
தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ஆகஸ்ட் 4ஆம் தேதி காலை கைது செய்யப்பட்டார்.
கர்நாடகத்திலிருந்து காவேரி நீரை உரிய நேரத்தில் பெறுவதில் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று, தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியிருந்தார்.
அந்தப் பேச்சில் இடம்பெற்ற சில வார்த்தைகள் இரட்டை அர்த்தம் தருவதாகவும், பெண்களின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் அமைந்ததாகவும் கூறி, அவர் மீது ஒன்பது பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் முன்னாள் துணை முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான அவர் பொதுவெளியில் கண்ணியக்குறைவாகப் பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதில் இரண்டாவது கருத்து இல்லை.
ஆனால், நாகரிகமற்ற மொழியையும், இரட்டை அர்த்த வசனங்களையும், தனிமனித இழிவுபடுத்தலையும் முன்வைத்துப் பேசியவர்களே தமிழ்நாட்டின் பிரபலமான பேச்சாளர்களாக வலம் வந்திருக்கிறார்கள். அன்று பேச்சு காற்றில் கரைந்துவிடும். இன்று காணொளியாகப் பதிவாகி வரலாற்றுச் சான்றாக நிலைத்துவிடுகிறது. கண் இமைக்கும் அசைவு கூட பதிவாகும் காலத்தில், “நான் அப்படிப் பேசவில்லை” என்று மறுப்பதற்கு வாய்ப்பில்லை.
மேடைகளில் பேசப்படும் மொழி மட்டுமல்ல, சமூக வலைத்தளங்களின் மொழியும் நாளுக்கு நாள் நஞ்சேறி வருகிறது. அரசியல் கருத்துக்கு அரசியலாகப் பதில் அளிப்பதற்குப் பதிலாக, பேசக் கூசும் ஆபாசச் சொற்களால் தாக்குவது வழக்கமாகி விட்டது.
அதிலும் பதிவிட்டவர் பெண்ணாக இருந்தால், அவர் வலைதளத்தில் பதிவிடுவதையே கைவிட வேண்டிய அளவுக்கு, பாலியல் இழிவுரைகள் கடும் வன்மத்தோடு பின்னூட்டப்படுகின்றன.
சாதி அரசியல், மத அரசியல், இன அரசியல் சக்திகள் இந்த விஷப் பண்பாட்டை வளர்த்தெடுத்தன. இன்று கம்யூனிஸ்டுகளைத் தவிர, அனேகமாக அனைத்து அரசியல் முகாம்களையும் அந்த நோய் தொற்றியுள்ளது
சட்டப்படி இது குற்றம் தான் என்றாலும், அதனைத் தடுத்து நிறுத்த சட்டத்தின் துணையை நாடாதது, இந்த அநாகரிகத்திற்கு துணிவை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு முடிவு கட்ட வேண்டுமென்றால், தேர்ந்தெடுத்தவர்கள் மீது அல்ல, அனைவர் மீதும் சட்டம் ஒரே அளவில் செயல்பட வேண்டும்.
வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. விசாரணை நடத்தட்டும். தண்டனை வழங்கும் கடமை நீதிமன்றத்தைச் சார்ந்தது.
சட்டத்தை அமல்படுத்தும் முறையும் ஜனநாயகத்தின் அளவுகோலுக்கு உட்பட்டதே.
நீதிமன்றம் பகல் 12 மணி வரை கைது செய்யாமல் இருக்கலாம் என்று பரிந்துரைத்த பின்னரும், அவசர அவசரமாக கைது செய்து டெம்போ டிராவலர் வாகனத்தில் ஏற்றி தஞ்சாவூருக்கு அழைத்துச் சென்றது, சட்டத்தின் வலிமையைவிட அதிகாரத்தின் அவசரத்தையே வெளிப்படுத்தியது.
பின்னர் நீதிமன்றத்தில், “சிறையில் அடைப்பது எங்கள் நோக்கமல்ல; விசாரணைக்காகத்தான் அழைத்துச் செல்கிறோம்” என்று விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு நேர்ந்தது. இது நடவடிக்கையின் அரசியல் முதிர்ச்சியின்மையை வெளிப்படுத்துகிறது.
சட்டப்பேரவை கூடுவதற்கு முந்தைய நாளில், தமிழ்நாட்டின் அரசியல் கவனத்தை முழுவதுமாக எதிர்க்கட்சித் தலைவர் பக்கம் திருப்பிக் கொடுத்திருப்பது, அரசியல் ரீதியாக ஆளுங்கட்சிக்கே பாதகமாக முடியும். இத்தகைய கைதுகள் தமிழ்நாட்டின் அரசியலுக்கு புதியவை அல்ல. திமுக ஆட்சியிலும் இதே போல் நடந்ததுதான்.
1973ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராக இருந்த கே.டி.கே. தங்கமணி அவர்கள், கலைஞர் கருணாநிதியின் ஆட்சியை முசோலினியின் ஆட்சியோடு ஒப்பிட்டுப் பேசினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சென்னையில் கைது செய்யப்பட்டார்.
வசதியான வேனில் அல்ல, இருக்கை கூட சரியாக இல்லாத, பழைய காலத்து மூக்கு வைத்த வைத்த காவல்துறை லாரியில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானைக்கு கொண்டு செல்லப்பட்டு, கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். அன்றைய திமுக அரசு, அந்த நடவடிக்கை நியாயம் என்று தான் சொன்னது!
ஆட்சி மாறுகிறது; அதிகாரத்தின் நடைமுறைகளும், காலனித்துவ காவல் துறையின் கெடுபிடிகளும் மட்டும் மாறாமல் தொடர்கின்றன.
கருத்து வேறுபாட்டை குற்றவியல் வழக்குகளால் கையாளும் போக்கு, அரசியல் நாகரிகத்தை இழிவுபடுத்தும் பேச்சுக் கலாச்சாரம் இரண்டுமே ஜனநாயகத்திற்குத் தீங்கு விளைவிப்பவை.
இரண்டையும் ஒருசேர எதிர்க்கும் அரசியல் பண்பாடே தமிழ்நாட்டுக்குத் தேவை. குற்றத்தைத் தண்டிப்பதைவிட, அதிகாரத்தை வெளிப்படுத்துவதே நோக்கமாகத் தோன்றும் தருணத்தில், சட்டத்தின் மீதான மக்களின் நம்பிக்கை சிதைந்துவிடும்.
ஆட்சிகள் மாறும்; எதிர்க்கட்சியும் ஆளுங்கட்சியாகும். ஆனால், அதிகாரத்தின் ஆவேசத்தைவிட சட்டத்தின் சமநீதியே உயர்ந்தது என்ற அரசியல் நாகரிகம் மட்டும் நிலைத்திருக்க வேண்டும்.
அதுவே ஜனநாயகத்தின் உண்மையான வெற்றி.