
உலகம் ஏற்கனவே அத்தகையதொரு பிரம்மாண்ட தொழில்நுட்ப மாற்றத்தில் நுழைந்துள்ளது, அதன் தாக்கம் தொழில் புரட்சியைவிட விரிவானதாக இருக்கும். செயற்கை நுண்ணறிவு (ஏஐ), செயற்கை பொது நுண்ணறிவு (AGI, ஜெனரேடிவ் ஏஐ), மேம்பட்ட கணினி செயல்பாடு (அட்வான்ஸ்டு கம்ப்யூட்டிங்), செமி-கண்டக்டர்கள் (குறை கடத்திகள்) ரோபாட்டிக்ஸ் (தானியங்கி கருவிகள்) மற்றும் குவாண்டம் தொழில்நுட்பம் என்பவை எல்லாம் இனியும் வெறும் அறிவியல் சார்ந்த ஆய்வு விஷயங்கள் அல்ல. அவையெல்லாம் எதிர்வரும் காலத்தில் பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவ வலிமையின் அடிப்படைகளாக ஆகி கொண்டுள்ளன.
ஆனால் இந்த மாற்றம் உலகின் சில முக்கிய மையங்களில் மட்டும் விரைவாக நடைபெற்றுக் கொண்டுள்ளதாகத் தோன்றுகிறது. குறிப்பாக அமெரிக்காவும் சீனாவும் செயற்கை நுண்ணறிவு, பெருமளவிலான கணினி கணக்கிடுதல் செயல்பாடு கட்டமைப்புகள், செமி-கண்டக்டர்கள், டேட்டா (தரவுகள்), கிளவுட் மற்றும் அடிப்படை மாதிரிகளின் மையங்களாக மேற்பட்ட வளர்ச்சி பெற்று வருகின்றன. இந்தப் புதிய தொழில்நுட்பமுறை அமைப்பில் இந்தியா சுதந்திரமான தனித்த சக்தியாக மாறப் போகிறதா அல்லது (அந்தத் தொழில்நுட்பத்திற்கான) பெரும் சந்தையாகவும், திறமையாளர்களின் ஊற்றாகவும் (source of talent) தன்னை வரையறுத்து நீடிக்கப் போகிறதா என்பதே இந்தியா முன் உள்ள மிகப்பெரிய கேள்வி.
இந்தியா செயற்கை நுண்ணறிவு துறையில் முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது. மார்ச் 2024ல் இந்தியச் செயற்கை நுண்ணறிவு இயக்கம் (இந்தியா ஏஐ மிஷன்) என்ற செயல்திட்டத்தை ரூ10,372 கோடி ஒதுக்கீட்டில் தொடங்கியது. இத்திட்டம் கணக்கிடும் கணினித் திறனை அதிகரிப்பது, உள்நாட்டு அடிப்படை மாதிரிகள், தரவுத்தொகுப்புகள், ஸ்டார்ட்-அப் தொழில் நிறுவனங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு திறன்கள் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்தது. அரசின் தகவல்படி 2026 தொடக்கத்தில் 38,000 க்கும் கூடுதலான கிராபிக்ஸ் பிராசசிங் யூனிட்கள் (GPUs) பகிர்ந்த கணினி செயல்பாட்டுக்காக ஏற்படுத்தப்பட்டது; மற்றும் சுதந்திரமான அடிப்படை மாதிரிகளையும், பெரும் மொழி மாதிரிகளை மேம்படுத்தவும் 12 குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. ஆனால் இந்த இடத்தில்தான் நாம் துல்லியமாக –சுய திருப்தி அடைதல் மற்றும் உண்மையான தொழில்நுட்ப சக்தி– இவற்றிற்கு இடையே வேறுபடுத்தி புரிந்து கொள்ள வேண்டும்.
செயற்கை நுண்ணறிவு மாநாட்டைக் கூட்டுவது, அயல்நாட்டு நிறுவனங்களை அழைப்பது, புதிதாகத் தொடங்கும் நிறுவனங்களை அதிகரிப்பது அல்லது கூடுதலான கிராபிக்ஸ் பிராசசிங் யூனிட்கள் (GPUs) கிடைக்கச் செய்வது மட்டும் போதுமானதல்ல. ஆகச் சிறந்த கணக்கீட்டு கணினி செயல்பாட்டுக் கட்டமைப்பு, மேம்பட்ட செமி-கண்டக்டர்கள், திறன்மிக்க அடிப்படை மாதிரிகள், உலகத் தரத்திலான ஆய்வு நிறுவனங்கள், அல்காரிதம், தரவுத்தொகுப்புகள், எனர்ஜி கட்டமைப்பு மற்றும் உயர்மட்ட செயற்கை நுண்ணறிவு திறமையாளர்களை மேம்படுத்துவதே தற்போதைய தேவை.
இந்தியாவிடம் வரலாற்று வாய்ப்பு உள்ளது. குளோபல் சவுத் எனப்படும் உலகின் தென்பகுதி வெறும் வளரும் நாடுகளின் அரசியல் குழு அல்ல. (குளோபல் சவுத் என்ற சொல் பூகோள தென்பகுதி அரைக்கோளம் அல்ல. அது ஓர் அரசியல் பதம். ஏகாதிபத்தியம் மற்றும் காலனித்துவத்தால் பாதிக்கப்பட்ட, உலகளாவிய பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, கரீபியன் மற்றும் (ஜப்பான், இஸ்ரேல், தென் கொரியா தவிர்த்த) ஆசியா போன்ற பகுதிகளில் உள்ள நாடுகளைக் குறிப்பது அந்தச் சொல்)
உலகளாவிய தென்பகுதி (குளோபல் சவுத்) நாடுகளிடம் மாபெரும் சந்தைகள், இயற்கை வள ஆதாரங்கள், இளம் வயது மக்கள் தொகை மற்றும் புதிய உலகப் பொருளாதாரத்தை வடிவமைக்கக் கூடிய பொருளாதாரச் சாத்தியப்பாடுகள் உள்ளது. ஆசியாவிடம் பெரும் சந்தைகள் மற்றும் உற்பத்தி திறன் உள்ளது. இந்திய தேசம் மாபெரும் மக்கள் தொகை, தொழில்நுட்ப மனித ஆற்றல் செல்வாதாரங்கள், மென்பொருள் திறன்கள், டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பு மற்றும் விரிந்த உள்நாட்டு சந்தை உடையது. இந்தத் திறன்களை இணைப்பதன் மூலம் செயற்கை நுண்ணறிவின் மாற்று மாதிரி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப மேம்பாட்டை உலகளாவிய தென்பகுதிக்கு அதனால் வழங்க முடியும்.
ஆனால் இந்தியா அதற்கு “உலகளாவிய தென்பகுதிக்குச் செயற்கை நுண்ணறிவு” (AI for the Global South) என்று வெறுமே வார்த்தைய அளவில் பேசுவதற்கு அப்பால் செயல்பட வேண்டும். குளோபல் சவுத்’துக்குச் செயற்கை நுண்ணறிவு உட்கட்டமைப்பு, குளோபல் சவுத்’துக்குச் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மற்றும் குளோபல் சவுத்’துக்கான தொழில் நுட்ப உற்பத்தியை நோக்கி அடியெடுத்து முன்னோக்கிச் செல்ல வேண்டும். இந்த இடத்தில் கொள்கை மற்றும் அரசியல் ரீதியான வெளிப்பாட்டிற்கும் இடையேயான வேறுபாடு தெளிவாகத் தெரிகிறது.
மூன்று முக்கியமான நிகழ்வுகள், செயற்கை நுண்ணறிவு தாக்கம் மீதான புதுடெல்லி உச்சி மாநாடு, புதுடெல்லி பிரிக்ஸ் (BRICS) மாநாடு மற்றும் (மத்திய ஆசியாவின் மலை நாடான கிர்கிஸ்தானின் தலைநகர்) பிஷ்கெக் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO Summit) உச்சி மாநாடு. இம்மூன்று மாநாடுகளின் இடையேயான வேறுபாட்டை நாம் புரிந்து கொள்வோம்.
2026 பிப்ரவரியில் இந்தியா ‘செயற்கை நுண்ணறிவின் தாக்கம்’ (AI Impact Summit) உச்சி மாநாட்டை நடத்தியது. அதுதான் உலகளாவிய தென் பகுதியில் நடத்தப்பட்ட முதலாவது உலகச் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடாகும்; அதில் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் சுமார் 60 அமைச்சர்கள் மற்றும் நூற்றுக் கணக்கான உலகளாவிய செயற்கை நுண்ணறிவு முன்னணி நிபுணர்கள் பங்கேற்றனர். அந்த உச்சி மாநாடு மக்கள், பிரபஞ்சம் மற்றும் முன்னேற்றம் (People, Planet and Progress) என்பதை அதன் முக்கிய மூன்று தூண்களாக நிறுவியது; மற்றும் உலகளாவிய தென் பகுதிக்குச் செயற்கை நுண்ணறிவு வாய்ப்பு மற்றும் பொறுப்புடன் கூடிய மேம்பாட்டை மாநாடு வலியுறுத்தியது.
இது இந்தியாவிற்கு ஒரு முக்கியமான வாய்ப்பாக அமைந்தது. ஆனால் அதன் உண்மையான மதிப்பு, அதன் பிறகு இந்தியா கட்டியமைத்தது என்ன என்பதைக் கொண்டு தீர்மானிக்கப்படும். உலகத் தரத்திலான ஏஐ மாடல்கள், அடிப்படை ஏஐ ஆய்வு, செமி-கண்டக்டர்கள் மற்றும் உயர் திறன் கணினிச் செயல்பாடுகளை (high-performance computing) இந்தியா கட்டியதா? இந்தியப் பல்கலைக் கழகங்களும் ஆய்வு நிறுவனங்களும் உலகின் முன்னணி ஏஐ ஆய்வு மையங்களின் பகுதியாக ஆகும் தகுதி பெற்றதா? இந்தியா உலகின் தென்பகுதி நாடுகளுடன் உண்மையான ஏஐ தொழில்நுட்பப் பங்குதாரராக ஆகத் தொடங்கியதா?
இதே கேள்விகள் பிரிக்ஸ் மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கும் (SCO) பொருந்தும்.
செப்டம்பரில் பிரிக்ஸ் உச்சி மாநாடு புதுடெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு முன் SCO உச்சி மாநாடு (கிர்கிஸ்தான் தலைநகரான) பிஷ்கெக் நகரில் கூட்டப்பட்டது. இந்த மூன்று நிகழ்வுகளிலும் பொதுவான கேள்வி இதுதான்: இந்நிகழ்வுகளில் இந்தியா அதன் தூதரக ராஜதந்திர பங்கேற்பை எந்த அளவுக்குத் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார வலிமையாக மாற்றியது?
இந்தச் சர்வதேச நிகழ்வுகளில் துரதிர்ஷ்டவசமாக இந்திய ஊடகங்களின் பெரும் பகுதி பிரதமரின் தனிப்பட்ட பிம்பத்தைத் தேவைக்கு அதிகமாகவே கவனம் குவித்ததாகத் தோன்றுகிறது. ஏஐ உச்சி மாநாட்டிற்கு யார் யாரெல்லாம் வந்தார்கள், பிரதமர் சந்தித்தது யாரை, மோடி – ஜி (ஜின்பிங்) மற்றும் மோடி –புதின் சந்திப்புகள் எவ்வாறு நடந்தன, அதில் எந்தப் புகைப்படம் பிரசுரமானது மற்றும் எந்த வெளிநாட்டின் தலைவர் பிரதமரைப் புகழ்ந்தார் என்பன போன்ற விஷயங்கள், –இந்தியா உண்மையில் சாதித்தது என்ன என்பதை விட–, ஆகக் கூடுதலாக முக்கியத்துவம் பெற்றன.
இது ஊடகம் சார்ந்த கேள்வி மட்டுமல்ல. இது அரசியல் மற்றும் தகவல் தொடர்பு அமைப்பு சார்ந்த ஒரு கேள்வியும் கூட; இதில் தலைவரின் தனிப்பட்ட பிம்பத்தை ஒரு சாதனையாக முன் நிறுத்துவது உண்மையான சாதனைகளை நிகழ்த்துவதற்கு மாற்றாக அமைந்து விடக்கூடும். கொள்கை விளைவுகளை விட தனிப்பட்ட பிம்பத்தின் மீது ஊடக உரையாடல் கவனத்தைக் குவிப்பது நீடிக்கும் என்றால், ஒரு ஜனநாயகச் சமூகத்தில் இயல்பாகவே ஆழமான கேள்விகள் எழுகின்றன.
புகழுக்காக இமேஜை உருவாக்குவது தேசத்தைக் கட்டமைப்பதாகாது என்பதைப் பிரதமரும் அவரது கட்சியும் புரிந்து கொள்ள வேண்டும்.
வெளிநாட்டு தலைவருடன் ஒரு போட்டோ, செமி-கண்டக்டர் தொழிற்சாலையை இந்தியாவில் ஏற்படுத்தாது.
ஒரு சர்வதேச மாநாட்டை அழைத்து நடத்துவது இந்தியாவைச் செயற்கை நுண்ணறிவு துறையில் சூப்பர்-பவராகச் செய்யாது.
ஒரு பிரகடனத்தில் செயற்கை நுண்ணறிவு எனக் குறிப்பிடுவது செயற்கை பொது நுண்ணறிவு (AGI) போட்டியில் இந்தியாவை முன்னதாக நிற்கச் செய்யாது.
தேசத்தைக கட்டமைக்கும் சோதனை வேறுபட்டது. அது தொழில்நுட்ப உட்கட்டமைப்பு மற்றும் சாதாரண குடி மக்களின் வாழ்வையும், உற்பத்தித் திறனையும் மாற்றவல்ல தொழில்நுட்பங்களின் மேம்பாடு ஆகும். இந்தியாவுக்குத் தேவை ஒரு தெளிவான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தேசியச் செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான செயல் திட்டமே.
அந்தச் செயல் திட்டத்தின் மையத்தில் பெரும் நிறுவனங்கள் மட்டுமல்லாது மாறாக பொது நிறுவன அமைப்புகள், பல்கலைக் கழகங்கள், புது ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்; குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs), விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் இடம் பெற வேண்டும். சில கார்ப்பரேட் குழுக்களின் தொழில்நுட்பத் திறனை அதிகரிப்பதற்கு மட்டுமானதாக செயற்கை நுண்ணறிவு மேம்பாடு வரையறுக்கப்படக் கூடாது.
கணினி செயல்பாடு உட்கட்டமைப்பு பெரிய அளவில் விரிவுபடுத்த வேண்டும், செமி-கண்டக்டர் உற்பத்தி உத்திசார் முன்னுரிமை ஆதல் வேண்டும், அடிப்படை மாடல்களில் நீண்ட கால பொது முதலீடு அதிகரிக்கப்பட வேண்டும், பல்கலைக் கழக ஏஐ ஆய்வு வலிமைப்படுத்த வேண்டும், இந்திய மொழிகளுக்கு உயர்மட்ட மாடல்கள் மேம்படுத்தப்பட வேண்டும் மற்றும் பகிரப்பட்ட செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பும், ஆய்வு வலைப் பின்னல்களும் ஆப்பிரிக்கா ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் ஏற்படுத்த வேண்டும்.
செமி-கண்டக்டர் உற்பத்தி, கணினி செயல்பாடு உட்கட்டமைப்பு, அடிப்படை மாதிரிகள் மற்றும் மேம்பட்ட ஆராய்ச்சி சூழல் அமைப்பில் உள்நாட்டு திறன்கள் வரையறுக்கப்பட்டதாக இருப்பதை அரசே ஒப்புக் கொண்டுள்ளது. 2026 ஆகஸ்டில் ‘இந்திய ஏஐ மிஷன்’ மற்றும் ‘இந்தியச் செமி-கண்டக்டர் மிஷன்’ திட்டங்கள் மூலம் தொழில்நுட்ப இறையாண்மையை அரசு வலியுறுத்தியது. ஒப்புக்கொண்ட இந்த நிலையில் இருந்து நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டும்.
இந்தியாவுக்கு முன்னுள்ள தேர்வு தெளிவானது. உலகின் மிகப் பெரிய செயற்கை நுண்ணறிவு சந்தைகளில் ஒன்றாக இந்தியாவால் ஆக முடியும், ஆனால் வெறும் சந்தையாக இருப்பது போதுமானதல்ல. அது தொழில்நுட்ப உற்பத்தியாளராகவும்,, தொழில்நுட்ப உரிமையாளராகவும் மற்றும் தொழில்நுட்ப வடிவமைப்பாளராகவும் ஆக வேண்டும்.
வெறும் சொற்பொழிவுகளால் தென்பகுதி உலக (குளோபல் சவுத்) நாடுகள் குழுவின் தலைமைத்துவம் வராது, மாறாகத் திறன் மேம்பாடுகளைக் கட்டமைப்பதன் மூலமே வரும். குளோபல் சவுத் புதிய உலக ஒழுங்கின் முன்னணி பாத்திரத்தை உண்மையிலேயே இந்தியா விரும்பினால், அது ஆப்பிரிக்கா மற்றும் லத்தின் அமெரிக்காவுடன் வெறும் வர்த்தக உறவுகளை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், அந்நாடுகளுடன் இந்தியா தொழில்நுட்ப கூட்டுப் பங்குதாரராகவும் ஆக வேண்டும். மேலும் இந்தியா செயற்கை நுண்ணறிவு, கனிமங்கள், எரிசக்தி, உற்பத்தி மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பை ஒருங்கிணைந்த மேம்பாட்டு செயல்திட்ட உத்தியாகக் கொண்டு தொடர்பு கொள்ள வேண்டும்.
எத்தனை வெளிநாட்டு தலைவர்கள் புதுடில்லி வந்தனர் அல்லது பிரதமரின் எத்தனை புகைப்படங்களை ஊடகங்கள் பிரசுரித்தன என்பதால் புதிய உலக ஒழுங்கில் இந்தியாவின் மதிப்பு தீர்மானிக்கப்படுவது அல்ல. இந்தியா கட்டியமைத்தது என்ன என்பதுதான் உண்மையான கேள்வி.
உலகத் தரத்திலான செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் கட்டமைக்கப்பட்டதா? அடிப்படைத் தொழில்நுட்பம்? செமி-கண்டக்டர் திறன்? ஆராய்ச்சி நிறுவனங்கள்? உயர்திறன் சார்ந்த வேலை வாய்ப்பு? அல்லது வெறும் சந்தை மட்டும் தானா? தொழில்நுட்பப் பங்குதாரர்களாக இல்லையா?
எதிர்வரும் பதின்ம ஆண்டுகளில் உண்மையான சோதனை இதுதான்.
இமேஜ் பிம்பத்தைக் கட்டமைத்து உருவாக்குவது சர்வதேச விளம்பரத்தைக் கொண்டு வரலாம்.
ஆனால் தேசத்தைக் கட்டமைப்பதற்கு உறுதியான வளர்ச்சித் திட்ட வரைபடம், தொழில்நுட்பத் திறன் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பது அவசியத் தேவை. இப்போது இந்தியா தேர்ந்தெடுக்க வேண்டிய பாதை இதுதான்.
–தமிழில் : நீலகண்டன்,
என் எஃப் டி இ, கடலூர்