அறிக்கைகள்

விவசாயிகளின் எதிர்பார்ப்புகளை கவனத்தில் கொள்ளாத பட்ஜெட்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிக்கை

வேளாண் நிதிநிலை அறிக்கை விவசாயிகளின் தற்போதைய எதிர்பார்ப்பு, தேவை ஆகியவற்றை முழுமையாக கவனத்தில் கொள்ளவில்லை என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

மாண்புமிகு தமிழக வேளாண் துறை அமைச்சர் அவர்கள் 2.30 மணி நேரத்திற்கு மேலாக வேளாண் நிதி நிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்தார். வேளாண் துறையின் உட்பிரிவுத் துறைகளையும் எடுத்துக்கொண்டதால், இது நீண்ட உரையானதே தவிர, எங்கள் சங்கம் சார்பிலும் மற்ற சங்கங்களும்,, சென்னையில் நடந்த மாநில கருத்து கேட்பு கூட்டத்தில் பேசி மனுவாக கொடுத்த உடனடி மற்றும் தொலைநோக்கு திட்டங்கள் பல இடம்பெறவில்லை.

இந்த நிதிநிலை அறிக்கை, தற்போதைய விவசாயிகளின் எதிர்பார்ப்பு, தேவை ஆகியவற்றை முழுமையாக கவனத்தில் கொள்ளவில்லை. பயிர் காப்பீடு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யபபட்டுள்ளது. ஆனால் நாங்கள் கோரிய அரசு பொதுத்துறை காப்பீட்டை அமல்படுத்துவதற்கான திட்டம் இல்லை.

நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தியது இல்லை. மேலும் தென்னக நதி இணைப்பு திட்டத்தை நாங்கள் வலியுறுத்திய சூழலில் கோதாவரி– காவிரி இணைப்பு திட்டத்தை அறிவித்திருப்பதை வரவேற்கிறோம். மாநில உள்ளூர் நதி இணைப்பு என்கிற வகையில் காவேரி குண்டாறு திட்டத்திற்கு 143 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்ததை அதிகப்படுத்தி காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும்.

வெங்காய சேமிப்பு கிடங்குகள் அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது. சிறுதானியங்கள், குறுதானியங்கள்,, மானாவரி பயிர்களுக்கான சிறப்புத் திட்டம் நல்லது. உள்ளூர் அளவில் இதன் விற்பனைக்கான உத்தரவாதம், அரசு கொள்முதல், மானியத் திட்டங்கள் இல்லாதது ஏமாற்றமே.

மலை அடிவார வேளாண் பயிர்களை, மனித உயிர்களை காடுவாழ் உயிரினங்களிலிருந்து பாதுகாப்பதற்கு சூரிய மின்வெளி திட்டம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பயனில்லை. காடு விலங்குகளை அப்புறப்படுத்த விவசாயிகளுக்கு அதிகாரம் வழங்கிட வேண்டும். உயிரிழப்பு, பயிரிழப்பிற்கு உரிய பாதுகாப்பு நிதி வழங்கிட அறிவிப்பு வேண்டும்.

கரும்பு உயர் விளைச்சலுக்கு வீரிய கரணைகள் அரசு விவசாயிகளுக்கு வழங்கிட உள்ளதாம். ஆனால் விலை உயர்வு அறிவிக்கப்படவில்லை. கரும்பு டன்னுக்கு ரூபாய் 4500 வழங்கிட வேண்டும். மூடிய மற்றும் நலிவடைந்த ஆலைகளை செயல்படுத்துவதற்கான தனி சிறப்பு ஆய்வு திட்டங்கள் இல்லை. வாழைக்காக, விவசாயிகளுக்கு உகந்த காப்பீடு திட்டம் இல்லை.வாழை மரங்களுக்கான முட்டு மரத்திற்கு 6 கோடி ரூபாய் ஒதுக்கீடாம்.

தென்னை சாகுபடி குறித்து வலியுறுத்தப்பட்டாலும், விலை உயர்வு மற்றும் தமிழக அரசே உரி தேங்காய்களாக கொள்முதல் செய்வது மற்றும் தேங்காய் எண்ணெய் விற்பனை திட்டங்கள் அறிவிக்க இல்லை.

எல்நினோ தாக்குதல் 12 மாவட்டங்களில் சொல்லப்பட்டாலும், இதன் பாதுகாப்பு சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை. மழை நீர் சேமிப்பு திட்டம், தடுப்பணைகள் அமைக்கும் திட்டம் என்பது இல்லாதது பெரிய ஏமாற்றம். நெல் பருவம் கொள்முதல் தொடங்க உள்ள நேரத்தில் தமிழ்நாடு அரசின் ஊக்கத்தொகை உயர்வு அறிவிப்பு இல்லை.

குறுவை சாகுபடி வருமானம் இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்கு, குறுவை பயிரிட்டு காய்ந்து இழப்பிற்குள்ளான விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வலியுறுத்தி வரும் நிலையில் அதற்கான அறிவிப்புகள் இல்லை. நெல் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால் நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.3,500 ஆக உயர்த்த வேண்டும்.எனவே வேளாண் நிதிநிலை அறிக்கை விவாதத்திற்கு பதிலுரை அளிக்கும் போது இவற்றையும் சேர்த்து தமிழக அரசின் திட்டமாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button