மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளின் பெருந்திரள் போராட்டம்
அரசியல் வன்முறைகளுக்கு கடும் எதிர்ப்பு

மேற்கு வங்கத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மிட்னாபூர் மாவட்ட கட்சி அலுவலகத்திற்குள் ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங் தள் குண்டர்கள் அத்துமீறி நுழைந்து சேதப்படுத்தினர். இதனைக் கண்டித்து இடதுசாரிக் கட்சிகள் சார்பில் மிட்னாபூரில் மாபெரும் கண்டனக் கூட்டம் நடைபெற்றது. இதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சைகத் கிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மீனாட்சி முகர்ஜி உள்ளிட்ட இடதுசாரித் தலைவர்கள் உரையாற்றினர்.
அப்போது, தேர்தல் ஆணையத்தின் சட்ட விரோத நடவடிக்கைகளுக்குப் பொறுப்பேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் வெளிப்படையாகவும், அரசமைப்புச் சட்டத்தின் வரம்புகளுக்கு உட்பட்டும் அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். மேற்குவங்கத்தில் சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்திருப்பதுடன் அரசியல் வன்முறை தலைவிரித்தாடுவதாகவும் இடதுசாரிக் கட்சிகள் குற்றம்சாட்டின.
இந்தக் கூட்டத்தில் பெருந்திரளான இடதுசாரித் தோழர்கள் பங்கேற்று, அரசியல் வன்முறைகளுக்கு எதிராகவும், ஜனநாயக உரிமைகள் மற்றும் தேர்தல் நடைமுறையின் வெளிப்படைத்தன்மையைப் பாதுகாக்கவும் ஒன்றிணைந்து குரல் எழுப்பினர்.