
விடுதலைக்குப் பின்னர் இந்திய ஒன்றியம் கண்டிராத வகையில் இளம் தலைமுறையினரின் பெரும் போராட்டம் கரப்பான் பூச்சி ஜனதாக் கட்சி என்ற புதிய அமைப்பின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டிருப்பது புதிய எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.
இளைஞர்கள் மட்டுமல்லாது, மக்களிடையே தோன்றியுள்ள எதிர்ப்புணர்வுகளை மட்டுப்படுத்த நாடாளுமன்றத்தில் தேர்வு முறைகேடுகள் தடுப்புச் சட்ட வரைவினை முன்மொழிந்து சிக்கல்களை மடை மாற்றப் பா.ச.க. முயல்கிறது.
இளைஞர் படையின் நீண்ட, நெடிய, உறுதிமிக்க, பாராட்டத்தக்க, வலிமை கொண்ட போராட்டம் ‘நீட்’ தேர்வு முறைகேடுகளைத் தடுக்கவும் கல்வித் துறை அமைச்சர் விலகவும் எனக் குறுகிய எல்லைகளைக் கொண்டிருந்தாலும், அடுத்த தலைமுறையினர் அனைத்து அவலங்களையும் ஏற்றுக்கொள்ளக்கூடியோராக இல்லை என்பது வெளிப்படையாகிவிட்டது.
ஆங்காங்கு வெவ்வேறு மாநிலங்களில் இந்தப் போராட்டத்தின் பகுதியாக இளைஞர்கள் கிளர்ந்து எழுந்தனர். குறிப்பாக, தமிழ்நாட்டில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலத் தலைமையகமான பாலன் இல்லத்தில் நடந்த போராட்டத்தில் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தோர் கலந்துகொண்டது வரலாற்று நிகழ்வாக அமைந்தது.
நுழைவுத் தேர்வை எதிர்க்கும் தமிழ்நாடு
ஆனால், தமிழ்நாட்டில் நடந்த போராட்டங்களுக்கும் பிற இடங்களில் நடந்தவற்றுக்கும் பெரும் வேறுபாடு இருந்தது. தலைநகர் தில்லியிலும் பிற மாநிலங்களிலும் நடந்த போராட்டங்களில் நுழைவுத் தேர்வு முறைகேடுகளே முன்னிலைப்படுத்தப்பட்டன. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் ‘நீட்’ தேர்வை நீக்கும் போராட்டமாக அது ஆழம் கொண்டிருந்தது.
எளிய மாணவர்களுக்கு எதிராக மருத்துவ நுழைவுத் தேர்வு இருப்பதைப் பிற மாநிலங்கள் இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை என்றே தெரிகிறது. எதிர்ப்புணர்வுகள் இருந்தாலும், அவற்றை முன்னெடுத்துச் செல்லக்கூடிய வகையில் அரசியல் கட்சிகள் அங்கெல்லாம் பங்காற்றவில்லை என்று கூறப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, பா.ச.க. தவிரப் பெரும்பாலும் அனைத்துக் கட்சியினரும் மருத்துவ நுழைவுத் தேர்வை எதிர்க்கும் நிலையினை எடுத்துவருகின்றனர்.
காங்கிரசார் ஆட்சியில் கொண்டுவரப்பட்டிருந்தாலும், பா.ச.க. அதை உச்ச நீதிமன்றத்தின் உதவியோடு பிடித்துக்கொண்டது. இந்த இரண்டு கட்சிகளிலும் இருக்கின்ற சனாதனிகளின் நன்மைக்கு இது உகந்ததாக அமைந்திருப்பது அடிப்படையாகும்.
நோக்கம் நிறைவேறவில்லை
ஒரே ஆண்டில் பல்வேறு வகை மருத்துவக் கல்லூரிகளுக்கான நுழைவுத் தேர்வுகளைத் தனித்தனியே எழுதுவதைத் தவிர்க்கவேண்டும், மருத்துவக் கல்விக்கான சேர்க்கை தகுதி நிலையில் அமையவேண்டும், பெரும் கட்டணங்களைப் பெற்றுக்கொண்டு தகுதி இல்லார்க்கு மருத்துவக் கல்லூரியில் இடம் தருவது தடுக்கப்படவேண்டும் ஆகியனவே நுழைவுத் தேர்வுக்கான அடிப்படைகளாகக் கூறப்படுகின்றன. ஆனால், நடைமுறையில் இவை ஏதும் நிறைவேறவில்லை.
ஒன்றிய அரசின் சிறப்பு வகை மருத்துவக் கல்லூரிகளுக்கும் புதுச்சேரி ஜிப்மர் போன்றவற்றுக்கும் தனியேதான் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல், மருத்துவக் கல்விக்கு அப்பால் உள்ள சில நுட்பப் படிப்புகளுக்கு, தரமான கல்லூரிகளாகத் தங்களைக் கூறிக்கொள்வன தனியே நுழைவுத் தேர்வுகளை நடத்திக்கொண்டுதான் இருக்கின்றன.
இந்தத் தேர்வினை நடத்தும் பொறுப்பு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படுகிறது.
மேலும், அரசு ஒதுக்கீடு, நிறுவன ஒதுக்கீடு என்று தனியே சேர்க்கைகள் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் தனியார் மருத்துவக் கல்லூரி நிறுவனத்தினர் ஒதுக்கீட்டில் கட்டணம் பல லட்சங்களைத் தாண்டுகிறது. நுழைவுத் தேர்வில் மிகு மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், பெருந்தொகை செலவிட இயலாத எளிய மக்கள் மருத்துவக் கல்விக் கனவிலிருந்து வெளியேறுகின்றனர். இதனால், அவர்களைவிடக் குறைந்த மதிப்பெண்கள் பெற்ற செல்வமிக்க மாணவர் பலர் ‘நீட்’ தேர்வினை எழுதிய ஒரே தகுதியை மட்டும் கொண்டு பெரும் தொகை கொடுத்து மருத்துவ இடத்தை விலைக்கு வாங்கிவிடுகின்றனர். மருத்துவக் கல்லூரி இடங்கள் சேர்க்கையின்றி இருந்துவிடக் கூடாது என்னும் பெயரில் பா.ச.க.வின் ஒன்றிய அரசு தேர்ச்சி மதிப்பெண் அளவைக் குறைத்து இதற்கு ஒப்புதல் தருகிறது.
மாணவர் கல்விக்குத் தொடர்பில்லாத தேர்வு முறை
இவற்றுக்கு அப்பால், மருத்துவ நுழைவுத் தேர்வின் வேண்டல் குறித்துப் பல அய்யங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இவை ஒன்றிய அரசின் பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு அமைகின்றன என்று கூறப்படுகிறது. இருப்பினும், மாநில அரசு அல்லது ஒன்றிய அரசு என எந்தப் பாடத்திட்டமாக இருந்தாலும், அவற்றுக்கு அப்பால், தனியே பயிற்சி பெற்றால்தான் ‘நீட்’ தேர்வில் மதிப்பெண்கள் பெற முடியும் என்னும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
வினாக்களுக்கு விடை அளிக்கும் முறை, அதற்கான கால அளவு, கணக்கிடும் திறன், தவறான விடைகளுக்கு மதிப்பெண் கழிப்பு ஆகிய பல கூறுகள் மாநில அரசு மற்றும் ஒன்றிய அரசின் பாடத்திட்டங்களில் இடம்பெறவில்லை. தேர்வு முறைகளும் அத்தகையதாக இல்லை.
நுழைவுத் தேர்வில் இத்தகைய நிலைகளை 16 அகவையே நிறைந்த மாணவர் புதிதாக எதிர்நோக்குகிறார். இதனால், தனிப் பயிற்சி என்பது இரண்டு வகைப் பாடத்திட்டத்தினருக்கும் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. நுழைவுத் தேர்வுக்கான பயிற்சியும் பழக்கமும் மாணவர்களுக்குப் பள்ளிகளில் வழங்கப்படுவதில்லை அல்லது வழங்கப்படாமல் இந்த பயிற்சி நிறுவனங்கள் பார்த்துக்கொள்கின்றன.
அய்.அய்.டி போன்ற உயர்நிலை நிறுவனங்களில்கூட, ஒன்றிய அரசு தனி நுழைவுத் தேர்வுகளை நடத்தினாலும் அங்கு மாணவர்கள் வழக்கமான பள்ளிப் பாடங்களைப் படிக்காமல், நுழைவுத் தேர்வினை மட்டுமே மனதில் கொண்டு பயிற்சி பெறுகின்றனர். இதனால், அடிப்படைகள் சிலவற்றை அறியாமல், படிப்பில் சேர்ந்த பிறகு தடைகளையும் சிக்கல்களையும் மனச்சுமைகளையும் எதிர்கொள்கின்றனர். பிற உயர் நிறுவனங்களில் இல்லாத தற்கொலைகளும் அவ்வப்போது நிகழ்கின்றன. அய்.அய்.டி. மாணவர் சேர்க்கையில் 10, 12ஆம் வகுப்பு மதிப்பெண்களையும் கணக்கில் கொள்ளலாம் என்றவொரு திட்டம் சில ஆண்டுகளுக்கு முன் உருவானபோது, பயிற்சி நடுவங்கள் தங்களுடைய செல்வாக்கினைப் பயன்படுத்தித் தடுத்துவிட்டன. அவர்களது செல்வாக்கு அப்படி.
அய்.அய்.எம். போன்ற மேலாண்மை நிறுவனங்களுக்கான சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வுகளுடன் 10, 12 மற்றும் பட்ட வகுப்புகளுக்கான மதிப்பெண்களும் கணக்கில் கொள்ளப்படுகின்றன. அத்துடன் 20 அல்லது 21 அகவையில் மாணவர்கள் பக்குவப்படும் சூழலும் ஏற்பட்டுவிடுகிறது.
நுழைவுத் தேர்வில் பயன் ஏதுமில்லை
மாணாக்கரின் தகுதிக்கும் மதிப்பெண்களுக்கும், மாநில அரசுகள் நடத்தும் தேர்வு முடிவுகளை ஏற்றுக்கொள்ள ஒன்றிய அரசுக்கு மனமில்லை. அவற்றை மதிக்கவுமில்லை. மாநில அரசுகளை நம்பாமல், தானே தேர்வினை நடத்தி எளிய மாணவர்களின் வாய்ப்புகளைப் பறித்து, உயர்நிலை மற்றும் செல்வ நிலை மாணவர்களின் சேர்க்கைக்கு வழிவகை செய்ய பா.ச.க.வின் ஒன்றிய அரசு விழைகிறது.
மாநில அரசுகள் தங்களது தனித்த வருவாயில் மருத்துவக் கல்லூரிகளை நடத்துகின்றன. இதில் ஒன்றிய அரசின் பங்களிப்பு ஒரு துளியுமில்லை. தங்களது பங்களிப்பு எதுவும் இல்லாத நிலையிலும் தாங்களே நுழைவுத் தேர்வை நடத்தி மாணவர்களின் தகுதியை முடிவு செய்ய நினைப்பது ஏற்கத்தக்கதாகத் தெரியவில்லை.
அத்துடன், உச்ச நீதிமன்றத்தின் ஆணையினால், 15% இடங்கள் அனைத்திந்திய ஒதுக்கீடாகச் செல்கின்றன. மாநில அரசின் செலவில் அனைத்திந்திய ஒதுக்கீட்டில் இடம்பெறுவோர், குறைந்த செலவில் மருத்துவம் முடித்து, தங்கள் மாநிலத்துக்குப் பணியாற்றச் சென்றுவிடுகின்றனர்.
தனியார் கல்லூரிகளின் கட்டண அமைப்பு, ‘நீட்’ தேர்வு மதிப்பெண்களை மதிப்பிழக்கச் செய்துவிடுகிறது என்பதையும் பார்க்கவேண்டும். தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் 65% அல்லது 50% இடங்களில் சேர்கின்ற மாணவர்களுக்கு ஆண்டுக் கட்டணம் அய்ந்து லட்சத்துக்கு மேல் முடிவு செய்யப்படுகிறது. அந்தக் கட்டணத்தைச் செலுத்த இயலாமல் பலர் படிப்பையே கைவிடுகின்றனர். ஒன்றிய அரசின் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் தங்களுக்கென்ற சேர்க்கை முறையில் 100% இடங்களையும் நிரப்பிக் கொள்கின்றன. கட்டணக் கட்டுப்பாடுகளும் அவற்றுக்கு இல்லை.
நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் நேரடியாக இல்லை என்பதால், அவற்றில் சேருவோர் கோடிக்கணக்கில் செலவிடவேண்டியுள்ளது. அவை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லையென்றாலும், மாநில மக்களது நிதியிலிருந்து உருவான கட்டமைப்புகளை முழுமையாகப் பயன்படுத்துகின்றன என்பதைப் புறக்கணித்துவிடக்கூடாது. மின்னிணைப்பு, குடிநீர்ப் பயன்பாடு, கழிவு நீர் வெளியேற்றம், சாலைகள், மாநிலத்தில் உள்ள பிற கட்டமைப்புகள் யாவும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் பயன்படுத்தக்கூடியதாக உள்ளன. இதனால் அந்தந்த மாநிலங்களில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவச் சேர்க்கை அனைத்தும் மாநிலக் கலந்தாய்வு வழியாக நடப்பதுடன், கட்டணங்கள் அரசு அளவை ஒட்டியும் இருக்கவேண்டும்.
மருத்துவ நுழைவுத் தேர்வு, தகுதி பெற்றோர் இடம் பெறவும் உதவவில்லை. கட்டணக் கொள்ளையையும் தடுக்கவில்லை. பின் எதற்காக நுழைவுத் தேர்வு என்பது தெளிவாகவே தெரிகிறது. உயர் நிலை செல்வ நிலையினருக்கான மருத்துவ நுழைவுத் தேர்வினை நீக்கும் முயற்சிகள் தொடரவேண்டும். இன்னும் தெளிவில்லாத மாநிலத்தோர்க்கும் புரியவைக்கவேண்டும்.