
தோழர்களே வணக்கம்!
உலகம் முழுவதும் வலதுசாரி இயக்கங்கள் பின்னடைந்து இடதுசாரி இயக்கங்கள் முன்னேறும் செய்திகள் உற்சாகத்தை தூண்டி இங்கே நம்பிக்கை விதைத்துள்ளது.
சமூக மாற்றத்திற்காகப் போராடி வரும் முற்போக்கு இயக்கங்களுக்கு, இடதுசாரி இயக்கங்களுக்கு நம்பிக்கை தரும் செய்திகள் இவை.
அமெரிக்காவில் முன்னணி வழக்கறிஞர்கள் அரசின் உயர் பொறுப்பில் உள்ளவர்களுக்காக அரசு அதிகாரப்பூர்வமாக நடத்திய கருத்தரங்கில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியை தாங்கள் வீழ்த்தி விட்டதாக பிரகடனப்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் மார்க்சின் கருத்துக்களை வீழ்த்த முடியவில்லை என்றும் மாறாக உலகம் முழுவதும் தற்பொழுது வேகமாக மார்க்சின் கருத்துக்கள் பரவி வருவதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார்கள்.
இந்தியப் பிரதமர் நக்சல்பாரிகளை அடியோடு அழித்து விட்டதாக பெருமிதம் கொள்கிறார்கள். அதனை ஒன்றிய அரசின் மிகப்பெரிய சாதனை என்று கொண்டாடுகிறார். அத்துடன் அறிவு சார் நக்சல்கள் இன்றும் இருப்பதாக ஒரு கருத்து மிரட்டலை விடுத்திருக்கிறார். ஆனால் வலதுசாரி பயங்கரவாதம் தன் வெறியாட்டத்தை நிகழ்த்தி வருவது அவர்களுக்கு தெரியாது அல்ல. ஆனாலும் கள்ள மவுனம் காத்திருக்கிறார். இந்தக் கொலை பாதகங்களுக்கு முடிவு கட்ட ஏன் இவர்கள் முயற்சிக்கவில்லை?
வறுமை, ஏழ்மை, வேலையின்மை, விலைவாசி உயர்வு ஆகியவை நம் கண் முன்னே தலைவிரித்து ஆடுகிறது. அதைப் பற்றி எந்த அக்கறையும் இன்றி நாடு வளர்ந்து விட்டதாக பொய் பேசுகிறார் பிரதமர்.
தமிழ்நாட்டில் வாக்களித்த மக்கள் விரும்பும் திசையில் தமிழக அரசு பயணிக்கவில்லை. அரசு தனியார் மயத்திற்கு கூடுதல் கவனம் செலுத்துகிறது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியவில்லை. வேலையின்மை அதிகரித்த வண்ணம் உள்ளது. குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
13 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் வாக்குகள் பறிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் மௌனம் சாதிக்கிறார்.
ஆனாலும் இந்திய அளவில் ஒப்பிடும்பொழுது தமிழ்நாடு மிக அமைதியான மாநிலம். உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது குற்றச் செயல்கள் குறைவு. ஆனால் உள்துறை அமைச்சகம் உள்நோக்கத்தோடு சட்டம் ஒழுங்கு குறித்து ஆளுநரிடம் அறிக்கை கேட்கிறது. அறிக்கையை எடுத்துக் கொண்டு உடனே ஆளுநர் டெல்லி ஓடுகிறார். ஆளுநரின் அறிக்கை என்ன என்பதை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அதுதானே ஜனநாயகம்?
தமிழக அரசின் மீதான ஒன்றிய அரசின் அப்பட்டமான மிரட்டல். இது குறித்தும் முதல்வர் வாய் திறந்து பேசாமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மேலும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தமிழ்நாடு அரசு கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்.காவல்துறையை நவீன மயமாக்கவும் மக்களை மையப்படுத்தி அது செயல்படவும் வழி வகைகளை உடனடியாக கண்டறிய வேண்டும்.
தோழர்களே, என்.சி.பி.எச். பவள விழா வரும் நவம்பர் 21 ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை அம்பத்தூரில் நடைபெறுகிறது. அறிஞர்கள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், அரசியல் தலைவர்கள் என பலர் விழாவில் பங்கேற்கின்றனர். 75 ஆண்டுகள் என்.சி.பி.எச். தமிழ் கூரும் நல் உலகிற்கு அளித்த பங்களிப்பு மகத்தானவை புகழ்வாய்ந்த ரஷ்ய இலக்கியங்கள் மற்றும் உலக இலக்கியங்களை தமிழுக்கு அளிக்க பெரும்பங்காற்றி உள்ளது. சிறந்த எழுத்தாளர்களை, புதிய எழுத்தாளர்களை தமிழுக்கு அறிமுகப்படுத்தி பெரும்பங்காற்றி உள்ளது என்.சி.பி.எச்.
சமூக மாறுதலுக்கான பெரும் பங்களிப்பில் அதன் பயணம் தொடர்கிறது. இந்த விழாவில் மாநில குழு உறுப்பினர்களும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்ட குழுத் தோழர்களும் உரிய முறையில் பங்கேற்றுச் சிறப்பிக்க வேண்டுகிறோம்.
டிசம்பர் 1, 2, 3 ஆகிய மூன்று தினங்கள் வகுப்புவாத சக்திகளுக்கு எதிராகவும், வேலையின்மை, விலைவாசி உயர்வை கண்டித்தும், தனியார் மயமாக்கலை எதிர்த்து இன்னும் பல்வேறு மக்கள் நலக் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போர் நாடு முழுவதும் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. நவம்பர் 18ஆம் தேதி திருச்சியில் கூடிய கூட்டத்தில் அதற்காகத் திட்டமிடப்பட்டது.
தோழர்களே உறுப்பினர் பதிவு, ஜனசக்தி சந்தா சேர்ப்பு இயக்கம், தாமரை, மார்க்சிய ஒளி சந்தா சேர்ப்பு என அமைப்பின் பணிகள் ஏராளமாக உள்ளது. டிசம்பர் 20ஆம் தேதி ஆர்என்கே படத்திறப்பு நிகழ்வு மதுரையில் நடத்திட திட்டமிடப்பட்டிருக்கிறது. டிசம்பர் மாதம், ஜனவரி மாதம் இடதுசாரி கட்சிகளின் கருத்தரங்குகள் தமிழ்நாட்டின் பல்வேறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நடத்தப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து மாவீரர்கள் நினைவு நாளான மார்ச் 23ஆம் தேதி மிக பிரம்மாண்டமான பேரணி திருச்சியில் நடைபெற உள்ளது. எண்ணற்ற பணிகள் அடுத்தடுத்து உள்ள நிலையில் தோழர்கள் எப்போதும் போல் ஓய்வில்லாத பணி செய்வோம். நாட்டு நலன் சார்ந்து மக்கள் நலம் சார்ந்து பணியாற்றுவோம்!
தோழமையுடன்
மு.வீரபாண்டியன்
மாநிலச் செயலாளர்