கட்டுரைகள்

பாஜகவின் பாதம் தாங்கி தலைமை தேர்தல் ஆணையர்!

த.லெனின்

இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பதிவு, நீக்கங்கள், மீட்டெடுப்புகள் மற்றும் தரவுத்தள அணுகல் ஆகியவற்றைக் கையாளும் விதம் குறித்து இந்தியத் தேர்தல் ஆணையத்தின் (ECI) உறுப்பினர்களே மீண்டும் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஒன்றிய தேர்தல் ஆணையம் (CEC) இது குறித்த முழுமையான தகவல்களை வெளியிட மறுக்கிறது. இதனால், மோடியின் தேர்தல் வெற்றியை, மக்கள் உண்மையான ஆதரவின் வெளிப்பாடாகக் கருத முடியாது. மோசடிகள் மூலம் கைப்பற்றப்பட்ட வெற்றியாகவே இது அமைந்துள்ளது. அதனை மறைப்பதற்கான நாடகம்தான் தலைமை தேர்தல் ஆணையரின் இந்த சர்வாதிகார நடவடிக்கைகள்.

பல உறுப்பினர்களைக் கொண்ட ஓர் அரசியலமைப்பு அமைப்பில் வெவ்வேறு கருத்துரைகள் முன்வைக்கப்படுவது இயல்பான நடைமுறைதான் என்றும், வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தம் (SIR) உள்ளிட்ட கடந்த ஓராண்டில் எடுக்கப்பட்ட அனைத்து இறுதி முடிவுகளும் ஒருமனதாகவே எடுக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் தனது விளக்கத்தில் கூறியுள்ளது.

ஆனால், அதற்காக தேர்தல் ஆணையம் நடத்திய கூட்டங்களின், கூட்டப் பதிவேடுகளை இன்று வரை காட்ட மறுக்கிறது. இதன் மூலம் உண்மையை தேர்தல் ஆணையம் மூடி மறைக்கிறது என்பதே உண்மை!

திருத்தம் என்ற பெயரில் திருட்டு!

ஜனவரி 2026-ல் தொடங்கப்பட்ட இந்தியத் தேர்தல் ஆணையத்தின் இணையத் திட்டம் செயல்படும் விதம், குறிப்பாக முக்கிய முடிவெடுக்கும் செயல்முறைகளிலிருந்து தாங்கள் விலக்கப்பட்டிருப்பது குறித்தும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் இந்தியன் எக்ஸ்பிரசின் விசாரணை அறிக்கை தெரிவித்துள்ளது.

வரைவு வாக்காளர் பட்டியலிலிருந்து தங்கள் பெயர் நீக்கப்பட்டதை எதிர்த்து கோவாவில் உள்ள 97 வாக்காளர்கள் மாநில தேர்தல் ஆணையத்திடம் மேல்முறையீடு செய்தபோதிலும், ஆணையத்தின் மையப்படுத்தப்பட்ட மென்பொருள் அமைப்புகள் அவர்களை இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கத் தவறிவிட்டன என்றும் இந்த விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோவாவில் 97 வாக்காளர்களை மீண்டும் வாக்காளர் பதிவில் அமர்த்தும் முடிவுகளை வாக்காளர் பட்டியல் அலுவலர்கள் (EROs) பதிவு செய்தும், அந்த மென்பொருள் தடுத்ததாகக் கூறப்படுவதால், இந்த அமைப்பு தலைமை தேர்தல் ஆணையரால் தனக்கு மட்டும் உரிய வகையில் மையப்படுத்தப்பட்டிருந்ததையும், வாக்காளர் பட்டியல் திருத்தங்களின் போது மாநில அளவிலான தேர்தல் அதிகாரிகள் தங்கள் முடிவெடுக்கும் அதிகாரத்தைக் கூட பயன்படுத்துவதை தடுத்ததாகவும் வலுவான குற்றச்சாட்டுகள் எழுந்தன.

மாநிலங்களில் நீக்கப்பட்ட வாக்காளர்கள்

கடந்த 2025-ஆம் ஆண்டின் மத்தியில், இந்தியத் தேர்தல் ஆணையம் பீகாரில் நடத்திய முன்னோட்ட சிறப்புத் தீவிர திருத்த அறிக்கை (SIR) எனப்படும் ஒரு திட்டத்தைத் தொடங்கியதிலிருந்து, நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல்கள் திருத்தப்பட்டு (திருடப்பட்டு) வருகின்றன. இத்திட்டத்தின் கீழ், வரைவு வாக்காளர் பட்டியலிலிருந்து 65 லட்சம் வாக்காளர்கள் பீகாரில் நீக்கப்பட்டனர்.

மேற்கு வங்கத்தில், தீர்ப்பு வழங்கப்பட்ட வாக்காளர்கள் உட்பட, கிட்டத்தட்ட 90 லட்சம் பேர் இறுதிப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டனர்.

உத்தரப்பிரதேசத்தில்தான் அதிகபட்ச நீக்கங்கள் நிகழ்ந்தன. அங்கு இறுதிப் பட்டியலிலிருந்து 2.08 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.

மகாராஷ்டிராவில் வரைவு வாக்காளர் பட்டியலிலிருந்து சுமார் 2.07 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன, அதன் இறுதி முடிவு இன்னும் வெளியிடப்படவில்லை.

டெல்லியில் வரைவு வாக்காளர் பட்டியலிலிருந்து கிட்டத்தட்ட 48 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.

சிறப்பு வாக்காளர் பட்டியல் தொடங்கியதிலிருந்து, வரைவு அல்லது இறுதிப் பட்டியல்களில் இருந்து மொத்தம் 13 கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

நீக்கப்பட்டவர்களில் இஸ்லாமிய சிறுபான்மையினர், தலித்துகள், பழங்குடியினர், பெருமளவு பெண்கள், பாஜகவிற்கு வாக்களிக்காதவர்கள் என்பதையெல்லாம் கண்டறிந்துதான் நீக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் ஆணையர்களின் புதிய தேர்வு குறித்து இடதுசாரிக் கட்சிகள் தேர்தல் ஆணையத்தை வாக்குத் திருட்டிலிருந்து சட்டத் திருட்டும், சட்டத் திருட்டிலிருந்து நிறுவனத் திருட்டும் உருவாகிறது என வகைப்படுத்தியது சரியானதுதான் என்பது உறுதியானது.

நட்டாற்றில் நடுநிலை!

தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் இதர தேர்தல் ஆணையர்கள் சட்டம், 2023, தேர்தல் ஆணையர்களுக்கான தேர்வுக் குழுவை மாற்றியமைத்து, அக்குழுவிலிருந்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியை நீக்கியது.

தற்போது, இந்தக் குழுவில் பிரதமர், பிரதமரால் பரிந்துரைக்கப்பட்ட ஓர் ஒன்றிய அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் நடுநிலை நட்டாற்றில் விடப்பட்டது.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் ராஜீவ் குமார் அப்பதவியிலிருந்து விலகிய பிறகு, அடுத்த தலைமைத் தேர்தல் ஆணையரைத் தேர்ந்தெடுப்பதற்காக அமைக்கப்பட்ட கூட்டத்தில் தனது எதிர்ப்பைப் பதிவு செய்ததாக ராகுல்காந்தி குறிப்பிட்டார்.

தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் அல்லது தேர்தல் ஆணையர் ஆகியோரது எந்தவொரு செயலுக்காகவும் அவர்களுக்கு எதிராக எந்தவொரு உரிமையியல் அல்லது குற்றவியல் நடவடிக்கையும் தொடங்க முடியாது என்று சட்டத்தின் 16-வது பிரிவை உருவாக்கி அவர்களை காப்பதற்கு அரண்செய்துகொண்டது பாசிச பாஜக அரசு.

தேர்தல் சர்வாதிகாரம்!

இந்தியாவின் தேர்தல் ஆணையத்தின் அரசியல் கைப்பற்றலானது, விளாடிமிர் புட்டினின் ரஷ்யா, ரெசெப் தயிப் எர்டோகனின் துருக்கி மற்றும் ஷேக் ஹசீனாவின் பங்களாதேஷ் போன்ற ஆட்சிகளால் செம்மைப்படுத்தப்பட்ட தேர்தல் சர்வாதிகாரத்தின் உலகளாவிய வழிமுறைகளுடன் ஒத்துப்போகிறது.

வி-டெம் அமைப்பு, மோடியின் கீழ் உள்ள இந்தியாவை ஒரு ‘தேர்தல் சர்வாதிகாரம்’ என வகைப்படுத்துகிறது. மேலும், 2025-ஆம் ஆண்டுக்கான தனது தேர்தல் ஜனநாயகக் குறியீட்டில் 179 நாடுகளில் இந்தியாவை 0.38 மதிப்பெண்ணுடன் 106-வது இடத்தில் வைத்துள்ளது.

ஃப்ரீடம் ஹவுஸ், மோடியின் இந்தியாவை ‘ஓரளவு சுதந்திரமானது’ என மதிப்பிட்டு, 100-க்கு 62 புள்ளிகளை வழங்கியுள்ளது; இதில் குடிமை உரிமைகளுக்கு 60-க்கு 31 புள்ளிகள் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளன.

தி எகனாமிஸ்ட் இன்டெலிஜென்ஸ் யூனிட், இந்தியாவை ஒரு ‘குறைபாடுள்ள ஜனநாயகம்’ என்று முத்திரை குத்தியுள்ளது. இந்த மூன்று அமைப்புகளும், மோடி அரசால் திட்டமிட்டு ஜனநாயக பாதுகாப்பு அரண்கள் தகர்க்கப்பட்டதை ஆவணப்படுத்தியுள்ளன.

ஞானேஷ் குமாரின் தகிடுதத்தங்கள்!

ஓர் அரசு அதிகாரியாக, ஞானேஷின் பணி வாழ்க்கை, மோடி ஆட்சியுடன் எப்போதும் நெருக்கத்தைக் காட்டுகிறது. பாஜக ஆட்சியின் சித்தாந்தத் திட்டங்களைச் செயல்படுத்த அவர் உதவினார். அவர் உள்துறை அமைச்சகத்தின் காஷ்மீர் பிரிவில் பணியாற்றினார். அப்போது, 2019-ல் மோடி அரசாங்கத்தின் 370-வது சட்டப்பிரிவு ரத்து மற்றும் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு என்ற பெயரில் மாநில அந்தஸ்தை பறித்து யூனியன் பிரதேசங்களாக மாற்றுவதில் முக்கியப் பங்கு வகித்தார்.

மோடி அரசாங்கத்தின் மற்றொரு முக்கிய சித்தாந்தத் திட்டமான ராம ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை தொடர்பான பணிகளைக் கையாண்டு, அதன் பதவிவழி உறுப்பினரானார். பின்னர், அமித் ஷா தலைமையிலான கூட்டுறவு அமைச்சகத்தில் செயலாளராகப் பணியாற்றி, ஜனவரி 2024-ல் ஓய்வு பெற்றார்.

ஓய்வு பெற்ற, இரண்டு மாதங்களுக்குப் பிறகு தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். பிப்ரவரி 2025-ல், அவர் தலைமைத் தேர்தல் ஆணையரானார்.

பாஜக ஏன் ஞானேஷை தீவிரமாக ஆதரிக்கிறது?

பாஜக தனது வெளிப்படையான ஆதரவாலும், அதன் மேற்கு வங்க கட்சித் தலைவர் அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கக் கோருவதாலும், இந்த அமைப்பைப் பாதித்து, தலைமைத் தேர்தல் ஆணையரை மேலும் அம்பலப்படுத்துகின்றனர்.

ஓர் அரசியலமைப்புப் பதவியில் இருக்கும் அதிகாரி விஷயத்தில் பாஜக அமைதியாக இருக்க வேண்டும், ஆனால் ஞானேஷை ஆதரிக்கிறது.

ஞானேஷின் நடத்தை வாக்காளர் பட்டியல்களின் நேர்மையைக் குலைத்திருந்தாலோ அல்லது ஆணையத்தை அரசியல் கட்டுப்பாட்டிற்கு அடிபணியச் செய்திருந்தாலோ, அதன் பாதிப்பு பாஜக வென்ற மற்றும் அவரது அதிகாரத்தின் கீழ் மேற்பார்வையிடப்பட்ட ஒவ்வொரு தேர்தல், இடைத்தேர்தல்கள், வாக்காளர் பட்டியல் திருத்தத்தையும் சென்றடைகிறது. ஒன்றிய அரசு மட்டுமின்றி, 21 மாநிலங்களில் ஆட்சி செய்வதற்கான உரிமையை மோடியும், பாஜகவும் கூறிவரும் மக்கள் அளித்த ஆதரவின் நம்பகத்தன்மை குறித்து இது மிகப்பெரிய கேள்விகளை எழுப்புகிறது.

பாஜக, ஞானேஷை ஆதரிப்பது இது முதல் முறையல்ல. முறையான விசாரணை தொடங்குவதற்கு முன்பே, 193 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கையெழுத்திட்ட நோட்டீஸ்கள், மக்களவை சபாநாயகர் மற்றும் மாநிலங்களவைத் தலைவரால் நிராகரிக்கப்பட்டன.

பதவி நீக்கத்திற்கு எதிரான அரசியலமைப்புப் பாதுகாப்பு என்பது, தேர்தல் ஆணையரை அரசின் மிரட்டல்களிலிருந்து காப்பதற்கானதுதானே தவிர, எதிர்க்கட்சிகள் சுமத்தும் கடுமையான குற்றச்சாட்டுகளிலிருந்து அவரைக் காப்பாற்றுவதற்காக அல்ல. சட்டரீதியான ஆய்வைத் தடுப்பதற்காக நாடாளுமன்றப் பெரும்பான்மையையும் அவைத் தலைவர்களையும் பயன்படுத்திக்கொள்வதன் மூலம், ஞானேஷ் குமார் தவறுகளுக்கு பகிரங்கமாகப் பொறுப்பேற்காமல் மோடி அவரைப் பாதுகாத்துள்ளார் என்றே சொல்ல வேண்டும்.

கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை!

வரலாற்றாசிரியர் ஓர்னிட் ஷானியின் ஆய்வு நிரூபிப்பது போல, 1951-52-ல் நடந்த இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல்கள், வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்ற தீவிரமான, சமரசமற்ற உறுதிப்பாட்டின் அடிப்படையில் அமைந்திருந்தன.

இத்தேர்தல்கள், குடிமக்களை உள்ளடக்குவதற்கு முன்னுரிமை அளித்த ஒரு சுதந்திரமான அதிகாரத்துவ அமைப்பால் செயல்படுத்தப்பட்டன. பின்பு, பல ஆண்டுகளுக்குப் பிறகு, டி.என்.சேஷன் காலத்தில் ஆணையத்தை நிறுவனமயமாக்கி, தேர்தல் நடத்தை விதிகளைத் தீவிரமாக அமல்படுத்தி, நிர்வாக அதிகாரத்திற்கு பதிலாக தேர்தல் ஆணையத்தை ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பாக நிறுவினார்.

ஆனால் இன்று, ஞானேஷ் குமார் தேர்தல் ஆணையத்தை நிலைகுலைய வைத்து, அழித்து ஒழித்து விட்டார்! மக்களின் வாக்களிக்கும் ஜனநாயக உரிமையையும் பறித்து விட்டார்!

ஆனால், இன்றைய தலைமுறை இளைஞர்கள் மக்களாட்சியை மீட்க தேர்தல் ஆணையத்தின் நடுநிலையை மீண்டும் உருவாக்க தொடர்ந்து போராடி மீட்டெடுப்பது மட்டும் உறுதி!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button