கட்டுரைகள்

கடவுளைக் காப்பது யார்?

இரா.முத்தரசன்

கடவுளின் மீது நம்பிக்கை உடையோர் அதிகம், மிக அதிகம். தங்கள் வாழ்வில் ஏற்படும் ஒவ்வொரு துன்பத்தையும் – துயரத்தையும் கடவுள் தீர்த்து வைப்பார் என்று நம்பிக்கை உடையோர் நம்புகின்றனர்.

அத்தகைய நம்பிக்கையின் காரணமாக நாடு முழுவதும் கோவில்கள் பல்கி பெருகிப் இருக்கின்றன.

கும்பாபிஷேகம் மட்டுமல்ல, சிறு கோயில் ஆனாலும், பெருங்கோயில் ஆனாலும் ஆண்டுதோறும் பெரும் விழாக்கள் நடைபெறுகின்றன.

தேர்த் திருவிழா – தெப்பத் திருவிழா, தீமிதி விழா என விழா கோலம் பூணுகின்றது.

ஆண்டுதோறும் அல்லாது, ஒவ்வொரு மாதமும் சிறப்பு விழாக்கள் -வாரந்தோறும் விழாக்கள்- நாள்தோறும் மூன்று காலம், ஐந்து காலம் என்று பூஜைகள் நடந்தேறி வருகின்றன.

ஆண் சாமிக்கும்- பெண் சாமிக்கும் திருமணங்கள் நடைபெறுகின்றன.

காஞ்சி காமாட்சிக்கும், மதுரை மீனாட்சிக்கும் வருஷம் ஓர் கல்யாணம்- ஆனால், எங்கள் வீட்டு பெண்களுக்கு கல்யாணம் இல்லை என்று நாட்டுப்புறப் பாடகர் கே.ஏ.குணசேகரன் பாடுவார்.

திருமணங்கள் மட்டுமல்ல – சாமிக்கும், சாமிக்கும் சண்டைகள் – ராமாயணப் போர், மகாபாரதப் போர், சூரன்வதம் என போர்களும் மாதக் கணக்கில் ஆண்டுதோறும் கோவில்களில் நடைபெறுகின்றன.

மனித வாழ்வில் என்னவெல்லாம் நடைபெறுகின்றதோ அவை அனைத்தும் ஆலயங்களிலும் நடைபெற்று வருகின்றன.

மனிதர்களில் அசைவ உணவு உண்போர் உண்டு – ஆடு, மாடு, கோழி, பன்றி, மீன் என்று தங்களது உணவாக உட்கொள்கின்றனர்.

மனிதர்களைப் போன்று கடவுளுக்கும் மாமிச உணவு படைக்கப்படுகின்றது.

மனிதர்கள் கள், சாராயம், பிராந்தி, விஸ்கி என வகை வகையான மதுக்களை அருந்துகிறார்கள்.

தெய்வங்களுக்கும் மது வகைகளை படையலில் வைத்து வழிபடுகின்றார்கள்.

மனிதர்கள் புகை பிடிக்கின்றார்கள்- தாங்கள் வணங்கும் தெய்வத்திற்கு சுருட்டு வைத்து வணங்குகிறார்கள்.

மனிதர்களில் மேல் தட்டு வகையறாக்களில் சைவம் மட்டுமே உண்போர் உண்டு.

அத்தகைய மக்கள் அவர்கள் வணங்கும் தெய்வத்திற்கு சர்க்கரைப் பொங்கல், புளி சாதம், தயிர் சாதம், வெண்பொங்கல், சுண்டல், வடை என படைப்பார்கள்- இதனை மிக நாகரிகமான முறையில் நெய்வேத்தியம் என்பார்கள்.

படைப்பது மட்டுமின்றி, தெய்வ பக்தி மிக்க வசதி வாய்ப்புகள் உள்ளோர் தங்களது நிலங்களை கோவில்களுக்கு பட்டா செய்து கொடுக்கிறார்கள்.

நமது நாட்டை அரசாட்சி செய்திட்ட மன்னர்கள் பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை ஆலயங்களுக்கு பட்டா செய்து கொடுத்துள்ளனர்.

நிலங்கள் மட்டுமல்ல, தங்க நகைகள், வெள்ளி நகைகள் என விலை உயர்ந்த அணிகலன்களை காணிக்கையாக செலுத்தி இருக்கின்றனர்- செலுத்தி வருகின்றனர்.

பணமாக லட்சம், கோடியாக காணிக்கை செலுத்துகின்றனர்- ஏழை, எளிய மக்கள் கோவில்களில் உள்ள உண்டியலில் தங்களால் இயன்ற அளவு செலுத்துகின்றனர்.

கோவிலுக்கு ஏற்றார் போல் வசூல் குவிகின்றது- ஒவ்வொரு மாதமும் பல கோடி வசூல் உண்டியல் மூலம் வந்ததாக தெரிவிக்கின்றனர்.

பொதுமக்கள் இவ்வாறு வழங்குவதற்கு காரணம் தேடி அலைய வேண்டியது இல்லை. தங்களது வாழ்க்கையில் அன்றாடம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.

அரசியலமைப்புச் சட்டம் கூறியுள்ளவாறு ஒவ்வொருவருக்கும் கௌரவமான வாழ்க்கை அமையவில்லை. கௌரவமான வாழ்க்கை வேண்டும்.

விலைவாசி உயர்வால் படும் அல்லலுக்கு அளவில்லை. குடியிருக்க வீடு இல்லை-உடுத்த நல்ல உடை இல்லை – மூன்று வேளை உணவுக்கு உத்தரவாதம் இல்லை- பிள்ளைகளை அவர்கள் விரும்பும் வகையில் படிக்க வைக்க முடியவில்லை – படித்தாலும் படிப்புக்கு ஏற்ற வேலை இல்லை.

நோய் வாய்ப்பட்டு அல்லல்படுவோர்க்கு உயர்ந்த பட்ச மருத்துவ வசதிகளைப் பெற முடியவில்லை. தங்களது மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடியவில்லை. மகனுக்கு திருமணம் ஆகவில்லை திருமணம் ஆனவர்களுக்கு குழந்தைகள் இல்லை. ஆயிரம், ஆயிரம் பிரச்சனைகள் எதிர்கொள்வோர் -இவற்றுக்கான காரணம் எது? என அறிய முடியவில்லை.

இவற்றையெல்லாம் தங்களது விதி என்று எண்ணுகின்றனர்-அந்த தலைவிதியை தங்களது தலையில் ஆண்டவன் எழுதி வைத்துள்ளதாக நம்புகின்றனர்.

ஆண்டவனால் எழுதப்பட்ட தலைவிதியை, ஆண்டவனிடம் முறையிட்டால், அவன் தீர்த்து வைப்பான் என்று நம்புகின்றனர்.

இத்தகைய நம்பிக்கை என்பது இன்று நேற்று ஏற்பட்டது அல்ல – ஆயிரம், பல்லாயிரம் ஆண்டுகளாக மக்களின் வாழ்க்கையோடு பின்னி பிணைந்துள்ளது.

கடவுள் மீது கொண்டுள்ள நம்பிக்கை காரணமாக காணிக்கைகளை வாரி, வாரி வழங்குகின்றார்கள்.

கடவுள் நம்மை காப்பான் என்று அப்பாவி மக்கள் நம்புகின்றார்கள்- ஆனால் இன்று கடவுளை யார் காப்பது? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தசரத மன்னனின் மைந்தன் ராமனுக்கு அயோத்தியில் கோயில் கட்டி கும்பாபிஷேகம், கொடியேற்று விழா ஆகியன கோலாகலமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டார்கள். நாட்டின் உயர் பொறுப்பில் உள்ள பிரதமர் மோடியும் கலந்து கொண்டார்.

ராமனை கடவுளாக ஏற்று மக்கள் கோடிக்கணக்கில் காணிக்கை செலுத்தினர். காணிக்கை களவாடப்பட்டது. இது குறித்து காணிக்கையை எண்ணும் பொறுப்பில் இருந்தவரே புகார் கூறினார்.

உத்தரப்பிரதேச முன்னாள் அமைச்சர் அகிலேஷ் யாதவ் பிரச்சனையை பகிரங்கப்படுத்திய பின்னர், இப்பிரச்சினை நாடு தழுவிய விவாதப் பொருளாக மாறியது. உடனே பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், ஒன்றிய அமைச்சரவையின் மிக முக்கிய அமைச்சருமான பியூஸ் கோயல் மறுத்தார்.

எவ்வித ஊழலும், முறைகேடுகளும் நடைபெறவில்லை- உ.பி.யின் வளர்ச்சி கண்டு பொறுக்க முடியாத அகிலேஷ் யாதவ் தவறான கருத்தை வெளியிடுகின்றார் என்று முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கின்றார்.

தற்போது நாட்டில் ஒரு புது கலாச்சாரத்தை ஒன்றிய, மாநில அமைச்சர்கள் மிக தைரியமாக மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு தவறு நடப்பது தெரிய வந்தால், அது குறித்து உரிய அமைப்புகள் மூலம் விசாரணைகள் மேற்கொண்டு, உண்மையை கண்டறிந்து, தவறு நடந்து இருக்குமேயானால், அத்தகைய தவறுக்கு உரியவர்கள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை மேற்கொண்டு, நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காண்பதற்கு மாறாக,

அமைச்சர் பெருமக்களே முந்திரிக்கொட்டை போல் முந்திக்கொண்டு தீர்ப்பையே வழங்கி விடுகின்ற வினோதங்கள் நடைபெற்று வருவது அருவருக்கத் தக்கதாகும்.

இவற்றிற்கும் மேலாக நாட்டின் பிரதமர் தனது மவுனத்தின் மூலம் குற்றவாளிகளை காப்பாற்றும் அரும் பணிகளை மேற்கொண்டு வருகின்றார்.

அயோத்தி ராமர் கோவில் பிரச்சனை நாடு தழுவிய விவாதப் பொருளாக மாறி, அன்றாட செய்திகளில் இதுவும் ஒன்று என்ற நிலையில், இது குறித்து இதுநாள்வரை வாய் திறக்காமல் நாட்டின் பிரதமர் மவுனம் காப்பது ஏன்?

பல சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் என்று வரும்போது, மவுனமாக இருந்து, தங்களது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்கிற அற்பத்தனத்தைத் தவிர வேறு என்ன?

நாடு எக்கேடு கெட்டால் எனக்கென்ன? எத்தனை ஆயிரம் கோடிகள் எவர் சுருட்டி அபகரித்தால் எனக்கென்ன? என்றிருந்தால், தன்னையும் தன் பதவியையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற சுயநலத்தை தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?

இராமர் கோயில் ஒரு பொது பிரச்சனை இல்லையா?

கோடிக்கணக்கான மக்கள் ராமன் மீது நம்பிக்கை வைத்து, பல ஆயிரம் கோடி ரூபாய்களையும், விலை உயர்ந்த தங்க, வைர அணிகலன்களையும் காணிக்கையாக செலுத்தியதை சுயநலக் கூட்டம் கொள்ளையடித்துள்ளதைக் கண்டும் காணாமல் எவ்வாறு கடந்து செல்ல முடியும்?

மிக உயரிய ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர் மவுனம் காப்பது யாரைக் காப்பாற்ற?

இராமபிரானையா அல்லது கொள்ளைக் கூட்டத்தையா?

வடக்கே இராமன் என்றால்- தெற்கே முருகப்பெருமானுக்கு, பக்தர் ஒருவர் அளித்த காணிக்கை 1. 41 ஏக்கர் நிலம்.

100 கோடி மதிப்புள்ள நிலத்தை தனிப்பட்ட ஒருவர் விற்பனை செய்கின்றார்- இரு தனிப்பட்ட நபர்கள் வெறும் 2 கோடி ரூபாய்க்கு கிரயம் செய்கின்றார்கள்- இது எப்படி சாத்தியமாயிற்று?

சார்பதிவாளர் விடுப்பில் செல்கின்றார்- பொறுப்பு சார்பதிவாளர் ஒரே நாளில் இரு நபர்களுக்கு பதிவு செய்கின்றார்- இது எப்படி சாத்தியமாயிற்று?

பழனி தண்டபாணி சுவாமிக்கு சொந்தமான 100 கோடி மதிப்புள்ள சொத்துகள் -கிடைக்கும் நேரத்தில் களவாடப்பட்டுள்ளது.

அறக்கட்டளையின் சார்பில் நிலம் குறித்து ஒரு முறைக்கு மூன்று முறை ஆட்சேபனை கடிதங்கள் கொடுக்கப்பட்ட பின்னரும், பொறுப்பு சார்பதிவாளர் எப்படி இருவருக்கு சாசனம் செய்து கொடுக்க முடியும்?

விற்ற நபர் பின்னால் இருப்பவர் யார்?

வாங்கிய இரு நபர்கள் பின்னால் இருந்து இயக்கியவர்கள் யார்?

சார்பதிவாளர் பின்னால் ஒளிந்து மறைந்துள்ளவர் யார்?

அம்பை இயக்கியவர்கள் யார் என்று கண்டறியாமல், அம்பை பிடித்துக் கொண்டு விசாரிப்பதால் என்ன பயன்?

அப்பாவி பொதுமக்கள் கடவுள் காப்பாற்றுவார் என்று நம்புகின்றார்கள்.

கடவுளை நாம்தான் காப்பாற்ற வேண்டும். கரசேவைக்கு வா என்று அழைத்து, மசூதியை இடித்து, ராமர் கோவிலைக் கட்டிய கூட்டம் ராமனின் காணிக்கையிலேயே கை வைத்துள்ளது.

இந்த போலி பக்தர்களிடமிருந்து கடவுளை மக்கள்தான் காப்பாற்ற வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button