
உரிமை தனைக் கேட்டதற்கு
படுகொலை தான் புரிந்தனரே!
பார்க்க பரிதாபமே-மில்லில்
பாடுபட்டோர் சேதமே-உளம்
வேர்க்கும் அறியாமை -மக்கள்
வீணில் மாண்ட கோரமே!
இந்த பாடல் வரிகள் சவானா மில் படுகொலைப்பாட்டு என்று 1936 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களால் எழுதப்பட்ட பாடலின் முதல் பத்தி.
இந்த நீண்ட கவிதையின் பின்னணி என்பது 1936 ஆம் ஆண்டு பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்த புதுச்சேரியில் இயங்கி வந்த பஞ்சாலைகளில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் எவ்வித உரிமையுமின்றி மிகக்குறைந்த கூலிக்கு ஒய்வு இன்றி பல மணி நேரம் அடிமைகளாக பணியாற்றி வந்தனர்.
இத்தகைய தொழிலாளர்களை சங்க ரீதியாக அணித் திரட்டி அவர்களை தங்கள் உரிமைக்கான போராட்டங்கள் நடத்த வழிக்காட்டியாக திகழ்ந்தார் தோழர் வ. சுப்பையா.
அவரது வழிக்காட்டுதலில் 1935 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4 ம் நாள் சவானாமில் தொழிலாளர்கள் முதன்முதலில் வேலைநேரக் குறைப்பு, ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகளை முன் வைத்தனர். ஆலை முதலாளி ஆலை மூடல் அறிவிப்பு செய்தான். ஆனால் தொழிலாளர்கள் தொடர்ந்து 84 நாட்கள் போராடியதன் விளைவாக பத்து மணி நேரம் வேலை, தினக்கூலி உயர்வு, பெண்களுக்கு சம்பளத்துடன் பேறுகால விடுமுறை போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற 1935 ம் ஆண்டு ஏப்ரல் 29 ம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒப்புக் கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஆனாலும் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மாறாக போராடிய தொழிலாளர்களை பிரெஞ்சு அரசு ஆதரவுடன் வேலையில் இருந்து நீக்கியது ஆலை நிர்வாகம்.
மறுபுறம் சவானாமில் தொழிலாளர்கள் போராட்டத்தின் தாக்கம் கெப்ளே ஆலையிலும், எனி ஆலையிலும் எதிரொலித்ததன் விளைவாக தொழிலாளர்கள் சங்க ரீதியாக அணித் திரண்டு போராடினர்.
ஏஜடியூசி தொழிற்சங்க முன் முயற்சியால் மூன்று பஞ்சாலைத் தொழிலாளர்களையும் ஒன்றிணைத்து 1935 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ம் மாநாடு நடத்த முடிவு செய்தனர். மாநாட்டிற்கு பிரெஞ்சு அரசு தடை விதித்தது. மாநாட்டில் பங்கேற்க வருகைத் தந்த தொழிற்சங்க தலைவர்களான வி.வி.கிரி, எஸ்.குருசாமி இருவரையும் பிரெஞ்சிந்திய பகுதியில் இருந்து வெளியேற்றியது. ஆனாலும் எல்லை பகுதியில் பெரம்பை என்ற இடத்தில் மாநாடு நடைபெற்றது. எட்டு மணி நேரம் வேலை, தொழிற்சங்க உரிமை உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பிரெஞ்சு நாட்டின் தொழிற்சங்க சம்மேளனத்திற்கும் ஆதரவு கோரி கடிதம் அனுப்பப்பட்டது.
மாநாடு முடிவின் அடிப்படையில் மூன்று பஞ்சாலைகளின் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து 1936 ஜீன் மாதம் உள்ளிருப்பு போராட்டத்தை அறிவித்தனர். பிரெஞ்சு ஆளுநர் தொழிலாளர்களை அழைத்து பேசி பிரெஞ்சு அரசுடன் பேசி கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக ஒரு மாத கால அவகாசம் கேட்டார்.
ஒரு மாதம் கடந்தும் கவர்னர் மெளனம் காத்ததன் விளைவாக மீண்டும் 1936 ஆம் ஆண்டு ஜூலை 23 ம் தேதி முதல் மூன்று பஞ்சாலைகளிலும் உள்ளிருப்புப் போராட்டத்தை தொழிலாளர்கள் தொடங்கினார்கள். போராட்டத்தை ஒடுக்க ஆயுதப் படையை ஏவியது பிரெஞ்சு அரசு.
முதலில் எனி மில் வளாகத்தின் கதவுகளை உடைத்து கொண்டு உள்ளே நுழைய முற்பட்ட ஆயுதப் படையை ஒன்று திரண்டு எதிர்த்து நின்று ஆலை க்குள் நுழைய முடியாமல் தடுத்தனர். ஆலை மேலாளர் மார்ஷல் லேண்டி என்பவர் தனது கைத்துப்பாக்கியால் தொழிலாளர்களை நோக்கி சுட்டதில் ஒரு தொழிலாளி உயிரிழந்தார். இதனைக் கண்டு ஆவேசம் அடைந்த தொழிலாளர்கள் ஆயுதப் படையை விரட்டி அடித்தனர்.
அதற்குள் எனி ஆலையில் ஒரு தொழிலாளி சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி சவானா மில் தொழிலாளர்களை எட்டியது. பிரெஞ்சு அரசின் ஆயுதப் படை கடலூர் சாலை வழியாக அணிவகுத்து வருவதை அறிந்த சவானா மில் தொழிலாளர்கள் தங்கள் கையில் கிடைத்த கல், தறியின் உடைந்த உதிரி பாகங்கள் என கிடைத்த ஆயுதங்களை அவர்கள் மீது ஆவேசத்துடன் தூக்கி எறிந்து தாக்கினார்கள். பிரெஞ்சு இராணுவப் படையை சார்ந்த சிப்பாய்கள் பீரங்கி குண்டுகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் பன்னிரண்டு தொழிலாளர்கள் பலியானார்கள்.
இந்த கொடுமையான சம்பவம் நாடு முழுவதும் எதிரொலித்தது. கண்டனக் குரல்கள் சர்வதேச தொழிலாளர் சங்கம் மற்றும் பிரெஞ்சு தொழிலாளர்கள் சங்கத்திலும் எதிரொலித்தது.
இந்த படுகொலை சம்பவம் குறித்து கொதிதெழுந்த புரட்சி கவிஞர் பாரதிதாசன் எழுதிய பாட்டு தான் படுகொலை பாட்டு.
பல நாளாய் உழைத்து உழைத்துப்
பலன் காணாப் புதுவை மக்கள்
பரிவுடன் வேலை நிறுத்தம் செய்தார்.
சூரர் போல் முதலாளர் ஆயரத்துத்
தொள்ளாயிரத்து முப்பத்தாறில்
ஜீலை முப்பதாம் தேதியில்
துரைத்தனத்திடம் கோரி தன் வசமாக்கினர்-அவரும்
தூய நெறி பிறழ்ந்து விட்டார்.
வீரர் போல் ஏழையர் தமைச்சுட்டு வீழ்த்தினர்.
வேகுந்தளத்தில் பலர் மாண்டனர்
=====
பாடுபட்ட தொழிலாளர் உரிமைதனைக்கேட்டதற்கும்
படுகொலை தான் புரிந்து விட்டார்.
=====
ஆடுகள் மாடுகள் என நினைத்து
கொடும் அக்கரமம் செய்தாரையா!
என்று தொடரும் இந்த பாடலை தோழர் எஸ்.ஆர்.சுப்பிரமணியன் (பின்னாளில் சர்வோதய தலைவர்) மேடையில் பாடும்போது மக்கள் கண்ணீர் சிந்தி அழுவார்களாம்.
பன்னிரண்டு தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அறிந்து புதுச்சேரி வந்த பண்டித ஜவகர்லால் நேரு இந்த சம்பவம் குறித்து பிரான்ஸ் நாட்டில் இருந்த அரசாங்கத்திற்கும், தொழிற்சங்க தலைவர்களுக்கும் கடிதம் எழுதி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
தோழர் வ.சுப்பையா அவர்களையும் பிரான்ஸ் சென்று அங்கு அரசாங்கத்திடம் முறையிட கோரி ஆலோசனை வழங்கியதுடன் தனது நண்பர்கள் சிலருக்கு உதவக் கோரி அறிமுகக் கடிதங்கள் கொடுத்தார்.
அதனடிப்படையில் பிரான்ஸ் சென்று பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தொழிற்சங்க தலைவர்களை நேரில் சந்தித்து முறையிட்டதன் விளைவாக பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் எழப்பியதன் விளைவாக பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்த காலனி நாடுகளில் தொழிற்சங்க உரிமைகள் சட்டம் நடைமுறைப்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதன் விளைவாக 1937 ஆம் ஆண்டு ஏப்ரல் 7ம் நாள் தொழிற்சங்க உரிமைகள் சட்டம் புதுச்சேரியில் நடைமுறைப்படுத்தப்பெற்றது. ஆசியா கண்டத்தில் முதன்முதலாக புதுச்சேரியில் எட்டு மணி நேர வேலை உரிமை பெறப்பட்டது. அதற்காக தங்கள் இன்னுயிரை ஈந்த பன்னிரண்டு தியாகிகளின் நினைவாக ஆண்டுதோறும் ஜுலை மாதம் 30ம் நாள் தியாகிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 90 ம் ஆண்டு நினைவு நாள்.