
ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் 15 வரை நாடு முழுவதும் நடைபயண பரப்புரை இயக்கம் நடைபெறுகிறது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு முடிவின்படி நடைபெறும் இந்த இயக்கத்தில், தமிழ்நாடு முழுவதும் தோழர்கள் குழுக்கள் அமைத்து பரப்புரைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுபற்றி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் பேசினார். அவை வருமாறு:
வேலை இல்லாத் திண்டாட்டம், வறுமை, ஏழ்மை, புலம்பெயர்கிற கூலித் தொழிலாளர்களின் கோரிக்கை களை முதன்மைப்படுத்தி பரப்புரை செய்து வருகிறோம். விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், சிறுதொழில், ஒடுக்கப்பட்ட மக்கள், குறிப்பாக தலித் மக்கள், பழங்குடிகள், பெண்கள் – இவர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக நடைபயண பரப்புரை இயக்கம் நடைபெறுகிறது.
உள்ளூரில் பல்வேறு தொழில்கள் நசிந்து வருகின்றன. சிவகாசியில் பட்டாசுத் தொழில் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. பெரும் வருவாயை ஈட்டித்தருகின்ற திருப்பூர் தொழில் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. கரூர், கோவை இப்படி பல்வேறு இடங்களில் சிறுதொழில்கள் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன. நாடு கடந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் நமது சிறுதொழில்மீது பெரும் தாக்குதலைத் தொடுத்திருக்கிறது.
எனவே, சிறு, குறு தொழில்களைக் காக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்மொழிந்தபடி இந்தியா முழுவதும் நடைபெறும் இந்தப் பரப்புரை இயக்கம், தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 15 அன்று தேசியக் கொடியை ஏற்றி பரப்புரை நடைப்பயணம் நிறைவடைகிறது.
பொதுச்செயலாளர் டி.ராஜா, அமர்ஜித் கவுர், ஆனி ராஜா, பாண்டா ஆகிய நான்கு தேசியத் தலைவர்களும் ஆகஸ்ட் 15 அன்று நடைபெறும் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
செப்டம்பர் 1 அன்று எழுச்சிமிகு பிரமாண்டப் பேரணி தலைநகர் டெல்லியில் நடைபெறுகிறது. தமிழ்நாட்டிலிருந்து ஒரு சிறப்பு ரயில் – டெல்டா பகுதியிலிருந்து மட்டும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் பல்வேறு முனைகளிலிருந்து ரயில்களில் தோழர்கள் பயணிக்கத் தயாராக இருக்கின்றனர்.
