தமிழகம்

சிறைகளில் 70% ஒடுக்கப்பட்ட மக்கள்: காவல்துறையின் சட்ட அணுகுமுறை நடுநிலையானதா?

க.மாரிமுத்து எம்.எல்.ஏ. கேள்வி

சட்டமன்றத்தில் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீது 3.9.2026 அன்று விவாதம் நடைபெற்றது. இதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த க.மாரிமுத்து எம்.எல்.ஏ. பங்கேற்றுப் பேசினார். அவை வருமாறு:

“எங்களுடைய திருத்துறைப்பூண்டி தொகுதியில் முத்துப்பேட்டைக்குத் தீயணைப்புத் துறைக்காக புதிய கட்டடம் கட்டுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்திருக்கிற முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி.

விளக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்த முதலமைச்சர் அவர்களுக்கும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருக்கும் நன்றி.

முத்துப்பேட்டை அரசு கலைக்கல்லூரிக்குப் புதிய கட்டடம் கட்டுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்திருக்கிற முதலமைச்சர் அவர்களுக்கும், உயர்கல்வித் துறை அமைச்சருக்கும் நன்றி.

கோரிக்கைகள்

திருத்துறைப்பூண்டி காவல்நிலையம் ஒரு தாலுகா அளவிலான காவல்நிலையமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிற காரணத்தினால் நிறைய வழக்குகள் தேக்க நிலையில் இருக்கின்றன. எனவே, திருத்துறைப்பூண்டி காவல்நிலையத்தைப் புறக் காவல்நிலையம், நகரக் காவல்நிலையம் என்று இரண்டாகப் பிரிக்க வேண்டும்.

போக்குவரத்து காவல்நிலையத்துக்கு ஒரு புதிய கட்டடம் தேவைப்படுகிறது. முத்துப்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்டப்பட வேண்டும். இடும்பாவனத்தில் புதிய காவல் நிலையம் தொடங்கப்பட வேண்டும். சிங்கப்பெண் பாதுகாப்புப் படை திட்டத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மனதாரப் பாராட்டுகிறோம். அதற்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். அந்தத் திட்டம் இன்னும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.

சிறைகளில் ஒடுக்கப்பட்டவர்களே அதிகம்

சமூகம் அமைதி காத்து, கொள்வாரும் இல்லாமல், கொடுப்பாரும் இல்லாமல் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற ஓர் உயர்ந்த நோக்கத்தைச் சமூகத்தில் கொண்டு செல்வதற்கான காவல்நிலையமாக இருக்கிறது என்று எல்லோரும் நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால், நடைபெற்றுக்கொண்டிருக்கிற நிகழ்வுகள் அப்படிப்பட்டதாக இருக்கிறதா? என்ற பல கேள்விகள் இருக்கின்றன.

தமிழ்நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில், சிறைவாசிகள் எண்ணிக்கை 23,756. சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 21,336. கொலைக் குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்கள் கிட்டதட்ட 6,556 பேர் இருக்கின்றனர். இவர்களில் 70 சதவீதம் பேர் ஒடுக்கப்பட்ட மக்களிலிருந்து வந்திருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன. அப்படியானால், காவல்துறையின் சட்ட அணுகுமுறை உண்மையிலேயே நடுநிலையோடு இருக்கிறதா? என்ற பெரும் கேள்வி இருக்கிறது. இதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

பாடம் கற்காத காவல்துறை

காவல்நிலைய மரணங்கள், நெஞ்சை பதைபதைக்கிற, கவலைகொள்கிற, மிகவும் நெருக்கடியான சூழ்நிலையை உருவாக்கி இருக்கின்றன. சாத்தான்குளத்தில் தந்தையும், மகனும் படுகொலை செய்யப்பட்டதில், காவலர்களுக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கி இருக்கிறது, காவல் அதிகாரிகளுக்கும் தண்டனை வழங்கி இருக்கிறது. காவல்துறை பாடம் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. காவல்துறை அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஆகாஷ் என்ற மாணவன், காவல் நிலையத்திலேயே அடித்துக் கொல்லப்படுகிறான். விசாரணையில் தெரிகிறது, அவன் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவன் என்பதற்காக வன்மத்தோடு அடிக்கப்பட்டதாக அறிக்கைகளில் கூறப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட சம்பவங்களால், காவல்துறையிடம் இருக்கிற அதிகாரங்களைக் கணக்கில் எடுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

ஆணவப் படுகொலையைத் தடுக்க தனிச்சட்டம்

‘பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும்’ என்று உன்னதமானக் கொள்கையை இந்த அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பெருமைப்படுகிறது. ஆனால், நாட்டில் இன்றைக்கும் சாதியின் பெயரால் படுகொலைகள் நடக்கின்றன. சாதி ஆணவத்தின் பெயரால் படுகொலைகள் நடக்கின்றன. சாதி ஆணவப் படுகொலையைத் தடுப்பதற்கு நீங்கள் அரசியல் உறுதியோடு இருக்க வேண்டும்- அதற்கென்று ஒரு தனிச்சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்.

போதைப்பொருள்

போதைப்பொருள் இன்றைக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பதை தமிழ்நாடு நன்கறியும். சாதாரண உழைக்கிற மக்களை, அவர்களுடைய வறுமையைப் பயன்படுத்தி, இந்தப் போதைப்பொருள் வர்த்தக சூதகர்கள் மிகப்பெரிய அளவில் விற்று வருகிறார்கள். இதனையறிந்து தமிழ்நாடு கவலை கொள்கிறது.

அவர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்வதோடு மட்டுமல்ல, இந்தப் போதைப்பொருள் கலாச்சாரத்தை, அதனுடைய அடி, வேர் எங்கே இருக்கிறது என்பதனை ஆராய்ந்து, அவற்றை அடியோடு ஒழிப்பதற்கான உத்திகளை, இன்றைக்கு காவல்துறையிடம் இருக்கும் நவீன உத்திகளைப் பயன்படுத்தி அதை ஒழிக்க வேண்டும். சவாலான பணியாக இருந்தாலும், அதை இந்த ஆட்சி சாதித்து முடித்தது என்பது வரலாறில் இடம் பெற வேண்டும்.

கொலைகளுக்கான குற்றப் பின்னணிகள் இருக்கின்றன. பெரும்பாலும் சொத்துத் தகராறு, குடும்பப் பிரச்சனைகள் போன்றவற்றிலேயே தொடங்குகின்றன. அவற்றுக்குரிய ஆவணங்களை ஆராய்ந்து தீர்வுகாணும் அதிகாரம் காவல்துறைக்கு வழங்கப்பட வேண்டும். அதற்கென்று தனிச்சட்டம் உருவாக்கப்பட வேண்டும்.

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) அறிக்கையில், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் நிறைய குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 5 லட்சத்துக்கு 5ஆயிரத்துக்கு மேற்பட்ட குற்ற வழக்குகள் பதிவாகி இருக்கின்றன.

திண்டுக்கல், மதுரையை மையமாக வைத்து எப்க்யூஎல் (FQL) என்ற மோசடி நிறுவனம் கிரிப்டோகரன்சி, பிட்காயின் என்ற பெயரில் மக்கள் சிறுகச் சிறுக சேமித்த பணத்தை, பலஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடைபெற்றிருக்கிறது.

சென்னையில்கூட ஆருத்ரா கோல்டு என்ற நிறுவனம் அதிக வட்டியைத் தருகிறோம், இரட்டிப்பு லாபம் தருகிறோம் என்று பல ஆயிரம் கோடியை மோசடி செய்திருக்கிறார்கள்.

வேலூரை மையமாக வைத்து எல்என்எஸ் என்ற ஒரு கார்ப்பரேட் நிறுவனம் கிட்டதட்ட 5ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மக்களுடைய சேமிப்புப் பணத்தை கொள்ளையடித்து இருக்கிறார்கள். இதேபோன்று நிறைய உள்ளன. இதுபோன்ற நிதி மோசடிக் குற்ற வழக்குகளில் காவல்துறை உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும். ஏறத்தாழ 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுடைய உழைப்புச் சுரண்டப்பட்டிருக்கிறது. அவர்களுடைய சொத்துகள் களவாடப்பட்டிருக்கின்றன.

வழக்கின் அடிப்படையில் சட்டரீதியாக அணுகி, உழைப்புச் சுரண்டலைத் தடுக்க, அவர்களுக்கான நிதியைப் பெற்றுத்தருவதில், உரிய தண்டனையைப் பெற்றுத் தருவதில் அரசு முனைப்புடன் ஈடுபட வேண்டும். சிறுகச் சிறுக சேமித்த உழைப்பாளிகளின் பணம் கொள்ளை போய்விடக் கூடாது. இந்த மோசடிகளை நீங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும். இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறாமல் தடுத்திட சட்டத் திருத்தம் கொண்டு வரவேண்டும்.

காவல்துறை-கோரிக்கைகள்

சீருடைப் பணியாளர் தேர்வாணையம், காவலர்களைத் தேர்வு செய்கிற தேர்வாணையம். ஆண்டு தோறும் தேர்வு அட்டவணையை வெளியிட வேண்டும். இதில் காலதாமதம் கூடாது.
1 லட்சம் பேருக்கு 222 காவலர்கள் இருக்க வேண்டும் என்று ஐ.நா. சபையே சொல்லியிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் நடைமுறையில் இருப்பது 150 பேர் கூட இல்லை.

எனவே, காவல்துறையில் அதிக எண்ணிக்கையில் காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. காலிப் பணியிடங்கள் இருக்கின்ற காரணத்தாலேயே காவலர்களுக்கு ஓய்வு கிடைக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமை ஓய்வுகூட அவர்களுக்குக் கிடைப்பதில்லை. எனவே, வாரம்தோறும் அவர்களுக்கு ஒரு நாள் கட்டாயம் விடுப்பு விட வேண்டும் என்றால், காவல்துறையில் இருக்கும் காலிப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்பட வேண்டும். அப்படி நிரப்புவதற்கு, தேர்வாணையம் ஆண்டு தோறும் காவலர் தேர்வுக்கான அட்டவணையை வெளியிட வேண்டும்.

காவல்துறையில் பதவி உயர்வு மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. பதவி உயர்வில் முறைகேடு நடக்காமல் சீர்படுத்தி, அவரவர் தகுதியின் அடிப்படையில் உரிய காலத்தில் அவர்களுக்குப் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். 1999-2000ஆம் ஆண்டில் புதிதாக உதவி ஆய்வாளர்களாக பணியில் சேர்ந்தவர்கள், அதிலிருந்து ஆய்வாளர்களாக வந்தவர்கள், அதற்கும் மேல் பொறுப்பான துணை கண்காணிப்பாளர் பதவிகளுக்குச் செல்ல முடியாமல் கிட்டதட்ட 500க்கும் மேற்பட்டோர் காத்துக் கிடக்கின்றனர்.

காவல்துறையில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு முதலமைச்சர் பதக்கம் வழங்குகிறார். அந்தப் பதக்கம் வழங்குகிற நிகழ்வே நடக்காமல் இருக்கிறது. காரணம் காவல்துறையில் சில நிகழ்வுகள் முறைப்படுத்தப்படாமலேயே இருக்கின்றன. காவல்துறையினுடைய உழைப்பு – கண்காணிப்பு இல்லாமல் இருக்கிறது. சென்னை ஆவடி காவல் ஆணையரகம் இருக்கிறது. ஆறு மாதமாக 2ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு உணவுப்படி கொடுக்கப்படவில்லை. அந்தக் காவலர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர். இதில் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்த வேண்டும். காவல்துறையில் பணி நியமனம், பதவி உயர்வு போன்றவற்றில் அரசு உரிய கண்காணிப்பும், கவனமும் செலுத்த வேண்டும்.

தீயணைப்புத் துறையில் பெண்களும் பணியாற்றலாம் என்ற முதலமைச்சரின் அறிவிப்பை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பெருமையாகப் பார்க்கிறது. பெண்களுக்கான முன்னுரிமையில் இந்த அரசு முதல் வரிசையில் இருக்கிறது.

அதேநேரத்தில் காவல்துறையில் உயர் அதிகாரிகளாக இருக்கின்ற பெண்களுக்கும் பணியிடங்களில் மிகப்பெரிய நெருக்கடி இருக்கிறது. ஆணாதிக்க சமுதாயம் நிலவிக்கொண்டுதான் இருக்கிறது. ஆணாதிக்க சக்திகளுக்கு முன்னால் உயர்அதிகாரியாக இருந்தாலும், அவர்கள் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். பெண் காவலர்களாக இருந்தாலும் பெண் அதிகாரிகளாக இருந்தாலும், அவர்களுக்கான கோரிக்கைகளை, குறைகளைக் கேட்பதற்கென்று ஒரு தனி வாரியம் அமைக்கப்பட வேண்டும். அவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

சமவேலைக்கு சம ஊதியம்

சம வேலைக்கு சம ஊதியம் என்று அரசியலமைப்புச் சட்டம் சொல்லி இருக்கிறது. குறைந்தபட்ச ஊதியச் சட்டம் சொல்லி இருக்கிறது. கேரள மாநிலத்தில் காவலர்களுக்கு 33ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்குகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் வெறும் 18,200 ரூபாய் வழங்குகிறார்கள். தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 25ஆயிரம் ரூபாய் வழங்குவோம் என்று சொல்லிவிட்டீர்கள். குறைந்தபட்ச ஊதியச்சட்டத்தின் படி இல்லாவிட்டாலும், உங்களுடைய வாக்குறுதியின்படியாவது காவலர்களுக்கு ஊதியத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

காவல்துறையினருக்கு தீபாவளியும் கிடையாது, பொங்கலும் கிடையாது. நெருக்கடியான நேரத்தில் பண்டிகைக் காலங்களில் காவலர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கப்பட வேண்டும். காவலர்களுக்கென்று காப்பீடு, மருத்துவ உதவிகள் வைத்திருக்கிறீர்கள், ஆனால், காவல்துறைக்கென்று தனியே ஒரு மருத்துவமனையை உருவாக்கித் தரவேண்டும்.” – இவ்வாறு க.மாரிமுத்து எம்.எல்.ஏ. பேசினார்.

தொகுப்பு: கதிரவன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button