தாய் மாமன் தங்க மோதிரத் திட்டம் தாய்மையைப் போற்றுவதா? பெண்ணுரிமையை உறுதிப்படுத்துவதா?
வகிதா நிஜாம்

தமிழ்நாடு அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் 2026 செப்டம்பர் 28ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.
இருப்பினும், இத்திட்டத்தின் பயன் 2026 ஜூன் 22 ஆம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணை 2026 ஜூன் 23ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இத்திட்டம் தாய்மையைப் போற்றுவதா, பெண்ணுரிமையை உறுதிப்படுத்துவதா என்பவை உள்ளிட்ட மக்கள் நலன், அரசின் முன்னுரிமைகள், பொதுநிதியின் பயன்பாடு குறித்த சில கேள்விகள் எழுகின்றன.
இத்திட்டத்தின் மூலம் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும். தாய்மையைப் போற்றுவது, குழந்தைப் பிறப்பைக் கொண்டாடுவதோடு, அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தை ஊக்குவிப்பது, அரசு மருத்துவச் சேவைகள் மீதான மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவது ஆகியவை இத்திட்டத்தின் நோக்கங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
குழந்தைப் பிறப்பைக் கொண்டாடுவதிலும், தாய்மையின் மகத்துவத்தை அங்கீகரிப்பதிலும் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், ஒரு மக்கள் நலத் திட்டத்தை – அதன் நோக்கத்தை மட்டும் கொண்டு மதிப்பிட முடியாது. அதற்காகச் செலவிடப்படும் பொதுநிதி, அது உருவாக்கும் சமூகப் பயன், மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் அதன் பங்கு ஆகியவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
ஒரு குழந்தையின் பிறப்பைத் தங்க மோதிரம் வழங்கிக் கொண்டாடும் அரசு, அந்தக் குழந்தையின் தாய்க்கு சமூக, பொருளாதாரப் பாதுகாப்பு, அந்தக் குழந்தைக்கு ஆரோக்கியமான எதிர்காலம் ஆகியவற்றையும் உறுதி செய்கிறதா? என்பதே இத்திட்டம் எழுப்பும் அடிப்படையான கேள்வியாகும்.
ஆண்டுக்கு ரூ.755 கோடி! எதற்கான செலவு?
இத்திட்டத்திற்காக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், 4,41,667 குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்குவதற்காக ரூ.750.83 கோடியும், நிர்வாகச் செலவுகளுக்காக ரூ.5 கோடியும் என மொத்தம் ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு மோதிரத்திற்கான மதிப்பீடு ரூ.17,000 எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
2026-–27ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் இத்திட்டத்திற்கு ரூ.560 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ரூபாய் 255 கோடிக்கு மேலான நீண்ட கால நிதி மதிப்புள்ள திட்டத்தில் கொள்முதல் நடைமுறை, விலை நிர்ணயம், ஒப்பந்த திருத்தங்கள் மற்றும் பொது நிதியின் பயன்பாடு அனைத்தும் முழுமையாக வெளிப்படையாக இருந்திருக்க வேண்டும். இந்தத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதே உண்மை.
ஆண்டுதோறும் தொடரும் இந்த செலவு, அரசின் நிதிநிலை மற்றும் பிற சமூக நலத் திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் ஆராய வேண்டும்.
மக்கள் நலத் திட்டமா, வளர்ச்சிக்கான முதலீடா?
மக்கள் நலத் திட்டங்களையும், வளர்ச்சித் திட்டங்களையும் ஒன்றுக்கொன்று எதிரானவையாகக் கருதுவது சரியல்ல. மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும், சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்வதும் வளர்ச்சியின் அடிப்படைக் கூறுகளாகும்.
2022 ஆம் ஆண்டு அஸ்வினி குமார் உபாத்தியாயா எதிர் இந்திய ஒன்றிய அரசு வழக்கில், தேர்தல் வாக்குறுதிகளாக அறிவிக்கப்படும் இலவச பொருட்கள் மற்றும் அவற்றின் நிதிச்சுமை குறித்து உச்ச நீதிமன்றம் சொன்ன கருத்து, “இத்தகைய இலவசங்கள் அடிப்படை வசதிகளை வழங்குவதற்கு போதிய நிதி இல்லாத நிலையை மாநில அரசுக்கு ஏற்படுத்தி, மாநிலத்தை திவாலாக்கும் அபாயத்திற்கு தள்ளக் கூடும்” என்று கூறியுள்ளது.
இத்திட்டத்தின் மூலமாக நிதி சுமை எந்த அளவிற்கு பொருளாதாரத்தின் மீது தாக்கம் ஏற்படுத்தும் என்பது குறித்து பொது விவாதம் இதுவரையில் எழவில்லை.
மக்கள் நலன் என்பது உடனடி நிவாரணத்துடன் முடிந்து விடுவது அல்ல. மக்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் வளர்ச்சியையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
ரூ.755 கோடி செலவு என்பது சிறிய தொகையல்ல. அதே நிதியைத் தாய்மார்களின் மருத்துவப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறையைப் போக்குவதற்கும், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்துத் திட்டங்களை வலுப்படுத்துவதற்கும் பயன்படுத்தினால் என்னென்ன பயன்களை உருவாக்க முடியும் என்பதை அரசு ஒப்பீட்டு ஆய்வின் மூலம் விளக்க வேண்டும்.
இத்திட்டத்தின் செலவும் பயனும், மாற்றுத் திட்டங்களின் செலவும் பயனும் வெளிப்படையாக ஒப்பிடப்பட வேண்டும். மக்கள் நலன் என்ற பெயரில் அறிவிக்கப்படும் ஒவ்வொரு திட்டமும், உண்மையில் மக்களின் வாழ்வில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதே முக்கியமான அளவுகோலாக இருக்க வேண்டும்.
பெண்கள் பற்றிய த.வெ.க. அரசின் பார்வை:
இத்திட்டம் எழுப்பும் மற்றொரு முக்கியமான கேள்வி, பெண்களைப் பற்றிய தவெக அரசின் பார்வை குறித்ததாகும்.
தாய்மை என்பது மகத்தானது. குழந்தையைப் பெற்றெடுப்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் முக்கியமான நிகழ்வு. ஆனால், ஒரு பெண்ணின் அடையாளம் தாய்மை மட்டுமல்ல. அவள் ஒரு தனிமனிதர், உழைப்பாளர், பொருளாதாரப் பங்களிப்பாளர், சமூகத்தின் சம உரிமை கொண்ட குடிமகள்.
திருமணம் செய்துகொள்ளாத பெண்கள், குழந்தை பெற்றுக்கொள்ளாத பெண்கள், குழந்தை பெற இயலாத பெண்கள் எனப் பல்வேறு வாழ்க்கைச் சூழல்களில் வாழும் பெண்களும் சமமான மரியாதைக்கும் அரசின் பாதுகாப்புக்கும் உரியவர்கள். பெண்களின் சமூகப் பங்களிப்பைத் தாய்மை என்ற ஒரே அளவுகோலுக்குள் சுருக்குவது ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடு.
இந்திய அரசியலமைப்பின் 42ஆவது பிரிவு, மனிதாபிமானமான வேலைச் சூழல்களையும், மகப்பேறு நிவாரணத்தையும் உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இதன் அடிப்படை நோக்கம், மகப்பேற்றை ஒரு கொண்டாட்ட நிகழ்வாக மட்டும் பார்க்காமல், அது தொடர்பான உரிமைகளையும், அரசின் பொறுப்புகளையும் உறுதிப்படுத்துவதாகும்.
மகப்பேறு கால ஊதியத்துடன் கூடிய விடுப்பு, பிரசவத்திற்குப் பிந்தைய மருத்துவப் பராமரிப்பு, ஊட்டச்சத்து, குழந்தைப் பராமரிப்பு மையங்கள், பணியிடப் பாதுகாப்பு, சம வேலைக்கு சம ஊதியம், பெண்களின் பொருளாதாரச் சுதந்திரம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் முதல் கடமை. இதுவே பெண்களின் வாழ்க்கையில் நீண்டகாலப் பயனை உருவாக்கக்கூடியவை.
குறிப்பாக, அமைப்புசாராத் தொழில்களில் ஈடுபட்டுள்ள பெண்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், தூய்மைக் காவலர்கள், ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், வீட்டு வேலைத் தொழிலாளர்கள், செவிலியர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்கள் என இவர்களின் உழைப்புதான் சமூகத்தின் அன்றாட வாழ்க்கையை தாங்கி நிற்கிறது.
கண்ணியமான ஊதியம் பாதுகாப்பானப் பணிச்சுழல், வேலைப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் மகப்பேறு உரிமைகள் இவர்களுக்கு உறுதி செய்யப்பட வேண்டும். அதுவே, அவர்களின் வாழ்க்கையிலும், குடும்பங்களிலும் நீடித்த மாற்றத்தை ஏற்படுத்தும். இதுவே சமூக மாற்றத்திற்கான அடிப்படை.
தாய்மையைப் போற்றும் அரசு, பெண்களின் உரிமைகளையும், பொருளாதாரச் சுதந்திரத்தையும் அதே அளவு முக்கியத்துவத்துடன் போற்ற வேண்டும்.
அரசு மருத்துவமனைகள் மீதான நம்பிக்கையை எவ்வாறு வளர்ப்பது?
அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தை ஊக்குவிப்பது இத்திட்டத்தின் அறிவிக்கப்பட்ட நோக்கங்களில் ஒன்று. ஆனால், அரசு மருத்துவமனைகள் மீதான நம்பிக்கை என்பது பரிசுப் பொருட்களால் மட்டும் உருவாகக் கூடியதல்ல.
24 மணி நேரமும் செயல்படும் பிரசவப் பிரிவுகள், போதுமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், அவசர அறுவைச் சிகிச்சை வசதிகள், தரமான மருந்துகள், பரிசோதனைக் கூடங்கள், இரத்த வங்கிகள், அவசரகாலப் போக்குவரத்து ஆகியவை உறுதி செய்யப்படும்போதுதான் பெண்கள் நம்பிக்கையுடன் அரசு மருத்துவமனைகளை அணுகுவார்கள்.
போதிய மருத்துவ வசதிகள் இல்லாத காரணங்களால், தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டிய நிலையில் அப்பெண்கள், இத்திட்டத்தின் பயனைப் பெற முடியாது.
கர்ப்பிணி பெண்ணின் மருத்துவத் தேவையே பிரசவம் நடைபெறும் இடத்தைத் தீர்மானிக்க வேண்டும். தாய் மாமன் வழங்கும் தங்க மோதிரம் அல்ல. இத்தகைய நிபந்தனைகள், பெண்களின் மருத்துவத் தேர்வுகளுக்கு இடையூறாக இருக்கக் கூடாது.
குழந்தை இறப்புகள் சிசு இறப்பு விகிதம், தாய் மரணம்(MMR), ஊட்டச்சத்துக் குறைபாடு, வளர்ச்சிக் குன்றல் (stunting), எடைக் குறைவு மற்றும் குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துக் குறைபாடு ஆகியவை தீவிர கவனத்திற்குரிய பிரச்சினைகள்.
2024 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் சிசு இறப்பு விகிதம் ஆயிரத்திற்கு 11 ஆகவும், தாய் மரண விகிதம் ஒரு லட்சத்திற்கு 25 ஆகவும் இருந்தது. NFHS-5 தரவின்படி தமிழ்நாட்டில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 25 சதவிகிதம் வளர்ச்சி குன்றியவர்கள் ஆகவும், 14.6% ஊட்டச்சத்து குறைவால் எடை குறைந்தவர்களாகவும், 22 சதவிகிதம் வயதுக்கேற்ற எடை இல்லாதவர்களாகவுமாக இருக்கின்றனர். ஆறிலிருந்து 23 மாத குழந்தைகளில் 16.3% மட்டுமே போதுமான உணவு முறையை பெறுகின்றனர்.
இந்தியாவின் தேசிய குடும்பநலக் கணக்கெடுப்பு (NFHS-5, 2019-–21) தரவுகளின்படி, தமிழ்நாட்டில் 15–49 வயதுடைய பெண்களில் 53.4% பேர் ரத்தசோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்ப்பிணிப் பெண்களில் இந்தப் பாதிப்பு 48.3% ஆகவும், 6–59 மாதக் குழந்தைகளில் 57.4% ஆகவும் உள்ளது.
ஒரு குழந்தையின் பிறப்பைக் கொண்டாடுவது மகிழ்ச்சிக்குரியது. அந்தக் குழந்தையின் தாய்க்கு உரிய மரியாதை வழங்கப்படுவதும் அவசியமானது. ஆனால், அந்தக் கொண்டாட்டம் ஒரு நாள் நிகழ்வாக முடிந்துவிடக் கூடாது.
பெண்களைத் தாய்மையின் வழியாக மட்டுமே அங்கீகரிக்காமல், அவர்களின் உழைப்பு, அறிவு, ஆற்றல், சமூகப் பங்களிப்பு ஆகிய அனைத்தையும் மதிப்பதே உண்மையான பெண்ணுரிமை நோக்கமாகும்.
தாய்மையைப் போற்றுவது வேறு, பெண்ணை தாய்மையின் அடையாளத்திற்குள் மட்டுமே அடக்குவது வேறு. குழந்தை பெற முடியாத பெண்களும், குழந்தை பெறாத பெண்களும், சம உரிமையும் கண்ணியமும் கொண்டவர்கள். அவர்களின் வாழ்வும் அரசின் நலக் கொள்கைகளில் சமமாக பிரதிபலிக்க வேண்டும்.
இத்திட்டம் பெண்களின் அடிப்படை உரிமைகளையும் நீண்ட கால மனித வளர்ச்சியையும் விட அடையாளப் பரிசுக்கு முன்னுரிமை அளித்து வாக்கு சேகரிக்கும் திட்டமாக சுருங்கி விட்டதோடு, ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடாக இருப்பது கவலையோடு பார்க்க வேண்டிய ஒன்றாகிறது.
அரசின் முன்னுரிமைகள் மறு சீரமைக்கப்பட வேண்டும். பரிசுகளில் இருந்து உரிமைகளுக்கு, அடையாளத்திலிருந்து பொருளாதார அதிகாரம் உத்தரவாதப்படுத்துவதற்கு, குறுகிய கால செலவில் இருந்து நீண்ட கால மனித வள முதலீட்டுக்கு இத்தகைய முன்னுரிமைகள்தான் சமூக நீதிக்கு வழிவகுக்கும்.