
ஏஐடியூசி-யின் 43வது அகில இந்திய மாநாடு பெங்களூரு மாநகரில் நவம்பர் 22 முதல் 26 வரை நடைபெற்றது. மாநாட்டில் கலந்து கொண்ட தொழிற்சங்கத் தலைவர்கள் வழங்கிய வாழ்த்துரையின் சுருக்கம் வருமாறு:
எளமரம் கரீம், சிஐடியு பொதுச் செயலாளர்
“சர்வதேச அரசியல், பொருளாதாரச் சூழல் மிக வேகமாக மாறி வருகிறது. உலக மயமாக்கல் முதலாளித்துவத்தைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், தொழில்நுட்ப வளர்ச்சி தொழிலாளர் சுரண்டலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. பாலஸ்தீன மக்கள் பெரும் துயரங்களைச் சந்தித்து வரும் நிலையில், உலகத் தொழிலாளர் வர்க்கத்தின் சர்வதேச ஒற்றுமை அவசியம். தொழிற்சங்கங்களுடன் கலந்தாலோசிக்க மோடி அரசு தயாராக இல்லை. இன்றைய சூழலில் நமது முதன்மையான கடமை ஒன்றுபட்ட போராட்டங்களை நடத்துவதே என்றும் குறிப்பிட்டார்.”
நாகநாத், எச்எம்எஸ் மாநிலப் பொதுச் செயலாளர்
“நடுத்தர வர்க்கத்தினரும் அடித்தட்டு மக்களும் குறைந்தபட்ச ஊதியம்கூட கிடைக்காமல் வாழ்வாதாரத்திற்காகப் போராடுகிறார்கள். அவர்களுக்கு சமூகப் பாதுகாப்புப் பலன்கள் மறுக்கப் படுகின்றன. கர்நாடக அரசு குறைந்தபட்ச ஊதியத்திற்கான அரசாணையைப் பிறப்பித்திருந்தாலும், மாநிலத்தின் பல இடங்களில் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனவே, குறைந்தபட்ச ஊதியப் பிரச்சினையை ஏஐடியுசி கையில் எடுத்து, நியாயமான ஊதியம் கிடைக்கும் வரை ஒன்றிணைந்து போராட வேண்டும்”
சங்கர், ஏஐசிசிடியு தேசியத் தலைவர்
ஏஐடியுசி அனைத்து மத்திய தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைப்பதில் முன்னணிப் பங்காற்றி வருகிறது. குறிப்பாக, ஏஐடியுசி பொதுச் செயலாளர் தோழர் அமர்ஜீத் கவுர் சிறப்பான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். பறிக்கப்பட்ட தொழிலாளர் உரிமைகளை மீட்டெடுக்க வீரியமிக்க போராட்டங்களே ஒரே வழி. பெங்களூருவில் ஆயத்த ஆடைத் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண் தொழிலாளர்கள், பிஎப் தொகைப் பிடித்தத்துக்கு எதிராக ஒன்றுபட்டு அதனால் ஒரே நாளில் மோடி அரசு தனது சட்டத் திருத்தத்தை ரத்து செய்தது. எதிர்காலத்திலும் ஒன்றுபட்ட போராட்டங்களே நம் முன் உள்ள ஒரே வழி”
ஆர்.கே. சர்மா, ஏஐயுடியுசி செயற்குழு உறுப்பினர்
ஏழு நாட்களாக இரவு பகலாகத் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆஷா பணியாளர்களின் போராட்டக் களத்திலிருந்து நேரடியாக இங்கு வந்தேன். மாதம் ரூ.15,000 ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை. திட்டப் பணியாளர்கள் என்ற பெயரில் பெண்கள் எவ்வாறு சுரண்டப்படுகிறார்கள். ரஷ்யப் புரட்சி உலகெங்கிலும் தொழிலாளர் இயக்கங்களுக்கு உத்வேகம் அளித்தது. தற்போது இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் அரசாங்கங்கள் தொழிலாளர் இயக்கங்களை நசுக்க முயற்சித்து வருகின்றன. எனவே, எதிர்காலத்திலும் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்”
சிவசங்கர், டியுசிசி பொதுச் செயலாளர்
“இந்தியாவில் தொழிற்சங்கங்களை ஒன்றிணைக்கும் சக்தியாக ஏஐடியுசி மட்டுமே திகழ முடியும். தற்போதைய ஆட்சிக்கு எதிராக இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுப்பதில் ஏஐடியுசி தலைமைப் பொறுப்பேற்க வேண்டும். ஏஐடியுசி தனித்து நிற்கவில்லை டியுசிசி உள்ளிட்ட பிற தொழிற்சங்கங்களும் எதிர்காலத்தில் நடைபெறும் அனைத்து ஒன்றுபட்ட போராட்டங்களிலும் ஆதரவளிக்கும்”
தீபக் தாஸ், யுடியுசி தேசியச் செயலாளர்
“1920ஆம் ஆண்டு தொடங்கி 2026ஆம் ஆண்டு வரையிலான தொழிலாளர் இயக்கத்தின் வரலாற்றில் ஏஐடியுசி ஆற்றிய போராட்டங்களுக்கும் சாதனைகளுக்கும் அடித்தளமாக இருந்த தியாகிகளை இந்நேரத்தில் நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்துகிறேன்”.
லட்சுமி வெங்கடேஷ், ஐஎன்டியுசி தேசியச் செயலாளர்
“மாநாடு வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள். காலனியாதிக்கக் காலத்தில்கூட ஏஐடியுசி ஆற்றிய பணிகளும் போராட்டங்களும் பாராட்டத் தக்கவை. கர்நாடக மாநில அரசைத் தொழிலாளர் நலன் சார்ந்த அரசாக ஏஐடியுசி இருக்கிறது”
சோனியா ஜார்ஜ், சேவா துணைத் தலைவர்
தற்போதைய இளைய தலைமுறையினர் தொழிற்சங்கங்களிடமிருந்து வெகுதொலை வில் இருக்கின்றனர். இளைஞர்கள் நடத்தும் போராட்டங்களுக்கு தொழிற்சங்கங்கள் ஆதரவளிக்க வேண்டும். கடந்த காலங்களில் தொழிலாளர் வர்க்கம் தொழிற்சங்கங்களின் பின்னால் அணிதிரண்டு, பரந்துபட்ட மக்களையும் திரட்டிப் போராடினர். வீட்டுப் பணியாளர்கள் கடுமையான அவலநிலைகளை எதிர்கொள்கின்றனர்”
வேலுசாமி, எல்பிஎஃப் அமைப்புச் செயலாளர்
“இந்தியத் தொழிற்சங்க இயக்கத்தில் ஏஐடியுசி குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றிருக்கிறது. இந்தியத் தொழிலாளர் இயக்கத்திற்காக ஏஐடியுசி செய்துள்ள தியாகங்களுக்கு மரியாதை செலுத்துகிறேன். ஏஐடியுசி இதுவரை கடந்து வந்த வரலாறு எதிர்காலத்திற்கான செயல்திட்டத்தை வகுப்பதற்குத் துணை செய்யும்”
எச்.எல். விஸ்வநாத், பிஎம்எஸ் மாநிலப் பொதுச் செயலாளர்
“மாநாடு வெற்றிபெற வாழ்த்துகள். தொழிலாளர் நலனை முன்னிறுத்தும் அணுகுமுறை இன்றைய காலத்தின் அவசியம். அதனை உறுதிப்படுத்துவதில் தொழிற்சங்கங்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும். மத்திய தொழிற்சங்கங்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், தொழிற்சங்க ஒற்றுமை மிகவும் அவசியம்”.
சந்தோஷ் லாட், கர்நாடக தொழிலாளர் அமைச்சர்
“கர்நாடக மாநிலத்தில் அறிவியல் அடிப்படையிலான குறைந்தபட்ச ஊதியத்தை நடைமுறைப்படுத்த கர்நாடக மாநில ஏஐடியுசி கடும் முயற்சி மேற்கொள்கிறது. ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியைத் தொழிலாளர் சக்தியின்றி உருவாக்க முடியாது. தொழிலாளர்களுக்கு உரிய குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்பட வேண்டியது அவசியம்”