கட்டுரைகள்

‘பிரிக்ஸ்’ மாநாடு: மாற்றத்துக்குத் தடையாக மோடி

மே.து.ரா.

வளர்ச்சி அடைந்த ஏழு நாடுகளான பிரான்சு, செர்மனி, இதாலி, சப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா, பின்னர் கனடா ஆகியன 1975-76ஆம் ஆண்டுகளில் ஜி-7 என்ற பெயரில் ஒரு அமைப்பினை உருவாக்கிக் கொண்டன. 1997இல் ரசியா அதில் இணைந்து ஜி-8 என்றானது.

2012 அளவில் உலக உற்பத்தியில் 50.1% பங்கினை இவை கொண்டிருந்தன. இந்த அமைப்பின் அடிப்படை நோக்கம் தங்களுடைய பொருளிய, வணிக, அரசியல் மேலாண்மையை நிலைநிறுத்திக்கொள்வதுதான் என்றாலும் அது வெளிப்படையாகக் கூறப்படவில்லை. கிரீமியா பகுதியை 2014இல் இணைத்துக்கொண்டதால், ரசியா வெளியேற்றப்பட்டு மீண்டும் ஜி-7 ஆனது.

பின்னர் சில நாடுகள், ரசியா இல்லாமல் அய்ரோப்பியச் சிக்கல்களைத் தீர்க்கமுடியாது என விரும்பி அழைத்தும், ரசியா மீண்டும் இணைய விரும்பவில்லை.

இதற்கிடையில், வளர்ந்த நாடுகளோடு இணைந்து வளரும் நாடுகளும் ஜி-20 என்ற பெயரில் ஓர் அமைப்பினை உருவாக்கிக்கொண்டன. இதில் பிரேசில், அர்சென்டினா, மெக்சிகோ, சீனா, இந்தியா, இந்தோனேசியா, தென்கொரியா, சவுதி அரேபியா, துருக்கி, தென்னாப்பிரிக்கா, ஆத்திரேலியா போன்ற நாடுகளுடன் அய்ரோப்பிய, ஆப்பிரிக்க ஒன்றியங்களும் இடம்பெற்றிருந்தன. இவற்றின் பங்களிப்பு உலக உற்பத்தியில் 80%, உலக வணிகத்தில் 75%, மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு இருந்தன.

வளரும் நாடுகளுக்கும் வளர்ந்த நாடுகளுக்குமிடையே இருந்த முரண்கள் வேறு ஒரு தனிப்பட்ட அமைப்பு உருவாகவேண்டும் என்னும் வேண்டலை விரைவுபடுத்திக்கொண்டிருந்தன.

வளர்ந்த நாடுகள் உற்பத்தி நுட்பம், பகிர்தல், வணிகம், நிதி மேலாண்மை, நிதி மாற்றம், உணவுக் காப்பு போன்றவற்றில் தரும் அழுத்தங்களை எதிர்கொள்ள ஓர் அமைப்பு உருவாக வேண்டும் என்னும் சூழ்நிலை இதற்குப் பல்லாண்டுகள் முன்னரே உருவாகியிருந்தது.

இதனை உறுதிப்படுத்த பிரேசில், ரசியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் அடங்கிய ‘பிரிக்’ என்னும் அமைப்பு உருவானது. இதோடு தென்னாப்பிரிக்கா இணைந்து ‘பிரிக்ஸ்’ என்ற பெயர் மாற்றம் கண்டது.

இந்த அய்ந்து நிலையான உறுப்பினர்களுடன், தற்போது முழு உரிமையுடன் எகிப்து, எதியோப்பியா, ஈரான், அரபு அமீரகம், சவுதி அரேபியா, இந்தோனேசியா ஆகிய ஆறு புதிய உறுப்பினர்கள் இணைந்துள்ளனர். மேலும், ஓட்டுரிமை இல்லாத இணை உறுப்பினர்களாக பிலாரஸ், பொலிவியா, கியூபா, கசக்கித்தான், மலேசியா, நைசீரியா, தாய்லாந்து, உகாண்டா, உசுபெகித்தான், வியட்நாம் ஆகியன உள்ளன. வேறு சில நாடுகளும் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன.

‘பிரிக்ஸ்’ அமைப்பு 49.5% மக்கள் தொகையையும் 40% உலக உற்பத்தியையும் கொண்டிருப்பதுடன், உலக வணிகத்தில் 26% அளவை எட்டியுள்ளது. உலக எண்ணெய் உற்பத்தியில் 40% அளவினை இந்த நாடுகளே கொண்டுள்ளன.

வளரும் நாடுகளின் பொருளிய நிலைத்தன்மை, வணிகம், காப்பு, நிதி மேலாண்மை, நிதிப் பகிர்வு ஆகியவற்றை மேம்படுத்துவது இந்த அமைப்பின் நோக்கமாகும்.

மக்கள் தொகை, பொருளுற்பத்தி, வணிகம் ஆகியவற்றில் உயர் நிலையில் இருந்தாலும், ‘பிரிக்ஸ்’ அமைப்பைவிட ஜி-8 நாடுகளின் செல்வாக்குப் பல நிலைகளில் ஓங்கியிருப்பதை மறுப்பதற்கில்லை.

இதற்குப் பல காரணிகள் இருக்கின்றன. உலக நிதிக் கட்டமைப்பு, தொழில் நுட்ப அறிவு, முதலீடு, நாடுகளின் அமெரிக்க டாலர் கையிருப்பு, நுகர்வு ஆகியன அவர்களது கட்டுப்பாட்டை உறுதிப்படுத்திவிடுகின்றன.

எடுத்துக்காட்டாக, உலக நிதியத்தில் ‘பிரிக்ஸ்’ நாடுகளின் வாக்குரிமை 17% மட்டுமே இருக்கிறது. உலக வங்கி போன்றவையும் அவர்களது கையிலேயே இருக்கின்றன.

இவற்றையெல்லாம் மாற்றுவதற்கு அல்லது இதன் எதிர்கொள்வதற்கு ரசியாவும் சீனாவும் பல முன்னெடுப்புகளை மொழிந்துள்ளன. உலக வங்கி, உலக நிதியம் ஆகியவற்றுக்கு மாறாக வளரும் நாடுகள் எளிய முறையில் கடன் பெற வாய்ப்பாக ‘பிரிக்ஸ்’ அமைப்பு ‘புதிய வளர்ச்சி வங்கி’ ஒன்றினை ஏற்படுத்தியுள்ளது. வளரும் நாடுகளில் மேற்கொள்ளவேண்டிய கட்டமைப்புகளுக்கான கடன் உதவியை இந்தப் புதிய வளர்ச்சி வங்கி இப்போது எளிதாக வழங்கி வருகிறது.

இந்த நிலையில்தான், புதுதில்லியில் ‘பிரிக்ஸ்’ அமைப்பின் 18ஆவது உயர்நிலை மாநாடு நிறைவடைந்துள்ளது. இதில் 140 கூறுகளைக் கொண்ட 45 பக்கக் கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பாலத்தீன விடுதலை, மேற்காசிய – நடுவக் கிழக்கு நாடுகளில் அமைதி, வணிக மேம்பாடு, அய்நா காப்பவையில் இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளுக்கு நிலையான இடம், உணவுக் காப்பு உள்ளிட்ட விரிவான உலக எதிர்பார்ப்பு நிலைமைகளை அடக்கியுள்ளது.

ரசியத் தலைவர் புதின், சீனத் தலைவர் சி சின்பிங், இந்திய ஒன்றியத்தின் மோடி உள்ளிட்ட உயர்நிலை அரசுத் தலைவர்கள் கூடித்தான் இத்தகைய கூட்டறிக்கையினை வெளியிடவேண்டும் என்ற நிலையில்லை. மாறாக இந்த நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் அல்லது உயர் அலுவலர்கள் இணைந்து கலந்துரையாடி இதில் கூறப்பட்டுள்ள விவரங்களை அறிக்கையாகக் கொடுத்திருக்க முடியும்.

இவற்றுக்கும் மேலாக, இம்மாநாட்டில் கலந்துகொண்ட தலைவர்கள் கூட்டாக ஒரே மேடையில் தோன்றியது மட்டுமல்லாமல், தனித்தனியே இடையில் பேச்சுக்களை நடத்திப் பல வணிகத் திட்ட உடன்படிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அந்த வகையில் இந்த மாநாடு பயனாகத்தான் அமைந்திருந்தது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஆயினும் இன்று அமெரிக்கத் தலைவர் டிரம்ப் மேற்கொண்டுள்ள கடுமையான வணிக நடவடிக்கைகள், தடை ஆணைகள், போர் முயற்சிகள், வரி உயர்த்தல்கள் ஆகியன உலக அமைதியைப் பாழாக்கியுள்ளன.

இவற்றில், வெளிப்படையாக ஈரான் போர் குறித்த சிக்கலில் அமெரிக்கா, இசுரேல் ஆகியவற்றின் பெயரைக் குறிப்பிடக்கூட இந்தியா விரும்பவில்லை. அமெரிக்காவைப் பகைத்துக்கொள்ளக்கூடாது என்ற எண்ணம் மட்டுமின்றி, அதைக் கண்டு அச்சப்படும் நிலையும் இருப்பதாகவே தெரிகிறது.

அமெரிக்கா மற்றும் அதற்கு ஒத்துழைக்கும் மேலை நாடுகளின் பிடியினைத் தளர்த்த மட்டுமல்லாமல் தகர்க்கக் கூடிய திட்டங்களை வரையறுக்கவேண்டிய நிலையில்தான் ‘பிரிக்ஸ்’ இருக்கிறது.

இதைத்தான் சீன, ரசிய நாடுகள் எதிர்பார்க்கின்றன. இதற்கு இந்தியாவின் ஒத்துழைப்புப் பெருமளவில் இல்லை என்றே கூறலாம். அதனால்தான், பட்டும் படாமலும், தெரிந்தும் தெரியாமலும், கூறியும் கூறாமலும், குறித்த சொற்களில் அல்லாமல், குழப்பச் சொற்களில் கூட்டறிக்கையின் வரிகள் அமைந்திருக்கின்றன.

மாநாட்டில் பேசிய மோடி இந்த அமைப்பு யாருக்கும் எதிரானதல்ல என்பதையே திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தார்.

நாடுகளுக்கிடையேயான வணிகத்தில் அமெரிக்க டாலரின் பங்களிப்பைக் குறைத்தல், நாடுகளின் கையிருப்பில் அமெரிக்க டாலரின் அளவைக் குறைத்தல், நாடுகளுக்கிடையே பணப் பகிர்தலில் மேலை நாடுகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்விப்ட் போன்ற இணைப்பகத்திற்கு மாற்று நுட்பத்தினை அறிமுகப்படுத்துதல், வளரும், வளர்ச்சி அடையாத நாடுகளுக்கிடையேயான வணிக, பொருளிய, அரசியல் உறவுகளை மேம்படுத்தும் வகையில் திட்டமிடுதல், உணவு காப்பு, புதிய நுட்பப் பயன்பாட்டுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், இறக்குமதி ஏற்றுமதி வணிகத்திற்கு இடையூறாக உலக வணிக விதிகளுக்கு மாறாக வரிகளை உயர்த்தும் நடவடிக்கைகள் போன்ற பல சிக்கல்கள் தொடர்கின்றன. இவற்றை எதிர்கொள்வதற்கு ஒன்றுபட்ட கருத்துக்கள் இந்த மாநாட்டில் உருவானதாகத் தெரியவில்லை. ‘பிரிக்ஸ்’ அமைப்பில் சீனாவின் பங்களிப்பு மிகுந்திருப்பது உண்மைதான். உற்பத்தி, வணிகம், நுட்பம் ஆகியவற்றில் சீனா முன்னிலையில் இருக்கிறது.

அமெரிக்க டாலருடைய பயன்பாட்டைக் குறைக்கின்ற அளவில் ‘பிரிக்ஸ்’ தனக்கென ஒரு தனிப்பட்ட மாற்று நாணயத்தை உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்ட போது இந்தியா அதனை வரவேற்கவில்லை. ஆனாலும், அந்தந்த நாடுகளின் பணத்திலேயே ஏற்றுமதி இறக்குமதிக்கான தொகையினைச் செலுத்துவதற்கான செயல்திட்டம் தற்போது உருவாகி வருகிறது.

ரசியா, சீனா, இந்தியா, சவூதி அரேபியா போன்ற பல நாடுகள் இந்த நடைமுறையைச் செயல்படுத்தி வருகின்றன. இதனால் அமெரிக்க டாலரின் பயன்பாடு குறைவதால் டிரம்ப் சினம் கொண்டுள்ளார். இதற்காகவே இந்த நாடுகளுக்கான இறக்குமதி வரியினை உயர்த்தப் போவதாக அச்சுறுத்தியும் வருகிறார். இந்த அச்சுறுத்தலுக்கு ஏற்ற வகையில் முகம் கொடுக்க இந்தியா முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்கிறது.

இந்தியப் பொருள்களுக்கான இறக்குமதி வரியை 100% 200% என்ற அளவில் டிரம்ப் உயர்த்தியபோது சீனாவும் ரசியாவும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருள்களை வாங்கிக்கொள்ள விரும்புவதாக வெளிப்படையாகவே தெரிவித்தன. ஆனாலும், இந்தியா அதில் ஆர்வம் காட்டவில்லை. அமெரிக்காவைப் பகைத்துக்கொள்ள விரும்பவில்லை என்றுதான் கூறப்பட்டது.

உண்மையில் சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களின் அளவைவிட ஏழு பங்கு குறைவாகவே இந்தியாவிலிருந்து சீனாவுக்கு ஏற்றுமதியாகிறது. இந்த இடைவெளியினைக் குறைக்கும் வாய்ப்புகள் உடனடியாக இல்லை.

இந்த நிலையில், அமெரிக்கா இறக்குமதிக்கான வரிகளை உயர்த்தியபோது, அமெரிக்க அச்சத்தினால் சீனாவுக்கான ஏற்றுமதியை மேம்படுத்த இந்தியா முன்வரவில்லை. மேலும், அமெரிக்காவைப் பகைத்துக்கொண்டு எத்தகைய நடவடிக்கையும் எடுக்க இந்திய ஒன்றியம் தயங்கி வருகிறது.

இந்திய – சீன எல்லைப் பதட்டத்தில் ஒரு தீர்வு ஏற்பட்டால் மட்டுமே நல்லுறவு மேம்படும் என இந்தியா கருதுகிறது. எல்லையில் தற்போது போர்ச் சூழல் இல்லாததால், அதை உறுதிப்படுத்திக்கொண்டு நல்லுறவை மேம்படுத்த முடியும் எனச் சீனா நம்புகிறது. இதனால் இரு நாடுகளுக்குமிடையே அரசியல் உறவு சீராக இருந்தாலும், நுட்பப் பகிர்தல், முதலீடு, இந்தியாவில் தொழில் தொடங்குதல், இந்தியக் கட்டமைப்பில் பங்களிப்பு போன்றவை பெருமளவில் முன்னேற்றம் காணவில்லை.

மேலும், ‘பிரிக்ஸ்’ வழியாக அரசியல் செல்வாக்குப் பெறுவதில் இருக்கும் ஆர்வம், இந்திய வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் அமெரிக்க நடவடிக்கைகளை எதிர்கொள்வதில் இருப்பதாகத் தெரியவில்லை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button