உலக செய்திகள்

இஸ்ரேலைக் கண்டித்து இரண்டு லட்சம் பேர் பேரணி

காசா மக்களுக்காக நெதர்லாந்தில் பிரமாண்டம்

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களைக் கண்டித்தும், இஸ்ரேல் மீது நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டு அரசாங்கத்தை வலியுறுத்தியும் நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகரில், இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பிரம்மாண்டப் பேரணி 08.11.2026 அன்று நடைபெற்றது.

சிவப்புப் பாதை (Red Line) என்றழைக்கப்படும் இந்தப் பேரணியில், இஸ்ரேல் மீதான வர்த்தகக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்க வேண்டும்; இஸ்ரேல் நாட்டுக்கான அனைத்து ஆயுத விற்பனையையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினர். பெரும்பாலான போராட்டக்காரர்கள் சிவுப்புச் சட்டைகளை அணிந்திருந்தனர்.

பேரணியில் பங்கேற்றவர்கள், “காசா மீதான மனிதாபிமானமற்ற தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்தப் போரை நடத்தும் இஸ்ரேல் மீது நெதர்லாந்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என கண்டனம் தெரிவித்தனர்.

இதனிடையே, பாலஸ்தீனப் பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் குடியேற்றங்கள் சர்வதேச சட்டங்களுக்கு விரோதமானது என்பது நெதர்லாந்து உட்பட பல்வேறு நாடுகளின் நிலைப்பாடாகும். கடந்த பிப்ரவரி மாதம் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பாலஸ்தீனப் பகுதிகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு நெதர்லாந்து அரசு தடை விதித்தது. இதனால் இஸ்ரேலுடன் தூதரக ரீதியிலான மோதல் உருவானது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நெதர்லாந்துப் பிரதமர் ராப் ஜெட்டன், “அங்கு நிலவும் கொடூரமான சூழலை மாற்றுவதற்காக ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாரமும் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம். இஸ்ரேல் அரசு காசா தொடர்பான ஒப்பந்தங்களை மதித்து நடக்க வேண்டும் என அரசியல் மற்றும் தூதரக அழுத்தங்களையும் கொடுத்து வருகிறோம்” என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button