அவதூறுக் குப்பைகளை அள்ளிக் கொட்டுவதுதான் அறமா? சாவித்திரி கண்ணன் பதிவுக்கு பதில்
டி.எம்.மூர்த்தி

அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன், நிர்மல் குமார், பத்திரிகையாளர்கள் ஆர். மணி, சவுக்கு சங்கர், ரங்கராஜ் பாண்டே, சாவித்திரி கண்ணன் இத்தியாதிகள் கம்யூனிஸ்டுகள் மீது அவதூறுக் குப்பைகளை அள்ளிக்கொட்ட வரிசை கட்டி வருகிறார்கள்.
யோக்கியமான கம்யூனிஸ்ட் கட்சிகளில், இப்போது யோக்கியர்களே இல்லையாம்.
இடைத்தேர்தலில் கம்யூனிஸ்டுகள் தனித்துப் போட்டியிடுகிறார்கள் என்ற உடனேயே இவர்களுக்கு கம்யூனிஸ்டுகளின் தரம் பற்றி ரொம்பக் கவலை வந்து விட்டது. அட, யோக்கியர்களே!
ஆட்சியமைக்க ஆதரவு தாருங்கள் என்று கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களின் வாசலில் காத்துக் கிடந்தபோது, ஊழல் திமுகவின் “கல்லாப் பெட்டி” கூட்டணியில் வெற்றி பெற்ற கட்சியிடம் “நெஞ்சை நிமிர்த்தி” நிற்கும் யோக்கியர்களான நாம் ஆதரவு கேட்கலாமா என்று ஆதவர், மோகர், குமார் வகையறாக்களுக்கு ஏன் தோன்றவில்லை?
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் மு.வீரபாண்டியன் ரொம்ப ஓவராகப் பேசுவதாக பழைய ‘துக்ளக்’, தற்போது ‘அறம்’ சாவித்திரி கண்ணன் எழுதியிருக்கிறார். கம்யூனிஸ்டுகள் தமது சுயத்தை உணர்ந்து கொள்ள வேண்டுமாம்.
தான் ஜனசக்தியில் எப்போதோ பணியாற்றியதாகவும், அதனால் பல விவகாரங்களில் தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு அமைதி காத்ததாகவும் வேறு குறிப்பிடுகிறார். இப்போது ஏன் அந்தப் பொறுமை அணை உடைந்து தகர்ந்து விட்டது. இடைத்தேர்தலில் கம்யூனிஸ்டுகள் “சுயமாக “தனித்து போட்டியிட்டு, த.வெ.க. பெயரில் நிற்கும் பழைய அதிமுக வேட்பாளருக்கு ஆதரவளிக்க மறுத்துவிட்டதால்தானே!
பொத்தாம் பொதுவாக “இன்றைய கம்யூனிஸ்டுகளிடம் உள்ளாட்சி அமைப்புகளிலும், ஊர் விவகாரங்களிலும் தங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை பட்டியலிடுவார்கள்” என்கிறார். இவர் அவதூறை விதைப்பாராம்! வாசகர்கள் ஊர் ஊராகப் போய் பட்டியலில் என்ன இருக்கிறது என்று பார்த்துக்கொள்ள வேண்டுமாம்.
“நாங்கள் ஒருபோதும் கையூட்டு பெற்றதுமில்லை. கையூட்டை வேடிக்கை பார்த்ததுமில்லை” என்று மு.வீ. சொன்னதை இவரால் பொறுக்க முடியவில்லையாம்! “சென்ற ஐந்து வருட ஆட்சி முழுமையும் கையூட்டை நாங்கள் பார்க்கமாட்டோம் என கண்ணை இறுக்கமாக பொத்திக் கொண்டீர்களோ…?” என்கிறார்.
வடிகட்டிய வலதுசாரி பத்திரிகையான “துக்ளக்”கில் பல ஆண்டுகள் பணியாற்றிவிட்டு, தான் இடதுசாரியாகவே இருந்ததாக மார் தட்டும் சாவித்திரி கண்ணன், துக்ளக்கில் வந்த கட்டுரைகளுக்கு எல்லாம் பொறுப்பேற்பாரா? தன்னை மிகவும் மதித்ததாக ஆசிரியர் “சோ”வுக்கு இப்போதும் புகழ்மாலை சூட்டுபவர்தானே? ஆனால், திமுக கூட்டணியில் இருந்ததற்காக திமுகவின் செயல்களுக்கு எல்லாம் கம்யூனிஸ்டுகள் பொறுப்பேற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது மட்டும் என்ன நியாயம்?
உழைக்கும் மக்களுக்கு எதிராக திமுக ஆட்சி எடுத்த நடவடிக்கைகளை எதிர்த்து கம்யூனிஸ்டுகள் நடத்திய போராட்டங்களையும், 12 மணி நேர வேலை சட்டமாக நிறைவேற்றப்பட்ட பின்னும் திரும்பப் பெற வைத்ததையும், பிற மாநிலங்களில் கொண்டு வரப்பட்ட இதே சட்டம் இன்று வரை நீடிப்பதையும் பார்க்காமல், படிக்காமல் இவர் கண்ணை மூடிக் கொள்வதற்குப் பின்னால் உள்ள நோக்கமென்ன? லாபமென்ன?
“இப்ப தவெக ஆட்சியில விழிப்போடு இருக்கீங்க” என்ற அவரது வரி அவரது நோக்கத்தை வெளிப்படுத்தி விடுகிறது. திமுக ஆட்சியில் பேசாமலிருந்தது போல, “இந்த தவெக ஆட்சியிலும் பேசாமலிரு! அப்படியானால் எனது பொறுமை அணையை உடையாமல் பார்த்துக்கொள்கிறேன்”
“பாஜக கட்டளைப்படி எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க திமுக உங்களிடம் ஆதரவு கேட்டபோதே தெரியவில்லையா..?” என்று ஏதோ அப்படிக் கேட்கும்போது பக்கத்தில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்ததுபோல எழுதுகிறார். அப்படிக் கேட்டதை மறுத்துக் கூட்டணியிலிருந்து வெளியேறி, த.வெ.க. ஆட்சியமைக்க ஆதரவு கொடுத்து அந்தத் திட்டத்தைத் தவிடு பொடியாக்கியது கம்யூனிஸ்டுகள்தானே! ஏதோ இவர் தான் கண்டுபிடித்ததுபோல வக்கணைச் சொற்கள் எதற்கு?
“தோழர் முத்தரசன் தனது சொத்துக் கணக்கை வெளியிடுவாரா? அவர் மாநிலச் செயலாளர் பொறுப்பு ஏற்கும் முன்பு அவரது பொருளாதார நிலை என்ன? தற்போதைய நிலை என்ன? இது கட்சியில் உள்ள அனைவருக்கும் தெரிந்த எளிய உண்மை” என்கிறார்.
நாங்களும் கட்சியில்தான் இருக்கிறோம். அவர் சென்னையில் வாடகை வீட்டில் குடியிருப்பதையும், இருசக்கர வாகனங்களிலும், ஆட்டோவிலும் பயணிப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவரது பொருளாதார நிலை பத்தாண்டுகளில் என்ன உயர்ந்திருக்கிறது? தொழிற்சாலை, நிலங்கள், வீடுகள், குறைந்தபட்சம் மனைவிக்கு நகைகளாவது வாங்கியிருக்கிறாரா? சாவித்திரி கண்ணன் ஆதாரத்தோடு பதில் சொல்ல வேண்டும்.
கள்ள லாட்டரி சாம்ராஜ்யத்தின் கணக்கற்ற கோடிகளுக்கும், தனக்கும் சம்பந்தமில்லை என்று கூறிக்கொள்பவர்களையும், பேரணிகள், மாநாடுகள் நடத்த பெரும் பணம் எங்கிருந்து வந்தது என்று சொல்ல மறுப்பவர்களையும் அறம் பிறழ்ந்து ஆதரித்துக்கொண்டு முத்தரசனின் சொத்துக் கணக்கைக் கேட்க வெட்கமாக இல்லை?
நக்கீரன் கோபால், திமுக ஆட்சியில் கைது செய்யப்பட்டபோது, அவரோடு சென்று சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திலும், பின்னர் நீதிமன்றத்திலும் கூடவே இருந்து, அவர் விடுவிக்கப்படும்வரை முத்தரசன் இருந்தது, உங்களுக்குத் தெரியாதென்றால், நக்கீரன் ஆசிரியரிடம் விசாரித்துப் பாருங்கள்.
அவ்வளவு ஏன்? அதே திமுக ஆட்சியில் உங்களைக் கைது செய்து கோனேரிக்குப்பம் காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றபோது, உடனே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன அறிக்கை கொடுத்ததும், உங்களால் தொங்கு சதை என வர்ணிக்கப்படும், முன்னாள் மாநிலச்செயலாளர் தனது “தோழமை”யைப் பயன்படுத்தி, அரசுடன் பேசி, திண்டிவனத்திலேயே நிறுத்தித் திரும்பக் கொண்டு வந்ததும் கூடவா உங்களுக்கு மறந்துவிட்டது? நீங்கள் கண்ணைப் பொத்திக் கொண்டிருந்தாலும்கூட உங்கள் நெஞ்சத்திடம் கேட்டுப் பாருங்கள்.
“மறைந்த தோழர் அற்புதமான பேச்சாளர் தா.பாண்டியன் நேர்மையான அரசியல்வாதியில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமாம்”.
யாருக்குத் தெரியும், என்ன தெரியும்? அவர் மறைந்துவிட்டார். என்றாலும் அப்படி அவர் என்ன சொத்துச் சேர்த்திருந்தார் என்று, ‘அறம்’ எனும் சொல்லுக்கு ஏதேனும் அர்த்தமிருந்தால் நேராகப் பதிலளிக்கட்டும்.
“திரு. தங்கப்பன் என்பவர் வீட்டில் நடத்திய ரெய்டுகளில் 120 சவரன் நகை, 7 கார்கள், 3 கோடி ரொக்கப் பணம் கண்டெடுக்கப்பட்டது” என்று விபரமாக ஒரே ஒரு குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்.
மு.வீரபாண்டியன், இரா. முத்தரசன், தா.பாண்டியன் ஆகியோர் பெயருக்கு முன்னாள் “தோழர்” என்று விளித்த கண்ணன், தங்கப்பன் பெயருக்கு முன்னாள் ஏன் “திரு” போட்டார். அவர் கம்யூனிஸ்ட் அல்ல என்பது தெரிந்ததால்தானே?
கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்ட பலர் வேறு கட்சிகளில் சேர்ந்து, துரோகிகளாகவும், ஆட்காட்டிகளாகவும், மாநில, ஒன்றிய அமைச்சர்களாகவும், தொழிலதிபர்களாகவும், கோடீஸ்வரர் களாகவும் மாறி இருக்கிறார்கள் என்பது உண்மைதான். அதற்காகத்தானே கம்யூனிஸ்ட் கட்சியை விட்டு வெளியேறினார்கள். அவர்களது குறைகளுக்கும், ஊழல்களுக்கும் கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பேற்க வேண்டும் என்று சவால் விடுவது எவ்வளவு அபத்தம்?
“தளி எம்.எல்.ஏவாக இருக்கும் ராமச்சந்திரன் மீது எத்தனை கொலை வழக்குகள்? வன்முறை ஆட்டங்கள்” என்கிறார் ‘அறம்’. விவசாயிகள் நிலத்தை அழிக்க கார்ப்பரேட்டுகள் புல்டோசர்களோடு நுழையும்போது, மக்களோடு சேர்ந்து தடுத்து நிறுத்தினால் வன்முறையா? தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் “நக்ஸல்கள்” என்று கம்யூனிஸ்டுகளைச் சித்தரித்து, அதிகார வர்க்கமும், காவல்துறையும் நடத்திய ‘தேவார’ வன்முறைகளையும், நிகழ்த்திய படுகொலைகளையும் ‘அறம்’ படித்ததில்லையோ! துக்ளக் வாடை இன்னும் போகவில்லையே.
ராமச்சந்திரன் மீது கொலை வழக்கு இருப்பது ரகசியமானதல்ல. அது விசாரணையில் இருக்கிறது. முடிவு வரட்டும். அவர் மீது இருப்பது. ‘ஊழல்’ வழக்கல்ல. ஆனால் அவர் விடுவிக்கப்பட்டாலும் ‘அறம்’ ஒத்துக் கொள்ளாதாம்.
ஆயிரம் கோடிக்கு மேல் அவருக்குச் சொத்து இருக்கிறதாம். முத்தரசனிடம் சொத்துக்கணக்கு கேட்ட இவர், ஒவ்வொரு தேர்தலிலும் ராமச்சந்திரன் தாக்கல் செய்யும் சொத்துக்கணக்கைப் பார்த்ததில்லையா? அது பொய் என்றால், அறத்தைக் காக்க அவதாரம் எடுத்த இவர், தேர்தல் ஆணையத்திடம் நிரூபித்து, எம்எல்ஏ பதவியை பறிக்கக்கூட முயற்சி எடுக்கலாமே.
எல்லாம் சொல்லிவிட்டு “ஒப்பீட்டளவில் மற்ற கட்சிகளை விட கம்யூனிஸ்டுகள் பரவாயில்லை” என்று முடிக்கிறார். இது நாளைக்கு, நான் கம்யூனிஸ்ட் கட்சிமீது மதிப்பு வைத்திருப்பவன் என்று சொல்லிக்கொள்வதற்காக முன் ஜாமீன். அவருக்கு நெருக்கமாக இருப்பதாக அவராகவே சொல்லிக்கொள்ளும் “யோக்கிய” கம்யூனிஸ்டுகளிடம் தொடர்ந்து ஒட்டிக்கொள்வதற்கான மலிவு உத்தி.
உண்மையிலேயே இவர் கம்யூனிஸ்டுகளை மதிப்பவராக இருந்தால், 2014ல் எந்தக் கூட்டணியிலும் இல்லாமல், சிபிஐ, சிபிஐ(எம்) தனித்து நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்தபோது நாலு வார்த்தை எழுதியதுண்டா? இரண்டு கழகங்களும் இல்லாமல் மக்கள் நலக் கூட்டணி அமைத்த போது, புதிய சக்தி எழுகிறது என்று ஏதேனும் செய்தது உண்டா?
கம்யூனிஸ்டுகளின் அரசியலை விமர்சிக்க யாருக்கும் உரிமை உண்டு. ஆனால், ஊழல், சொத்துக் குவிப்பு, கையூட்டு, நேர்மையின்மை என்று குற்றச்சாட்டுகளை அள்ளி வீசிவிட்டு, அதற்கான ஒரு ஆதாரத்தைக்கூட முன்வைக்க முடியாதவர்கள், தாங்கள் “அறத்தின்” காவலர்கள் என்று மார்தட்டிக் கொள்வதில் என்ன அறம் இருக்கிறது?
கம்யூனிஸ்டுகளிடம் கணக்குக் கேட்பவர்கள், தாங்கள் ஆதரிக்கும் அரசியல்வாதிகளிடமும் அதே அளவுகோலைப் பயன்படுத்தட்டும். உண்மையான குற்றம் இருந்தால் ஆதாரத்துடன் வெளியிடுங்கள்; சட்டத்தின் முன் நிரூபியுங்கள். இல்லையெனில், அரசியல் விமர்சனம் என்ற பெயரில் அவதூறுக் குப்பைகளை அள்ளி வீசுவதை நிறுத்துங்கள்.
கம்யூனிஸ்டுகள் தனித்து நிற்பது இவர்களுக்குக் கவலையாக இருக்கிறது என்றால், அந்தக் கவலை கம்யூனிஸ்டுகளின் யோக்கியத்திற்கான சான்றல்ல; அவர்களின் அரசியல் நிலைப்பாடு சிலருக்கு ஏற்படுத்தியிருக்கும் அசௌகரியத்திற்கான சான்று மட்டுமே!