
பாடப்புத்தகங்களின் காவிமயமாக்கல் தொடர்ந்து தீவிரமடைகிறது.
நீட் தேர்வுக்கான வினாத்தாள் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டதைக் கண்டித்து, ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய மாணவர்களை கண்மூடித்தனமான தடியடி, கண்ணீர்ப் புகைக் குண்டு மூலம் ஒடுக்க ஒன்றிய அரசு முயன்றது. அதனைக் கண்டித்து நாடுமுழுக்க மக்கள் அணிதிரண்டனர். வேறு விளைவுகளுக்கு இட்டுச் சென்றுவிடக்கூடாது என்ற அச்சத்தில், வழியேதும் இல்லாமல் கல்வி அமைச்சரைப் பதவி விலகச் செய்தது மோடி அரசு.
மழலையர் பள்ளி முதல் முனைவர் பட்டம் (PhD) வரை, இந்தியக் குழந்தைகள் என்ன கற்க வேண்டும் என்பதை உண்மையில் தீர்மானிப்பது யார்?
1968ல் முதலாவது கல்விக் கொள்கை, 1986ல் இரண்டாவது கல்விக் கொள்கை அடிப்படையில் பாடத்திட்டங்கள் நிச்சயிக்கப்பட்டன. பின்னர் அறிவியல் முன்னேற்றங்களை உள்ளடக்கி 1992ல் பாடத்திட்டங்கள் மேம்படுத்தப்பட்டன.
34 ஆண்டுகளுக்குப் பின்னர், 2020ம் ஆண்டில் பாரதிய ஜனதா, புதிய தேசிய கல்விக் கொள்கையை (NEP) செயல்படுத்தியது.
“இந்திய அறிவு மரபுகள்”, “பண்பாட்டு வேர்கள்”, “மதிப்புகளை அடிப்படையாகக் கொண்ட கல்வி” போன்ற சொற்கள் திட்டமிட்டே பரந்த பொருளில் பயன்படுத்தப்பட்டன. ஆனால், அவற்றை வகுப்பறை நடைமுறையாக மாற்றும் பொறுப்பு, குஜராத் கேடர் ஐஏஎஸ் அதிகாரியான அனிதா கார்வால் போன்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
குஜராத் முதல்வராக இருந்தபோது நரேந்திர மோடியுடன் கார்வால் நெருக்கமாகப் பணியாற்றியவர். பின்னர் சிபிஎஸ்இ (CBSE) தலைவர் மற்றும் பள்ளிக் கல்வித் துறைச் செயலாளராகவும் இருந்தார்.
ஆர்.எஸ்.எஸ். தொடர்புடைய வித்யா பாரதி போன்ற அமைப்புகள் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்த நிலைப்பாடுகளுடன் ஒத்துப்போகிற வகையில் தேசியக் கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.
கல்வி ஆய்வு, பயிற்சிக்கான தேசியக் குழு (NCERT) பாடப்புத்தகத் திருத்தக் குழுக்களில் சங் பரிவாரத்தைச் சேர்ந்த அகில பாரதிய ராஷ்ட்ரிய ஷைக்ஷிக் மகாசங்கத்தின் முன்னாள் தேசியத் தலைவர், சமஸ்கிருத பாரதி அமைப்பின் செயற்குழுத் தலைவர் போன்றோர் இடம்பெற்றிருந்தனர்.
இந்தக் குழு பாடத்திட்டக் கட்டமைப்பை இந்துத்துவ நோக்கங்களுக்கேற்ப மாற்றியமைத்தது.
ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில், டெல்லி சுல்தான்கள் மற்றும் முகலாயர்கள் குறித்த இடைக்கால இந்திய வரலாறு நீக்கப்பட்டு, மௌரியர்கள், சுங்கர்கள், சாத்தவாகனர்கள், குப்தர்கள் ஆகியோருக்கு அதிக இடம் ஒதுக்கப்பட்டது. எட்டாம் வகுப்பில் இருந்த முகலாயப் பேரரசின் வீழ்ச்சி மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டின் பிராந்திய அரசுகள் பற்றிய ஒரு முழு அத்தியாயம் நீக்கப்பட்டது. மாணவர்கள் மீதான கல்விச் சுமையை இறக்குவதற்காக, பாடங்களை எடுத்துவிட்டதாகக் கூறப்பட்டது. இதற்கு “பகுத்தறிவாக்கம்” (Rationalisation) என்று விளக்கம் வேறு கொடுத்தார்கள்.
அதே நேரத்தில், அறிவியல் பாடப்புத்தகங்களில் ஆயுர்வேதத்தைப் பண்டைய இந்திய அறிவியல் மரபாக விளக்கும் ஒரு முழு அத்தியாயம் சேர்க்கப்பட்டது.
தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது மற்றும் இந்திய அறிவு மரபுகளை ஒருங்கிணைப்பது குறித்த ஒரு மாநாடு பெங்களூரில் 2024ம் ஆண்டில் நடத்தப்பட்டது. அதில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பங்கேற்றார்.
அப்போது அவர் பாரதிய சிக்ஸன் மண்டல அமைப்பின் புதிய இணையதளத்தைத் தொடங்கி வைத்து, அந்த அமைப்பின் பணியை “நாகரிக மறுமலர்ச்சிப் பணியில் ஒரு பங்கேற்பு” என்று வர்ணித்தார். இதன் மூலம், அரசின் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் ஒரு தனியார் கருத்தியல் அமைப்பு, வெளிப்படையாகப் பங்கேற்கிறது.
இந்த மாற்றங்கள் தனிப்பட்ட சம்பவங்களல்ல; அவை ஒரு திட்டமிடப்பட்டு கட்டமைக்கப்பட்டவை. ஒருபக்கம், தற்போதைய பாடத்திட்டத்தை வெள்ளைக்காரன் மெக்காலே வடிவமைத்தது, அடிமைக்காலம், கிறித்தவர் எழுதியது என்றெல்லாம் இகழ்வார்கள். “இந்திய நாகரிகத்தின் மீட்பு” குறித்து பேசிக்கொண்டு இருந்தார்கள்.
இப்போது, சங்பரிவார நிறுவனங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் யுஜிசி (UGC) நியமனங்கள் வழியாக தமக்கேற்ப பாடத்திட்டத்தை எழுதுவதற்கு வழிவகைகளை உறுதிசெய்தல், இவையனைத்தையும் ஒன்றிணைந்து இந்துத்துவ திட்டத்தை பாடங்களாக்கி இளைய தலைமுறையைப் பயிற்றுவித்தல் என ஆர்எஸ்எஸ் திட்டம் படிப்படியாக நிறைவேற்றப்படுகிறது.
கல்வி நிறுவனங்கள் கருத்தியல் ஆதிக்கத்திற்குள் இழுக்கப்படுகின்றன.
சுதந்திரத்திற்குப் பிறகு ஒவ்வொரு அரசும் NCERT பாடப்புத்தகங்களில் மாற்றங்களைச் செய்துள்ளனதான். அதனால் அரசியல் நோக்கம் என்ற குற்றச்சாட்டு புதியதல்ல.
ஆனால், ஆர்எஸ்எஸ் என்னும் ஒரு கருத்தியல் அமைப்பின் தலைமை, அரசின் கல்விக் கொள்கையை தன்வயப்படுத்தி, இந்திய வரலாற்றைச் சிதைத்து, தனது இந்துத்துவ நோக்கத்துக்கேற்ப திரித்து, குழந்தைப்பருவம் முதல் அதனையே போதித்து, பிஞ்சு நெஞ்சங்களில் நஞ்சை விதைக்கும் பாதகச் செயலை துவங்குவது இந்தச் சூழலில் புதிய அம்சமாகும்.
NCERT இணையதளத்தில் பாடப்புத்தகக் குழுக்களின் உறுப்பினர் பட்டியல்கள் பொதுமக்கள் பார்வைக்கு உள்ளன. அமைச்சர்களின் முகங்களை உற்றுநோக்கும் அதே அக்கறையுடன், அந்தக் குழுக்களில் இடம்பெற்றுள்ள பெயர்களையும், அவர்களுடைய அமைப்புச் சார்புகளையும் குடிமக்கள் ஆராயத் தொடங்கினால், ஆர்எஸ்எஸ் செய்திருக்கும் சதியை உணர முடியும்.