தலைமைத் தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்!
சென்னையில் மாணவர்கள், இளைஞர்கள் 2 நாள் காத்திருப்புப் போராட்டம்!

சென்னையில் ஜந்தர் மந்தர் 2.O எனும் தலைப்பில் AIYF, DYFI, SFI, AISF, RYA, AISA, CJP உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் இளைஞர்கள், மாணவர்கள் பெருந்திரளானோர் பங்கேற்றனர்.
இந்திய தேர்தல் முறையில் மிகப் பெரிய ஜனநாயகப் படுகொலையை நடத்தி 13 கோடி வாக்காளர்களை சட்ட விரோதமாக நீக்கம் செய்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், முறைகேடுகள் நிறைந்த எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைகளை திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடிய மாணவர் இளைஞர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும் இடதுசாரி மாணவர், இளைஞர் அமைப்புகள் மற்றும் சி.ஜே.பி சார்பில் அக். 22, 23 தேதிகளில் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே தடையை மீறி ஜந்தர் மந்தர் 2.0 என்ற பெயரில் 24 மணி நேர தொடர் போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் முதல் நாள் மாலை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே கூடினர். போராட்டத்தை டி.ஒய்.எஃப்.ஐ. அகில இந்திய தலைவர் ஏ.ஏ.ரஹீம் தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஏ.ஐ.எஸ்.எஃப். அகில இந்திய பொதுச் செயலாளர் தினேஷ் சீரங்கராஜ், எஸ்.எப்.ஐ. அகில இந்திய பொதுச்செயலாளர் சாஜி ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
போராட்டத்திற்கு இரவு அனுமதி மறுத்து போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டோர் தடுத்துவைக்கப்பட்ட மண்டபத்தில் போராட்டத்தை தொடங்கினர்.

இந்நிலையில் காலையில் போலீசாரே வாகனத்தில் அழைத்து சென்று ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே போராட்டத்தை தொடர ஏற்பாடு செய்தனர். போராட்டத்தில் ஏ. ஐ .ஒய் .எஃப் -க.பாரதி, இரா.தமிழ் பெருமாள், கலை அஸ்வினி, தெய்வசிகாமணி, ரஞ்சனி கண்ணம்மா, டி.ஒய்.எஃப்.ஐ. எஸ்.கார்த்தி, சந்துரு, ஏ.ஐ.எஸ்.எஃப் பா.தினேஷ், க.இப்ராஹிம், பிரபு, சினேகா, பிரகாஷ் மற்றும் மணிகண்டன், எஸ்.எப்.ஐ. சார்பில் சம்சீர் அகமது, மிருதுளா, சிஜேபி சார்பில் பிரபாகரன், ஷாஜகான், ராஜ்குமார், ரிஸ்வான், ஏ.ஐ.டி.ஒய்.ஓ. சுகுபாலா, ஏ.ஐ.டி.எஸ்.ஓ. செபாஸ்டின், ஆர்.ஓம்.ஏ. பெரோஸ் பாபு, ஏ.ஐ.எஸ்.ஏ. ரகு ஆகியோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இறுதியாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கலந்துகொண்டு நிறைவுரையாற்றினார். இதில், உலகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் மக்கள் நல கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகிறார்கள். ஐரோப்பா முழுவதும் மாணவர், இளைஞர் போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது. பல்வேறு நாடுகளில் ஆட்சி மாற்றத்திற்கு மாணவர்கள், இளைஞர்கள் வித்துட்டு இருக்கிறார்கள். இதேபோன்று இந்தியாவிலும் மாணவர்கள், இளைஞர்கள் சட்ட விரோதமாக நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களுக்கு நீதி கேட்டு ஒன்றுகூடி இருக்கிறார்கள்.
சென்னையிலும் அமைதியான முறையில் ஜனநாயக வழியில் இடதுசாரி மாணவர்கள், இளைஞர்கள் உடன் கரப்பான் பூச்சியின் இளைஞர்கள் நடத்தும் போராட்டம் வெற்றி பெறும். இவை மக்களுக்கானப் போராட்டங்கள், நாட்டிற்கானப் போராட்டங்கள் இவற்றில் ஒரு அங்குலம்கூட பின்வாங்க மாட்டார்கள் என்று தெரிவித்தார்.