
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான பொதுத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர் மற்றும் விராலிமலை ஆகிய ஆறு தொகுதிகளில் வாக்காளர்களால் அதிக வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்து விட்டார்கள்.
முதலமைச்சர் விஜய் இரு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்ற நிலையில், ஒன்றில் ராஜினாமா செய்தாக வேண்டும் என்பதால் திருச்சி கிழக்கு தொகுதி உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டார்.
ஆக ஏழு தொகுதிகளுக்கு மீண்டும் தேர்தல் நடைபெற்று உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தொகுதி மக்கள் நிர்பந்திக்கப்பட்டுள்ளார்கள்.
இவற்றில் மற்ற 5 தொகுதிகள் குறித்து வழக்கு இருப்பதால் தேர்தல் நடத்த நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தற்போது இடைத்தேர்தல் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் நடைபெற உள்ளது.
இத்தேர்தல் தவிர்க்க முடியாத தேர்தல் அல்ல, மாறாக வலுக்கட்டாயமாக பேரத்தின் காரணமாக திணிக்கப்பட்ட தேர்தல்.
மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளருக்கு அத்தொகுதி மக்கள் 69 ஆயிரத்து 254 பேர் வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளனர்.
தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளருக்கு அத்தொகுதி மக்கள் 81,100 பேர் வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளனர்.
இருவருமே அதிமுகவை சேர்ந்தவர்கள்.
வெற்றி பெற்ற இருவரும் இடது கை ஆட்காட்டி விரலில் வைக்கப்பட்ட மை உலர்வதற்கு முன்பாகவே தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பை ராஜினாமா செய்து விட்டு, அடுத்த நொடியே ஆளும் கட்சியான த.வெ.க.வில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.
வாக்களித்த மக்களை அவமதித்து, ராஜினாமா செய்ததையும், அவர்கள் ஆளுங்கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டதையும் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் மட்டுமல்ல, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தோழர் தொல். திருமாவளவன் அவர்களும் கண்டித்தார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
ஏன் கண்டிக்க வேண்டும்? அவர்கள் விருப்பம் ராஜினாமா செய்திருக்கின்றார்கள், மற்றொரு கட்சியில் சேர்ந்து கொள்கிறார்கள். இதில் என்ன தவறு என்று கேட்பவர்களும் உண்டு.
இக்கேள்வியை ஜனநாயகத்தின் நம்பிக்கை உடைய யாரும், ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்போரும் கேட்க மாட்டார்கள்.
இத்தகைய குதிரை பேரங்களை பாஜக நடத்தினால் தவறு, த.வெ.க.நடத்தினால் நியாயம் என்று கம்யூனிஸ்ட் கட்சிகளால் இரட்டை நிலை எடுக்க முடியாது என்பது அறிவார்ந்த அரசியலர் உணர்வார்கள்.
மக்களை மதிக்காத ஓர் உறுப்பினரோ அல்லது அரசியல் கட்சிகளோ, அமைப்புகளோ இருக்க முடியாது.
அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களை நம்பித்தான் இயங்க முடியும்.
நபர்கள், கட்சிகள், அமைப்புகள் அனைத்துக்கும் மேலானது ஜனநாயகம். ஜனநாயகம் சீரழிக்கப்படக்கூடாது என்பதே அனைவருக்குமான கவலையாக இருக்க முடியும் என்று கருதுகின்றோம், நம்புகின்றோம்.
இதனைத்தான் சென்னை உயர் நீதி மன்றம் மிகுந்த கவலையோடு தெரிவித்துள்ளது.
ஜனநாயகச் சீரழிவை ஏற்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்ததுடன், இது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்திருப்பதும், அவர்களை உடனடியாக த.வெ.க. வில் சேர்த்ததும், அவர்களையே மீண்டும் வேட்பாளராக நிறுத்துவதும் ஜனநாயகச் சீரழிவு இன்றி வேறு என்ன?
வாக்காளர்களை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம், பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று முடிவுக்கு வந்துவிட்டால், அத்தகைய நிலைப்பாடு என்பது அகம்பாவம் இன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?
ஜனநாயகத்திற்கு புறம்பான செயல்பாட்டை கம்யூனிஸ்டுகள் நிராகரிக்கின்றார்கள். நிராகரிப்பது மட்டுமல்ல, ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும் என்கின்ற உயர் நோக்கத்திற்காக, ஜனநாயகம் சீரழிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதற்காக, இத்தகைய உயர்நோக்கத்திற்காக தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளிலும் நேரடியாக களம் காண்கின்றார்கள்.
சட்டப்பேரவையானாலும், மக்களவையானாலும் எங்களுடைய உறுப்பினர்கள் தங்களுக்கு கிடைத்திட்ட மிக குறுகிய நேரத்தை, மக்களுக்காக பயன்படுத்தினார்கள் என்பதனை நன்கறிவீர்கள்.
நடந்து முடிந்த பேரவைத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் 10 பேர் போட்டியிட்ட போதும், 4 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
அவர்கள் 4பேரும் பேரவைக் கூட்டத் தொடரில் தங்களுக்கு கிடைத்த மிகக்குறுகிய நேரத்தை, ஆக்கப்பூர்வமான முறையில் பயன்படுத்தி மக்கள் பிரச்சனைகளை முன் வைத்தார்கள்.
துதி பாடலுக்கும், வசை மாறிகளுக்கும் இடமின்றி, தங்களது தொகுதியில் உள்ள மக்கள் பிரச்சனைகளை முன்வைத்தது மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
குறிப்பாக விவசாயிகள் பிரச்சனை, தொழிலாளர்கள் பிரச்சனை, விவசாய தொழிலாளர்கள் பிரச்சனை, மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு சட்டம், ஒன்றிய அரசு தொழிலாளருக்கு எதிராக கொண்டு வந்த 4 தொகுப்பு சட்டங்களை அமல்படுத்தக்கூடாது, வேலையின்மை பிரச்சனை, விலைவாசி உயர்வு, குடிதண்ணீர் பிரச்சனை, கல்வி, வேலை பார்ப்போரை நிரந்தரப்படுத்துவது இப்படி மக்கள் பிரச்சனை குறித்து மிகச் சிறப்பாக கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் பேசினார்கள் என்று அனைவராலும் பாராட்டப்பட்டார்கள் என்பது மிகைப்படுத்தப்பட்டது அல்ல,
சட்டமன்ற மரபுகளைப் பின்பற்றக் கூடியவர்களே சட்டமன்றத்திற்கு தேவை என்பதனை மக்கள் உணர்ந்துள்ளார்கள்.
தற்போது திணிக்கப்பட்ட தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் வேட்பாளர்களுக்கு ஆதரவளித்து வெற்றி பெற செய்வதன் மூலம், ஜனநாயகம் காப்பாற்றப்படும், ஜனநாயகச் சீரழிவு தடுத்து நிறுத்தப்படும்.
அகம்பாவம், ஆணவம் கொண்டவர்களுக்கு தக்க பாடம் புகட்டப்படும்.
மக்கள் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும், அவற்றுக்கு தீர்வு காணப்படும்,
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி வாக்காளப் பெருமக்கள் நன்கு யோசித்து நல்ல முடிவை எடுப்பீர்கள் என்ற நம்பிக்கை வீண் போகாது!
களம் காணும் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் இருவரும் சாமானியர்கள்.
சாமானிய மக்களுக்காக பாடுபட, போராட தங்களை அர்ப்பணித்துக் கொண்ட மிகச்சிறந்த போராளிகள்.
அத்தகைய போர்க்குணம் மிக்க இருவருக்கும், பேராதரவை தாருங்கள்! தங்களை மேலான வாக்குகளை தாருங்கள்!
மாற்று சக்தியாக உருவெடுத்துவரும் கம்யூனிஸ்டுகளுக்கு ஆதரவை தாருங்கள்!
நல்லவை நடப்பதே நாட்டுக்கு நற்பயன் அளிக்கும். தியாகத்திலும், நேர்மையிலும், எளிமையிலும் போற்றத்தக்கவர்கள் கம்யூனிஸ்டுகள் என்பதனை உலகம் ஒப்புக்கொண்ட பேருண்மை.
தியாகச் சீலர்கள் வழித்தோன்றலாக களம் காணும் கம்யூனிஸ்ட் வேட்பாளருக்குரிய சின்னமான கதிர் அரிவாள், அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னங்களுக்கு வாக்களித்து அரசியல் அறத்தை காப்பாற்ற பேருதவி புரிந்திடுவீர்!