தலையங்கம்

கோவை அகிலன் தற்கொலை: என்ன செய்கிறது வெற்றி அரசு?

ஜனசக்தி தலையங்கம்

சாதி பற்றியும், மாட்டுக்கறி சாப்பிடுவது பற்றியும், சக மாணவர்கள் கேலி செய்ததைத் தாங்காத மாணவன் அகிலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். பதினைந்து வயதான அவன் கோவையில் அரசு உதவி பெறும் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்தான்.

பள்ளிக்குச் செல்ல விருப்பம் இல்லாமல் விடுப்பு எடுத்து வந்திருக்கிறான். சக மாணவர்கள் தன்னிடம் பேசுவதில்லை என்றும் கூறியிருக்கிறான். சூழலின் கடுமையை உணர்ந்து கொள்ள முடியாமல், கற்றலின் பயனை மட்டுமே முன்னிறுத்தி பள்ளிக்குச் செல்ல தாய் கட்டாயப்படுத்தியிருக்கிறார்.

சரஸ்வதி பூஜை விடுமுறைக்கு பிறகு அகிலன் நேற்று முன்தினம் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றார். மதிய உணவு இடைவேளையின் போது வீடு திரும்பினார். படுக்கை அறையை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு, அந்த அறையில் தூக்குப் போட்டுக் தற்கொலை செய்து கொண்டார்.

இதே போல, நவம்பர் 2023-ல் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியில் 11-வது வகுப்பு படித்த பட்டியலின மாணவர் உயிரிழந்தார். “உன் மகன் படித்தால் என்ன? படிக்காவிட்டால் என்ன? எனக்குச் சம்பளம் வங்கிக்கு வந்துவிடும். உன் பையன் டி.சி. யை வாங்கிக்கொண்டு போ” என்று தலைமையாசிரியரே சொன்னதாக தாய் புகார் கொடுத்திருந்தார்.

2022 மே மாதத்தில், திருநெல்வேலி மாவட்டத்தில் மணிக்கட்டில் அணிந்திருந்த வண்ணக் கயிறு தொடர்பாகத் தொடங்கிய மோதல், வன்முறையாக மாறி ஒரு மாணவர் உயிரிழந்தார்.

2023ல் நாங்குநேரியில், சாதியத் துன்புறுத்தல் குறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் கொடுத்த காரணத்துக்காக, பட்டியலின மாணவர் ஒருவரும், அவரது சகோதரியும் வீட்டுக்குள் புகுந்து அரிவாளால் தாக்கப்பட்டனர்.

2026-ல் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பள்ளித் தலைமை ஆசிரியையால் அவமதிக்கப்பட்டதால் 16 வயது பட்டியலின மாணவி நிஜந்தி உயிரிழந்தார்.

பள்ளி, கல்லூரிகளில் பயின்று, சாதிய ஒடுக்குமுறை காரணமாக தற்கொலை அல்லது கொலை காரணமாக மாண்ட மாணவர்கள் குறித்த அதிகாரப்பூர்வமான புள்ளி விபரம் ஏதும் இல்லை.

ஒரு குழந்தை தன் சாதியின் காரணமாக அவமானப்படுத்தப்படுவதாக உணர்ந்தால், அது அந்தக் குழந்தையின் குறை அல்ல. அவமானப்படுத்தும் மனப்பான்மையிலும், அதைத் தடுத்து நிறுத்தத் தவறும் அமைப்புகளிலும்தான் பிரச்சினை இருக்கிறது.

வீடு, குழந்தைக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டும். சமூகம், சமத்துவத்தைக் கற்றுத் தர வேண்டும். பள்ளி, சாதியற்ற மனித உறவுகளை வளர்க்க வேண்டும். ஆசிரியர், மாணவரைக் காக்க வேண்டும். காவல்துறை, புகாரைச் சட்டப்படி விசாரிக்க வேண்டும். அரசு, இந்த அமைப்புகள் அனைத்தும் செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். ஆசிரியர்களும், காவல்துறையினரும் சாதிய வன்மத்தோடு செயல்படுவதும், அதனைப் பெருமிதமாகக் கருதுவதும் ஒன்றும் ரகசியமானதல்ல.

சாதியின் பெயரால் ஒரு குழந்தை அவமானப்படுத்தப்படும்போது, அது அந்தக் குழந்தைக்கு மட்டும் நிகழும் அநீதி அல்ல. சமத்துவத்தை உறுதியளிக்கும் அரசியலமைப்பின் விழுமியங்களுக்கே விடப்படும் சவால்.

கோவை அகிலனுக்கு நேர்ந்த கொடுமையும் காலப்போக்கில் மறந்துவிடும். அகிலனுக்கு நீதி கிடைப்பது என்பது குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்பானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தாலும்கூட, அதோடு முடிந்து விடாது. இனி எந்தக் குழந்தையும் தனது சாதியின் காரணமாகப் பள்ளியில் அவமானப்படுத்தப்படாத சூழலை உருவாக்குவதில்தான் நீதியின் முழுமை இருக்கிறது.

கல்விக் கூடங்களில் சாதி, மதத்தின் காரணமாக எழும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான பரிந்துரைகளை வழங்க 2023 ஆகஸ்டில், நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழுவைத் தமிழ்நாடு அரசு அமைத்தது. அது 2024 ஜூனில் குழு தனது விரிவான பரிந்துரைகளை அறிக்கையாக அரசிடம் அளித்தது. என்ன காரணத்தாலோ அப்பரிந்துரைகள் செயல்படுத்தப்படவில்லை.

பரிந்துரைகளை முழுமையாகச் செயல்படுத்தக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில், ஒரு மனு தாக்கலானது. ஆகஸ்ட் 29-ல், தமிழ்நாடு அரசு பதிலளிக்குமாறு அதில் உத்தரவிடப்பட்டது. இதுவரை தமிழ்நாடு அரசு அதற்குப் பதிலளித்ததாகத் தெரியவில்லை.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று முழக்கங்களை முன்னிறுத்தி எழுதுவதும், மேடைகளில் பேசுவது மட்டும் பலன் தராது. சமத்துவத்துக்காக, சாதிய ஒழிப்புக்காக தம் வாழ்நாளெல்லாம் போராடிய பாபாசாகேப் அம்பேத்கரையும், தந்தை பெரியாரையும் “கொள்கைத் தலைவர்கள்” என்று மேடைப் பின்னணியில் படம் வைப்பதும் போதாது. அவர்களின் பாதையில் செல்லும் மன உறுதி அவசியம்.

குழந்தைகளின் வாழ்வில் சாதி ஆதிக்கம் செலுத்துவதைத் தடுத்து நிறுத்துவோம். ஒவ்வொரு பள்ளியையும் சமத்துவத்தின் களமாக மாற்றுவோம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button