ShortNoticeஇந்தியாதமிழகம்

ஆகஸ்ட் 10-ல் நாடு தழுவிய மறியல்: தொழிலாளர்–விவசாயிகள் தேசிய மாநாடு அறைகூவல்

- டி.எம்.மூர்த்தி

ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத, விவசாயி விரோத, கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளுக்கு எதிராக தொழிலாளர்கள்– விவசாயிகள் இணைந்த போராட்டங்களை நாடு முழுவதும் தீவிரப்படுத்த, மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாயிகள் ஐக்கிய முன்னணி (எஸ்.கே.எம்.) இணைந்து நடத்திய தேசிய மாநாடு முடிவு செய்துள்ளது.

மத்திய தொழிற்சங்கங்களும், பல்வேறு துறைத் தொழிற்சங்க சம்மேளனங்களும், விவசாயிகள் ஐக்கிய முன்னணியும் இணைந்து ஜூலை 29ம் தேதியன்று புதுடெல்லி தல்கதோரா அரங்கில் தேசிய மாநாட்டை நடத்தின.

ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், மாணவர்கள், அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்கள், வங்கி, காப்பீடு, போக்குவரத்து, அமைப்புசாரா தொழிலாளர்கள், கிக் மற்றும் தளத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பங்கேற்றனர்.

மாநாட்டில் உரையாற்றிய ஏஐடியுசி பொதுச்செயலாளர் அமர்ஜீத் கவுர் உள்ளிட்ட தலைவர்கள், நாட்டில் அதிகரித்து வரும் வேலையின்மை, விலைவாசி உயர்வு, பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பொதுச் சேவைகளின் தனியார்மயமாக்கல், தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் (லேபர் கோடுகள்) மூலம் தொழிலாளர் உரிமைகள் பறிக்கப்படுவது, விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது, வெளிநாட்டு வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் விவசாயம் மற்றும் தொழில்துறை பாதிக்கப்படுவது, ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள், மத மற்றும் சாதி அடிப்படையிலான பிளவுவாத அரசியல் ஆகியவற்றை கடுமையாகக் கண்டித்தனர்.

தொழிலாளர்களும் விவசாயிகளும் தங்களது தனித்தனி அமைப்புகள் மூலம் மட்டும் போராடுவது போதாது; அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலமே அரசியலமைப்புச் சட்டத்தையும், மக்களின் வாழ்வாதாரத்தையும், நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயகக் கட்டமைப்பையும் பாதுகாக்க முடியும் என்று மாநாடு வலியுறுத்தியது.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில்,

  • நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளையும் (Labour Codes) ரத்து செய்ய வேண்டும்.
  • தொழிற்சங்க உரிமைகளுக்கு முழு சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
  • தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.
  • அகவிலைப்படியுடன் இணைக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியம், மாதம் ரூ. 42,000 என நிர்ணயிக்க வேண்டும்.
  • சி2 + 50% (C2+50%) அடிப்படையில் குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) சட்டப்பூர்வமாக உறுதி செய்து, அரசே முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும்.
  • விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு பாதகமான வெளிநாட்டு வர்த்தக ஒப்பந்தங்களை (FTA) கைவிட வேண்டும்.
  • தனியார்மயமாக்கலையும் தேசிய சொத்து பணமாக்கல் திட்டச் செயல்பாட்டையும் நிறுத்த வேண்டும்.
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை (MGNREGA) மீட்டெடுத்து வலுப்படுத்த வேண்டும்.
  • சமூகப் பாதுகாப்பை விரிவுபடுத்த வேண்டும்.
  • வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
  • பொதுக் கல்வி மற்றும் பொதுச் சுகாதாரத்தை வலுப்படுத்த வேண்டும்.
  • பொது விநியோக அமைப்பைப் பாதுகாக்க வேண்டும்.
  • அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும்.
  • அரசியலமைப்புச் சட்ட மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்

ஆகிய கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் தொழிலாளர்கள்–விவசாயிகள் இணைந்த போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்த மாநாடு முடிவு செய்தது.

அதன் முதல் கட்டமாக ஆகஸ்ட் 10-ஆம் தேதி “வெள்ளையனே வெளியேறு” இயக்க நாளை முன்னிட்டு மாவட்ட மற்றும் மாநிலத் தலைமையகங்களில் ஆர்ப்பாட்டங்கள், ரயில் மறியல், சாலை மறியல், பணியிடப் போராட்டங்கள், மனிதச் சங்கிலி உள்ளிட்ட மக்கள் திரள் போராட்டங்களை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது.

மாநில அளவிலான கூட்டு மாநாடுகள், பெருந்திரள் அமர்வு உள்ளிட்ட நாடு தழுவிய விரிவான நேரடி போராட்டங்களையும் முன்னெடுக்க மாநாடு தீர்மானித்தது.

“தொழிலாளர்கள்–விவசாயிகள் ஒற்றுமையே மக்கள் விரோதக் கொள்கைகளை முறியடிக்கும் வலிமையான ஆயுதம்” என்ற உறுதிமொழியுடன் மாநாடு நிறைவடைந்தது.

“ஒன்றுபடுவோம்… அமைப்பாகத் திரள்வோம்… போராடுவோம்… வெற்றி பெறுவோம்!” என்ற முழக்கம் அரங்கம் முழுவதும் எதிரொலித்தது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button