கட்டுரைகள்

மதுரைக் குடமுழுக்கில் ஆகமத்தைக் கூறி அருந்தமிழை அகற்றிய விசய் ஆட்சி

மே.து.ரா.

பதினேழு ஆண்டுகளுக்குப் பின்னர் அண்மையில் நடத்தப்பட்ட மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு, தொடர் குழப்பங்களுடனும் தீராத குறைகளுடனும் நிறைவு பெற்றுள்ளது. தொடக்கத்தில் ஏற்பட்ட சறுக்கல்கள், நிறைவு வரை நீடித்தன.

சிறிதும் பெரிதுமாகத் தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான கோயில்கள் உள்ளன. இறை நம்பிக்கை கொண்டோர் பெருமளவில் கூடுகின்ற கோயில்களே நூறுக்கும் மேல் இருக்கலாம்.

நினைவுகளுக்குத் தெரிந்தவரை அல்லது பதிவுகள் உள்ளவரை ஆங்கிலேயர், காங்கிரசார், திமுக – அஇஅதிமுக வினர் உள்ளிட்ட வெவ்வேறு ஆட்சியினர் காலத்தில் இத்தகைய பெரும் கோயில்களில் குடமுழுக்குகள் தொடர்ந்து நடைபெற்றிருக்கின்றன.

நம்பிக்கை கொண்ட பெருமக்கள் கூடுவதும், குடமுழுக்குக் காட்சிகளை மன நிறைவுடன் காண்பதும், அத்தகைய பெரும் மக்கள் திரளைக் காவலர்கள் எதிர்கொள்வதும், அரசின் நேரடித் தலையீடின்றி அனைத்தும் இயல்பாக நடப்பதும் தமிழ் நாட்டுக்குப் புதியதல்ல.

கோயில் அமைவிடம், சுற்றுச்சாலைகள், குறுகிய அடுத்தடுத்த தெருக்களின் நிலை, இறை நம்பிக்கையாளர்களின் வருகை ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, தொலைவிலிருந்து பார்த்தாலும் குடமுழுக்கு நிகழ்வுகள் எளிதில் தெரிகின்ற வாய்ப்புகளை உருவாக்கித் தருவது இயல்பாகவே இன்று வரை நடந்து வந்திருக்கிறது.

ஆகம விதிகள் என்ற பெயரைப் பயன்படுத்தித் தமிழ்த் திருமுறைகளைப் புறக்கணிப்பதும் ஒதுக்குவதும் காலம்காலமாகத் தொடர்ந்துகொண்டிருந்தாலும், நடைமுறை ஏற்பாடுகளில் மக்களுக்குப் பெரிதும் குறைகள் நேராத வகையிலேயே குடமுழுக்கு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

புரியாத மொழியில் தெரியாத சடங்குகளுடன் நடைபெறும் குடமுழுக்கு விழாக்கள் தமிழர்களின் நம்பிக்கையையும் பண்பாட்டையும் முழுமையாக வெளிப்படுத்தவில்லை என்னும் மன நிலை நீடித்தாலும், சனாதனப் போக்குகளை மாற்ற முடியாவிட்டாலும், கலந்து கொண்ட மக்கள் அல்லல்பட்டுப் பழித்துத் தூற்றும் வகையிலான செயல்கள் நடைபெறாமல் பெருமளவில் தவிர்க்கப்பட்டு வந்துள்ளன.

ஆனால், சிறுபான்மை விசய் ஆட்சியில், மதுரை குடமுழுக்கு நிகழ்வுகள் தொடக்கம் முதல் நிறைவு வரை முறையாக, முழுமையாக நடத்தப்படவில்லை என்ற எண்ணங்கள் மக்கள் மனதில் எழுந்துள்ளன என்பதை மறைப்பதற்கில்லை.

அறங்காவலர் புறக்கணிப்பு

மதுரை மீனாட்சியம்மன் கோவிலோடு பல தலைமுறைகளாகத் தொடர்புகொண்டிருக்கும் பி.டி. ராசன் இல்லத்தினர் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். அறங்காவலர் குழுத் தலைவராக இருக்கும் திருமதி ராதா பழனிவேல்ராசன் பெயரும், பிற குழுவினர் பெயர்களும் அழைப்பிதழ்களில் இடம்பெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தும், உயர் நீதிமன்றம் இதில் தலையிட்டும், அது திருத்திக்கொள்ளப்படவில்லை. அவர்களுக்கெல்லாம் முறையாக அழைப்பிதழ்கள் தரப்படவில்லை என்பது பொதுவெளியில் பேசுபொருளான பின்னரும் உடனடியாக எதுவும் நடக்கவில்லை. இவர்கள் கடந்த பெரும்பான்மை தி.மு.க. ஆட்சியில் அமர்த்தப்பட்டனர் என்பதால் தற்போதைய சிறுபான்மை விசய் ஆட்சியில் தவிர்க்கப்பட்டிருக்கலாம். இப்படித் தொடங்கிய சறுக்கல்கள் தொடர்ந்தன.

ஆளுங்கட்சியினருக்கு மிகுதியாகச் சிறப்பழைப்பு

குடமுழுக்கு நிகழ்வுகளைக் கோவிலுக்குள் சென்று நேரில் காண ஏறத்தாழ 11,000 சிறப்பு நுழைவுச் சீட்டுகள் தரப்பட்டிருந்தன. ஆளும் கட்சியினர், அவர்களது இல்லத்தினர், சைவ மடத்தினர், கொடையாளர், நீதியர், உயர் அலுவலர் போன்றோருக்கு அவை வழங்கப்பட்டிருந்தன.

திருவாவடுதுறை, திருப்பனந்தாள் உள்ளிட்ட மடங்களின் தலைவர்கள், உயர் நீதிமன்றத் தலைமை நீதியர் உள்ளிட்ட நீதியர்கள் போன்றோர் கோயிலுக்குள் நுழைவதிலேயே தடைகள் ஏற்பட்டன. நுழைந்த பின்னரும் இடம் பெற முடியாமல் தவித்தனர். அவர்களைவிட ஆளும் கட்சி இல்லத்தினருக்கே முன்னுரிமை தரப்பட்டு, முன் வரிசையில் அமர்த்தப்பட்டனர். முறைமைகளுக்கு மாறாகப் பிற சமயத்தினர் சிலரும் முதலிடம் பெற்றுக் குடமுழுக்கு நடைபெறும் இடத்துக்கு அருகில் நின்றிருந்த காட்சிகளும் வெளிப்பட்டன.

ஆனால், இறை நம்பிக்கையுடன் தொலைவிலிருந்து வந்திருந்த எளிய மக்கள் கோவிலுக்குள் செல்ல முடியாமல் மாசி வீதிகளிலேயே தடுக்கப்பட்டனர். இதனால், நேரில் வந்திருந்தும் அவர்களால் குடமுழுக்கு நிகழ்வுகளைக் காண இயலாத நிலை ஏற்பட்டது. குடமுழுக்கினைக் காணும் உரிமை தங்களுக்குக் கிடைக்காததால், தங்களது மனக் குமுறல்களைச் சமூக வலைதளங்களில் பலரும் பரவலாக வெளிப்படுத்தினர்.

காவல்துறையின் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள்

காப்பு என்ற பெயரில் சித்திரை வீதிகள், ஆவணி மூல வீதிகள் போன்ற பல பகுதிகள் முற்றிலுமாக அடைக்கப்பட்டன. குடமுழுக்கு நாளுக்கு முன்னரே, உள்ளூர் மக்கள் தங்களது இல்லம், அலுவலகம் போன்ற இடங்களுக்குக்கூடச் செல்ல முடியாதவாறு ஊரடங்கு ஆணை போன்ற கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறைப்பட்டன. இதனால், நம்பிக்கையாளர் மட்டுமல்லாமல், உள்ளூர் மக்களும் நீண்ட தொலைவு அலையவேண்டிய இன்னல் ஏற்பட்டது.

கூட்டத்தை மதிப்பிடத் தவறியதாக இதனை எடுத்துக் கொள்ள முடியாது. சிறப்பு அழைப்பாளர்களன்றிப் பிறரது எதிர்பார்ப்புகள் குறித்த எத்தகைய பொறுப்புணர்வும் இல்லாத அரசின் தன்னலத்தையே இவை காட்டுகின்றன என்பதில் அய்யமில்லை.

நன்னீர் தெளிப்பில் தண்ணீர்

குடமுழுக்கு முடிந்தவுடன் கோயிலின் மேற்குடங்களில் ஊற்றப்பட்ட நன்னீர் தங்கள் மீது தெளிக்கப்படும் என்று நம்பிக்கையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். இது இயல்பானதாகும்.

ஆனால், தண்ணீர்க் குழாய்களில் பிடித்த நீரையும் குப்பிகளில் கொண்டு வந்த நீரையும் ஆங்காங்கிருந்த காவலர்கள், கோப்பைகளில் எடுத்தெடுத்து நன்னீர் எனத் தெளித்தனர். இவ்வாறு நன்னீர் தெளித்த காவலர்கள் அனைவரும் தங்களது காலணிகளைக்கூட கழற்றாமல் செயல்பட்டது மேலும் மக்களிடையே எரிச்சலையும் சினத்தையும் ஏற்படுத்தியது. இத்தகைய செயலைக் கண்டித்துக் காவலர்களிடம் மக்கள் எதிர்ப்பைக் காட்டினர். கடுமையான வாக்குப் பகிர்தல்களும் நடந்தேறின.

இவையெல்லாம் சமூக வலைதளங்களில் காணொளிகளாகத் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தன.

ஆங்காங்கு காண்திரைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், அவை முழுமையாகக் காட்சிகளைக் காட்டவில்லை என்னும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வண்டிகள் நிறுத்துமிடம், போக்குவரவு வழித்தடங்கள், வழி மாற்றங்கள் ஆகியன குறித்து முன்கூட்டியே தெளிவான விவரங்களும், பரப்புரையும், விழிப்புணர்வும் தரப்படாததால் ஏற்பட்ட குழப்பங்களில் மதுரை நகரமே தத்தளித்தது என்று கூறலாம்.

அமைச்சர்களின் உண்மைக்கு மாறான விளக்கங்கள்

எதிர்பார்த்ததைவிட மக்கள் மிகுதியாகத் திரண்டு விட்டனர், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவே கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன, யாவும் சிறப்பாகவும் முறையாகவும் நடந்தேறின என்ற பொய்யுரைகளோடு அமைச்சர்களின் விளக்கங்கள் நின்றுகொண்டன.

அண்மையில் பழநி முருகன் திருக்கோயிலில் நடந்த குடமுழுக்கு விழாவில் நன்னீர் வான்வழியே தெளிக்கப்பட்ட முறையினை இந்தச் சிறுபான்மை அரசு கடைப்பிடித்திருந்தால், இத்தகைய இடையூறுகள் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. இந்து அறநிலையத் துறையினர், காவல்துறையினர் போன்றோரெல்லாம் இதை அறிந்தோர்தாம்.

வேறொரு கடுமையான குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. சிறப்பு நுழைவுச் சீட்டுகள் பெருமளவில் செல்வர்களுக்குப் பெருந்தொகைக்கு விற்கப்பட்டிருக்கின்றன என்பது ஒதுக்கித்தள்ளக்கூடிய குற்றச்சாட்டன்று. விசய் படம் வெளியாகும் நாளன்று திரைப்படச் சீட்டுகளை வெளியில் மிகுவிலைக்கு விற்பதில் பழக்கப்பட்டது போன்று இதுவும் நடந்திருக்கலாம் என்றே கூறப்படுகிறது.

கோயிலுக்குள் நுழைந்து முதலிடம் பெற்றிருந்த பலரது நிலை குறித்துக் காணும்போது இவையெல்லாம் உண்மையாக இருக்குமோ என்னும் அய்யம் ஏற்படுவது இயல்புதான்.

குடமுழுக்கில் ஒலிக்காத தமிழ்

ஆகமத்தில் மூழ்கிய அறநிலையத் துறை அமைச்சரின் பொறுப்பில் நடைபெறும் குடமுழுக்கு விழாவில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதில் வியப்பில்லைதான். உயர் நீதிமன்றம் முன்னரே தஞ்சை, பழநி கோயில்களின் குடமுழுக்கு நிகழ்வுகளின்போது பிறப்பித்த ஆணையே இதற்கும் பொருந்தும் என்று கூறியதோடு நிறுத்திக்கொண்டது. சமக்கிருதத்துக்கு ஒப்பத் தமிழுக்கும் முன்னிடம் தரவேண்டும் என்பதுதான் உயர் நீதிமன்றத்தின் ஆணை.

ஆனால், மதுரையில் முற்றாக அது நிறைவேற்றப்படவில்லை. காணொளிக் காட்சிகளிலோ, தொலைக்காட்சிகளிலோ, பிற ஊடகங்களிலோ தமிழ் இணையாக ஒலிக்கப்பட்டதாகப் பதிவாகவில்லை. இதனைப் பலரும் சுட்டிக்காட்டிய பின்னரும் அறநிலையத் துறையின் சனாதன அமைச்சர், தமிழில் முறைப்படி யாவும் நடைபெற்றன, ஓதப்பட்டன என்று தயங்காமல் கூறுகிறார்.

ஒலிபெருக்கி வழியாகச் சமக்கிருதத்துக்கு இணையாகத் தமிழ் ஒலிக்கப்பட்டது என்பதற்கான எத்தகைய சான்றுகளும் கிடைக்கவில்லை. இது குறித்து இந்த அரசுக்கு ஏதேனும் கொள்கை இருப்பதாகத் தெரியவில்லை.

இந்த அடிப்படைச் சிக்கல், பெரும் கோயில்களில் நடைபெறும் ஒவ்வொரு குடமுழுக்கு நிகழ்வின்போதும் நீடிக்கிறது. இதற்கு நிலையானதொரு தீர்வு கண்டாக வேண்டும். ஒவ்வொரு முறையும் உயர்நீதிமன்றம் செல்வதும், அதன் ஆணை முற்றாகப் புறக்கணிக்கப்படுவதும் தொடர்கிறது.

இல்லாத ஆகமத்தில் இடம்பெறாத தமிழ்

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எழுதப்பட்ட ஆகமம் என ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை. கோயில் அமைப்பு, சிற்ப நுட்பம், வழிபாட்டு முறைகள் ஆகியவற்றை உள்ளடக்கியனவாக ஆகமங்கள் கருதப்பட்டாலும், இவற்றையெல்லாம் உறுதி செய்யக்கூடிய சான்றுகள் இல்லை. இருப்பினும், ஆகமம் என்ற பெயரைப் பயன்படுத்திக் கோயில்களைத் தங்கள் பிடிக்குள் சனாதனிகள் வைத்திருக்கின்றனர்.

ஆகமம் குறித்த முழுப் புரிதலோ, அறிதலோ இல்லாத நீதியர்களும் போகிற போக்கில் தங்களுடைய தீர்ப்பினை வழங்கி விடுகின்றனர். சமக்கிருதத்துக்கு இணையாக என்பதே தமிழுக்கு இழிவுதான். தமிழ் வரலாற்று ஆய்வாளர்கள் வழியாக ஆகமம் பற்றிய முழுமையான விளக்கங்களைப் பெற்று, இதில் தெளிவான முடிவினை நீதிமன்றங்களும், அரசும் மேற்கொள்ளவேண்டும்.

மதுரைக் குடமுழுக்குக் குழப்பங்கள், திட்டமிடாததால் ஏற்படவில்லை. திட்டமிட்டுச் செய்யப்பட்ட செயல்களால் நிகழ்ந்தவை அவை.

மதுரைக் குடமுழுக்கு நிகழ்வில் ஏற்பட்ட அனைத்து வழுக்கல்கள் குறித்தும் உயர் நீதிமன்ற நீதியர் ஒருவர் தலைமையில் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படவேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button