிறுவனங்களிலிருந்த ஏஐடியூசி தொழிற்சங்கங்களுக்கு பொறுப்பேற்று, வழிகாட்டி, ஏஐடியுசி யில் துணைப்பொதுச்செயலாளராக, செயல்தலைவராக நாடு முழுதும் பணியாற்றி, உலகத் தொழிற்சங்க சம்மேளனத்தின் துணைப்பொதுச் செயலாளராகவும், ஆசியா-பசிபிக் மண்டலப் பொதுச் செயலாளராகவும் பணியாற்றி, தற்போது உடல்நலம் குன்றியுள்ள தோழர் எச்.மகாதேவன் மாநாட்டில் பாராட்டப்பட்டார். அவரது பணி குறித்த பாராட்டுரையை உலகத் தொழிலாளர் சம்மேளனத்தின் இன்றைய பொதுச்செயலாளரான பாம்பிஸ் படித்து, சால்வை அணிவித்து, நினைவுக் கேடயமும் வழங்கினார்.

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் தொழிலாளர் அமைச்சர் எஸ்.கே.காந்தா பாராட்டிச் சிறப்பிக்கப்பட்டார். அவர் பேசும்போது, தொழிலாளர்கள் மீது பரிவு காட்டினால் அதனை உடைமை வர்க்கம் பொறுத்துக்கொள்ளாது என்ற தன் அனுபவத்தை எடுத்தரைத்து, ஆனால் தான் ஒரு சோஷலிஸ்ட், அதற்குக் கவலைப்பட மாட்டேன் என்று குறிப்பிட்டார்.

அடுத்து நடந்த வெளிநாட்டுப் பிரதிநிதிகள் வாழ்த்தரங்கத்துக்கு ஏஐடியுசி துணைத்தலைவரும், ஏஐபிஇஏ பொதுச்செயலாளரும், உலகத் தொழிற்சங்க சம்மேளனத்தின் நிதிக்குழுத் தலைவருமான சி.எச். வெங்கடாசலம் தலைமையேற்றார்.

உலகத் தொழிற்சங்க சம்மேளனத்தின் துணைப்பொதுச் செயலாளராகவும், ஆசியா-பசிபிக் மண்டலப் பொதுச் செயலாளராகவும் செயல்படும் அகில இந்திய பாதுகாப்பு பணியாளர் சமயநலத்தின் பொதுச் செயலாளர் சி. ஸ்ரீகுமார் வெளிநாட்டு பிரதிநிதிகளை அறிமுகப்படுத்தினார்.

வெளிநாட்டுப் பிரதிநிதிகள்

உலக தொழிற்சங்க சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் பாம்ப்பீஸ் அவர்கள் சிறப்புரையாற்றினார். பின்னர் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பாக தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.

 

 

பாலஸ்தீனம்

பாலஸ்தீனத் தொழிற்சங்கத் திலிருந்து வருகை தந்த பெண் பிரதிநிதி பேச வந்தபோது, அரங்கமே கைதட்டலாலும், “ஃப்ரீ பாலஸ்தீன்” முழக்கங்களாலும் அதிர்ந்தது.

வியட்நாம்

வியட்நாம் பிரதிநிதிகள் பேச வந்தபோது, வியட்நாம் போரின்போது இந்தியா முழங்கிய “மேரா நாம், துமாரா நாம், வியட்நாம், வியட்நாம்” முழக்கத்தை அமர்ஜித் கவுர் நினைவுகூர அரங்கம் அந்த முழக்கத்தை எதிரொலித்தது.

ஐ.எல்.ஓ.

ஐ.எல்.ஓ-வின் இயக்குநர் தனது வாழ்த்துரையை பதிவு செய்து அனுப்பியிருந்தார், அது திரையிடப்பட்டது. அது போலவே இத்தாலி, ஸ்பெயின் நாடுகளின் தொழிற்சங்க வாழ்த்துரைகளும் ஒளிபரப்பப்பட்டன. சீனா, பாகிஸ்தான், கிரீஸ், ரஷ்யா, பிரான்ஸ், ஜப்பான், ஆகிய நாடுகளின் தொழிற்சங்க அமைப்புகள் அனுப்பியிருந்த வாழ்த்துகளை, செயலாளர் வஹிதா நிஜாம் படித்தார்.

சகோதர அமைப்புகள் வாழ்த்து

சகோதர அமைப்புகளான இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் நிஷா சித்து, அகில இந்திய விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் ராவுல வெங்கையா, இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் குல்சார் சிங் கொரியா, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத் பொதுச் செயலாளர் சுக்பீந்தர் மகேசரி, அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் பொதுச் செயலாளர் தினேஷ் சீரங்கராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

அறிக்கை மீது விவாதம்

வாழ்த்தரங்கத்துக்குப் பின், பொதுச்செயலாளர் அறிக்கை மீதான விவாதம் தொடங்கி, மூன்றாம் நாளும் நடைபெற்றது. மாநிலத்திற்கு ஒருவர், அகில இந்திய சம்மேளனங்களுக்கு ஒருவர் என விவாதத்தில் பங்கேற்றனர்.

 

குழு விவாதம்

நான்காம் நாளில், பொது அறிக்கை தவிர நான்கு முக்கியமான தலைப்புகளில் தனி அறிக்கைகள் வைக்கப்படுகின்றன.

  • அமைப்பு நிலை
  • சமூகப் பாதுகாப்பு
  • கிக்/ பிளாட்பாரம் / புதிய தொழிலாளர்
  • குறைந்தபட்ச ஊதியம்

ஆகிய தலைப்புகளில் மாநாட்டுப் பிரதிநிதிகள் நான்கு குழுக்களாகப் பிரிந்து அறிக்கைகள் மீது தமது கருத்துக்களை வைக்க, அந்தக் கருத்துகளின் அடிப்படையில் அறிக்கை திருத்தியமைக்கப்படும்.

 

நிறைவாக,

ஐந்தாவது நாளில், (26.11.2026) மீண்டும் பொது மாநாடு கூடி, குழு விவாதங்களின் நிறைவாகப் பரிந்துரைக்கப்படும் அறிக்கைகள்; ஏற்கனவே அச்சிட்டுத் தரப்பட்டுள்ள தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

பொதுச்செயலாளர் தொகுப்புரைக்குப் பின்பு அறிக்கைகள், தகுதி ஆய்வு அறிக்கை, வரவு-செலவு தணிக்கை அறிக்கை ஆகியவை முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. மதிய அமர்வில், புதிய பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களிலிருந்து நிர்வாகக்குழு, தலைவர், பொதுச்செயலாளர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button