காவிரியில் தமிழ்நாட்டின் உரிமை மதிக்கப்பட வேண்டும்! அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்த வேண்டும்
மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்

மேகதாது அணை, காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவது, அனைத்துக் கட்சிக் கூட்டம், விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு உள்ளிட்டவை குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் பேசினார். அவை வருமாறு:
காவிரியில் தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டதற்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய, கர்நாடகா முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது ஏற்புடையதல்ல. இந்த முடிவு சட்டத்தின் ஆட்சியை சிதைக்கக் கூடியது. சட்டத்தின் மீதான நம்பகத் தன்மையை சீர்குலைக்கக் கூடியது.
ஏற்கெனவே இதுபோன்று பல வழக்குகள் – நீதிமன்றத்தின் தீர்ப்புகள் இருக்கின்றன. காவிரி மேலாண்மை வாரியத்தின் வழிகாட்டுதலும், தீர்ப்பும் இருக்கின்றன. இவை யாவும்- தமிழ்நாட்டிற்கு உரிய நீரைத் தரவேண்டும் என்றுதான் கூறுகின்றன.
ஆனால், இன்றைக்கு நீதிமன்றத் தீர்ப்பை எளிதில் கடந்து செல்கிற, காவிரி மேலாண்மை வாரியத்தின் வழிகாட்டுதலை செயல்படுத்த மறுக்கிற முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபடுவது ஏற்புடையதல்ல.
தற்போது இயற்கையின் கருணையால் கர்நாடகாவில் மழை பெய்கிறது. இதனால் அணைகளுக்கு ஆபத்து என்பதால் தண்ணீரைத் திறந்து விடுகிறார்கள். இது தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்று அல்ல; நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை ஏற்று அல்ல.
கர்நாடக அணைகளில் போதுமான அளவு தண்ணீர் இருக்கிறபோதே, இல்லை என்கிற கர்நாடக அரசின் வாதங்கள் ஏற்புடையதல்ல.
தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீர் – நெருக்கடிக் காலங்களில் – நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி வழங்க வேண்டும் என்பதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக இருக்கிறது.
கர்நாடகாவில் நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டம் போல் தமிழ்நாட்டிலும் அனைத்துக்கட்சிக் கூட்டத்தை முதலமைச்சர் விஜய் கூட்ட வேண்டும். அதில் ஒருமித்த கருத்து வராது – எனவே, நாங்கள் கூட்டவில்லை என்று சொல்லப்படும் கருத்து ஏற்புடையதல்ல.
தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் கிடைக்க வேண்டும்; நீதிமன்றத் தீர்ப்பை அமலாக்க வேண்டும் என்பதில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக்கட்சிகளும் ஒரே கருத்தில் இருக்கின்றன.
எனவே, தமிழ்நாடும் ஓரணியில் ஒற்றுமையாக இருக்கிறது என்பதை நாம் உணர்த்துவதற்கு, சட்டத்தின்படியான நமக்கு உரிய நீரைப் பெறுவதற்கு அனைத்துக்கட்சிக் கூட்டத்தை முதலமைச்சர் உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
- கேள்வி: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி நதிநீர் பெறுவதில் தவெக அரசின் செயல்பாடு சரியாக இல்லை. அவர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். உங்கள் கட்சி சார்பாக எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்: முதலமைச்சர் அனைத்துக்கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும். காவிரி நதிநீர்ப் பிரச்சினையில் எப்போதுமே வஞ்சிப்பதும், ஏமாற்றுவதும் கர்நாடக அரசுதான். எனவே, அது திசைதிரும்பிவிடக் கூடாது. தமிழக அரசாங்கத்தினுடைய முயற்சிகள் போதுமானதல்ல. எதிர்க்கட்சிகளை- அனைத்துக்கட்சிகளையும் கூட்டி கருத்தறிய வேண்டும். காவிரிப் பிரச்சனை தொடர்பாக பத்திரிகையாளர்கள், கேள்விகள் எழுப்பும்பொழுது சம்பந்தப்பட்ட அமைச்சர் பதில் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். அமைச்சர் அமைதி காப்பது நல்லதல்ல. அது ஏற்புடையதும் அல்ல. மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள், மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்பது ஜனநாயகத்தில் தவிர்க்கவொண்ணாத விதி.
- கேள்வி: கர்நாடக மாநிலத்தில் கட்சிகள் போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால் அந்த அளவில் தமிழ்நாட்டில் நடத்துவதில்லையே?
பதில்: இல்லை. நாமும் போராட்டம் நடத்துகிறோம். நாம் தேவைக்காகப் போராடுகிறோம். அங்கு தேவைக்கு அதிகமாகவே இருக்கிறது. எனவேதான் ஆபத்து ஏற்படும் என்பதற்காக இப்பொழுது திறந்து விடுகிறார்கள். இரண்டு நாட்களில் அணைகள் நிரம்ப முடியாது அல்லவா? அப்படி என்றால், ஏற்கெனவே, 10 தினங்கள், 20 தினங்களுக்கு முன்பாகச் சொன்னது பொய். எனவே, இதுபோன்ற விஷயங்களில் கர்நாடக அரசு பொய்ச் சொல்லக் கூடாது.
இங்கு தண்ணீருக்காக ஏங்குவது சொந்த சகோதரர்கள். நாம் தண்ணீர் கேட்பது நம் சொந்த சகோதரர்களிடம். எனவே, இயற்கை யாருக்கும் சொந்தமானது அல்ல என்று சொன்னது மிக நியாயமானது. அது மார்க்ஸ் சொன்னது. இயற்கை யாருக்கும் சொந்தமல்ல, அடுத்தடுத்த தலைமுறைக்கானது என்றார் மார்க்ஸ். இதை பாதுகாத்து அடுத்தடுத்த தலைமுறைக்கு கைமாற்ற வேண்டும் என்பது மார்க்ஸ் சொன்ன வார்த்தை.
பரவாயில்லை. கர்நாடக முதலமைச்சர் நல்ல வார்த்தையை சொல்லி இருக்கிறார். யாருக்கும் சொந்தமில்லை என்றால், நீரைப் பகிர்ந்து கொடுங்கள். சட்டப்படி நடந்துகொள்ளுங்கள். இதைத்தான் கர்நாடக அரசுக்கு நாங்கள் வலியுறுத்துகின்றோம்.
- கேள்வி: கர்நாடகாவில் தேசிய கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. தமிழ்நாட்டுக்கு வந்த ராகுல் காந்தி காவிரி பற்றி எதுவும் பேசவில்லையே?
பதில்: இதை காங்கிரஸ் தலைவர்களிடம் கேட்டீர்கள் என்றால், முழு விவரங்களை அவர்கள் அளிப்பார்கள். காங்கிரஸ், ராகுல் காந்தியை விமர்சிப்பது என்ற பெயரில், பாஜகவை ஆதரித்துவிடக் கூடாது. பாஜக அரசியல் சாசன நெறிகளை மீறுகிறது. நாடாளுமன்ற ஜனநாயகத்தை நெருக்கடிக்கு உள்ளாக்குகிறது. மதச்சார்பின்மையைச் சிதைக்கிறது. உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் நிலவாத ஒற்றுமை இருக்கிறதல்லவா, இந்து, முசுலீம், கிறிஸ்தவர் என்று கூடி வாழ்கிற அந்தக் கூட்டிசைவுக்கு நெருக்கடியைத் தருகிறது. எனவே, எதன்பொருட்டும் பாஜகவை ஆதரித்துவிடக் கூடாது என்கிற அந்தக் கருத்தில் எங்களுக்கு உடன்பாடு உண்டு.
- கேள்வி: கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி, தமிழ்நாட்டிலும் ஆட்சியில் பங்கேற்றுள்ளது. இதனால் காவிரிப் பிரச்சனையில் ராகுல் காந்தி தலையிட்டால் சுமுகமான தீர்வு கிடைக்கும் என்று கூறுகின்றனர். அன்புமணியும் இதைத்தான் கூறிவருகிறார். நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?
பதில்: எங்களைப் பொறுத்தவரை, பேசினால் சுமுகமாகிவிடும், இவர் சொன்னால் நடந்துவிடும் என்பதெல்லாம் அல்ல. சட்டத்துக்கு மேல் உயரமானவர்கள் யாருமல்ல. சட்டத்தின் ஆட்சி முறை நிலவும் நாட்டில், ராகுல் காந்தியாக இருந்தாலும் பிரதமராக இருந்தாலும் சட்டத்துக்குக் கீழ்தான் அனைவரும். சட்டம் யாவற்றுக்கும் மேலானது. எனவே, சட்டப்படி தமிழ்நாட்டுக்கு உரிய நீரைக் கொடுங்கள். நீதிமன்றத் தீர்ப்பின்படி திறந்துவிட வேண்டிய தண்ணீரைத் திறந்து விடுங்கள். இருவரும் பேசினால் தீர்ந்துவிடும். யாரோ ஒருவர் கருணையால் திறந்து விடுவார்கள் என்பதெல்லாம் சரியானதல்ல. காவிரியில் தமிழ்நாட்டின் உரிமை மதிக்கப்பட வேண்டும்.
- கேள்வி: நீதிமன்றத் தீர்ப்புக்கு கட்டுப்படுங்கள் என்று கர்நாடகாவிடம் ராகுல் காந்தி ஏன் சொல்ல மறுக்கிறார்?
பதில்: அவரிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும். சட்டத்தின்படி, நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டிற்கு உரிமையான தண்ணீர் தரப்பட வேண்டும் என்று கேட்கிறோம். காங்கிரஸ் கட்சியினர் ஏன் தயங்குகிறார்கள் என்பதை அவர்களிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும்.
- கேள்வி: மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து இருமாநில முதலமைச்சர்கள் சந்தித்துப் பேச வேண்டுமா?
பதில்: மேகதாது அணை கட்டப்படக் கூடாது, கட்ட முடியாது. அது சட்ட விரோதம். சட்டத்தின் ஆட்சியை சீர்குலைப்பது. இதில் கம்யூனிஸ்ட் கட்சி தெளிவாக இருக்கிறது.
இருமாநில முதலமைச்சர்கள் பேசினால் தீர்ந்துவிடும் என்பதெல்லாம் திசை திருப்புவது. தமிழ்நாட்டுக்கு உரிய சட்டப்படியான நீரைக் கொடுங்கள். நாங்கள் நீர்ப்பிடிப்புப் பகுதியில் வாழவில்லை – தமிழ்நாடு, நீருக்கு ஏங்குகிற மாநிலம். கேரளா போல், ஆந்திரா போல், கர்நாடகா போல் தமிழ்நாடு நீர்ப்பிடிப்பு மாநிலம் அல்ல. டெல்டா தமிழ்நாட்டின் உயிர். எனவே, காவிரி எங்கள் உயிர். காவிரியை யாரும் அணை போட்டுத் தடுக்க முடியாது. தடுத்தால் என்ன ஆகும்? தடுத்துப் பாருங்களேன். கர்நாடக அரசால் இப்போது தண்ணீரை நிறுத்த முடியாது. அணைகள் நிரம்பிவிட்டன. பொங்கி வருகிற காவிரி தமிழ்மண்ணுக்கு வந்தால்தான் காவிரி. தமிழ் மண்ணில் காவிரி கால் பதித்தால்தான் காவிரி முழுப்பொருள்படும். இயற்கை நியதி ஆகட்டும், சட்டப்படி ஆகட்டும்- தமிழ்நாட்டுக்கு காவிரி மிகமிக அவசியம்.
- கேள்வி: விவசாயிகள் போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கின்றனர். அவர்களை முதலமைச்சர் அழைத்துப் பேச வேண்டும் என்று நினைக்கிறீர்களா? உங்களின் கருத்து என்ன?
பதில்: விவசாயிகள் பிரதிநிதிகளை அழைத்து அவர் பேசவேண்டும் என்று நாங்கள் அறிக்கை விட்டிருக்கிறோம்.
விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளுக்காகப் போராடுகிறபொழுது முதலமைச்சர் அந்த பிரதிநிதிகளை அழைத்துப் பேசவேண்டும் என்பதே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அழுத்தமான கருத்து. தொழிலாளர்கள், கூலி மக்கள், ஏழைகள், எளியவர்கள் நிறைந்த தமிழ்நாட்டில், அவர்கள் கோரிக்கைகளுக்காகப் போராடுகிறபொழுது அரசு செவிமடுக்க வேண்டும். முதலமைச்சரையும் அமைச்சர்களையும் சந்திப்பதற்கு வழிமுறைகள் எளிதாக்கப்பட வேண்டும். நம்முடைய நாடு நாடாளுமன்ற ஜனநாயக நாடு. இங்கே மக்களுக்குத்தான் அதிகாரம். எனவே, தங்களால் தெரிவுசெய்யப்பட்ட முதலமைச்சரை, அமைச்சர்களைப் பார்ப்பதற்கு அதிகார வர்க்கத்தின் தடைகள் கூடாது.
முதலமைச்சர் சில இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்வது என்பது வேறு. முதலமைச்சரே பிரதிநிதிகளை அழைத்துப் பேசுவது என்பது வேறு. டாக்டர் கலைஞர் அவ்வாறு செய்வார். எமது நினைவில் வாழ்கிற எம்.ஜி.ஆர். அதை செய்வார். முன்பு இருந்த முதலமைச்சர்கள் பிரதிநிதிகளை அழைத்துப் பேசுவார்கள். அது ஜனநாயகத்துக்கு மிகமிக அவசியம். நல்லதும்கூட. அதை தமிழ்நாடு முதலமைச்சர் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.